பட மூலம், Athavannews
குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த உணர்வின் அடிப்படையில்தான் வீரசிங்கம் மண்டபத்தில் அன்றைய தினம் பேச முனைந்தார். ஆனால், “விடுதலை புலிகளை மீண்டும் கொண்டுவருவதே எங்கள் நோக்கம்” என்று அவர் கூறியது தான் ‘சட்டப்படி’ பிரச்சினையாகி விட்டதுபோலும்.
விடுதலை புலிகளின் இலட்சியங்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கும் அந்த இயக்கத்தை மீளக்கொண்டுவரப்போவதாகப் பேசுவதற்கும் இடையில் இருக்கின்ற சர்ச்சைக்குரிய அம்சத்தை அந்தப் பெண்மணி புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது. விடுதலை புலிகளுக்குப் பிறகு தமிழர் அரசியலில் அவர்களின் பாத்திரத்தை ஏற்றிருக்கும் ‘புதிய அவதாரங்கள்’ என்று தங்களைப் பாவனைசெய்துகொண்டு மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைக் கிளறுகின்ற பெருவாரியான அரசியல்வாதிகள் வடக்கில் வலம் வருகிறார்கள். அவர்களில் எவருமே “விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம்” என்று வாய் தடுமாறியேனும் சொன்னதாக இதுவரை அறியவில்லை.
தமிழர்களின் உரிமைப்போராட்டத்துக்காக ஒரு அர்ப்பணிப்பையும் செய்யாத பேர்வழிகள் எல்லாம் விடுதலை புலிகள் ஆயுதப்போராட்ட காலத்தில் செய்த தியாகங்ளில் குளிர்காய்கின்ற ஒரு அரசியலை இன்று முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு போராட்ட வடிவமும் அந்தந்தக் காலகட்டத்தில் நிலவுகின்ற யதார்த்த சூழ்நிலைகளின் அடிப்படையில் உருப்பெறுபவையே. உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த அடிப்படைக் காரணிகள் அகற்றப்படாமல் இருக்கின்ற நிலையில் தமிழரின் உரிமைப்போராட்டம் புதிய சூழ்நிலைகளில் எத்தகைய வடிவத்தை எடுக்கும் என்பதை காலம் தீர்மானிக்கும்.
ஆனால், தங்களால் ஒரு தெளிவான மார்க்கத்தை தமிழ் மக்களுக்கு காட்டமுடியாமல், சிந்தனைத் துலக்கமின்றி வங்குரோத்துநிலையில் இருக்கும் அரசியல்வாதிகள் விடுதலை புலிகளைப் பற்றியே பேசிக்கொண்டு தங்களுக்கான எதிர்கால அரசியல்வாய்ப்புகள் குறித்து கனவுகண்டுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் அடுத்து என்ன செய்வதென்று தங்களுக்குள் ஒரு தெளிவான அணுகுமுறையை, தந்திரோபாயத்தை வகுத்துக்கொள்ளாமல் தமிழ் மக்களை அதுவும் குறிப்பாக இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பாதை தெரியாமல் தடுமாறுகின்ற மக்கள் மத்தியில் அந்தப் போக்கு எடுபடுவதைக் கண்டு விஜயகலாவுக்கும் ஒரு மருட்சி ஏற்பட்டுவிட்டது. இறுதியில் பாவம் அந்தப் பெண்மணி இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்துநிற்கிறார்.அடுத்து எனனென்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ தெரியவில்லை.
தென்னிலங்கையில் உள்ள இனவாத அரசியல் சக்திகள் மாத்திரமல்ல, பிரதான அரசியல் கட்சிகளும் கூட ஏதோ விஜயகலா மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்பக்கூடிய வல்லமை கொண்டவர் போன்று பிரசாரங்களைச் செய்து தென்னிலங்கை மக்களின் ‘விவேகத்தையே’ நிந்தனை செய்கின்ற ஒரு படுகேவலமான அரசியலை முன்னெடுத்திருக்கின்ற துரதிர்ஷ்டவசமான நிலையைக் காண்கிறோம். நாட்டையும் மக்களையும் வதைக்கின்ற எரியும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கு விஜயகலாவின் வீரசிங்க மண்டப புலிப்பேச்சு தாராளமாக உதவிக்கொண்டிருக்கிறது. அதுதான் உண்மையான வேதனை.
வீரகத்தி தனபாலசிங்கம்