தென்னிலங்கை மக்களை திருப்திப்படுத்தாத எந்தவொரு விடயத்தை செய்தாலும் தங்களது வாக்குப் பலத்தை இழந்துவிடுவார்கள் என்ற எண்ணம் புதிய அரசாங்கத்தினரிடமும் இருப்பதாகத் தெரிவிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆசியர் சங்கத் தலைவருமான அமிர்தலிங்கம் ராசகுமாரன், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினை இந்த அரசாங்கமும் முன்வைக்காது என்றே தோன்றுகிறது என்றும் கூறுகிறார்.

‘மாற்றம்’ இணையதளத்துக்கு வழங்கிய நேர்க்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில் –

“போர் முடிவடைந்த பிறகு தங்களது வாழ்வில் ஓரளவாவது முன்னேற்றம் ஏற்படும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அது நேர்மாறாகத்தான் நடந்தது. போரில் வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்‌ஷ தான் ஒரு பேரரசர் என்ற நிலையில்தான் செயற்பட்டுக் கொண்டிருந்தார். போரில் தோற்ற தமிழ் மக்களை அடிமைகள் போன்றே அவர் எண்ணியிருந்தார். அதனால், தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தார்கள்”.

“2015 ஜனவரி மாதம் பதவியேற்ற புதிய அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் மாற்றங்களை எதிர்பார்த்தார்கள். ஆனால், மக்கள் உணரக்கூடிய வகையில் மாற்றங்கள் நிகழவில்லை என்பதே உண்மை. 2009இற்கு முன்னர் என்னென்ன பிரச்சினைகளுக்கு தமிழ் மக்கள் முகம்கொடுத்தார்களோ அவை இன்னும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது”.

  • இன்னும் சிறையில் வாடும் முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் விடுதலை குறித்து காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
  • காணாமல்போனோர் விடயம்.
  • உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களிலே வாழ்ந்து வருகிறார்கள்.
  • போரினால் வடக்கு – கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வை கட்டியமைக்க விசேடமான மீள்கட்டுமானத் திட்டமொன்று தேவைப்படுகிறது. ஆனால், இதுவரை அது தொடர்பாக அதிகாரத்தில் உள்ளவர்கள் வாய்த்திறப்பதே இல்லை.
  • தமிழ் மக்களது பூர்வீக காணிப்பகுதிகளை இன்னும் கையகப்படுத்தி வருகிறார்கள்.
  • சிங்களக் குடியேற்றம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

முழுமையான காணொளி நேர்க்காணலை கீழ் காணலாம்.