படம் | The Nation
இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மூலமாக உள்ள களனி கங்கையில் டீசல் எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பதாக ஆகஸ்ட் 17ஆம் திகதி 2015 அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக வணிகத் தலைநகரமான கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.
கொகா-கோலா தொழிற்சாலையிலிருந்தே டீசல் கசிவு ஏற்பட்டிருந்ததாக விசாரணையின் மூலம் பின்னர் தெரியவந்தது.
“தனியாரைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானத்தின்போது தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பின்போதே கசிவு ஏற்பட்டிருக்கிறது” என இலங்கை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் எல்.எம். தர்மசிறி தெரிவிக்கிறார். அப்போதிலிருந்து தொழிற்சாலையின் செயல்பாட்டு உரிமத்தை மத்திய சுற்றாடல் அதிகாரசபை நிறுத்தியுள்ளதோடு, ஏற்பட்டுள்ள சேதத்துக்கு தொழிற்சாலையிடமிருந்து இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கை கொகா-கோலா நிறுவனம் கசிவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளதோடு “விபத்துக்காக வருந்துகிறோம்” எனவும் தெரிவித்துள்ளது. கொகா-கோலா நிறுவனம் தங்களுக்குச் சாதகமாக, நீதிமன்றிற்கு வெளியில் பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்காக இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன. மீண்டும் செயல்பாட்டு உரிமத்தை பெற்றுக் கொள்வதற்கும், தண்டப்பணத்தை குறைத்துக்கொள்வதற்கும் ஐக்கிய அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் இலங்கை அதிகாரிகளை தொடர்புகொண்டுள்ளார் என்றும் இன்னும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
“யதார்த்த அடிப்படையிலும் அபிப்பிராயம் அடிப்படையிலும் பொது மக்கள் மத்தியில் (கொகா-கோலா நிறுவனம் தொடர்பாக) சந்தேகம் எழும் சந்தர்ப்பத்தில் தலைவர் அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் முன்வர வேண்டும்” என கொகா-கோலா நிறுவனத்தின் புதிய தலைவர் ஜேம்ஸ் க்வின்சி தெரிவித்திருக்கிறார். ஆகவே, இலங்கை கொகா-கோலா நிறுவனத்தின் பொறுப்பற்ற குற்றத்துக்குரிய செயல்பாடு அவருக்கு இது குறித்து தெளிவுபடுத்த – வெளிப்படுத்த சந்தர்ப்பமொன்றை வழங்கியுள்ளது.
களனி ஆற்றை அசுத்தப்படுத்தியமைக்காக கொகா-கோலா நிறுவனம் பகிரங்கமாக பொறுப்பேற்க வேண்டும். அது அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதோடு எதிர்காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறாது என உறுதிகூறவேண்டும். அது ஏற்படுத்திய சேதத்துக்கான இழப்பீட்டை செலுத்த வேண்டும்.
Avaaz இல் உள்ள மனுவில் கையெழுத்திட்டு நீங்களும் எதிர்ப்பை வெளியிட இங்கே கிளிக் செய்யவும். குடிநீர் அசுத்தத்துக்கு முகம்கொடுத்து வரும் குடும்பங்கள், நண்பர்கள் என அனைவர் மத்தியிலும் இதனை தெரியப்படுத்துங்கள்.