படம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune
முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதேவேளை, தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தைப் பெறுகிறது. ஆனால், இது தொடர்பில் ஆக்கபூர்வமான விவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றனவா என்றால் வழமைபோல சோர்வு ஒன்றே எஞ்சிக்கிடக்கிறது. முள்ளிவாய்க்காலை முன்னிறுத்தி ஒவ்வொரு வருடமும் பலவாறான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றும் ஒரு நினைவுச் சின்னம் கட்டப்பட வேண்டுமென்று வாதிடுவோர் இருக்கின்றனர். அவ்வாறானதொரு நினைவுச் சின்னத்தை கட்டினால், அது தமிழ் மக்களின் கூட்டுணர்வை வெளிப்படுத்துவதற்கான தளமாக அமையும் என்றும் அவ்வாறானவர்கள் கூறுகின்றனர். சரி அப்படியொரு நினைவுச்சின்னத்தை கட்ட முடியுமென்றாலும் கூட, அது இனப்படுகொலை ஒன்றை அடையாளப்படுத்துவதாக அமையுமா அல்லது யுத்தத்தின் போதான உயிரிழப்பை அடையாளப்படுத்துவதாக அமையுமா? இதற்கு மேல் இது தொடர்பில் இப்பத்தி எதனையும் குறிப்பிட விரும்பவில்லை.
முள்ளிவாய்க்கால் பற்றி ஏராளம் பேசியாகிவிட்டது. ஆனால், ஏதாவது நிகழ்ந்திருக்கிறதா? இந்த இடத்தில் நான், 2010இல் எழுதிய ‘நீதியும் நவீன அரசியலும்’ என்னும் கட்டுரையில் சுட்டிக்காட்டிய ஒரு விடயத்தை, அதன் முக்கியத்துவம் கருதி இங்கு தருகிறேன். “இலங்கையில் ஒரு மனிதப் பேரவலம் நிகழ்ந்தது பற்றி அதிகம் எழுதி ஓய்ந்துவிட்டது, முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் வெளிப்படுத்தப்பட்ட கண்டனங்களும் ஏராளம். அவர் இவர் எனப் பலர் வரக்கூடும் என ஊட்டப்பட்ட நம்பிக்கைளும் அலாதியானவை. இறுதியில் நடந்தது எதுவுமில்லை. இனி முள்ளிவாய்க்காலை நினைவு கூர்ந்து வருடங்கள் தோறும் நாம் கல்லறைகளுக்கு வெள்ளையடித்து நம் துயரத்தை போக்கிக் கொள்ளலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நினைவு தினங்கள் அனைத்தும் இயலாமையின் வெளிப்பாடாகவே இருக்கின்றனவே தவிர செயலுக்கான அணிச் சோக்கையாக, செயலுக்கான முனைப்பாக இருந்ததில்லை (காலத்துயரும் காலத்தின் சாட்சியும் நூலில், ப.ம் 87).” இந்தக் குறிப்பை எழுதி ஆறு வருடங்களாகின்றன. இந்த ஆறு வருடங்களின் மேற்படி எனது கணிப்புக்கு மாறாக ஏதாவது முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா? மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தில் இருந்தபோது ஓரளவு நம்பிக்கையுடன் பார்க்கப்பட்ட சர்வதேச அழுத்தம் என்பதும் கூட, தற்போது புஸ்வானமாகிவிட்டது. தமிழர் அரசியல் தொடர்பில் ஒரு வரியில் சொல்வதென்றால், அது – கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.
முள்ளிவாய்க்கால் அனர்த்தம் என்பது ஒரு அரசியல் போக்கின் முடிவு. ஆனால், அது இன்னொரு போக்கிற்கான ஆரம்பமாக இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்ததா என்பதுதான் கேள்வி? இன்றுவரை பெரியதொரு அவலத்திற்கு முகம்கொடுத்த சமூகம் போன்று தமிழ் சமூகமும் தென்படவில்லை. அதேவேளை, அந்தச் சமூகத்தை வழிநடத்துவதாக சொல்லிக் கொள்ளும் அரசியல் தலைவர்களும் அப்படித் தெரியவில்லை. சிவில் சமூகமும் அப்படித் தெரியவில்லை. புத்திஜீவிகள் என்போரும் அப்படி தெரியவில்லை. புலம்பெயர் தமிழ் சமூகமும் அப்படித் தெரியவில்லை. உண்மையில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான தமிழர் அரசியல் போக்கு என்பது சிதறிக்கிடக்கும் தமிழர் ஆற்றலை ஒன்றுபடுத்துவதில் தொடங்கியிருக்க வேண்டும். தனது ஆற்றல் எங்கு திரண்டிருக்கிறது என்று கண்டுகொள்ளாத எந்தவொரு சமூகமும், முன்நோக்கி பயணிக்க முடியாது. ஆனால், அதற்கான ஆரம்ப முயற்சிகள் கூட, இன்றுவரை நிகழவில்லை. கட்சித்தனித்துவங்கள் பேசப்பட்ட அளவிற்கு தனித்துவங்களுக்கு அப்பால் தமிழர் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட வேண்டுமென்னும் சிந்தனை தோன்றவில்லை. இந்த இடத்தில்தான் தமிழ் புலம்பெயர் சமூகம் என்பது தொடர்பில் பேச வேண்டிய தேவை எழுகிறது. புலம்பெயர் சமூகம் என்பது தமிழ் மக்களின் ஒரு பிரதான பலம் என்பதே பொதுவான கணிப்பு. ஆனால், அது உண்மைதானா? உண்மையில் அது பலம்தான். ஆனால், அது பலமாக திரட்சிபெறவில்லை. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டு ஏழு வருடங்களாகிவிட்டது. இந்த ஏழு வருடங்களின் புலம்பெயர் சூழலில் மேற்குலகில் வாழும் அனைத்து தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய கட்டமைப்புக்களை உருவாக்க முடிந்ததா? அப்படியொரு வலுவான அமைப்பு உதயமானதா? உடைவுகள் அதிகரித்ததே அன்றி, இணைவுகள் ஏற்படவில்லையே ஏன்?
ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஒப்பீட்டளவில் ஜனநாயக இடைவெளி அதிகரித்திருப்பதாக பலரும் கூறிவருகின்றனர். ஆனால், இங்கு ஜனநாயக இடைவெளி அதிகரித்திருப்பது அல்ல விடயம், அதனை நாங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றோம் என்பதுதான் விடயம். பொதுவாக எங்கள் மத்தியில் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுவது தொடர்பில் போதிக்கப்படுமளவிற்கு, அதற்கான தயாரிப்புக்கள் தொடர்பில் பேசப்படுவதில்லை. இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்படும் மாற்றங்களை தமிழர் தரப்பு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றவாறான உரையாடல் கூட முன்னர் இடம்பெற்றிருக்கிறது. இப்போதும் கூட அவ்வாறான நம்பிக்கைகளை வெளியிடுவோர் நம்மத்தியிலுண்டு. அது எல்லாம் சரிதான், ஆனால், அதற்கான தயாரிப்புக்கள் எங்கள் மத்தியிருக்கின்றதா? எனது கருத்தியல் நண்பர் ஒருவர் தன்னுடைய வெளிநாட்டுப் பயணங்களின் போது, புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு விடயத்தை அழுத்தி குறிப்பிட்டிருந்தார். நான் இவ்வாறான கருத்தை பல வருடங்களுக்கு முன்னரேயே குறிப்பிட்டுவிட்டதால் தற்போது அது பற்றி குறிப்பிடுவதில்லை. அதாவது, தமிழர்களுக்கு சிந்தனை குழாம்கள் (Think Tanks) தேவை. தமிழர்களுக்கு உலகளாவிய ஊடகம் தேவை. ஆனால், புலிகள் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்டு ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இன்று வரை புலம்பெயர் சூழலிலுள்ள புத்திஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என்போரால் அது குறித்து ஒரு அடி கூட முன்னேற முடியவில்லையே ஏன்?
இன்று வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பிலும், சமஸ்டி தீர்வு தொடர்பிலும் விவாதிக்கப்படுகிறது. அதனை தமிழர்கள் கைவிட முடியாது என்பதில் முரண்பட ஏதுமில்லை. ஆனால், ஒரு தீர்வை உச்சரிக்கும் நாம் அதற்கான சமூக தயாரிப்புக்களில் ஈடுபடுகின்றோமா என்றால், அப்படி எதுவும் நிகழவில்லை. வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் பேசப்படுமளவிற்கு கிழக்கு தமிழ் மக்களை சமூக பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கான எவ்வித தயாரிப்புக்களும் இல்லை. வடக்கு – கிழக்கு இணைப்பு நிகழாது விட்டால், கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அரசியல் சமூக பொருளாதார எதிர்காலம் பெரியளவில் பாதிக்கப்படும். கிழக்கில் தமிழ் மக்கள் நன்மைகளை பெறும் வகையில் முதலீட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை புலம்பெயர் சமூகத்திலுள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டும். அவர்களால் மட்டும்தான் அதனை செய்ய முடியும். முதலீட்டுக்கான பாதுகாப்பு தொடர்பில் புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் காணப்படும் அச்சங்கள் நியாயமானது. இது தொடர்பில் அண்மையில் ஒரு மேற்குலக இராஜதந்திரியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் ஒரு விடயத்தை குறிப்பிட்டார். எங்களுடைய நாட்டின் கடவுச் சீட்டுடன் ஒருவர் இங்கு வந்து அவ்வாறான தொழில் துறைகளில் முதலீடு செய்வாராயின் அவர் தன்னை ஒரு தமிழராக மட்டும் உணரவேண்டியதில்லை. அவர் எங்கள் நாட்டின் குடிமகன். அவருக்கான பாதுகாப்பை எங்களுடைய நாடு உறுதிப்படுத்தும். அண்மையில் இரட்டை குடியுரிமை தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. இதனை பெறுவதிலும் பல புலம்பெயர் தமிழர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் நன்மையும் உண்டு, அதேவேளை, முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டிய விடயமும் உண்டு. நன்மை, அவர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியும், அதேவேளை, அவர் இலங்கை பிரஜை ஒருவர் மீதான அரச கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்ள நேரிடும். ஒப்பீட்டடிப்படையில், பிறிதொரு நாடொன்றின் குடிமகனாக மட்டும் இருந்து கொண்டு, இலங்கையில் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, அரச கட்டுப்பாடுகள் ஓப்பீட்டடிப்படையில் குறைவாகவே இருக்கும். எனவே, முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவர் இலங்கையின் குடியுரிமையை பெறாதிருப்பது ஒப்பீட்டடிப்படையில் நல்லதே! குறிப்பாக பணபலமுள்ள புலம்பெயர் தமிழர்கள் வெளிநாட்டு பிரஜைகளாக இருந்துகொண்டு முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுதான் ஒப்பீட்டடிப்படையில் அவர்களுக்குப் பாதுகாப்பானது. ஏனெனில், ஆட்சி மாற்றங்களின் பின்னர் புதிய அரசாங்கம் குறித்த முதலீட்டு நடவடிக்கைகளை எவ்வாறு அணுகும் என்பதை ஊகிக்க முடியாது. எனவே, வெளிநாட்டு பிரஜையாக மட்டும் இருந்துவிட்டால் எந்த ஆட்சி வரினும் அது ஒரு பிரச்சினைக்குரிய விடயமல்ல.
முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் தொடர்பில் பேசுகின்ற போது, கவனிக்க வேண்டிய பிறிதொரு முக்கியமான விடயம், தமிழர் தாயகப் பகுதியிலிருந்து தொடாச்சியாக மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். யுத்தத்தின் மூலம் மேற்கு நாடுகளுக்குச் சென்ற ஒரு தலைமுறையின் கவர்ச்சிக்கு ஆட்படுதல் என்பது மேலும் அதிகரித்திருக்கிறது. திருமணம் என்னும் பெயரில் புலப்பெயர்வு தொடர்கிறது. இது ஒரு பெருமைக்குரிய விடயமாகவும் மாறியிருக்கிறது. ஆனால், இதிலுள்ள ஆபத்து, தமிழர்கள் தாயகத்தில் எண்ணிக்கை ரீதியில் தொடர்ச்சியாக குறைவடைந்து செல்லுகின்றனர். இது ஒரு பாரதூரமான பிரச்சினை. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் சனத்தொகை குறைவடைந்து செல்வதானது இன்னொரு புறமாக அந்தச் சமூதாயம் அதன் ஜனநாயக பலத்தை இழந்து கொண்டு செல்லுகின்றது என்பதே பொருள். ஆனால், இது தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகளுக்கும் அக்கறையில்லை, புத்திஜீவிகள் என்போருக்கும் அக்கறையில்லை. ஒரு சமூதாயம் அதன் சனத்தொகையில் வீழ்ச்சிடைந்து செல்லுமாயின், அதன் கோரிக்கைகளும் வலுவிழந்து செல்லும். இது இன்னும் இருபது வருடங்களின் பின்னர் மிகவும் பாரதூரமான பிரச்சினையாக உருவெடுக்கும். இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளுவதற்கு ஒரே வழி, வடக்கு கிழக்கில் தொழில் துறைகளை உருவாகுவதுதான். அதில் தமிழ் இளைஞர் யுவதிகளை ஈடுபடுத்த வேண்டும். முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்பது நான் முன்னர் சொன்னது போன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான். கடந்த ஏழு வருடங்களில் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது. இன்று தமிழர்களின் கோரிக்கை அரசியலானது, ஒரு திரிசங்கு நிலையை எட்டியிருக்கிறது. தமிழ் தலைவர்களிடம் எவ்வித அரசியல் செயல் முனைப்பும் இல்லை. அரசாங்கம் எதையாவது செய்யும், அதனுடன் ஒத்துப் போய், எதையாவது பெறலாம் என்பதைத் தவிர வேறு எந்தவொரு தெரிவும் கூட்டமைப்பிடமும் இல்லை, கூட்டமைப்பு வெளியில் இருப்பவர்களிடமும் இல்லை. எல்லோரிடமும் ஏட்டுச் சுரைக்காய்கள் உண்டு. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாதென்று, தமிழில் ஒரு பழமொழியுமுண்டு.
யதீந்திரா