படம் | AFP Photo, ISHARA KODIKARA, FCAS

ஜனவரி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கிய மக்கள் பேதலித்துப் போய் நிற்கிறார்கள். அத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு அனுமதியளிக்க ஜனாதிபதி சிறிசேன இணங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜபக்‌ஷவுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படுவது தொடர்பான அறிக்கையை சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டு பல நாட்கள் கடந்தும் கூட, அதில் தனக்கு சம்மதம் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து சுதந்திரக் கட்சியினதும் சுதந்திர முன்னணியினதும் தலைவரென்ற வகையில் ஜனாதிபதி இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடாமல் இருந்து வருவது ஜனவரியில் நாட்டு மக்கள் தனக்கு அளித்த ஆணைக்குத் துரோகம் செய்வதற்கு அவர் தயாராகிவிட்டார் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரலாற்றில் முன்னென்றுமேயில்லாத படுமோசமான ஊழல், மோசடிகள், குடும்ப அரசியல் ஆதிக்கம், அதிகார துஷ்பிரயோகம், சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவு, இனவெறி எல்லாம் தலைவிரித்தாடிய ஒரு தசாப்தகால ராஜபக்‌ஷ ஆட்சியை தூக்கியெறிந்த நாட்டு மக்கள், நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவும் புதியதோர் அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிப்பதற்காகவும் ஜனாதிபதி சிறிசேனவை அதிகாரத்துக்குக் கொண்டுவந்தார்கள். ஆனால், அவரோ 6 மாதங்களுக்கு முன்னர் மக்களால் நிராகரிக்கப்பட்ட அதே அரசியல்வாதிகளுடன் இணைந்து ஆகஸ்ட் பொதுத் தேர்தலுக்காகச் செயற்படுவதற்கு முனைப்பைக் காட்டுகின்ற மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுப் போக்குகளை இன்று காணக்கூடியதாக இருக்கிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச ஆகியோர் கடந்த பெப்ரவரி மாதம் முதலிருந்தே முன்னாள் ஜனாதிபதியை அடுத்த பொதுத் தேர்தலில் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நாட்டின் பல பகுதிகளிலும் பேரணிகளை ஏற்பாடு செய்து பிரசாரத்தை தீவிரப்படுத்தி வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கின்ற போதிலும் கூட, அக்கட்சியின் பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த ராஜபக்‌ஷ ஆதரவுப் பேரணிகளில் கலந்துகொண்டனர். அத்தகைய பேரணிகளில் பங்குபற்றுவதற்கு கட்சியின் உயர் பீடத்தால் விதிக்கப்பட்ட தடையை எந்தப் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருட்படுத்தியதாக இல்லை. மஹிந்த ராஜபக்‌ஷவிடமிருந்து சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றுக்கொண்ட போதிலும், கட்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஜனாதிபதி சிறிசேனவுக்கு இருக்கின்ற இயாலாமையை அல்லது மட்டுப்பாடுகளை இது பிரகாசமாக வெளிக்காட்டியது.

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சிறிசேன அதிலிருந்து வெளியேறியே ராஜபக்‌ஷ ஆட்சிக்கு எதிரான பொது எதிரணியின் வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினார். அத்தேர்தலில் சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறிய ராஜித சேனாரத்ன போன்ற சிலர் சிறிசேனவுக்கு ஆதரவாகச் செயற்பட்டபோதிலும், கட்சி முழுமையாக அவருக்கு எதிராகவே இயங்கியது. ஜனாதிபதித் தேர்தலில் தன்னைத் தோற்கடிக்க வேண்டுமென்று நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்ட அதேகட்சி அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயற்படுவதற்கு மாத்திரமல்ல, அவர்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் முடிவெடுத்ததில் ஜனாதிபதி சிறிசேன ஒருவகையில் தந்திரோபாயத் தவறை இழைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அவருக்கு அளித்த ஆணையைப் பிரதிபலிக்காத ஒரு நாடாளுமன்றத்தை வைத்துக்கொண்டே நல்லாட்சிப் பரீட்சார்த்தத்தை அவர் செய்ய வேண்டியிருந்தது. முன்னாள் ஜனாதிபதி ராஜபக்‌ஷ தனது நோக்கங்களுக்கும் தந்திரோபாயங்களுக்கும் இசைவான முறையில் பயன்படுத்தக் கூடிய பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்களைக் கொண்டிருந்த நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியும் புதிய அரசும் எதிர்நோக்கிய நெருக்கடிகளை இங்கு விளக்கமாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாட்டு மக்கள் அறிவார்கள்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த கையோடு சில தினங்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு ஜனாதிபதி சிறிசேன உத்தரவிட்டிருந்தால், அந்தத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருக்கக்கூடிய நாடாளுமன்றம், ஜனவரியில் மக்கள் அவருக்கு அளித்த ஆணையைப் பெருமளவுக்குப் பிரதிபலிக்கக் கூடியதாக அமைந்திருக்கும். சுதந்திரக் கட்சிக்குள் இன்று அவர் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளையும் தவிர்க்க இயலுமாக இருந்திருக்கும். பதிலாக பழைய நாடாளுமன்றத்தை வைத்துக் கொண்டே 100 நாள் நல்லாட்சி பரிசோதனையில் இறங்கியதன் விளைவாகவே இன்றைய நெருக்கடிகள் தோன்றின.

மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்ற நெருக்குதல்களுக்கு ஒரு கட்டத்தில் பதிலளித்த ஜனாதிபதி சிறிசேன, “அவர் 1970 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, பிரதமராக பிறகு இரு பதவிக் காலங்களுக்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பதவிகளை வகித்திருக்கிறார். இதற்கு மேல் அவருக்கு என்ன வேண்டும்” என்று கேள்வியெழுப்பியிருந்தார். அத்துடன், பிரதமர் வேட்பாளர் நியமனத்தை மாத்திரமல்ல, வெறுமனே வேட்பாளர் நியமனத்தையும் கூட ராஜபக்‌ஷவுக்கு வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால், இப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ராஜபக்‌ஷவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ராஜபக்‌ஷவுக்கு எதிரான சுதந்திரக்கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து முரண்பாடான தகவல்கள் வருகின்ற போதிலும், ஜனாதிபதியிடமிருந்து திட்டவட்டமான பதில் எதையும் காணமுடியவில்லை.

ராஜபக்‌ஷவுக்கு வெறுமனே வேட்பாளர் நியமனத்தைக் கூட வழங்கப் போவதில்லை என்று கூறிய ஜனாதிபதி சிறிசேன, இப்போது அந்த நியமனம் அவருக்கு வழங்கப்படுவதற்கு இணங்கியிருக்கிறாரென்றால், நாளடைவில் பிரதமர் வேட்பாளர் நியமனத்தையும் வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. ராஜபக்‌ஷவுக்கு வேட்பாளர் நியமனம் கிடைக்கிறதென்றால், அவரை தாங்களாகவே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரசாரத்தை முன்னெடுக்கக் கூடிய அளவுக்கு போதுமான அரசியல் கபட ஆற்றலைக் கொண்டவர்களாக அவரைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதை ஜனாதிபதியினால் தடுக்கக் கூடியதாகவும் இருக்கப்போவதில்லை.

இத்தகைய தொரு பின்புலத்திலே, எதிர்வரும் ஆகஸ்ட் 17 பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் எடுக்க வேண்டிய தீர்மானம் நாட்டின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை, ஜனாதிபதி தேர்தலில் எடுத்த தீர்மானத்தையும் விட தீர்க்கமானதாக இருக்கவேண்டியது அவசியமாகும்.