படம் | tv360nigeria
சென்ற வருடம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படும் தறுவாயில் பேராயர் டெஸ்மன்ட் டுடுவும் முன்னாள் அயர்லாந்தின் ஜனாதிபதி மேரி ரொபின்ஸனும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தனர். அதில் “2006ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அதன் முன் கொண்டுவரப்பட்ட மிகப் பாரதூரமான மனித உரிமைகள் மீறல் நிலைமையான இலங்கை தொடர்பில் இந்தப் பேரவை எவ்வளவு தூரம் தனது செயலூக்கத்தை உபயோகிக்கின்றதென்பதிலேயே இந்த உலகின் மனித உரிமைகள் கொள்கைகளும் மனிதாபிமான சட்டங்களும் இப்பேரவையின் அந்தஸ்தும் தொக்கி நிற்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்தத் தடவை வெளியிடப்பட்ட சனல் 4 நிகழ்ச்சியில் இலங்கை இராணுவம் யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளின் உடல்கள் மீது செய்யும் வக்கிரங்கள் காட்டப்பட்டுள்ளன. அதில் ஈடுபட்டவர்களின் முகங்கள் மிகத் தெளிவாகத் தெரியும் வண்ணம் இக்காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதனையும் சோடித்த பொய்கள் எனக் கூறுவது அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் மிகக் கடினமாக இருக்கப் போகின்றது. இத்தனை சாட்சியங்களும் கையில் இருக்கத்தக்கனவாக இந்த உலகம் வாளாவிருக்கப் போகின்றதெனில், டுடுவும் ரொபின்ஸனும் கூறியது போலவே இதுகாலமும் மனித உரிமைகள் பற்றிப் பேசியதும் சட்டங்களை உருவாக்கியதும் எல்லாமே வரட்டுச் சித்தாந்தங்களாகப் போகின்றன. இலங்கை ஒரு சிறிய தீவாக இருந்தபோதிலும், சம நீதி குறித்த உலகின் கொள்கையையே ஆட்டம் காண வைத்திருக்கின்றது எனக் கூறலாம். இந்த முரண்பாட்டின் அடிப்படையில் எழுந்த போராட்டத்தினைத்தான் இப்பொழுது நாம் ஜெனீவாவின் மனித உரிமைகள் பேரவையில் பார்க்கின்றோம்.
இந்தத் தடவை இலங்கை தொடர்பில் அதன் முன் கொண்டுவரப்பட்ட பிரேரணை கூறுவதை சுருக்கிப் பார்த்தால் அது இவ்வளவுதான். வட மாகாண சபைக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டதை அது பாராட்டுகின்றது. ஆனால், அதே சமயத்தில் அதற்குத் தேவையான வளங்களையும் அதிகாரத்தினையும் பகிர்ந்து அது ஆட்சி செய்ய வகை செய்யக் கோருகின்றது. மனித உரிமை மீறல்கள் இன்னமும் நாட்டில் தொடர்ந்து கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அதற்கான முறையான பொறுப்பு அரசினால் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டள்ளது. விசேடமாக, சிறுபான்மை மக்களது சமய வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கின்றது. இதன் தொடர்பில் சென்ற வருடம் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கைக்கு வந்து சென்ற பின்னர் பேரவைக்கு நேரிலும் பின்பு இந்த வருடம் பெப்ரவரி மாதம் அறிக்கை மூலமும் இந்த அரசுக்கு பொறுப்புக் கூறலில் ஒருவிதமான அக்கறையும் செயலூக்கமும் கிடையாது எனத் தெரிவித்ததும் இந்தப் பிரேரணையில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அதற்குத் தீர்வாக சிபாரிசு செய்யப்படுவதுதான் இப்பொழுது சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றது. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால் நெறிப்படுத்தப்படும் விசாரணையைத்தான் அது கோரியிருக்கின்றது. விசேட அறிக்கையிடுபவர்களின் உதவியைக்கொண்டு அரசத் தரப்பிலும் விடுதலைப் புலிகளின் தரப்பிலும் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரணை செய்யப்பட்டு அதன் அறிக்கை பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவை ஒரு விசாரணைக்கான ஆணைக்குழுவினைத்தாபிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் திரும்ப அந்தக் கடமை மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்குத் தள்ளப்பட்டது ஏமாற்றமே.
இத்தகைய இன்னொரு உதாரணமாக சிரியாவைக் காட்டலாம். 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் சிரியாவின் மனித உரிமைகள் மீறலுக்கான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் பேரவை ஆணையிட்டது. மே மாதம் விசாரணை ஆரம்பமானபோது ஆணையாளருக்கும் அவரது அறிக்கையிடுபவர்களுக்கும் நாட்டில் பிரவேசிக்கும் அனுமதியை சிரியா மறுத்து விட்டது. அப்படியிருந்தும் வெளியிலிருந்து கொண்டே ஆணையாளரினால் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் சிரியாவின் பிரச்சினையை பேரவை தொடந்து முன்னெடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டதுடன் யுத்தக் குற்றவாளிகளை விசாரணை செய்வதற்காக இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த அறிக்கையின் பேரில் அந்த ஆகஸ்ட் மாதமே பேரவை சிரியா மீதான விசாரணை ஆணைக்குழுவொன்றினைத் ஸ்தாபித்தது. பேரவைக்கு பொறுப்புக் கூறும் விசாரணை ஆணைக்குழுவானது மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணைக்குழுவிலும் விட அதிகாரம் வாய்ந்தது என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்திலிருந்து வெளிவரும் அறிக்கையை இந்த அரசு நவி பிள்ளை அறிக்கை என உதாசீனம் செய்யவும் வாய்ப்பிருக்கின்றது. அத்துடன் நான்கு மாதங்களில் சிரியாவுக்கு விசாரணைகள் விரைவுபடுத்தப்பட்டது போன்று அதேகதியில் இலங்கைக்கும் நிகழுமாவென்பது சந்தேகந்தான். அத்துடன், செப்டம்பர் மாதம் வாய்மொழிமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும்பொழுது நவி பிள்ளை பதவிவிலகி ஒரு புதிய ஆணையாளர் அவரது நாற்காலியில் அமர்ந்திருப்பார். இனி அவரது கருத்தியல்கள் எப்படியோ… திரும்ப அரசுக்கு காலக்கெடு வழங்கப்படுவதனால் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் ஒரு கேள்விக் குறியாகியுள்ளது.
எந்தவொரு சாதகமற்ற நிலைமையும் ஒரு சாதகமான பலனைத் தரத்தான் செய்கின்றது. அதனை அவதானித்துக் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கே எமக்குத் தேவையானதாகும். தமிழர் நீண்டகாலமாக ஏதோ வெளிச்சக்திகளை நம்பி எமது அரசியல் பாதையை வகுத்து வந்திருக்கின்றோம். இந்தியா தீர்வு கொண்டுதரும் என நம்பினோம். விடுதலைப் புலிகள் போரிட்டுப் பெற்றுத் தருவார்கள் என்றிருந்தோம். பின்பு இப்போது அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் தீர்வினைக்கொண்டுதரும் என வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றோம். சர்வதேச சமூகம் தீர்வினைக் கொண்டு தந்தால் நன்மைதான். ஆனால் தராவிட்டால்…?
ஒரு குழு மக்கள் தமது பொது எதிர்காலத்தைக் குறித்த தரிசனத்துடன் வாழவேண்டும். அதற்காகப் போராடும் எந்த சக்தியுமே அந்த மக்களின் நெறிப்படுத்தலுக்கமைவாக நடக்க வேண்டும். அப்பாதையைத் தீர்மானிப்பவர்களாக மக்கள் மாற வேண்டும். இந்த உணர்வும் அணி திரட்டலும் இல்லாத குறையினாலேயே தமிழ் மக்களின் அரசியல் வரலாறு இப்படியான திக்கில் சென்று கொண்டிருக்கின்றது. அதற்கு நல்ல உதாரணமாக அவர்கள் தேர்தல்களில் பங்குகொள்ளும் முறையைக் காட்டலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினைத் திட்டித் தீர்த்துவிட்டு பின்னர் வேறு வழியில்லையே எனக் கூறி அதற்கே வாக்களித்து விட்டும் வருவார்கள். இப்போதிருக்கும் கட்சிகள் தமது தேவையைப் பூர்த்திசெய்ய வல்லனவாக இல்லாவிடில், புதிய கட்சிகளைத் தோற்றுவிக்க ஏதும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. அரசியல் கட்சிகளை உருவாக்குவதற்கு நிறைய வளங்கள் தேவை. மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் இன்று யாராவது ஒரு வர்த்தகர் அல்லது செல்வந்தர் வந்தால்தான் கட்சி நடத்தலாம் என்கின்ற நிலை. அத்தகையதொருவர் ஓர் அரசியல் தீர்க்கதரிசியாகவோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் ஆபத்பாந்தவராகவோ இருப்பார் என்பது சந்தேகத்திற்கிடமானதொன்றாகும். இந்த நிலைமையில், ஒரு மக்கள் போராட்டத்திற்குத் தலைமை தாங்கவல்ல நல்ல அரசியல் தலைமைத்துவத்தினை எமது சமூகம் முன்தள்ளுவது எவ்வாறு?
இன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிகழும் பேரங்கள் இங்கு இலங்கையில் ஒரு மக்கள் போராட்டத்தின் தேவையினையே எமக்க எடுத்துக் காட்டியிருக்கின்றது. தமிழ் மக்களுக்குத் தாம் எண்ணிக்கையில் சிறியவர்கள், இந்த நாட்டின் தலைவிதியை மாற்ற வல்லமை இல்லாதவர்கள் என்கின்ற தாழ்வு மனப்பான்மை மிக அதிகம். புல அரசியல் கூட்டங்களில் “நாங்கள் என்ன செய்ய, இந்த அரசு அவையளின்டை (சிங்கள மக்களுடையது)” என்று பலர் கூறக் கேட்டிருக்கின்றோம். சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு இந்த அரசினை அதிகாரத்தினைப் பகிரவைக்கும் ஜனநாயகமயப்படுத்தும் போராட்டத்தில் முக்கியமாக தமிழ் மக்களே ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்பதை நாம் மறக்க முடியாது. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கெதிராகவும் நாம் தான் போராடியிருக்கின்றோம். 1989ஆம் அண்டு ஜே.வி.பி. இதே சட்டத்தினால் பாதிக்கப்பட்டிருந்தும் இதற்கெதிராகக் குரல் எழுப்பினார்களா? உரிமைக் குரலை இந்த நாட்டில் என்றும் ஓங்க வைத்துக்கொண்டிருப்பவர்கள் சிறுபான்மையினரான தமிழ் மக்கள்தான். இன்றும், சகல மாகாணசபைத் தேர்தல்களிலும், ஏன், சகல உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கூட அரசைச் சார்ந்த கட்சியே வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும்போது எதிர்க்கட்சிக்கு வாக்களித்தவர்கள் தமிழ் மக்கள்தான். வட மாகாண மக்கள் வழியைக் காட்டி விட்டதனால் இந்தத் தடவை மேல் மாகாணசபைத் தேர்தல்களில் எதிர்க்கட்சி வெற்றிபெற வாய்ப்புக்கள் இருக்கின்றனவென்ற நம்பிக்கையில் இன்று ஐக்கிய தேசியக்கட்சி தனது தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றதாம் என அதன் பிரமுகர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். இந்த நாட்டின் தலைவிதியை மட்டுமல்ல, உலக நாடுகளின் அரசியலைக்கூடத் தீர்மானிப்பவர்களாக நாங்கள் இருக்கின்றோம், தொடர்ந்திருக்கப்போகின்றோம். இந்தத் தன்னம்பிக்கையுடன் எழவேண்டும் எங்கள் தேசம்.
அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்
சாந்தி சச்சிதானந்தம்