போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அனுபவித்த வேதனைகளை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலமாக மன ஆறுதல் அடைகிறார்கள் என்று கூறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. சனாதனன், அவ்வாறு மக்களிடம் பேசி பகிர்வில் ஈடுபடுவதை அதிகாரத்தில் உள்ளவர்கள் குற்றமாகக் கருதுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
போரால் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் பேச வேண்டும். அவர்களிடம் கதை கேட்பதன் ஊடாக மன ஆறுதல் அடையும் அதேவேளை அவர்களை இயங்கு நிலைக்கு, இயல்பு நிலைக்கு கொண்டுவரலாம். இவ்வாறான செயற்பாட்டை குற்றமாகக் கருதினால் எவ்வாறு நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் கலாநிதி சனாதனன்.
‘மாற்றம்’ இணையதளத்துக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் –
“இன்னும் காணிகள் அபகரிக்கப்படுவதால், இராணுவத்தினரின் பிரசன்னம் இருப்பதால் வடக்கு கிழக்கில் போர் முடிவடைந்த உணர்வு மக்களிடம் இல்லை. அதேபோன்றுதான் கலைச் செயற்பாடும். கலை ரீதியான செயற்பாடுகளிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூற முடியாது”.
“வடக்கு கிழக்கில் இரண்டு விதமாக கலை வெளிப்பாடுகள் இடம்பெற்று வருகின்றன”.
“ஒன்று – மதம் சார்ந்த, சடங்குகள் சார்ந்த பாரம்பரிய கலை வெளிப்பாடுகள் இன்னும் நடந்த வண்ணம்தான் இருக்கின்றன. இதில் மக்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்; கலந்துகொள்கிறார்கள். இதனால், மக்கள் தனிமைப்படாமல் கூட்டாக போர் மன வடுவிலிருந்து ஆற்றுப்படுத்தப்பட்டு அதிலிருந்து வெளிவருவதற்கு இவ்வாறான பாரம்பரிய கலைகளால் வழிசமைக்கப்படுகிறது”.
“இரண்டு – பாரம்பரிய கலை வெளிப்பாடுகள் தவிர்ந்த கலைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நிறுவனங்களும் நபர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், தற்போது அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களும், அதற்கான வெளியும் இராணுவத்தினரின் அல்லது அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்புக்கு கீழ்தான் இருக்கின்றன. அதனால், அவர்களால் சுதந்திரமாக, சுயாதீனமாக செயற்படக்கூடியதொரு சூழல் இங்கு இல்லை என்றுதான் கூறவேண்டும்”.
“கிட்டத்தட்ட போரால் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்ட 80 பேரின் கதைகளை நான் சேகரித்திருக்கிறேன். அவர்களிடம் அனுபவங்களை கேட்டறிந்தேன். அப்போது அவர்கள், கதைகளைக் கூறுவது தங்களை ஆற்றுப்படுத்துவதாக தெரிவித்தார்கள். தங்களிடம் யாரும் இவ்வாறு கதை கேட்பதில்லை என்றும் அவர்கள் குறை கூறினார்கள்”.
“அவர்கள் கூறும் கதைக்கு தீர்வு வழங்குவதோ அல்லது நட்ட ஈடு கொடுப்பதோ எனது இலக்கல்ல. கதைக் கேட்டு முடித்து, தொந்தரவு கொடுத்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களைப் பார்த்து கூறினேன். “சீ சீ… நீங்கள் எங்களைக் குழப்பவில்லை, எங்கட கதைய கேட்க இதுவரை யார் வந்தவ” என்று கூறினார்கள். நான் நினைக்கிறேன், அவர்களிடம் கதை கேட்பதே முக்கியமான விடயமென்று. ஏதாவதொரு கலைத் திட்டத்தின் ஊடாக அவர்களிடம் கதை கேட்டாலே போதும். அது அவர்களை ஆசுவாசப்படுத்தும், ஆறுதலடையச் செய்யும் என்று நினைக்கிறேன்”.
“ஆனால், இவ்வாறானதொரு திட்டத்தை செயற்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை இங்கு காணப்படுகிறது. மக்கள் தாங்கள் அனுபவித்த கஷ்டங்களை கூறுவதனால் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணுகிறார்கள் போலும். கலைத் திட்டமொன்றை செயற்படுத்துகிறவர்களும், மக்களும் அரசாங்கத்தின், இராணுவத்தினரின் நேரடி கண்காணிப்புக்குள் வந்துவிடுகிறார்கள்”.
“போர் முடிவடைந்த ஒரு சூழ்நிலையில்தான் இதுபோன்ற திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஆனால், சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத ஒரு நிலை இங்கு காணப்படுகிறது”.
முழுமையான காணொளி நேர்க்காணலை கீழ் காணலாம்.