படம் | jdslanka, றோம் நகரத்தை தளமாகக் கொண்டியங்கிவரும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டபோது…

ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில், சர்வதேச விசாரணை ஒன்றிற்கான பரிந்துரையை வழங்கியிருக்கின்றார். கடந்த ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நவிப்பிள்ளை, இலங்கை சர்வாதிகார ஆட்சியொன்றிற்கான வழிகாட்டல்களை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்ததை இந்த இடத்தில் நினைவுகொள்ளலாம். சர்வாதிகார வழிகாட்டலுக்குள் சிக்கிக்கிடக்கும் ஒரு நாட்டுக்குள் இடம்பெறும் எந்தவொரு விசாரனையும் நம்பத்தகுந்தவையாக இருக்க முடியாது என்னும் அடிப்படையில்தான் தற்போது நவிப்பிள்ளை சர்வதேச விசாரனையொன்றிற்கான பரிந்துரையை வழங்கியிருக்கின்றார். ஆனால், இது நவிப்பிளையின் பரிந்துரை மட்டுமே ஆகும். வழமை போலவே, இலங்கை அரசு பிள்ளையின் அறிக்கையை நிராகரித்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட நாடு தொடர்பில் விசாரணை தேவையென்னும் வாதமானது இரண்டு அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றது. ஒன்று, குறிப்பிட்ட நாட்டில் வாழ்ந்துவரும் குறிப்பிட்ட மக்கள் பிரிவினருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது என்பது. இரண்டு, அவ்வாறு மறுக்கப்பட்ட நீதியை குறிப்பிட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் ஒரு விசாரனை அவசியம் என்பது. இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கிருக்கும், உள்ளக பொறிமுறை எதிலும் நம்பிக்கை வைக்க முடியாதவொரு சூழலில் சர்வதேச விசாரனை ஒன்றை கோருவதில் தவறில்லை. நவநீதம் பிள்ளையின் அறிக்கை வெளியாவதற்கு முன்னரே வடக்கு மாகாண சபையில், சுயாதீன சர்வதேச விசாரனையை வலியுறுத்தி பிரேரணையொன்றும் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால், அந்த பிரேரணைக்கான வாதப்பிரதிவாதங்களின்போது ‘இனப்படுகொலை’ என்னும் சொல் நீக்கப்பட்டே குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், றோம் நகரத்தை தளமாகக் கொண்டியங்கிவரும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், (Permanent People’s Tribunal – PPT) இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, இடம்பெற்றது, தமிழ் மக்களுக்கு எதிரானதொரு இனப்படுகொலையாகும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இவ்வாறு தீர்ப்பு வழங்கிய குழுவிலும் பல சட்ட மேதைகள் இருக்கின்றனர். மேற்படி தீர்ப்பாயத்தின் முன்னிலையில் பலர் சாட்சியமளித்திருக்கின்றனர். இதிலுள்ள வேடிக்கையான செய்தி என்னவென்றால், மேற்படி மக்கள் தீர்ப்பாயமானது, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அரச இனப்படுகொலைக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய சக்திவாய்ந்த நாடுகளும் உறுதுணையாக இருந்தன எனக் குறிப்பிட்டிருப்பதாகும்.

ஆனால், இன்று அதே அமெரிக்காவின் தலைமையில்தான் இலங்கையில் நீதியை உறுதிப்படுத்துவதற்கான அழுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு பக்கபலமாக பிரித்தானியாவும் செயற்பட்டு வருகிறது. இலங்கை அரசு முன்னேற்றங்களை நிரூபிக்கவில்லையாயின், தனது அரசு சர்வதேச விசாரனை ஒன்றிற்கு பக்கபலமாக இருக்கும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் பொதுநலவாய மாநாட்டின்போது பகிரங்கமாகவே எச்சரித்திருந்தார். ஆனால், மேற்படி இரண்டு நாடுகளும், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு உறுதுணையாக இருந்தன என தற்போது மக்கள் தீர்ப்பாயம் குறிப்பிடுகின்றது. மக்கள் தீர்ப்பாயம் இவ்வாறு குறிப்பிடுவதற்கான காரணம் என்ன? பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை உறுதிப்படுத்துவதா அல்லது ஆளும் மஹிந்த அரசின் மீது அழுத்தங்களை மேற்கொண்டு வரும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகளுக்கு நெருக்கடியை கொடுப்பதா? இத்தீர்ப்பாயம் குறிப்பிடுவது போன்று ஒரு வாதத்திற்காக, இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்றும், அதில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கும் பங்கிருப்பதாகவும் எடுத்துக்கொண்டால், தாங்கள் உறுதுணையாக இருந்த இனப்படுகொலை ஒன்றிற்கான விசாரனையை அவர்கள் ஏன் கோரப் போகிறார்கள்? இன்று அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டு வரும் பிரேரணைகளின் இறுதி இலக்கு தாங்களும் சம்பந்தப்பட்ட இனப்படுகொலையிலிருந்து மஹிந்த அரசை பாதுகாப்பதா? அல்லது குறித்த தீர்ப்பாயம், பொறுப்பற்ற வகையில் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டிருக்கிறதா அல்லது இலங்கையின் மீதான அழுத்தங்களின் வீரியத்தை குறைக்கும் உள்நோக்கத்துடன் செயற்பட்டிருக்கிறதா? பதிலை கண்டடைய வேண்டியது தமிழர் பொறுப்பு.

ஏனெனில், மேற்படி தீர்ப்பாயத்தின் அறிக்கை வெளியான சந்தர்ப்பத்தில் சில தமிழ் ஆய்வாளர்கள் குறிப்பாக புலம்பெயர் சூழலில் இயங்குவோர் குதூகலித்திருந்தனர். தமிழ் அரசியல் ஆய்வுச் சூழலில் இருக்கும் அடிப்படையான பிரச்சினையே இதுதான். சில விடயங்கள் இடம்பெறும் போது அதன் ஆழ அகலங்களை அறிந்துகொள்ள முயற்சிக்காமல் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிடுவது, பின்னர் ஒன்றுமில்லை என்றவுடன் சோர்வின் உச்சத்திற்குச் சென்று முடங்கிவிடுவது. விடயங்கள் ஒவ்வொன்றையும் கட்டவிழ்த்து, பின்னர் முடிவுக்கு வரும் அனுகுமுறையொன்றுதான் இப்போது தமிழர்களுக்குத் தேவையானதாகும்.

தமிழ் மக்களுக்கான தனிநாடு என்னும் இலக்கில் செயற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும், இலங்கை அரச படைகளுக்கும் இடையிலான இறுதி யுத்தத்தின்போது, பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதிலிருந்து ஆளும் மஹிந்த அரசு தவறிவிட்டதென்பதே இன்றைய குற்றச்சாட்டு. இந்த அடிப்படையில், ஜக்கிய நாடுகளின் சபையின் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில், இறுதி யுத்தத்தின்போது நாற்பதாயிரம் வரையிலான மக்கள் இறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவ்வாறு உயிரிழந்த மக்கள் இனப்படுகொலை ஒன்றிற்கு ஆளானதாக மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மேற்படி அறிக்கையின் அடிப்படையில்தான் கூட்டமைப்பும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால், இல்லை, இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பது சிலரது வாதமாக இருக்கிறது. இந்தப் பின்புலத்தில், பலர் பலவிதமான சொற்களை கையாண்டு வருகின்றனர். சிலர் இலங்கையில் இனபடுகொலையொன்று இடம்பெற்றுள்ளதாக வாதிடுகின்றனர். ஒரு சிலர் தற்போதும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு ‘கட்டமைப்புசார் இனப்படுகொலை’ (structural genocide) நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாக வாதிட்டு வருகின்றனர்.

ஆனால், இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் ‘இப்போதும் உடல்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன’ (Still Counting the Dead: Survivors of Sri Lanka’s Hidden War) என்னும் நூலின் அசிரியரும், பி.பி.சி. உலக சேவையின் இலங்கைக்கான முன்னாள் தொடர்பாளரும் பத்திரிகையாளருமான பிராஸ்சிஸ் ஹரிசன், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றதை ஒரு மென்-இனச்சுத்திகரிப்பு (Soft ethnic cleansing) என்று வர்ணிக்கின்றார்.  ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை புலிகள் வெளியேற்றிய நடவடிக்கை பற்றி குறிப்பிடும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அது ஒரு இனச்சுத்திகரிப்பு (Ethnic cleansing) நடவடிக்கை என்று குறிப்பிட்டு வருகின்றார். இதனை சுமந்திரன் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்கள் முன்னிலையிலும் குறிப்பிட்டிருக்கின்றார். பிரான்சிஸ் ஹரிசன் குறிப்பிடுவது போன்று இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்தும், ஒரு மென்-இனச்சுத்திகரிப்பு என்னும் வகைப்படுத்தலுக்குள் உள்ளடக்கப்படுமாயின், யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை எவ்வாறு ஒரு இனச்சுத்திகரிப்பு  என்று சொல்ல முடியும்? முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவர்கள் எவரும் கொல்லப்படவில்லை. இங்கு பிறிதொரு விடயத்தையும் தருகிறேன்.

குறித்த பத்திரிகையாளர் ஹரிசனின் நூல், லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டபோது கூடவே ஒரு நேரடி கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதில் நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரி எரிக் ஷொல்ஹெய்ம், நிபுணர் குழுவில் ஒருவரான ஜஸ்மின் சொக்கா மற்றும் சர்வதேச நெருக்கடிகள் குழுவின் (ICG) தலைவர் அலன் கீனன் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர். இதன்போது ஒருவர் இனப்படுகொலை தொடர்ப்பில் கேள்வி எழுப்பியிருந்தார். நீங்கள் மூவரும் இலங்கையில் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றது என்பதில் உடன்படுகின்றீர்களா? இதற்கு ஷொல்ஹெய்ம் பின்வருமாறு பதிலளித்திருந்தார். அது இனப்படுகொலையா அல்லது இல்லையா என்பதெல்லாம் ஒரு விடயமல்ல. அங்கு இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதுதான் விடயம். இதன்போது பதிலளித்த அலன் கீனன், நான் இது தொடர்பான விடயத்தில் நிபுணத்துவம் வாய்ந்தவன் அல்ல. ஆனால், நான் நினைக்கிறேன், அரசியல் திட்டங்களுக்கு கூடுதல் அர்த்தத்தை வழங்கும் வகையில் இது போன்ற முத்திரை (label) குத்தல்கள் இடம்பெற்று வருகின்றன, எனினும் இது பற்றிய பகிரங்க கேள்விகள் அவசியம்.

எங்களுடைய ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள் என்பதுதான் உண்மை. ஆனால், இந்த உண்மையை எவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது நலன்சார் அரசியல் வேலைத்திட்டங்களுக்காகவும், தங்களின் பிரத்தியேக விருப்பங்களுக்காவும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டும் நோக்கிலேயே நான் இங்கு சில விடயங்களை பதிவு செய்திருக்கிறேன். ஆளும் மஹிந்த அரசின் அதிகார நலன்கள், பிராந்திய அதிகார நலன்கள், உலக வல்லாதிக்க சக்திகளின் அதிகார நலன்கள், தமிழர்களுக்குள் இருக்கின்ற ஒரு சிலரது சொந்த நலன்கள் என்று அனைத்து வகை நலன்களுக்குள்ளும் சிக்குப்பட்டுக்கிடக்கிறது தமிழர்களுக்கான நீதி. இந்த அடிப்படையில்தான் இப்பத்தி தமிழர்களுக்கான நீதி ஊசலாடிக்கொண்டிருப்பதாக வாதிடுகின்றது. ஆனால், தமிழர்கள் இதுவரை கொடுத்த விலைக்கு, அவர்களுக்கு ஒரு நீதி கிடைத்துத்தான் ஆக வேண்டும். ஆனால், அதனை ஆளும் மஹிந்த அரசு ஒரு போதுமே விரும்பித் தரப்போவதில்லை.

யதீந்திரா

DSC_4908