செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19 ஏக்கர் காணியில் செல்லம்மாவுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் காணி உள்ளது. அந்தக் காணியில் 4 வீடுகளும் கடை ஒன்றும் உள்ளன. 2011ஆம் ஆண்டு சொந்த இடத்தில் குடியேற்றுவதாக அறிவித்ததால், இறுதிக் காலத்தில் சொந்த பூமியில் வாழலாம் என்ற கனவுடன் வந்தவருக்கு இலங்கை இராணுவத்தினர் வீடுதர மறுத்தனர்.

செல்லம்மா உட்பட மக்களின் காணியில் அமைக்கப்பட்டிருக்கும் 682 படையணி.
செல்லம்மா உட்பட மக்களின் காணியில் அமைக்கப்பட்டிருக்கும் 682 படையணி.

“எங்கட இடம் விடுறதா சொன்னதாலதான் இங்க நாங்க வந்தனாங்கள். வந்து பதிவு செய்தனாங்கள், ஆனா வீடு தரல்ல. நாங்க கேட்டனாங்கள் வீடுகள தரச்சொல்லி. அந்த நேரம் இராணுவம் சொன்னது, “உங்கட பிரபாகரனாலதான் இந்தப் பிரச்சினை வந்தது. பிரபாகரன் இந்த இடத்தில இருந்தா வீட வந்து கேட்பியலோ? உங்களுக்கு வீடு தர ஏலாது, காணி தர ஏலாது. எங்கயாவது போங்கோ” என்று சொன்னதாக செல்லம்மா கூறுகிறார்.

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணி இருக்கும் இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் 8,000 ரூபா வாடகைக்கு மகள்மார், மருமகனுடன் செல்லம்மா வாழ்ந்து வருகிறார். அடிக்கடி காணியை மீட்பதற்கான போராட்டங்களிலும், இராணுவ முகாமுக்குச் சென்றும் பேசி வந்திருக்கிறார்.

“அன்றக்கு இடத்த அளக்க வந்தவ. இடத்த இழந்த அத்தன பேரும் சேர்ந்து அளக்க விடாம மறியல் போராட்டம் நடத்தினம், இடத்த தரச் சொல்லி. அந்த போராட்டத்துக்கு லாமணயும் நெருப்பட்டியும் கொண்டு போனனான். மீறி இடத்த சுவீகரிக்கப் போனா அவைக்கு முன்னால தீக்குளிக்கப் போவேன் என்டு சொன்னனான். இங்கு முழுப் பேருக்கும் தெரியும். பிறகு சனம் பறிச்சி எடுத்திட்டினம்” காணியை மீளவும் பெற்றுக்கொள்ள எதையும் செய்வதற்கு செல்லம்மா தயாராக இருக்கிறார் என்பதை அவரது துணிச்சலான பேச்சில் காணக்கூடியதாக இருந்தது.

கடந்த வருட இறுதியில் கணவர், இந்த வருட தொடக்கத்தில் மூத்த மகள் என இரு இழப்புக்களைச் சந்தித்து நொந்துபோயிருந்தாலும் மீளவும் காணியைப் பெற்றுக்கொள்ளும் போராட்டத்தில் செல்லம்மாவிடம் கொஞ்சமும் தொய்வை காணமுடியவில்லை.

“ஒருதடவ இராணுவத்திட்ட கேட்டு அவர் வீட்ட போய் பார்த்திட்டு வந்தவர். வந்து 9 நாள்ல இறந்திட்டார். அங்க போய் என்னத்த பார்த்தாரோ தெரியல்ல. ஏக்கத்தோடதான் இருந்தவர். சாக முதல்ல, செத்தா அந்த வீட்ல தன்ன வைக்கச் சொல்லி அடிக்கடி சொல்லுவார்”

குறுக்கிட்ட செல்லம்மாவின் மருமகன்,

“பொடி எடுத்தண்டு எங்கட சொந்த வீட்டுக்கு கொண்டு போய் கொஞ்ச நேரம் வைக்கலாம் என்டு போனனாங்கள். அப்போ ஆமி, எஸ்.டி.எப். என்டு நிறைய பேர் அந்த இடத்தில கூடி எங்கள கலைக்க தொடங்கிட்டினம்” தொடர்ந்து பேசினால் செல்லம்மா அழுதுவிடுவார் என்று எண்ணி மருமகன் குறுக்கிட்டாரோ தெரியவில்லை. கண்கலங்காத செல்லம்மா தொடர்ந்தார்.

IMG_6947

“இவர் இறந்து ஒன்றரை மாதத்துக்குப் பிறகு என்ட மூத்த மகளும் கிட்னி பெய்லியரால இறந்தவ. அவட பொடிய எடுத்தன்டு பொலிஸ் கோர்ட் ஓடர் ஒன்ட எடுத்து வந்து காட்டினவ. காணிக்கு போகவேண்டுமென்டு எந்தவித போராட்டமும் செய்யாமல் காரியங்கள செய்ய வேண்டுமாம். எங்கட சொந்த வீட்ட பொடிய வைக்க முடியாம கோர்ட் ஓடர் எடுக்கினம்” இம்முறை கட்டுப்படுத்த முடியாமல் அழுகை அவிழ்ந்தது.

மாற்றம் அரசிடம் மாற்றமொன்றை எதிர்பார்த்து இம்மக்கள் வாக்களித்திருந்தும் இன்னும் அவர்களது வாழ்வில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படவில்லை. கடந்த அரசின்போது பொலிஸ், இராணுவம் எவ்வாறு செயற்பட்டதோ அதில் மாற்றம் ஏற்படவில்லை என்பதை செல்லம்மாவின் போராட்டத்தின் ஊடாக காணமுடிகிறது. இனியும் காத்திருக்க வேண்டியதுதான்.