படம் | TAMILNET
இக்கட்டுரையானது அண்மையில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் வெளியான “Tiger Diaspora Backs Gajendrakumar Ponnambalam” என்ற கட்டுரைக்கு[i] பதிலாக அமைந்த ஆங்கிலக் கட்டுரையின்[ii] மொழிபெயர்ப்பும் எதிர்வரும் தேர்தல் குறித்த சில அவதானிப்புகளும் ஆகும்.
இலங்கைத் தீவிலே தமிழரின் அரசியல் போராட்டங்களையும், தமிழர் அபிலாசைகளையும், தமிழினம் பல தசாப்த காலமாய் எதிர்நோக்கி வரும் அடக்குமுறைகளை வெளிச்சமிட்டு காட்டுதலையும் சட்டப்படி குற்றங்களாக்குவதன் மூலமாகவே (criminalize) தொன்று தொட்டு வந்த இலங்கை அரசுகளும் அரசின் விவரணையை ஆதரிக்கும் ஊடகங்களும் தமிழரின் நியாயமான கோரிக்கைகளை நசுக்கியுள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னான தசாப்தங்களில் இலங்கைத் தீவில் வாழும் தமிழினம் தமக்கெதிரான அடக்குமுறைகளை உள்நாட்டிலோ சர்வதேச அரங்கிலோ எடுத்துரைக்க முயன்ற ஒவ்வொரு தருணத்திலும் பயங்கரவாதத்திற்கு எதிரான தடைச்சட்டம் (PTA) போன்ற சட்டங்கள் மூலமும், அந்த தகவல்களையோ செய்திகளையோ களத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்வோர் ‘பயங்கரவாதிகள்’, ‘தீவிரவாதிகள்’ போன்ற புனைதல்கள் மூலமும் முடக்கப்பட்டமை – முடக்கப்படுகின்றமையே உண்மை.
காணாமல் போனோர் தொடர்பில் போராட்டங்களில் ஈடுபட்டு, ஒரு வருடம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்து, அண்மையில் விடுவிக்கப்பட்ட ஜெயகுமாரி தமிழரின் நேர்மையான அறவழிப் போராட்டங்கள் பயங்கரவாத சட்டங்களினாலும், அரச விவரணைக்கு சார்பான தெற்கு ஊடகங்களாலும் முடக்கப்பட்ட நிலைக்கு சிறந்த சமீபத்திய உதாரணமாவார்.
இலங்கை அரசுகளும் அதற்குச் சார்பான ஊடகங்களும் செய்து வந்த இப்பணியை அண்மைக் காலமாக சில தமிழ்த் தரப்புக்களும் தமிழ் ஊடகவியலாளர்களும் தம்மை கேள்வி கேட்கும் ஏனைய தமிழ்த் தலைமைகளுக்கு எதிராக கையாண்டு வருவது துரதிர்ஷ்டவசமானது.
சென்ற வாரம் ‘டெய்லி மிரர்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் ஆங்கில மொழியில் எழுதும் மூத்த தமிழ் ஊடகவியலாளர் டீ.பீ. எஸ் ஜெயராஜ் வரைந்திருந்த கட்டுரை இதற்கு சான்றாகி நிற்கின்றது,
கட்டுரையின் ஆரம்பத்தில் ஜெயராஜ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வல்வெட்டித்துறை கூட்டத்தை பற்றி பேச வல்வெட்டித்துறை நகரை தனது ஆங்கில (தெற்கு) வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் தொனியிலேயே அவரது நோக்கம் வெளிச்சமாகின்றது.
வல்வெட்டித்துறையானது “கடத்தலுக்கு பெயர் போன” நகரமெனவும், “போரின் ஆரம்பப்பள்ளி” எனவும் குறிப்பிட்டு, அதே வேகத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிற்கு எதிரான விமர்சனத்தில் இறங்குகிறார் ஜெயராஜ்.
இனி அவரின் சில கருத்துக்களை விரிவாகப் பார்ப்போம்.
“Tiger Diaspora Backs Gajendrakumar Ponnambalam” (தலையங்கம்:- “கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு புலிகளை ஆதரிக்கும் புலம்பெயர் தமிழர் ஆதரவு”)
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவான புலம்பெயர்ந்த தமிழர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பெருமளவில் நிதியுதவி செய்து வருவதாக குற்றம் சுமத்தி ஜெயராஜ் தனது கட்டுரையை ஆரம்பிக்கிறார்.
அவர் சொல்லாமல் சொல்ல வரும் விடயம், தென்னிலங்கை வாசகர்களை மையப்படுத்தி எழுதும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தொன்று தொட்டு கையாண்டு வரும் ஒரு கருவி: அதாவது இலங்கைத்தீவில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஆதரவு யாருக்கு உள்ளதோ அவர்கள் என்றும் ‘பயங்கரவாதம்’ என்னும் சொற்பிரயோகத்தின் துணையுடனேயே நோக்கப்படுகின்றனர்.
இதில் நகைச்சுவைக்குரிய விடயம் என்னவென்றால், ஜெயராஜ் தமிழ் அரசியல் தலைமைகளில் யாருக்கு இன்று துணையாக நின்று ஏனைய தமிழ்த் தலைமைகளை தெற்கில் ‘பயங்கரவாதி’ என்றும், ‘தீவிரவாதி’ என்றும் புனைய முற்படுகின்றாரோ அதே தலைமைகள் வட கிழக்கில் பிரச்சாரம் நடத்தும்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ‘கைக்கூலி’ என்றும் ‘முகவர்’ என்று கூறி வருவதாகும்.
ஜெயாரஜும் அவர் ஆதரிக்கும் கூட்டமைப்பின் தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களுக்கு ஒன்றை விளக்க வேண்டும்: கஜேந்திரகுமாருக்கு புலம்பெயர் தமிழ் சமூகம் பெருமளவு நிதி உதவி வழங்கும் அதே வேளை அவருக்கு மஹிந்த ராஜபக்ஷவின் தார்மீக ஆதரவும் கிடைப்பது எப்படி? ஜெயராஜும், இந்தத் தலைமைகளும் இந்த தோற்றப்பாட்டையும் கஜேந்திரகுமார் தொடர்பில் கொழும்பிலும், வட கிழக்கிலும் முரணான குற்றச்சாட்டுக்களை தாம் முன்வைப்பதையும் தமிழ் சமூகத்திற்கு விளக்குவார்களா? (கஜேந்திரகுமாரிற்கு எதிராக குற்றம் சுமத்தும் கூட்டமைப்புத் தலைமைகளுக்கு இந்த நிலை விளக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே சந்தேகம் எழுகின்றது. ஏனெனில் அவர்கள் தெற்கில் வலியுறுத்துவதை வடக்கில் மறுதலிப்பதிலும், வட கிழக்கு தாயகப் பிரதேசத்தில் வலியுறுத்துவதை தெற்கில் மறுதலிப்பதிலும் வல்லவர்கள்).
மேலும், புலம்பெயர் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் திரு. சம்பந்தன், திரு. சுமந்திரன் உட்பட்ட கூட்டமைப்பு தலைமைகள் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தம் அரசியல் பயணத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமெனவும் அதற்கு நிதியுதவி நல்க வேண்டும் என்றும் கோரும் ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் ஏராளம் உள்ளன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது அரசியலுக்கு தார்மீக ஆதரவும், நிதியுதவியும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடம் கோரும்போது அதே சமூகம் கஜேந்திரகுமாரிற்கு ஆதரவு வழங்குதல் எவ்வாறு “புலிப் பயங்கரவாதம்” அல்லது ‘தீவிரவாதம்’ ஆகும்?
கஜேந்திரகுமார் அண்மையில் தேர்தல் ஆணையகத்திற்கு தமது சொத்து விபரங்களை அறிவித்திருக்கும் நிலையில் ஜெயராஜ் கூட்டமைப்பு தலைமையிடம் தமது தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி எவ்விதம் எங்கிருந்து பெறப்படுகின்றது என்ற கேள்வியை எழுப்புவாரா?
சீ. வி விக்னேஸ்வரன் மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன்
ஜெயராஜ் அவரது கட்டுரையில் மேலும் தெரிவிக்கையில், வடக்கின் தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன், 2013ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்களின்போது புலிகளின் தலைவரைப் பற்றிப் பேசி “மிகவும் அசிங்கமான”, “முன்னுக்குப்பின் முரண் நிலை”யை கையாண்டதாக குறிப்பிடுகிறார். அறிந்தோ அறியாமலோ ஜெயராஜ் முன்னுக்கு பின் முரண் நிலைகளை கேள்விக்குட்படுத்தியது இன்றைய பொதுத் தேர்தல் களத்தில் பரந்த ஒரு வெளியை நம் முன் திறந்து விட்டிருக்கின்றது. ஏனெனில், அண்மைய வருடங்களில் கூட்டமைப்பு தலைமைகளினதும் உறுப்புக் கட்சிகளினதும் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பக்கம் மக்களின் அப்பிப்பிராயத்தை திருப்ப ஏதுவாய் அமைந்துள்ளன.
கூட்டமைப்புத் தலைமைகளின் நெருக்கடிகளையும் (மற்றும் அரசு நெருக்கடிகளையும்) தாண்டி இராணுவத்தினால் தமிழரின் நில அபகரிப்பு, தாயகப் பிரதேசத்தில் அரச கட்டமைப்பின் உதவியுடன் சிங்கள பௌத்த மயமாக்கல் போன்ற தமிழினத்தின் இருப்பை கட்டமைப்பு ரீதியாக சிதைக்கும் திட்டங்களையும், தமிழர் தரப்பு விரும்பும் நேர்மையான அரசியல் தீர்வைப் பற்றியும் பேசும் வடக்கு முதலமைச்சரின் மீதான விமர்சனத்தை எழுப்பும் ஜெயராஜ் கூட்டமைப்பின் தற்போதைய கருத்துக்களையும் செயற்பாடுகளையும் ‘அசிங்கம்’ எனவோ “முன்னுக்குப் பின் முரண்” என்றோ குறிப்பிட மாட்டார் என்றே சந்தேகம் எழுகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து தன்னை முடிந்தளவு தொலைவு படுத்திக்கொள்ளும் நோக்கில் சம்பந்தன் 2013ஆம் ஆண்டு தென்னிலங்கையின் ‘டெய்லி மிரர்’ என்ற ஆங்கிலப் பத்திரிக்கையுடனான செவ்வியில்[iii] (தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளா என்ற கேள்விக்கு) தான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முன்னரே புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்ததாக தெரிவித்திருந்தார். அதே ஆண்டு (2013) நவம்பர் மாதம் மாவீரர் தினத்தை முன்னிட்டு சிறிதரன் நாடாளுமன்றத்தில் புலிகளின் தலைவரை ‘விடுதலைப் போராளி’ எனவும், அவர் ‘வீரச்சாவு’ அடைந்தார் எனவும் புகழ்ந்து ஆற்றிய உரைக்கு பதிலளித்த சம்பந்தன் அது “கட்சியின் நிலைப்பாடு இல்லை” எனவும், கூட்டமைப்பு “அந்த நிலைப்பாட்டில் தேர்தல்களில் போட்டியிடவில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார்[iv]. அண்மையில் தென்னிலங்கை ஆங்கில வார இதழான ‘சண்டே லீடர்’ பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியொன்றில் சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது “விடுதலைப்புலிகளின் சித்தாந்தத்திற்கு கட்டுப்பட முற்படவில்லை” என்றும், “புலிகளுக்கு விசுவாசமாக இருக்கவில்லை” என்றும், “மக்கள் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதை அனுமதிக்க மாட்டனர்” எனவும் தெரிவித்திருந்தார்[v].
எனினும், சுமந்திரன் இச்செவ்வியை வழங்கிய ஓரிரு மாதங்களிலேயே அவரின் தலைவர் மாவை சேனாதிராஜா புலிகளின் தலைவர் தனது “இளைய சகோதரன்” என்றும், அவரின் கொள்கைகளுக்கு தான் ஒருபோதும் ‘துரோகம்’ இழைக்க மாட்டார் எனவும் அண்மையில் கிளிநொச்சியில் தெரிவித்திருந்தார்[vi]. மேலும், யாழ்ப்பாணக் கூட்டமொன்றில் “சிங்கள பேரினவாத வன்முறையால் தமிழினத்தை அடிமையாக்க முற்பட்டபோதே பிரபாகரன் ஆயுதம் ஏந்த வேண்டி வந்தது” எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டிருந்தார்[vii] (உதயன் இணையத்தளத்தில் தற்போது இச்செய்தி அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது).
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மருதனார்மட கூட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் அரங்கம் அதிர்ந்தது என்று தினக்குரல் இன்னுமொரு செய்தியையும் வெளியிட்டது[viii]. சம்பந்தன் மற்றும் சேனாதிராஜா ஆகியோர் உட்பட்ட கூட்டமைப்பு தலைமை பங்குபற்றிய இன்னுமொரு கூட்டமொன்றில் டெலோ உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான ஸ்ரீகாந்தா “முள்ளிவாய்க்காலில் உலகின் வல்லரசுகளின் ஆதரவுடன் மௌனிக்கப்பட்டது உலகை வியக்க வைத்த தமிழ்த் தேசிய ஆயுதப்போராட்டமே அன்றி தமிழ்த் தேசியம் அல்ல” என்று கர்ச்சித்தார். ஜூலை மாதம் நடைபெற்ற இன்னுமொரு கூட்டத்தில் சிறிதரன், “தமிழீழ விடுதலைப்புலிகளும் போராளிகளுமே தமிழ் தேசத்தின் அடையாளங்கள்” என்று கூறியிருந்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது தமிழ் ஆயுதப்போராட்டத்தை பிரதிபலிக்கும் சொற்பிரயோகங்களை தமக்கு ஏற்றாற் போல் வட கிழக்கில் பிரயோகிப்பது இது முதற்தடவையோ இறுதித் தடவையாகவோ இருக்கப் போவதில்லை. தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் கூட்டமைப்பின் தலைமைகள் தமது வேட்பாளர்கள் விடுதலைப்புலிகளை போற்றலை கேள்வி கேட்கவோ, மறுதலித்து அறிக்கை விடவோ சௌகரியமாக மறந்துவிட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி கூட்டமைப்பின் தலைமைகளும் வேட்பாளர்களும் அவ்வப்போது (குறிப்பாக தேர்தல் காலங்களிலும், நினைவஞ்சலி தினங்கள் அண்மிக்கும் வேளைகளிலும்) துதிப்பாடுவதை பற்றியும், அதன் பின்னர் அத்தலைமைகள் ஆயுதப்போராட்டத்தையும் உயிர் திறந்த, முன்னாள் போராளிகளை தென்னிலங்கையில் கொச்சைப்படுத்துவதை பற்றியும் தென்னிலங்கையில் கஜேந்திரகுமாரை ‘தீவிரவாதி’ என்றும் ‘பயங்கரவாதி’ என்றும் சித்தரிக்க முயலும் ஊடகவியலாளர்களும் கூட்டமைப்புக்கு ஆதரவாக நின்று செயற்படும் ஊடகங்களும் கேள்வி எழுப்புவதில்லை. தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் ‘தீவிரவாதிகள்’ மற்றும் ‘பயங்கரவாதிகள்’ பற்றி இலங்கை அரசினதும், கூட்டமைப்பு தலைமைகளினதும் விவரணத்தை ஏற்று கேள்வி கேளாமை சற்றே ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றாகும். எனினும், இலங்கையின் வட கிழக்கில் மாத்திரமின்றி ஏனைய பிரதேசங்களிலும் அரசியல் களத்தில் தமக்கு செய்தி மூலங்கள் இல்லாத இடமில்லை என்ற கருத்தை உருவாக்கியுள்ள மூத்த ஊடகவியலாளரான ஜெயராஜ் வட கிழக்கில் கூட்டமைப்பின் பிரச்சார மேடைகளில் முழங்கும் புலிகளின் துதிப் பாடும் பேச்சுக்களை எவ்வாறு தவறவிட்டார் என்பது ஆச்சரியமே. தினமும் வட கிழக்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும், இணையத்திலும், ஏனைய ஊடகங்களிலும் தாராளமாக உலாவரும் பிரச்சாரக் கூட்ட பேச்சுக்களை, ஆவணப்படுத்திய சான்றுகளை தவறவிட்டது மாத்திரமின்றி, கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி வழங்குகின்றனர் என்று (ஆதாரமின்றி) ஒரு முழுக் கட்டுரை வரைவது அதை விட ஆச்சரியமாகும்.
மேலும், கடந்த மாசி மாதம் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இலங்கையின் சுதந்திர விழாவில் கலந்துகொண்டமையையிட்டு அதிருப்தி வெளியிட்ட[ix] இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உப தலைவரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி சிற்றம்பலம் ‘தீவிரவாதி’ என்றும், கூட்டமைப்பின் தலைமையை விமர்சித்ததால் “துஷ்ட, நச்சான பிரச்சாரத்தில்” ஈடுபட்டுள்ளதாகவும் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் இன்னுமொரு கட்டுரையில் ஜெயராஜினால் அடையாளப்படுத்தப்பட்டார்[x]. அதே கட்டுரையில் 60 வருட காலமாக தமிழ்த் தலைமைகளால் புறக்கணிக்கப்பட்டு வந்த சுதந்திர தின விழாவில் இரு தமிழ்த் தலைவர்கள் கலந்து கொண்டது “ஆக்கபூர்வமான சைகை” என்றும், “முன்னோக்கிய பெரும் காலடி” என்றும் ஜெயராஜ் குறிப்பிட்டார். சிங்களத் தலைமைகளின் “நம்பிக்கையை வென்றெடுக்க” கூட்டமைப்பு தலைமைகள் எடுத்த இந்த முடிவின் பிரதிபலன்கள் இன்று நம் முன் அப்பட்டமாய் காட்சியளிக்கின்றன — கடந்த ஆறு மாதங்களில் இராணுவ உதவியுடனோ அனுசரணையுடனோ வட கிழக்கில் கட்டப்படும் பௌத்த ஆலயங்களின் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருவதும், தமிழர் நில ஆக்கிரமிப்பு தொடர்ந்த வண்ணம் காணப்படுவதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் கூட தெற்கின் பெரும்பான்மை கட்சிகளினால் நிராகரிக்கப்பட்டதும் தானா ஜெயராஜ் கூறியவாறு “நம்பிக்கையை வென்றெடுத்தது”?
இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால், அன்று கூட்டமைப்பின் ஒரு சிலரின் தேவைக்கேற்ப ஜெயராஜினால் ‘மிதவாதி’, ‘தீவிரவாதி’ என்று தாக்கப்பட்ட பேராசிரியர் சிற்றம்பலம் இன்று அதே கூட்டமைப்பில் யாழ். மாவட்டத்தில் தேசிய பட்டியலில் முதன்மை வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்![xi]
அன்று 1987 இல் ராஜீவ் காந்திக்கு 13ஆம் திருத்தத்தை (இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட) நிராகரித்து மடல் எழுதிய[xii] சம்பந்தன் மேற்குறிப்பிட்ட அதே ‘டெய்லி மிரர்’ செவ்வியில் 13ஆம் திருத்தத்தினை முற்றாக செயல்படுத்துவதையே தமது கூட்டமைப்பு வலியுறுத்துவதாகவும் கூறியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் தொடர்பிலும், 13ஆம் திருத்தம் தொடர்பிலும் இவ்வாறாக தொடர்ந்து வெளியிட்டு வரும் முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளைப் பற்றி ஜெயராஜ் போன்ற ஊடகவியலாளர்களும் கூட்டமைப்பு சார் தெற்கு ஊடகங்களும் கேள்வி எழுப்புமா?
கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் வெளியேறல்
கடந்த ஐந்து வருடங்களாக கஜேந்திரகுமார் தான் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய காரணத்தை பொது மேடைகளில் விளக்கி வந்துள்ளார். இறுதியாக, அண்மையில் ஆகஸ்ட் 2ஆம் திகதி நடைபெற்ற கூட்டமொன்றில் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறி மூன்றே தினங்கள் கடந்த நிலையில் கொழும்பில் நிகழ்ந்த சந்திப்பொன்றின் விபரங்களை மீண்டும் வலியுறுத்தி அவர் தான் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு அந்தக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளே காரணமாய் அமைந்திருந்தன என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்[xiii].
போர் நிறைவுற்று மூன்றே தினங்கள் ஆன நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அந்நாள் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனை சந்திக்க கொழும்புக்கு அழைக்கப்பட்டனர் எனவும், அச்சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழ் அரசுக் கட்சி சார்பாக சேனாதிராஜா, EPRLF சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார், டெலோ அமைப்பின் தலைவருக்குப் பதிலாக கனகசபை ஆகியோரும் கலந்து கொண்டதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், அந்தக் கூட்டத்தில் நாராயணன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனிமேல் 13ஆம் திருத்தத்தின் அமுல்படுத்தலையே வலியுறுத்த வேண்டுமெனவும் கூறியிருந்ததாகக் குறிப்பிட்டார். கஜேந்திரகுமாருடன் அன்று சமூகமளித்த இன்னுமொரு தலைவரும் இந்தக் கோரிக்கைக்கு பலத்த ஆட்சேபனை எழுப்பிய வேளையில் நாராயணன் நிலைவிளக்கம் அளித்ததாகவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார். அதாவது, நாராயணன் கூறியபடி, இலங்கைத்தீவிலே அதிகரித்து வந்துகொண்டிருந்த சீனச் செல்வாக்கை குலைக்கவும், இந்தியாவின் காற்தடத்தை (footprint) இலங்கையில் தொடர்ந்து பேணவும் இலங்கை – இந்திய ஒப்பந்தமும் அதன் மூலம் உருவான 13ஆம் திருத்தச் சட்டத்தின் நிரந்தர இருப்பும் இன்றியமையாதவை என்றும் நாராயணன் அன்று அச்சந்திப்பில் தெரிவித்ததாக கஜேந்திரகுமார் தெரிவித்தார். 60 வருட காலமாக தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அவலங்களையும், இழந்த உயிர்களையும் தாரைவார்த்து இலங்கையில் இந்தியாவின் இருப்பை தக்க வைப்பதற்காக மாத்திரம் 1987ஆம் வருடமே தமிழர் தரப்பின் சகல பங்குதாரர்களினாலும் (சம்பந்தன் உட்பட) நிராகரிக்கப்பட்ட 13ஆம் திருத்தத்தை வலியுறுத்தல் என்ற அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறக் காரணமானது என்று கஜேந்திரகுமார் மேலும் விளக்கமளித்தார்.
இலங்கை – இந்திய ஒப்பந்த கைச்சாத்திடலும், அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட 13ஆம் திருத்தமும் மற்றும் மாகாண சபைகளும் அன்றே (1987) சகல தமிழ்த் தரப்பினராலும் நிராகரிக்கப்பட்டமையும், அதன் பின்னர் தமிழ் அரசியல் காலவரிசையும் இலங்கை அரசியல் அவதானிகள் யாராயிருப்பினும் அறிந்த விடயங்களே.
கஜேந்திரகுமார் குறிப்பிட்ட கொழும்பு சந்திப்பு இடம்பெற்று ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் அன்று அச்சந்திப்பில் பங்குபற்றிய எந்தத் தலைவரும், நாராயணன் உட்பட, அக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களையோ, எட்டப்பட்ட முடிவுகளையோ பற்றி கஜேந்திரகுமார் கூறிய கருத்துக்களை நிராகரிக்கவோ மறுதலிக்கவோ இல்லை. தான் வெளியேறிய காரணங்களை கஜேந்திரகுமார் 6 வருடங்களாக வலியுறுத்தி வரும் நிலையிலும் அதனை ஏனைய எந்தத் தலைவரும் மறுதலிக்காத நிலையிலும் கஜேந்திரகுமார் நாடாளுமன்ற ஆசன இழுபறி காரணமாகவே கூட்டமைப்பை விட்டு வெளியேறினார் என்று தனது கட்டுரையில் ஜெயராஜும் (அவர் ஆதரிக்கும் கூட்டமைப்புத் தலைமைகளும்) கூறி வருவது அபத்தமானது.
கஜேந்திரகுமார் ஆற்றிய விளக்கத்தை கூட்டமைப்புத் தலைமைகள் எவரும் மறுதலிக்காத நிலையில் ஜெயராஜ் இனி அவர்களிடம் அன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பற்றி கேள்வி எழுப்புவாரா?
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாகாண சபை தேர்தல் 2013, ஜனாதிபதித் தேர்தல் 2015
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2013ஆம் ஆண்டின் மாகாண சபைத் தேர்தல் மற்றும் இந்த ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கொண்டிருந்த நிலைப்பாடுகளையும் கஜேந்திரகுமார் தொடர்ந்து விளக்கி வந்துள்ள நிலையில் ஜெயராஜ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் நிலைப்பாடுகளை விமர்சிக்கின்றார். 2013ஆம் ஆண்டு ஜூலை தமது கட்சியின் நிலைப்பாட்டை ஊடக சந்திப்பொன்றில் விளக்கிய[xiv] கஜேந்திரகுமார், தமிழர் தரப்பின் சகலராலும் அன்றே நிராகரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்குத் தாம் அங்கீகாரம் வழங்கும் விதத்தில் தமது கட்சி ஒருபோதும் செயற்பட விரும்பாததால் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்ததாக கூறினார். எனினும் அரசு – ஆதரவுத் தரப்புக்கள் மாகாண சபை ஆட்சியை கைப்பற்றி மாகாண சபை முறை இனப்பிரச்சினைக்கு தீர்வாகலாம் என்ற மாயையை உருவாக்கிவிடக்கூடும் என்ற காரணத்தினால் சிவில் சமூகத்தை சேர்ந்த சிலரின் வேண்டுகோளின்படி தாம் சுயேட்சை குழுவாக போட்டியிட எண்ணியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இதன் படி மாகாண சபை முறைக்கு அங்கீகாரம் வழங்காத அதேவேளை அரச ஆதரவு தரப்புகள் மாகாண சபை ஆட்சியை கைப்பற்றுவதை தடுக்கலாம் எனவும் அந்த ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார். மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் சுயேட்சை குழுவாக போட்டியிடின் தமது கட்சி முழு ஆதரவு வழங்குவதாக தெரியப்படுத்தியிருந்ததாகவும் மேலும் தெரிவித்தார். கூட்டமைப்பானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் விளக்கத்தை மறுத்து மாகாண சபை முறையை அங்கீகரித்து போட்டியிட்டதால் தமது கட்சி அத்தேர்தலை புறக்கணிப்பதை தவிர வழியிருக்கவில்லை என்றும் விளக்கினார்.
இதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலை தாயக தமிழர் புறக்கணிக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையையும் விளக்கிய அவர் பிராந்திய சக்திகளும், சர்வதேச சக்திகளும் ஆட்சி மாற்றத்தை குறிக்கோளாகக் கொண்டு தமிழர் தரப்பை தமக்குச் சாதகமாக உபயோகித்து பயணிக்கும் வேளை தமிழர் தரப்பு ஆட்சி மாற்றத்தை நிபந்தனையின்றி ஆதரிப்பது பாரிய பின்விளைவுகளை கொண்டுவரக் கூடும் என்று விளக்கியிருந்தார். இலங்கையின் மட்டுமன்றி தமிழ் அரசியல் காலவரிசையிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் ஈழத்தமிழரின் புவிசார் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்த்தலைமைகள் செயற்படாவிடின் மிகவும் அபாயகரமான விளைவுகளை சந்திக்கலாம் எனவும் விளக்கியிருந்தார். அதாவது, மைத்திரி – ரணில் – சந்திரிக்கா கூட்டணிக்கும், ஆட்சி மாற்றத்தை விரும்பிய சர்வதேச சக்திகளுக்கும் தமிழர் தரப்பை திருப்திப்படுத்தும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே தமிழரின் முழு ஆதரவும் அவர்களுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழ்த் தலைமைகள் வழங்கியிருக்கலாம் என்ற தர்க்கத்தை கஜேந்திரகுமார் முன் வைத்திருந்தார். அவ்வாறு நிபந்தனைகளை முன்வைக்காத பட்சத்தில் சர்வதேச தரப்புகள் தமிழரைச் சார்ந்து செயற்படுவதற்கான தூண்டுதல் வெகுவாக குறைந்துவிடும் என்றும் கூறியிருந்தார். அன்று கஜேந்திரகுமார் முன்வைத்த விளக்கங்கள் இன்று தீர்க்கதரிசனமாகவே அமைந்துள்ளன — இலங்கையில் “இரத்தம் சிந்தாத புரட்சி” நடந்தேறி 6 மாதங்கள் கடந்த நிலையில் வட கிழக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதாக அறிகுறிகள் இல்லை. கடந்த வாரம் கூட (ஆகஸ்ட் 7) பூநகரிப் பிரதேசத்தில் இராணுவ அனுசரணையுடன் கட்டப்பட்ட பௌத்த விகாரை ஒன்றின் திறப்புவிழா நடந்தேறியது[xv]. ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்ற அமைச்சருமான டீ.எம். சுவாமிநாதன் இராணுவம் தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலங்களை பார்வையிடக்கூட மக்களை அனுமதிக்க மறுக்கிறது என்று அண்மையில் தெரிவித்திருந்தார்[xvi]. பெரும் ஆரவாரத்துடன் வட கிழக்கு மாகாணங்களுக்காய் நியமிக்கப்பட்ட இராணுவத்தினர் அல்லாத ஆளுநர்கள் தொடர்ந்தும் இராணுவ விழாக்களில் பங்கேற்பதும், அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் நடவடிக்கைகளை சீர்குலைக்க முயல்வதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
அன்று மைத்ரி – ரணில் – சந்திரிக்காவை நம்பி மாற்றத்தை உருவாக்குவோம் என்று கூறி பிரச்சாரம் செய்த கூட்டமைப்பினர் இன்று முற்றிலும் மாறுபட்ட கருத்தை கூறுவது ஆச்சரியமாய் உள்ளது. அண்மையில் நடந்த கூட்டமொன்றில் கூட்டமைப்பின் வேட்பாளரான சரவணபவன், மஹிந்த ராஜபக்ஷ போன்று நேருக்கு நேர் நின்று மோதும் எதிரியாய் அல்லாது ரணில் “கழுத்தில் கையை போட்டு குழியில் தள்ளுபவர்” என்று எச்சரித்தார் (சரவணபவனுக்கு இன்று புலப்பட்ட இந்த ‘உண்மை’ அன்று அன்டன் பாலசிங்கம் ரணிலை பற்றி கூறிய கருத்தை ஒத்து நிற்பது தற்செயல் அல்ல என்றே எண்ணத் தோன்றுகின்றது).
சரவணபவன் இன்று கூறுவது போன்று ரணில் நயவஞ்சகர் என்றால் அன்று ரணிலை நம்பி வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியது ஏன்? ரணில் நயவஞ்சகர் என்றால் “இதயங்களின் சங்கமிப்பு” ஏற்பட்டுள்ளது என்று 60 வருடத்தின் பின் தமிழ்த் தலைமைகள் சுதந்திர விழாவுக்கு சென்றது ஏன்? “உலக வல்லரசுகளை வளைத்து போட்ட” கூட்டமைப்பு தலைமைகள் ரணிலின் நயவஞ்சகத்தை அறியாமல் போனது எப்படி? இதுவா தமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திரம்? ரணில் “தோளில் கையை போட்டு குழிக்குள் தள்ளுபவர்” என்றால் இன்றும் கூட 2016இல் சுயாட்சி, இல்லாவிட்டால் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரச்சாரம் மேற்கொள்வது ஏன்?
சரவணபவன் இவ்வாறு கூறிய அதே தினத்தில் ரணில் விக்ரமசிங்க உதயன் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில்[xvii] தாம் செப்டெம்பர் ஐ.நா. அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு கூட்டமைப்பின் உதவியினை நாடியதாகவும் அதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றன என்றும் கூறியது பெரும் வியப்புக்குரியது. ரணில் ‘நயவஞ்சகர்’ என்று கூறிக்கொண்டு கூட்டமைப்பு ரணிலின் அரசுடன் மக்கள் அவலங்கள் பற்றிய அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு வாக்களித்த மக்களுக்கு தெரியாமல், இரகசியமாய் கலந்துரையாடியது ஏன்? அரசுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களுக்காக வாக்களித்த மக்களின், பாதிக்கப்பட்டோரின் ஆலோசனை பெறப்பட்டதா? பாதிக்கப்பட்டோருக்கு அரசுடனான கலந்தாலோசனைகள் பற்றி தெரியப்படுத்தப்பட்டதா? ஜெனீவாவில் பொறுப்புகூரலை கோரும் கூட்டமைப்பு தமக்கு வாக்களித்த மக்களுக்கு, பாதிக்கப்பட்டோருக்கு எப்போது பொறுப்புக்கூறும்?
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அன்று தீர்க்கதரிசனமாய் கூறி இன்று நடந்தேறி வரும் நிகழ்வுகள் பற்றியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறி மாறி முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிடுவதை பற்றியும் ஜெயராஜும் ஏனைய ஊடகங்களும் கேள்வி எழுப்புமா?
“ஒரு நாடு, இரு நாடு”
முன்னணியின் மீதான விமர்சனத்தை மேலும் தொடரும் ஜெயராஜ் அவர்களின் “ஒரு நாடு, இரு தேசம்” என்ற கோட்பாடு ‘நகைப்புக்குரியது’ என்றும் ‘தெளிவற்று, பலபொருள் படுவதும்’ என்றும் குறிப்பிடுகிறார். வயதில் அவரை விட மிகச் சிறிய நான் நாற்பது வருட காலமாக தமிழ்த் தேசிய அரசியல் அவதானியாகவும், ஊடகத்துறையில் ஜாம்பவானாகவும் விளங்கும் டீ.பீ.எஸ். ஜெயராஜ் அவர்களுக்கு ‘தேசம்’, ‘தேசியம்’, ‘சுயநிர்ணயம்’ ஆகிய கோட்பாடுகளைப் பற்றி பாடம் புகட்ட விரும்பவில்லை. எனினும், அவர் இந்த கோட்பாடுகளை தனது ஆங்கிலம் பேசும் (தென்னிலங்கை) வாசகர்கள் மத்தியில் “ஒரு நாடு, இரு நாடு” என்று ‘சிதைக்க’ முயலும் விதமே இங்கு நகைப்புக்குரியது. தமிழர் தேசம் என்ற கோட்பாடு அங்கீகாரம் பெற்று, ஆதரவு பெற்று பல தசாப்தங்கள் கடந்த நிலையில் டீ.பீ.எஸ். ஜெயராஜ் 2015 ஆம் ஆண்டு அதன் சமஸ்கிருத – ஆங்கில – தமிழ் அர்த்தத்தை கண்டறிந்திருப்பது பெரும் ஆச்சரியமே!
ஜெயராஜைப் போன்றே கூட்டமைப்பின் வேட்பாளர் சிறிதரனும் “ஒரு நாடு, இரு நாடு” என்று கூறி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கையை அண்மையில் ‘சிதைக்க’ முயன்றது தற்செயலாக அமைந்திருக்க முடியாது.
இவ்விருவரின் கூற்றுக்களில் என்ன ஆச்சரியம் என்றால் 2013ஆம் ஆண்டு முட்கொம்பனில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது இதே சிறிதரன் “இலங்கை தீவில் தமிழ்த் தேசம், சிங்கள தேசம் என்று இரு தேசங்கள் காணப்படுகின்றன” என்றும், “தமிழ் தேசத்திற்கு சுயநிர்ணய உரிமை காணப்படுகின்றது” என்றும் தெட்டத் தெளிவாக கூறியதே (நிமி 5:10-6:11 வரை)[xviii]!
ஜெயராஜ், ‘தேசம்’ (Nation), ‘நாடு’ (Country) ஆகிய சொற்பதங்களுக்கிடையான வேறுபாட்டை அறியாதவர் என்று நம்ப முடியவில்லை. அவர் அவ்விரு கோட்பாடுகளுக்கிடையே வேறுபாட்டை அறியாவிடில் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் ‘தேசம்’, ‘நாடு’ ஆகிய கோட்பாடுகளுக்கிடையேயான வேறுபாட்டை அறிந்து வேண்டுமென்றே “பலபொருள் பட” (ambiguous) கருத்துக் கூறி தமது வாசகர்களை திசை திருப்ப முயன்றிருப்பின் அது அதனை விட துரதிர்ஷ்டவசமானது.
1985 திம்பு பேச்சுவார்த்தைகளின் போது சகல தமிழ் ஆயுதக் குழுக்களாலும், அரசியல் கட்சிகளாலும் (சம்பந்தன், சேனாதிராஜா, சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட) ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் தேசத்தின் கோரிக்கைகளை உள்ளடக்கிய திம்பு கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையப்பெற்றுள்ளது[xix].
ஜெயராஜ் (சிறிதரனும்) உண்மையிலே இந்த பதங்களுக்கிடையான வேறுபாட்டை அறியாதவர் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலையில் அவர் முன்னால் அவர் ஒருபோதும் விரும்பாத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறித்த ஒரு தலைவருடனான ஒரு முரண்பாடு உருவாகின்றது. அது பின்வருமாறு,
கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுமந்திரன் “கூட்டமைப்பின் விஞ்ஞாபனமானது திம்பு கோட்பாடுகளையும் மிஞ்சியது” என்று தெரிவித்தார்”[xx].
சுமந்திரனின் கூற்று இவ்வாறிருக்க ஜெயராஜ் (சிறிதரனும்) கூறும்படியே ‘தேசம்’ என்றால் (அவர்களது தமிழ் – சமஸ்கிருத மொழிபெயர்ப்பு விளக்கத்தின்படி) ‘Country’ (நாடு) என்று பொருள்படுவதாகவே வைத்துக்கொள்வோம். திம்புக் கோட்பாட்டிலும் தமிழர் தரப்பு இதையே முன் வைத்தது என்றும் வைத்துக்கொள்வோம். அவ்வாறாயின் சுமந்திரன் “கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் திம்பு கோட்பாடுகளை மிஞ்சிவிடும்” என்று கூறியதேன்? ‘நாட்டை’ (திருவாளர்கள் ஜெயராஜ், சிறிதரனின் தர்க்கத்தின் படி) மிஞ்சிப் போய் சுமந்திரன் தமது விஞ்ஞானபத்தில் என்ன கோரிக்கையை உள்ளடிக்கியுள்ளார்? என்று ஜெயராஜ் சுமந்திரனை கேட்பாரா?
இன்னொரு கேள்வியும் இந்த இடத்தில் ஜெயராஜிடம் கேட்கத் தோன்றுகிறது. அண்மையில் திம்பு கோட்பாடுகளை மையப்படுத்தி கஜேந்திரகுமார் “ஒரு நாடு, இரு தேசம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தியபோது சம்பந்தன் கஜேந்திரகுமாரை ‘பிரிவினைவாதி’ என்றும், அது “வெற்றுக் கோஷம்” என்றும் கடிந்திருந்தார்.
அவ்வாறெனில் “திம்பு கோட்பாடுகளை கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் மிஞ்சிவிடும்” என்று கூறிய சுமந்திரன் பிரிவினைவாதி இல்லையா? சுமந்திரனது கூற்று “வெற்றுக்கோஷம்” இல்லையா?
முன்னணி மீது மேலும் விமர்சனம் முன்வைக்கும் ஜெயராஜ், இலங்கையில் மீண்டும் வன்முறை உருவாவதை விரும்பும் புலம்பெயர் தமிழர்களின் செல்வாக்கின் கீழ் செயற்படுவதாகக் குறிப்பிடுவது களநிலையை அறியாத் தன்மையையே காட்டுகின்றது. தாயகத்தில் வாழும் தமிழர் இன்னொரு போருக்கான திராணியோ நோக்கமோ அற்றவர்கள். ‘பக்கச்சார்பற்ற’ ஊடகவியல் என்று கூறிக்கொண்டு இப்படியான விசமத்தனமான கூற்றுக்களை முன்வைப்பது ஒரு மூத்த ஊடகவியலாளருக்கு அழகல்ல.
எது எவ்வாறிருப்பினும், 18 அன்று தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது “பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும்” காட்டும் தந்திரத்தையே கையாண்டு வருவது தெட்டத் தெளிவாகின்றது. கட்சித் தலைமையும், கூட்டமைப்பு ஆதரவு ஊடகங்களும் இதனை “கட்சி ஜனநாயகம்” என்றும் “கூட்டமைப்போன்றினுள் கருத்து வேறுபாடுகள் சகஜமானவை” என்றும் தட்டிக் கழித்து விடுகின்றனர். ஆனால், இதுவே கூட்டமைப்பின் தந்திரம். போட்டியில்லாத ஒரு பீடத்தில் நின்று கொண்டு ‘ஏகப்பிரதிநிதிகள்’ என்று கூறிவரும் கூட்டமைப்பானது தென்னிலங்கையில் தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகள் விரும்பும், இன்னமும் வரையறுக்கப்படாத ‘இலங்கையர்’ என்ற அடையாளத்தை போர்த்துக் கொள்வதும் வட கிழக்கு தாயகப் பிரதேசத்தில் தேர்தல் காலங்களில் ‘தேசம்’, ‘தேசியம்’, ‘சுயநிர்ணயம்’ என்னும் தமிழ்த் தேசியத்துக்குரித்தான சொற்பதங்களை பிரயோகிப்பதுமாக தனது முன்னுக்கு பின் முரணான பாதையை தொடர்கின்றது. பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் (அதன் தொடர்ச்சியாக இலங்கை அரசுக்கும்) தமிழ் சமூகத்திற்குமிடையே நம்பிக்கை அதள பாதாள நிலையில் காணப்படும் இத்தருணத்தில் கூட்டமைப்பு தமிழரின் உண்மையான, நேர்மையான, நியாயமான கோரிக்கைகளை தென்னிலங்கையிலும், ஏனைய தாயகத்திற்கு வெளியேயான மேடைகளிலும் முன் வைக்காமை பயங்கரமான பின் விளைவுகளை கொண்டு வரும். ‘பக்கச்சார்பற்ற’ ஊடகவியலாளர்கள் மற்றும் தெற்கு ஊடகங்களின் ஆதரவுடன் கூட்டமைப்பின் தலைமைகள் செல்லும் இந்தப் பாதையானது தமிழரின் நியாயமான கோரிக்கைகள் மௌனிக்கப்படவும் மறுக்கப்படவும் வழிவகுக்கப் போகின்றன என்பதில் ஐயமில்லை. தமிழ்த் தேசிய காலவரிசையில் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் ஏனைய ஆயுதக் குழுக்களினதும் பங்களிப்பு அலசி ஆராயப்பட வேண்டியது என்பதில் எதுவித ஐயமுமில்ல. எவ்வாறு இருப்பினும் இன்று கூட்டமைப்புத் தலைமைகளின் பாசாங்கும் தினந்தோறும் வெளிவரும் முன்னுக்குப் பின் முரண் நிலைகளும், நம்பிக்கையின்மையுமே கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பால் மக்கள் திரும்பக் காரணமாய் அமைந்துள்ளது. முற்போக்கான பாதையில் நகர முயன்று வரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர், பெண்களுக்கு கட்சி செயற்பாடுகளில் சமத்துவம் வழங்கி செயற்படுவது வரவேற்கத்தக்கது (முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இவ்விரண்டு பெண் வேட்பாளர்களும், யாழ்ப்பாணத்தில் மூன்று பெண் வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்). மேலும் பெண்கள், சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறையை ஒழித்தல் “வெற்றுக் கோஷங்கள்” ஆகவே இன்று காணப்படும் நிலையில் முன்னணி பாலியல் வன்முறை, பாலியல் துஸ்பிரயோகம் என்பவற்றிற்கு எதிராக முன்னின்று போராடி வந்துள்ளது.
டீ.பீ.எஸ். ஜெயராஜ் போன்ற மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தமது நம்பகத்தன்மையை இவ்வாறு இழப்பது கவலைக்குரியது. ஜெயராஜுக்கு இலங்கை அரசியல் களம் பற்றியோ, தமிழ்த் தேசியம் பற்றியோ சொந்த கருத்துக்கள் இருப்பதை யாரும் கேள்விக்குட்படுத்தவில்லை. அவர் தமது இல்லத்தில் கூட்டமைப்பின் முக்கிய புள்ளி ஒருவரை தங்க வைத்து உபசரிப்பதையும் எவருமே கேள்விக்குட்படுத்தவில்லை (ஜெயராஜ் அவர்களுக்கு செய்தி வழங்கும் ‘பெயரில்லாத’ கூட்டமைப்பின் அந்தத் தலைவர் யார் என்பது ஊரறிந்த உண்மை). ஆனால் தனது சொந்த கருத்துக்களையும், ‘பெயர் குறிப்பிடாத’ கூட்டமைப்பு தலைமைகளினது கருத்துக்களையும் ‘பக்கச்சார்பற்ற’ ஊடகவியல் என்று பறை சாற்றுவது அவருடைய வாசகர்களுக்கு செய்யும் பெருத்த அவமரியாதையாகும். ஜெயராஜ் இனிமேலும் தனது நம்பகத்தன்மையை நிலைநாட்ட விரும்புவாராயின் கடந்த கால சாதனைகளில் இனிமேலும் தங்கியிராது, ‘பெயர் குறிப்பிடாத’ நபர்களின் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளில் தங்கியிராது, வாசகர்களை மனதில் கொண்டு நம்பத்தகுந்த, அறிவுசார் கட்டுரைகளை வரைவதே சாலச் சிறந்தது.
ஏற்கனவே, ஜெயராஜினால் உருவாக்கப்பட்ட ‘மிதவாதிகளும்’ ‘தீவிரவாதிகளும்’ ஏராளமாக காணப்படும் நிலையில் நானும் ஏன் அந்த எண்ணிக்கையை வளர்ப்பான் என்றும், நான் பெயரற்று காணப்பட்டால் ஜெயராஜ் வழமை போல ஆசிரியரை தாக்காமல் கருத்துக்களுக்கு பதிலளிப்பார் என்ற நம்பிக்கையினாலும் இக்கட்டுரை சொந்தப் பெயரிலன்றி புனைப் பெயரில் வெளியாகின்றது.
இந்திரா
[i] D.B.S Jeyaraj, “Tiger Diaspora Backs Gajendrakumar Ponnambalam,” Daily Mirror. http://www.dailymirror.lk/82053/tiger-diaspora-backs-gajendrakumar-ponnambalam. (August 11, 2015).
[ii] Indhiraa, “TNA, TNPF, D.B.S Jeyaraj and Objective journalism,” Tamil Diplomat. http://tamildiplomat.com/tna-tnpf-d-b-s-jeyaraj-and-objective-journalism/. (Aug 11, 2015).
[iii] “I was on the LTTE hit list before Mahinda Rajapakse,” Daily Mirror. http://www.dailymirror.lk/32004/i-was-on-the-ltte-hit-list-before-mahinda-rajapaksa-was-. (August 11, 2015).
[iv] Kelum Bandara, “Sampanthan at odds with Sritharan,” Daily Mirror. http://www.dailymirror.lk/39468/tech. (August 11, 2015).
[v] TNA Has No Loyalty Towards LTTE — M. A. Sumanthiran,” Sunday Leader. http://www.thesundayleader.lk/2015/04/19/tna-has-no-loyalty-towards-ltte/. (August 11, 2015)
[vi] “தம்பி பிரபாகரன் என மாவை தடல்புடல்,” JVPNews. http://www.jvpnews.com/srilanka/81720.html. (August 11, 2015).
[vii] தமிழ் மக்களை அடிமைகளாக்க சிங்களப் பேரினவாதிகள் எத்தணிக்கையில் ஆயுதம் ஏந்தினார் பிரபாகரன் :மாவை,” Uthayan. http://www.onlineuthayan.com/News_More.php?id=539804184306769802#. (August 11, 2015).
[viii] K. Hamsanan, “பிரபாகரன் பெயரை கேட்டதும் அதிர்ந்தது மருதனார்மடம்,” Thinakkural. 26 July 2015, p. 1.
[ix] “[English] Interview with Prof S.K. Sitrampalam,”. TamilNet. https://www.youtube.com/watch?t=24&v=wrhqs8QvEjA. (August 11, 2015).
[x] D.B.S Jeyaraj,” Tamil ‘Extremists’ target Sampanthan and Sumanthiran of the TNA as ‘Traitors’,” Daily Mirror. http://www.dailymirror.lk/65029/tamil-extremists-target-sampanthan-and-sumanthiran-of-the-tna-as-traitors. (August 11, 2015)
[xi] “தேசியப் பட்டியல் வாய்ப்பை மறுத்தார் சசிகலா ரவிராஜ்,” Athavan News. http://athavansrilanka.com/?post_type=post&p=254227. (August 11, 2015).
[xii] Letter to PM Rajiv Gandhi from TULF on 13th Amendment,” Sangam. http://sangam.org/letter-pm-rajiv-gandhi-tulf-13th-amendment/. (August 11, 2015).
[xiii] “கூட்டமைப்பில் இருந்து நாம் ஏன் வெளியேறினோம்?,” கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நண்பர்கள். https://www.facebook.com/friendsofgajen/videos/1649450078605981/?pnref=story. (August 11, 2015).
[xiv] “Gajendrakumar clarifies TNPF position on NPC elections,” TamilNet. https://www.youtube.com/watch?v=1oY8xODv2Bo. (August 12, 2015)
[xv] “Sri Lankan army opens Buddhist temple in North-East,” Tamil Guardian. http://www.tamilguardian.com/article.asp?articleid=15498. (August 12, 2015).
[xvi] “The army in Jaffna are prohibiting the people from resettling,” TamilCNN. http://www.tamilcnn.ca/the-army-in-jaffna-are-prohibiting-the-people-from-resettling-d-m-swaminathan-accused.html. (August 12, 2015).
[xvii] “ஐ.நா அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு கூட்டமைப்பின் உதவி,” Uthayan. 8 August, 2015, p. 1.
[xviii] “Hon.S.Shritharan MP is at Mudkomban Kilinochchi,” https://www.youtube.com/watch?v=nwseOTDopoY (August 12, 2015).
[xix] “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி –அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் 2015தேர்தல் விஞ்ஞாபனம்,” இது நம் தேசம். http://www.ithunamthesam.com/archives/20547. (August 12, 2015).
[xx] “தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் திம்பு கோட்பாட்டையும் மிஞ்சியது,” Global Tamil News. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122692/language/ta-IN/article.aspx. (August 12, 2015)