படம் | britishtamilconservatives

ஆகா, மெல்ல மெல்ல காய் கனிந்து வருகின்றது. லண்டனில் “தமிழர்களுக்கான அனைத்துக் கட்சிகள் அடங்கிய நாடாளுமன்றக்குழு” இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது அமர்வினைப் பற்றிய விளக்கத்தினை அளிக்கும் கூட்டமொன்றினை ஏற்பாடு செய்திருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அலுவலர்கள், பொதுநலவாய அலுவலகத்தினைச் சேர்ந்தோர் பங்குபற்றிய இக்கூட்டத்தில், “நம்பிக்கையானதும் வெளிப்படையானதுமானதொரு விசாரணையை மேற்கொள்ளுவதில் ஒரு வித முன்னேற்றத்தையும் காட்டாத நிலையில், பிரித்தானிய அரசு தனது சர்வதேசப் பங்காளர்களுடன் இலங்கையில் ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையை நியமிப்பதற்காக உழைக்கின்றது… அத்துடன், (ஜெனீவாவின்) பிரேரணையின் உள்ளடக்கம் அதன் சிபாரிசுகளை தாமதமின்றி செயற்படுத்துவதற்கான வலுவான பணிப்பாணையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் பொறுப்புடைமை, நீதி ஆகியவற்றை நிச்சயப்படுத்தும் வகையில் பாதிப்புற்றவர்களுக்கான சாட்சிகள் பாதுகாப்பு வழங்கப்படும் அம்சங்களும் சேர்க்கப்படவேண்டும்” என்பது அடங்கிய அறிக்கையினையும் வெளியிட்டது. இக்கூட்டத்தில் பிரித்தானியத் தமிழர்களும் இலங்கை ஆட்சியாளர்களின் சொத்து பறிமுதல் செய்யப்படுதல் மற்றும் அவர்களின் பயண சுதந்திரம் மட்டுப்படுத்தப்படல் போன்ற நடவடிக்கைகள் பற்றிப் பேசியிருக்கின்றனர்.

அத்திலாந்திக் சமுத்திரத்தின் இக்கரையில் இது நடந்தேற அதன் மறு கரையில் அமெரிக்காவில் ரிச்சர்ட் பேர், பொப் கேஸி என்னும் இரு செனட் சபை உறுப்பினர்கள் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்குத் தன்னை உட்படுத்த வேண்டும் என்று கோரும் பிரேரணையொன்றினை தமது சபையில் சமர்ப்பித்திருக்கின்றார்கள்.

இந்தப் பக்கத்தில் அவுஸ்திரேலியாவில் அதன் செனட் சபையானது, வருகின்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளைக் கோரும் இலங்கைக்கெதிரான பிரேரணைக்கு அவுஸ்திரேலிய அரசு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் பிரேரணையொன்றினை நிறைவேற்றியிருக்கின்றது. அவுஸ்திரேலியாவின் க்ரீன் கட்சி முன்கொண்டு வந்த இந்தப் பிரேரணையை அதன் தொழிற்கட்சியும் ஆதரித்திருக்கின்றது. அந்நாட்டின் பிரதம மந்திரி டோனி அபொட் உள்ளுரில் அகதிகளுக்கெதிரான தனது அசுரத்தனமான கொள்கைகளுக்கு ஆதரவு தேடும் முகமாக இலங்கை அரசின் அடிவருடியாக செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் க்ரீன் கட்சியின் செனட் அங்கத்தவர் லீ றியன்னென் பகிரங்கமாகக் கேட்டிருக்கின்றார். ஐரோப்பிய ஒன்றியமும்கூட ஐ.நா. பேரவைக்கு சமர்ப்பிக்கப்படப் போகும் பிரேரணைக்குத் தனது ஆதரவினை ஏற்கனவே தெரிவித்திருக்கின்றது.

இவையொன்றுமே தற்செயலாக நிகழ்ந்தவையல்ல. கோள அரசியலின் நிலைமைகள், அத்துடன் புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் கடந்த ஐந்து வருடங்களாகத் தமது பொருள் முயற்சி அனைத்தையும் முதலிட்டு செய்த லொபி முயற்சிகள் (Lobbying) அனைத்தும் ஒருசேரக் கூடி பலனளிக்க ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு இரு உதாரணங்களைக் காட்டலாம். முதலாவதாக செனட்டர் லீ தனது அறிக்கையில் இந்த செனட் பிரேரணையினை வெற்றியடைய உழைத்த அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் உதவிக்கு நன்றி சொல்லியிருக்கின்றார். தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்குழு உருவாக்கப்பட்டதில் பிரித்தானிய தமிழ் மன்றத்தின் பங்கு கணிசமானதாகும். அதேபோன்றே அமெரிக்காவிலும் சட்டத்தரணிகளைக் கொண்டு பிரேரணைகளை வரைவது தொடங்கி அதனை ஒவ்வொரு அரசியல்வாதியாகக் கொண்டுசென்று வாதாடி ஆதரவு பெறும் வரையிலும் எமது தமிழர்கள் உழைத்திருக்கின்றார்கள். அடுத்த உதாரணம் அமெரிக்க செனட்டர்களின் பிரேரணையில் காணப்படுகின்றது. இதன் கோரிக்கைகள் அடங்கும் கடைசிப் பந்தியில், இலங்கையின் ஜனாதிபதி “அமெரிக்க நலன்களைப் பிரதிபலிக்கும் வகையிலான பூரண கொள்கைத் திட்டமொன்றை உருவாக்க வேண்டும்” என்று கேட்டிருக்கின்றது. அமெரிக்க நலன்களைப் பிரதிபலிக்கும் கொள்கைகள் என்ன என்று பார்த்தால் அவை மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பொருளாதார நலன்கள், மற்றும் பாதுகாப்பு நலன்கள் என விளக்கப்பட்டிருக்கின்றது. இதைவிட வெளிப்படையாக அமெரிக்க நலன்கள் எங்கேயுள்ளன என்பதைக் கூற முடியுமா?

எனவே, ஜெனீவாப் பிரேரணை நிகழப் போகின்றது என்பதை நாம் ஓரளவு நிச்சயமாகக் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்குதான் நாம் ஜெனீவாப் பிரேரணையின் பின்னரான அரசியல் பற்றி சிறிது சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம். அதனை விளங்க வேண்டுமென்றால் (Lobbying) என்று கூறப்படுகின்ற தீர்மானம் எடுப்போரின் மனமாற்றத்திற்காக வாதாடும் அந்த முயற்சியைப் பற்றியும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியதாகின்றது. (Lobbying) என்கின்ற பதமே ஒரு செயற்பாட்டின் அடிப்படையில் கோர்க்கப்பட்ட ஆங்கிலப் பதமாகும். பெரிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோரின் வரவேற்பறைகளில் (Lobby) செய்யப்படும் ஒப்பந்தங்கள் என்பதனால் இப்பெயர் பெற்றது. இந்த லொபி முயற்சியானது இரு முக்கிய எடுகோள்களின் அடிப்படைகளிலேயே முன்னெடுக்கப்படுகின்றது. அதாவது, கொள்கைகள் கோட்பாடுகள் எதுவுமேயற்ற சுயநலம் மிக்கவர்களே  தீர்மானம் எடுக்கக்கூடிய முக்கிய பதவிகளில் அமருபவர்கள் ஆகின்றனர் என்பது முதலாவது எடுகோளாகும். கொள்கைகள் உள்ள இலட்சியவாதிகள் உலகின் ஓரமாக வீசப்படுகின்றனர். அடுத்ததாக, எந்தக் கோரிக்கைக்கான ஆதரவு திரட்டப்படுகின்றதோ அந்தக் கோரிக்கையின் இலக்குகளுடன் யாரிடம் ஆதரவு கோருகின்றோமோ அந்த மனிதரின் நலன்களை தொடுக்க வேண்டியது அவசியமாகும். தமிழ் மக்களின் நலன்கள் எவ்வாறு அமெரிக்காவின் நலன்களுடன் ஒத்திசைகின்றது? அதனைக் கண்டுபிடித்து தொடுத்துக் காட்டினால் லொபி முயற்சி வெற்றிகரமாகின்றது.

லொபி முயற்சிகள் தனியே அரசியல் நிலைமைகள் பற்றிய கலந்துரையாடல்கள் அல்ல. அவை சொந்த நலன்கள் பற்றிய பேரம் பேசுதலும் கொண்டிருக்கும். இதற்கு உதாரணமாக ஒரு சுவாரசியமான கதை உண்டு. இலங்கை அரசு தனது இமேஜைக் காப்பாற்றுவதற்காக இங்கிலாந்தில் பெல் பொட்டிஞ்சர் என்கின்ற ஒரு மக்களுறவு நிறுவனத்தினை கிட்டத்தட்ட மாதம் 100,000 டொலர்கள் கொடுத்து பணிக்கு அமர்த்தியிருந்தது.  இந்நிறுவனத்தின் மூலம் இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை பல கோடி ரூபாய்கள் செலவழித்து விலைக்கு வாங்கி விட்டார்கள். “நீங்கள் கேட்கும் எதுவும் தரப்படும்” என்று இவர்களுக்குக் கூறப்பட்டது மட்டுமன்றி இலங்கைக்கான ஒரு சொகுசு உல்லாசப் பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கைக்கு வந்த இந்த உறுப்பினர்களில் சிலர் ஓரினச் சேர்க்கையாளர்கள். அவர்களில் ஒருவர் இங்கு ஹில்டன் ஹோட்டலில் ஒரு பையனுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விடயத்தை ஜனாதிபதி மட்டத்தில் காதும் காதும் வைத்தாற்போல் தீர்த்து வைத்து விட்டார்கள். ஆனால், இந்தத் தகவல் எப்படியோ பிரித்தானியாவின் தமிழர்களுக்குக் கிடைத்துவிட்டது. இது பிரித்தானிய ஊடகங்களில் வெளிவந்தால் பாரம்பரிய குடும்ப விழுமியங்களை மேடை தோறும் பேசி வரும் கன்சர்வேடிவ் கட்சிக்கு என்ன நடக்கும் என்கின்ற விடயம் டேவிட் கமரூனுக்குத் தெரியப்படுத்தப்பட்டது என்பது கசிந்து வந்த தகவலாகும். இந்த மாதிரியான மென்மையான மிரட்டல்கள்கூட தமிழ்க் குழுக்களுக்கும் இங்கிலாந்தின் ஆளுங்கட்சிக்கும் இடையிலான உறவினை வளர்க்க உதவின என்று கூறப்படுகின்றது. இவை தவிர, சுவிஸ் வங்கிகளில் எமது அரசியல்வாதிகளின் முடக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாகவும் தகவல்கள் தமிழர்களினால் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அடிப்படையில் ஜெனீவா முறைவழியைப் பார்க்கும்போது அது மனித உரிமை கொள்கைகள் தவிர மற்றெல்லா நலன்களும் ஊடாடும் ஒரு அரங்கம் என்பது புரியும். அப்படியானால் ஜெனீவாப் பிரேரணை எதற்காக? அது இலங்கை அரசுடன் பேரம் பேசுவதற்கான ஒரு ஆவணமாகும். அமெரிக்காவிற்கு கண்ணில் விரலை ஆட்டிவிட்டுத் தப்பிக்க முடியாது என்று எமது தலைவர்களுக்குக் கூறும் செய்தியாகும். இதனை உணர்ந்து எமது அரசு தனது நிலைப்பாட்டிலிருந்து கீழே இறங்கி வந்தால் அந்தோ காற்றில் பறந்து போகும் தமிழர் உரிமைகள். எதிர்காலத்தைப் பொறுத்த எமது நம்பிக்கைகளாவன, இதுவரைகாலமும் சிங்களத் தலைவர்கள் எமது நாட்டில் எவ்வாறு ஒரு வாக்குறுதியையும் காப்பாற்றாமல் குதர்க்கத் தனமாகப் பேசிக்கொண்டிருந்தார்களோ அப்படியே தொடர்ந்தும் சர்வதேச சமூகத்துடனும் நடப்பார்கள் என்பதிலேயே உண்மையில் தங்கியுள்ளது. நல்ல வேளையாக அப்படி நடப்பதற்கான அடையாளங்கள்தான் இப்போது காட்டப்படுகின்றன.

“கண்ணாடி வீட்டிலிருப்பவர்கள் கல்லெறியக்கூடாது”, “உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியான அமெரிக்கா எப்படி எங்களுக்கு வந்து மனித உரிமைகள் பற்றிப் போதிக்கலாம?”, “டேவிட் கமரூனும் அவருடைய அரசும் ஈராக்கில் நடத்திய மனித உரிமை மீறல்கள்” எனவெல்லாம் அரச ஊடகங்கள் மேற்குலக நாடுகளை வைத்து கொண்டிருக்கும் பிரச்சாரங்கள் உள்ளுரில் வேகலாம், ஆனால் சர்வதேச அரங்கில் அவை வேகா. மனித உரிமைகளை மீறியவர்கள் எங்களைக் கேள்வி கேட்க லாயக்கில்லாதவர்கள் என்பது ஒரு வாதமேயில்லை என்பது மட்டுமன்றி அது தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளுவதுமான கூற்றாகும். இத்தோடு, வெளிநாட்டு ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதனாலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு விசா நிராகரிப்பதன் மூலமாகவும் வீணாக அவர்களின் ஆத்திரத்தினை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன், இந்த அரசு தனது ஆதரவிற்குத் திரட்டிய வெளிநாட்டு அரசியல்வாதிகளும் மோசமான பெயர் வாங்கியவர்களாக இருக்கின்றனர். “கிளர்ச்சியாளர்களை காவல் துறையினர் பார்த்த மாத்திரத்தே  சுட்டுத் தள்ள வேண்டும்” என்று சொல்லுகின்ற பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான இயன் பெய்ஸ்லி இவர்களில் ஒருவர். 2011ல் நாஸி ஸ்டைலில் கேளிக்கைக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்த எய்டன் பெர்லி அடுத்தவராவார். இவருடைய கேளிக்கை விவகாரம் அவ்வளவு நாற்றம் எடுக்க ஆரம்பித்ததனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அரசு இத்தனை செலவு செய்து கடைசியாக பிடித்தது இவர்களைத்தான்.

தங்களுடைய பலவீனங்களை அரசும் உணராமலில்லை. பெப்ரவரி 14ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இதனைப் பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டுள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவுக்கு மிகவும் நெருங்கியவர்கள் அடங்கிய லொபிக் குழுக்களை புலிகள் இயக்கத்தினர் விலைக்கு வாங்கி விட்டனர் என்று கூறியிருக்கின்றார். அவர்களுடன் போட்டியிட எமது அரசுக்கு முடியவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். எப்படித்தான் தோல்வியைத் தழுவிக்கொண்டாலும் மகாபாரதத்தின் துரியோதனன் போலவே கடைசி வரை “ஊசி மனை நிலம் கூடத் தர மாட்டேன்” என்கின்ற நிலைப்பாட்டில்தான் சிங்களத் தலைவர்கள் இருப்பார்கள் என்று நாம் நம்பலாம். அதுதான் எங்களது வெற்றியாகும்.

அப்படியாக, தமிழ் மக்களின் அழிவுக்குக் காரணமான இந்த அரசே அவர்களின் உய்வுக்கும் கர்த்தாவாகும். என்ன அற்புதம்!

அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.