உள்ளகப் பொறிமுறை மூலம் விசாரணை நடத்துவோம் என்ற வாக்குறுதி மார்ச் 2015இல் அறிக்கை வெளிவராமல் இருப்பதற்கு இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானதாகும். தான் அறிக்கையை தள்ளிப் போட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுற்றிருப்பார்கள் என்பதை தான் உணர்வதாக கூறிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நிச்சயமாக அறிக்கையை செப்டெம்பரில் வெளிக் கொண்டு வருவேன் என்று அப்போது கூறினார். செப்டெம்பரில் அறிக்கை வரும் (அதன் பிரதி ஒன்று அரசிற்கு ஆகஸ்டில் அனுப்பி வைக்கப்படும் – அப்படியே அது வெளியில் கசிந்து விடும்) என்பதால்தான் ஆகஸ்ட் முடிவுக்குள் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் என்ற அழுத்தம் மேற்குலகத்தாலும் இந்தியாவாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது பிரயோகிக்கப்பட்டது. அறிக்கை மஹிந்தவால் பொதுத் தேர்தலில் தனக்குச் சாதகமாக பயன்படுத்துவதை தடுப்பதற்காகவே இந்தத் தேர்தல் திகதி நிர்ணய அரசியல். (ஆரம்பத்தில் அறிக்கை பிற்போடப்படுவதற்கும் இதுதான் காரணம்). அவ் அழுத்தத்திற்கு விட்டுக் கொடுத்து மைத்திரி நாடாளுமன்றத்தை கலைத்து விட்டார். ஆகஸ்ட் 17 தேர்தலுக்கு நாளும் குறித்தாகி விட்டது.
செப்டெம்பரில் அறிக்கை வர முதல் உள்ளக பொறிமுறை ஒன்றை எல்லாத் தரப்போடும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களோடு கலந்தாலோசித்து முடிவு செய்யும் படி ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் மார்ச்சில் அறிவுரை கூறியிருந்தார். அதனை சென்ற மாதமும் மீள வலியுறுத்தியிருந்தார். ஆனால், எந்தவித பகிரங்க கலந்தாய்வும் அரசால் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. தென்னாபிரிக்காவோடு இந்த உள்ளக விசாரணை பொறிமுறை அமைப்பது பற்றி பேசி வருவதாக ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்து சொல்லியிருந்தார். இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சில புலம்பெயர் அமைப்புக்களும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் எந்த கலந்தாய்வும் இதுவரை நடத்தப்படவில்லை. ஆனால், ஏற்கனவே உள்ளகப் பொறிமுறை ஒன்றிற்கு நிதியாதரவு வழங்கப் போவதாக இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஜூன் 4, 2015 அன்று கொழும்பில் நடைபெற்ற அரசின் மீள்குடியேற்றம் சம்பந்தமான மாநாட்டில் அறிவித்து விட்டார். ஐ.நா. அறிக்கை வர முன்னமே என்ன செய்ய வேண்டுமென ஐ.நாவும் மேற்குலக நாடுகளும் முன் கூடியே தீர்மானித்து விட்டது போல் தெரிகிறது (தமிழ் சிவில் சமூக அமையம் உட்பட வடக்கு கிழக்கை சேர்ந்த 15 பொது அமைப்புக்கள் இதனைச் சுட்டிக் காட்டி ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது). ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் உள்ளக பொறிமுறைக்கு மேற்கு தொடர்ந்து ஆதரவு தரும் என்பதில் சந்தேகம் இல்லை. மஹிந்த வென்றால் மீண்டும் சர்வதேச விசாரணைக்கு ஆதரவு வழங்கக் கூடும். அதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தக் கட்டுரையின் நோக்கம் உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் பொறுப்புக் கூறல் செயன்முறை ஒன்றிற்கு தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமா என்பதை அலசுவதே.
தமிழ் மக்கள் உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
செப்டெம்பரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் அவ்வறிக்கை கிடப்பில் போடாமல் இருப்பதற்கு அவ்வறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உள்ளக விசாரணையை உருவாக்குவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்றும், சர்வதேச விசாரணை என்பது செப்டெம்பரில் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதோடு பூர்த்தி அடைகின்றது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கொள்கை வகுப்பாளரான எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிடுகிறார். இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதன்று.
மார்ச் 2014இல் ஐ.நா. மனித உரிமை பேரவை தீர்மானத்தைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் தயார் செய்யப்படும் அறிக்கையை செப்டெம்பர் 2015இல் கையளித்தவுடன் சர்வதேச விசாரணை பூரணமாகும் என்பதில் உண்மை இல்லை. ஐ.நா. மனித உரிமைப் பேரவை மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மூலமாக இது வரை நடைபெற்றது சர்வதேச விசாரணையின் ஒரு பகுதி மட்டுமே. இந்தப் பகுதி பெரும்பாலும் தகவல் திரட்டல் (fact finding) சம்பந்தமானது மட்டுமே. (யுத்தத்திற்கு பின் தொடர்ந்து நடைபெரும் குற்றங்களை மேற்பார்வை செய்யும் விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தது). பெற்றுக்கொண்ட தகவல்கள் அடிப்படையில் அறிக்கை சிபாரிசுகளை முன்வைக்க இருக்கின்றது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் அந்த சிபாரிசுகள் என்ன குற்றங்கள் இழைக்கப்பட்டன என்பது தொடர்பில் ஒரு பட்டியலை முன்வைத்து இவை தொடர்பில் நீதிமன்ற (judicial) விசாரணை வேண்டும் எனக் கூறலாம் (ஐ.நா. மனித உரிமைப் பேரவை, மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நீதிமன்ற விசாரணை செய்யும் தகுதி அற்றவை). அறிக்கையில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படலாம். சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை ஏதுப்படுத்துமாறு ஐ.நா. பாதுகாப்பு சபையை இவ்வாறான அறிக்கைகள் கேட்டுக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னர் என்ன நடவடிக்கை எடுப்பதென ஐ.நா. மனித உரிமைப் பேரவை முடிவெடுக்கலாம் (பேரவை உருப்பினர்களாக இருக்கும் நாடுகளால் வழி நடத்தப்படும்). பாலஸ்தீன விடயத்தில் செய்ததைப் போல நிபுணர் குழுவொன்றை (Committee of Experts) உருவாக்கி அறிக்கையின் சிபாரிசுகள் உள்ளக பொறிமுறை ஊடாக நிறைவேற்றப்படுகின்றனவா எனக் கண்காணிக்கலாம்.
ஆகவே, அறிக்கையின் சிபாரிசுகளை உள்ளகப் பொறிமுறை மூலமும் சாத்தியப்படுத்தலாம், சர்வதேச பொறிமுறை மூலமும் சாத்தியப்படுத்தலாம் என்பது பெறப்படுகின்றது (சர்வதேச பொறிமுறை ஒன்றில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், தனி சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் அல்லது ஐ.நாவால் உருவாக்கப்படும் உள்ளூர், சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட ஒரு கலப்பு தீர்ப்பாயம் மூலம் சாதியப்படுத்தப்படலாம்). இதில் எது (உள்ளக விசாரணையா, சர்வதேச விசாரணையா) தெரிவு செய்யப்படும் என்பது சர்வதேச அரசியலில் அன்றைய நிலவரம் யாருக்குச் சாதகமாக இருக்கின்றது என்பதைப் பொறுத்தது. எனவே, செப்டெம்பரில் அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர் எம்முன் உள்ள ஒரே ஒரு மார்க்கம் உள்ளகப் பொறிமுறை ஒன்றே என்பது தவறு என்பது தெளிவாகின்றது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் 30 ஜூன் 2015 அன்று வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையின் முடிவின் பிரகாரம் 67% சிங்கள மக்கள் ஒன்றில் காத்திரமான விசாரணை ஒன்று தேவையில்லை என்கின்றனர் அல்லது அதன் தேவை பற்றி தெரியாது என்கின்றனர். தேவை என்று சொல்பவர்களில் 60% மானோர் அது முற்று முழுதுமாக உள்ளக விசாரணையாக இருக்க வேண்டும் என்கின்றனர்.
தமிழர்களில் 84% விசாரணை வேண்டும் என்கின்றனர். அதில் 7% மானோர் மாத்திரமே முற்று முழுதான உள்ளக விசாரணைக்கு உடன்படுகின்றனர். 45% தனித்த சர்வதேச விசாரணைக்கும் 44% சர்வதேசம் மற்றும் உள்ளூர் முறை கலந்த விசாரணைக்கும் ஆதரவளிக்கின்றனர்.
உள்ளகப் பொறிமுறை மூலம் நியாயமான விசாரணை ஒன்றை நடத்தும் அரசியல் விருப்பு இலங்கைக்குட்பட்டு உருவாக வாய்ப்புள்ளதா?
சர்வதேச அரசியல் காரணிகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்தால் உள்ளகப் பொறிமுறையா, சர்வதேச விசாரணையா என்பதைத் தீர்மானிக்கும் சர்வதேச சட்டத்தின் படியான காரணி என்ன? சம்பந்தப்பட்ட நாட்டில் நடந்த குற்றங்களை விசாரிக்க அரசியல் விருப்பிருந்தால் (political will) அந்நாட்டிற்குட்பட்டு விசாரணை நடைபெறும். அவை போதுமானவை அன்று வெறும் கண்துடைப்பானவையே என்று கருதப்பட்டால் சர்வதேச விசாரணை மூலம் உண்மையான விசாரணையை சாத்தியப்படுத்த வேண்டும் என்று சர்வதேச சட்டம் கூறுகின்றது. 2014இல் நவநீதம்பிள்ளை மனித உரிமை ஆணையாளராக இருந்தபோது மஹிந்த அரசிடம் இந்த அரசியல் விருப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்து அவ்வாறே அறிக்கையும் சமர்ப்பித்தார். ஜனவரி 8இல் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி அமைந்ததன் பின்னர் நல்லிணக்கத்திலும், நீதியை நிலை நாட்டுவதிலும் அக்கறை கொண்ட அரசு அமையப் பெற்றதாக மேற்கும், இந்தியாவும் முடிவு செய்ததோடு இந்த விளங்கிக் கொள்ளலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஏற்றுக்கொள்ள வைத்து, அவர்களது நிலைப்பாடாகவும் ஆக்கியது. ஆனால், ஜனவரி 8இல் அமைந்த ஆட்சி உள்ளகப் பொறிமுறை ஒன்றினூடாக நம்பத் தகுந்த விசாரணை ஒன்றை நாட்டிற்குட்பட்டு நடத்துவதற்கான அரசியல் விருப்பைக் கொண்டுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது? இல்லை. அதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- யுத்த காலத்தில் நடைபெற்ற மீறல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்களை இலங்கை இராணுவத்தின் உயர் பதவிகளுக்கு சிறிசேன நியமித்தமை, போர் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது இராணுவத்தினரை தான் விசாரணையில் இருந்து பாதுகாப்பேன் என சிறிசேன கூறியமை, அவர்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க இடம் கொடேன் என பறை சாற்றியமை. யுத்தத்தின் போது தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு “மனிதாபிமான நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியமைக்காக” பீல்ட் மார்ஷல் பட்டம் வழங்கியமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் நம்பத் தகுந்த விசாரணையொன்றை இந்த அரசு நடத்தாது என்பதைத் தெளிவாக வெளிக்காட்டுகின்றன. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தேகவுக்கும் இது பொருந்தும். அவர்களைப் பொறுத்த வரையில் பொறுப்புக் கூறல் என்பது வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சினை. அவ்வளவே. (மேற்கூறியவை தவிர சிறிசேனவின் பல்வேறு அமைச்சர்கள் தாம் இலங்கை இராணுவத்திற்கு எதிராக விசாரணையை அனுமதிக்க மாட்டோம் எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை வழங்கலாம். இடம் கருதி தவிர்க்கிறோம்).
- கடந்த கால உள்ளகப் பொறிமுறைகள் மீதான அனுபவம் – இது வெறுமனே மஹிந்த ராஜபக்ஷ காலப்பகுதியில் மட்டுமல்ல, ஜனாதிபதி சந்திரிக்காவின் காலப் பகுதியிலும் பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றின் விளைவுகள் அனைத்தும் பூச்சியமே. மஹிந்தவால் நியமிக்கப்பட்ட காணாமல்போனோர் ஆணைக்குழுவை இந்த அரசு தொடர்ந்து இயங்க அனுமதித்திருக்கிறது; அதன் ஆணையையும் பெருப்பித்திருக்கிறது. இந்த ஆணைக்குழு காணாமல்போனோரின் குடும்பத்தினரை ஏமாற்றும் ஒரு ஆணைக்குழு எனப் பல உள்ளூர், வெளியூர் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியும் இந்த அரசும் இந்த ஆணைக்குழுவை வைத்து காலத்தை இழுத்தடிகின்றது.
- மேற்கூறிய இரண்டு காரணங்களை ஆழமாக படம் போட்டுக் காட்டும் ஓர் அரசியல் சமூகவியல் விளக்கம் உண்டு. அது பின்வருமாறு: சிங்கள பௌத்தத்தின் பாதுகாவலர்களாக இலங்கை இராணுவத்தை பெரும்பாலான சிங்கள பௌத்த மக்கள் பார்ப்பதால், அவர்களின் வாக்குகளைப் பெற்றே ஆட்சி அமைக்க வேண்டிய தென்னிலங்கை அரசியற் கட்சிகள், தலைவர்கள் யாருமே தமது வாக்காளர்களை அந்நியப்படுத்தமாட்டார்கள் என்ற யதார்த்தம்.
ஆகவே, தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் முறையான விசாரணைக்கான அரசியல் விருப்பு ஒரு போதும் எந்த அரசியற் கட்சிக்கும், தலைவருக்கும் வர வாய்ப்பில்லை. ஆகவே, உண்மையான விசாரணை நடைபெற வேண்டுமென்றால், அது சர்வதேச விசாரணை மூலமே சாத்தியம். ஆகவே, பொறுப்புக் கூறலை, நீதியை ஆத்மார்த்தமாக விரும்பும் தரப்பு எதுவாயினும் (அது இன்றைய சூழலில் உடனடியாக நடைமுறையில் சாத்தியமில்லாவிட்டாலும்) சர்வதேச விசாரணையைக் கோருவதை தனது நிலைப்பாடாகக் கொள்ளுவர். சர்வதேச விசாரணை நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், நீதியை ஓரளவேனும் சாத்தியப்படுத்துவதற்கு, தேவையான அழுத்தத்தை வழங்குவதற்கு அந்தக் கோரிக்கை, கோரிக்கை என்றளவில் முக்கியமானது. எம்மிடமுள்ள ஒரேயொரு கூர்மையான அரசியல் ஆயுதம் அதுவொன்றே.
இறுதியாக ஒன்று. உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தாம் வெறுமனே உள்ளகப் பொறிமுறை ஒன்றை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் சர்வதேச மேற்பார்வையுடன், பங்குபற்றலுடன் (supervision/ participation) கூடிய உள்ளக விசாரணையைதான் ஏற்றுக் கொள்வதாகக் கூறுகின்றது. அது தொடர்பில் எந்த உறுதிப்படுத்தலும், முன்வைப்பும் இலங்கை அரசிடம் இல்லாதவிடத்து ஏன் நாம் உள்ளக விசாரணையை ஏற்றுக் கொள்ள வேண்டும்? அல்லது இது தொடர்பில் கூட்டமைப்பிடம் தான் ஒரு திட்டம் உண்டா? வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாவின் ஆலோசனையையும், உதவியையுமே (advice and assistance) அரசு பெற்றுக் கொள்ளும் என்கிறார். ஒருமுறை லக்ஷ்மன் கதிர்காமர் ஐ.நா. வேண்டுமென்றால் இலங்கையில் நுளம்புக்கு மருந்தடிக்கலாம் என்று கூறியிருந்தமை வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். உதவியைப் பெறுதலுக்கும், பங்குபற்றல் என்பதற்கும் இடையே பாரிய இடைவெளி ஒன்று உண்டு. எந்த ஒரு முறையான செயற்திட்டமும் முன்வைக்கப்படாத நிலையில் சர்வதேச பங்குபற்றலுடன் உள்ளக விசாரணை என்பதை எண்ணக்கருவளவில் ஏன் நாம் முந்தி விழுந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்? இராணுவத்தின் மீது கைவைக்கும் எந்தவொரு விசாரணையும் சிங்கள பௌத்த வாக்காளர்களுக்கு ஒவ்வாத ஒன்று என்று தெரிந்தும், சர்வதேச பங்குபற்றலோடு உள்ளகப் பொறிமுறை மூலமாக நீதியான விசாரணை வரும் என எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமானது. அந்தப் பிழையான எதிர்பார்ப்பில் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கையையும், அதனால் வரும் அரசியல் பலத்தையும் நாமே தூக்கி எறிவது அதிலும் முட்டாள்த் தனமானது.
சுருங்கக் கூறின், இந்தக் கட்டுரையில் சர்வதேச விசாரணை நடைமுறையில் சாத்தியம் என்று நான் கூறவில்லை. (ஒரு அரசியல் கோரிக்கை என்றளவில் அதன் முக்கியத்துவத்தை பற்றி சொல்லியிருக்கிறேன்). ஆனால் நீதியான விசாரணை என ஒன்று உள்ளகப் பொறிமுறை ஊடாக (சர்வதேச மேற்பார்வை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன) நடைபெறுவதற்கு இலங்கையின் பெரும்பான்மை ஜனநாயகம் அனுமதிக்கப் போவதில்லை என்றே கூறுகிறேன்.
குமாரவடிவேல் குருபரன்
(‘சமகாலம்’ ஜூலை இதழில் வெளிவந்த கட்டுரை)