கிழக்கே உதிக்கும் சூரியன், கலப்பு நீரை காதல் கொண்டு உறிஞ்சுவதுண்டு. பதிலுக்கு நாவலடி மக்களுக்கு மட்டும் இந்த வானம் சுட்டெரிக்கும் ஒளியை மட்டுமே தருகிறது. மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைப் பிரதான வீதியில் செல்லும் பிரயாணிகள் அனைவரும் அதிவேகமாக இப்பிரதேசத்தைக் கடந்து செல்கின்றனர். இதனால், இப்பிரதேசம் யாருடைய கண்களுக்கும் தென்படுவதில்லை என்பதே நாவலடி மக்கள் கருத்து. சுட்டெரிக்கும் சூரிய ஒளியையும் தாண்டி நாவலடி மக்களோடு ஒரு தருணம்.

பர்தாவால் தலையை போர்த்திக் கொண்ட நாவலடி பெண்கள் ஓர் எடுத்துக்காட்டு, உயர்ந்த உபசாரம் மற்றும் பணிவு எம்மை மெய் சிலிர்க்க வைத்தது. தங்களது சிற்றுணவிற்காக செய்யப்பட்ட ‘பஜ்ஜீ’யினை எமக்களித்து தாகத்திற்கு தண்ணீர் தந்த அன்பை ஒருபோதும் மறக்க இயலாது. எம்மில் பலர் பெரும்பான்மை இனத்தவர். இருந்தும் பேதமின்றி உபசரிப்புச் செய்யும் பண்பு எம்நாட்டின் பொதுப் பண்பை எடுத்துக்காட்டியது.

சின்ன வீட்டில் எங்கள் அனைவருக்கும் போதிய இடம் வசதி இன்மையால் முற்றத்தில் இருந்து பேசுவோம் என்று எம்மில் சிலர் பணித்ததால் கிராமத்தவர்களும் உடன்பட்டனர். தரை விரிப்புகளில் நாங்களும் கிராமத்து மக்களும் அமர்ந்தோம்.

பார்வையில் இரக்கமும் உருவத்தில் அனைவரையும் ஈர்க்கும் தோற்றமுடைய ஆட்டுக்குட்டிகளை முற்றத்தில் இருந்த தேக்க மரத்தடி ஆட்டுப்பட்டிக்குள் கண்டேன். சுதந்திரத்திற்காக காத்திருக்கும் அந்த குட்டிகளின் பார்வையில் காணப்படும் எதிர்பார்ப்பு போலவே எங்களது எதிர்பார்ப்பும் என்று ஆரம்பித்தனர் நாவலடியினர். செவிமடுக்க முடியாத அளவு கோபத்தை வெளிப்படித்தியவாறு ஒவ்வொருவரும் தத்தமது குறைகளை கொட்டித்தள்ளினர். ஒவ்வொருவராக பேசுமாறு நாவலடியில் எமது நண்பி காமிலா கேட்டுக் கொண்டார்.

“இங்க இருக்கிற மிகப் பெரிய பிரச்சினை தண்ணிர்ப் பிரச்சினை. மலைக் காலத்தில் கொஞ்சம் தண்ணி இருக்கும். வெயில் காலத்தில எப்படியும் தண்ணி இருக்கிறது இல்ல. இங்கே பக்கத்துலதான் வாகனேரி குளம் இருக்கு. எங்களுக்கு தண்ணி தராம 12 கி.மீ. தூரம் உள்ள பாசிக்குடாவுல இருக்க ஹோட்டல்களுக்கு தண்ணி கொண்டு போறாங்க. கிட்டத்துல அரசாங்கத்தால ஓட்டமாவடி, வாழைச்சேனைக்கு குழாய் தண்ணி கொடுத்து இருக்காங்க. ஆனால், அங்கு நிறைய கிணறு இருக்கு’’ என்கிறார் ஒரு தாய். அவரது பெயர் நூர் மொஹமட்.

வெளிப்படையாக தென்படாவிட்டாலும், நாட்டில் குடிநீர் பிரச்சினையானது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதிக வெப்பமுடைய இப்பிரதேசங்களில் இது மிக முக்கியமானதோர் பிரச்சினையாக எழுந்துள்ளது. இப்பிரச்சினைக்கான எளிதான தீர்வுகள் இருந்த போதும் பொறுப்புடைய அதிகாரிகளின் கவனமின்மையே காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் நாவலடி மக்கள். முறையற்ற திட்டமிடல், அரசியல் பக்கச்சார்பு போன்ற விடயங்களையும் மாற்ற முடியாதுள்ளது. தொடர்ந்து போதிய வளங்கள் இருக்கும் பகுதிகளுக்கே வளப்பகிர்வுகள் இடம்பெறுகிறது.

நாவலடி என்பது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய முஸ்லிம் கிராமமாகும். கோரளைப்பற்று மத்திய பிரதேச செயலகத்தில் சியாவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. அதிகமானோர் விவசாயிகள் என்றாலும் இன்னும் ஒரு சிலர் கூலி வேலை செய்தே வாழ்க்கை நடாத்தி வருகின்றனர். மேலும், சிலர் கோழி வளர்ப்பு, கால்நடைகளை வளர்த்து மேலதிக ஊதியங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். பார்வையில் சிறியதோர் கிராமமாக இருந்தாலும் கூட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்றால் எல்லை கடந்தது. எனவே, பொறுப்புடைய அதிகாரிகளின் பார்வை இவ்வாறான கிராமத்தவர்கள் மீது இருந்தால் மேன்மையானது.

கல்வி மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கை

கேணி நகர் அல் மதீனா வித்தியாலயம் தரம் 5 வரையிலான வசதியையே கொண்டுள்ளது. இருந்த போதும் இப்பாடசாலையில் 700இற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் என கிராம மக்கள் தெரிவித்தனர். தமது பிள்ளைகளுக்கும் முறையே கல்வியை பெறுவதற்கு க.பொ.த. கொண்ட பாடசாலை ஒன்றை பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தும் பயனளிக்கவில்லை.

இந்த பாடசாலையில் எமது கிராமம் உட்பட மேலும் 7 கிராமத்து பிள்ளைங்க படிக்கிறாங்க. ஆனா, இங்க எந்த வசதியும் இல்லை. இதனால, அதிகமான பிள்ளைங்க 5ஆம் வகுப்புக்கு பிறகு படிப்பு தொடர்றாங்க இல்ல. காசு உள்ளவங்க டவுன்ல பிள்ளைங்கள தங்கவைச்சு படிக்க வைக்கிறாங்க. இருந்தும் தொடர்ச்சியா இத செய்ய முடியிறதில்லை. இடையில நிறுத்திடுவாங்க, பணம் இல்லாததுதான் காரணம். இதனால நெறய பெண் பிள்ளைங்க சின்ன வயசுலேயே திருமணம் செய்றாங்க. தாய், தகப்பன் வேலைக்கு போன பிறகு பெண் பிள்ளைங்கள்ட பாதுகாப்பை உறுதி செய்றது கஷ்டமா இருக்கு. இதனாலதான் இப்படி நடக்குது என்று மூச்சிவிடாது சொல்லிக் கொண்டே போவதற்கு காரணம் அந்த அளவுக்கு இப் பிரச்சினை பாரதூரமானது என்பதாகும். 13, 14, 15 வயதிலேயே நாவலடியில் பெண் பிள்ளைகள் திருமணம் முடிக்கின்றனர். இதற்கு பொருளாதாரமும், 5ஆம் தரத்துக்குப் பிறகு தொடர்ந்து கல்வியைத் தொடர முடியாத நிலையுமே காரணமாகும். இந்த சின்ன வயது பாலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திருட்டுப் பதிவாளர்களும் இருப்பது துரதிர்ஷ்டவசமே. இவர்கள் பணத்திற்காகவே இதுவரை சட்ட விரோதமான முறையில் திருமணங்களை நடத்தி வருகின்றனர் என நாவலடி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்

இதேவேளை, ஒரு சில பெற்றோர்கள் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வதால் குழந்தைகள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர். அது தனது உறவினர்களாலும் அயலவர்களினாலும் இடம் பெறுவதுண்டு. எது எவ்வாறாக இருந்தாலும் இச்சமூக சீரழிவுக்கு உள்ளாவது குழந்தைகளே. இக்குழந்தைகளின் எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது. மதினா வித்தியாலயம் க.பொ.த. சாதாரண தரம் வரையிலாவது தரம் உயர்த்தப்பட்டால் இப்பிரச்சினைக்கான விடிவினைக் காண முடியும் என்பதே நாவலடி மக்கள் கருத்து.

நாளுக்கு நாள் – ஒரு வேலி

இக்கிராம மக்கள் முகம் கொடுக்கும் மற்றைய பிரச்சினையானது காணியாகும். எமது காணிகளுக்கு உறுதி, அனுமதிப் பத்திரம் போன்ற எதுவும் இன்மையால் இராணுவம் மற்றும் அரசியல் அதிகாரமுடையவர்களின் ஆக்கிரமிப்பு மக்களை மேலும் துன்புறுத்தும் மற்றுமோர் சிக்களாகும்.

பிரதேச செயலாளர் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் அனுமதிப் பத்திரம் வழங்குறார். ஏழைகளான எங்களுக்கு கொடுக்கிறாரு இல்ல. இந்த கிராமத்துக்கு குடியேற வந்து ஒரு மாசம் கூட இல்லை, ஆனால் அவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம், உறுதி ரெண்டும் இருக்கு. நாங்க பல வருஷம் இங்க இருந்தும் எங்களுக்கு ஒன்றும் இல்லை. நாங்க எல்லா பக்கமும் அடிபடுறோம். ஆமி எங்கட காணிகள எடுத்தாங்க. மொதல்ல 4 ஏக்கர், பிறகு அது கூடிக்கிட்டே போகும். இத நாங்கள் கேட்டால், காணிக்கு இருக்கிற உறுதிய கேக்குறாங்க. அந்த நேரம் எங்ககிட்ட எந்த பதிலும் இல்ல. தாவுற வேலியும் இங்க இருக்கு. வடக்கில் சிலருக்கு காணி கொடுக்கிறபோது எங்களுக்கும் கொடுக்க மாட்டாங்களானு பார்த்துக்கிட்டு இருப்போம் – காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தம் வேதனையை கூறுகிறார் ஒரு தாய்.

மேலும், யுத்த காலப்பகுதியில் பல்வேறு கட்டங்களில் குடியமர்த்தப்பட்டவர்கள் இங்கு வாழ்கின்றனர். ஒரு சிலருக்கு காணி இல்லாது இருப்பதால் பிரதேச செயலாளரிடம் முறையிட்டுள்ளனர். பதிலுக்கு அவர் காணி உள்ள இடங்களில் குடியேறுமாறு கூறினார். ஆனால், காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதில்லை.

இங்க நாங்க ரெண்டு பரம்பரையா வாழ்றோம். இதுவரை எங்கட பிரச்சினகளுக்கு ஒழுங்கான தீர்வு கிடைக்கல்ல. டி.எஸ். சொன்னதால சனம் ஆங்காங்கே குடியேறினாங்க. கிட்டத்தில ஒரு பெண்ணுக்கு பிரச்சினை ஒன்னு. அவட காணியில வேறு ஆட்கள் வந்து மண் வெட்டிக் கொண்டு இருந்ததால டி.எஸ் கிட்ட சொன்னதும் அவர் சொல்லுறார், காணி கொடுத்தாச்சி மீண்டும் மீண்டும் கரைச்சல் தராமல் போங்கனு. பொலிஸுக்கு போய் பார்த்துக் கொள்ளுங்னு சொல்றார். பொலிஸ்கிட்ட போனோம். எங்க காணிகள்ட உறுதி எங்கன்னு பொலிஸால கேக்குறாங்க. தேடிப்பார்த்தா டி.எஸ்தான் மண்வெட்டிக்கச் சொல்லி அனுமதி கொடுத்திருக்காரு – தனது பக்கத்து வீட்டு சகோதரியின் கதை இது என ஓர் தாய் கூறினார்.

கடன் பிரச்சினை

குடிநீர், கல்வி, காணி என்ற பிரச்சினைகள் போலவே நாவலடி கடன் பிரச்சினையும். கிராமத்தில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு வட்டி இன்றி கடன் வாங்க முடிந்தும் அவ்வாறு வாங்குவதில்லை. அதன் உத்தியோகத்தர்கள் தனக்கு தேவையானவர்களுக்கு மாத்திரமே கடன் வழங்குவார். இதனால் கிராம மக்கள் எல்லா இடங்களிலும் கடனாளியாகின்றனர். இந்த நாள் பிரச்சினையை தீர்க்க ஓரிடத்தில் கடன் பெறுதல், அதனை தீர்க்க இன்னும் ஓரிடத்தில் கடன் பெறுதல், இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தும் தனியார் வங்கிகளும் சிறு கடன் வழங்கும் நிறுவனங்களும் மக்களை மேலும் மேலும் சிக்கலுக்கு உட்படுத்துகின்றனர் – எ.எஸ்.ஜி.எம்.ஜபார் பள்ளி வாசலின் செயலாளர் இவ்வாறு தெரிவிக்கிறார்.

கூலி வேலை செய்தாவது தமது பிள்ளைகளை நல்ல முறையில் கற்பிக்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. நாவலடி மக்கள் வழக்கம் போலவே தமது குறைகளை எம்மிடம் இறக்கிவைத்து திருப்தியுடன் திரும்பினர். எம்மூலமாவது இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்புடன் வீடு திரும்பிய காட்சி இன்றும் ஓயாத அலைகளாய் இதயத்தைத் தொட்டுச் செல்கின்றது.

லஹிரு கிதலகம

தமிழில்: சுரேஸ்