“ஒன்டு அப்பா இல்ல, ஒன்டு அம்மா இல்ல, ஒன்று ரெண்டு பேருமே இல்ல. கிட்டத்தட்ட 90 பிள்ளைகள் தாயை அல்லது தந்தைய இழந்திருக்காங்க. அவர்களின்ர படிப்பு பொறுத்த வரையில சரியான பிரச்சின” என்கிறார் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை.

முதலாம் தரத்திலிருந்து 5ஆவது வரை இந்தப் பாடசாலையில் 540 பிள்ளைகளைகள் படித்துவருகிறார்கள். இங்கு படிக்கின்ற அனைவரும் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது அதை நேரடியாக அனுபவித்தவர்களாகவும் கருவில் இருந்து உணர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். சிரித்து, பேசி அவர்கள் விளையாடுவதை என்னால் பார்க்கமுடிந்தாலும் அவர்களிடம் உளரீதியான பிரச்சினைகள் இருப்பதாக ஆசிரியர் கூறுகிறார்.

அரச அதிகாரிகள் உயர் மட்டத்தில் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்கு பேசமுடியாது என ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாலும் இன்னும் சில காரணங்களாலும் தன்னுடைய பெயரைக் குறிப்பிட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். அவரை சாந்தி என நாம் அழைப்போம்.

“அவையல் கிளாஸ்ல சந்தோசமா படிக்க மாட்டினம். தேவையான உபகரணங்கள் கொண்டுவர மாட்டினம். திடுக்கென்டு பயப்படுவினம். ஒருத்தன் இருக்கான் இயர் வன்ல. குடுக்கிற வேலையெல்லாம் அழகா செய்வான். ஆனா அழுதுகொண்டே இருப்பான். எப்ப போவன் வீட்ட? அப்பா எப்ப வருவார்?” உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு படிப்பிப்பதில் உள்ள கஷ்டத்தை அவரது முகத்தில் காணமுடிகிறது.

யுத்தத்தால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பாடசாலைப் பிள்ளைகளுக்கு சிகிச்சை வழங்க இதுவரை அரசத் தரப்பிலிருந்து எவரும் வந்திருக்கவில்லை. குறைந்தபட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி கூட வழங்கப்பட்டிருக்கவில்லை.

“டிபார்ட்மென்ட்ல இருந்து சில அதிகாரிகள் வருவினம். உளவள சிகிச்சைக்கென்று யாரும் வாரதில்ல. அப்படியான பிள்ளைகள டீச்சர்ஸ்தான் கவனத்தில எடுத்து படிச்சி கொடுக்கினம். அரசாங்கம் எல்லா ஸ்கூலுக்கும் செய்றததான் இங்கயும் செய்யினம். ப்ரீ புக்ஸ், யுனிபோர்ம். விசேடமா எதுவும் இல்ல. இந்த முறை ஷூ வந்தது” – கதவருகே பிள்ளைகள் நிறைந்து சிரித்து பேசியவாறு பார்த்துக்கொண்டிருக்க சாந்தி எழுந்து அவர்களை அனுப்பி வைக்கிறார். கதிரையில் ஆசிரியை வந்து உட்கார, மீண்டும் சிரிப்புச் சத்தம். தொடர்ந்தார்,

“இயர் வன்ல டீச்சர் இல்லாதபோது கிளாஸ் எடுத்தனான். “காலையில என்ன ஒலிகள் கேட்கும்” என்று கேட்டனான். பிள்ள படாரென்று சொல்லிச்சி, அம்மாவும் அப்பாவும் சண்டபிடிப்பாங்களாம். இப்படித்தான் குடும்ப சூழ்நிலைகள் இருக்கு. அநேகமான பிள்ளைகள் மன அழுத்தத்தோடுதான் இருக்குதுகள். எல்லா டீச்சர்ஸும் இத எதிர்நோக்கினம். கருவுல இருக்கேக்கயே சண்டகள சந்திச்ச ஆக்கள்தானே” என்று கூறுகிறார் அவர்.

பிள்ளைகளின் பெரும்பாலான பெற்றோர் இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவினால் நடத்தப்படும் விவசாயம், கட்டுமானம், கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் வேலை பார்க்கச் செல்கின்றனர். காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அங்கு வேலை. அவர்களுக்கு பிள்ளைகளின் படிப்பில் அக்கறை இல்லை எனக் கூறுகிறார் ஆசிரியர்.

“ஒரு சிலர்ட அம்மா, அப்பா ரெண்டு பேரும் சி.எஸ்.டியில (சிவில் பாதுகாப்புப் பிரிவு) வேலை செய்யினம். மோர்னிங் 8 மணிக்கு போய் ஈவினிங் 5 மணிக்குத்தான் வருவினம். பிள்ளைகள் மீது அவங்களும் இப்ப அக்கறை இல்ல. இயர் 4க்கு மீடிங் வச்சனாங்கள். 90 பிள்ளைகளுக்கு 15 பேர்தான் வந்திருந்தினம். ஒன்று அக்கறையில்ல, மற்றது சி.எஸ்.டிக்குல வேலைக்கு போனா வர முடியாது. ஒரு சிலர் கேட்டு வந்து போவினம். ஒரு சிலர் எதுக்கு போவினம் என்று அக்கறையில்லாமல் இருக்கினம். அவைக்கு காசு முக்கியமா போயிட்டு. பிள்ளைகள் பாடசாலைக்கு போனா போதும் என்ட மனநிலையில இருக்காங்க” எனத் தெரிவிக்கும் சாந்தி,

“முன்ன (யுத்தம் முடிவடைய முன்) மீட்டிங் என்டா பேரன்ட்ஸ் நிரம்பி வலியினம். யுத்தத்துக்கு பிறகுதான் இந்த நிலம. முன்ன இயக்கம் இருந்தவ. அவங்க பிள்ளைகளின்ர படிப்பு விஷயத்தில இன்ரஷ்டா இருந்தவ. அவங்களும் கல்விய ஊக்குவித்தவங்க. அப்போ கட்டுப்பாடு, ஒழுங்குனு ஒன்று இருந்தது. இப்போ ப்ரீயாவே விட்டாச்சி. சி.எஸ்.டில இருபதாயிரம், இருபத்தைந்தாயிரம் மாதிரி சம்பளம் வாங்கினம். பிள்ளைகள த்ரீவில்ல அனுப்பினம். அவ்வளவுதான்” கன்னத்தில் கை வைத்து பெருமூச்சு விட்டார் சாந்தி.

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை யுத்தத்தால் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, விசேடமாக சிறுவர்களுக்கு உளவள சிசிச்சை வழங்கப்பட்டிருக்கவில்லை. முயற்சி எடுக்கப்பட்டிருந்தும் கடந்த அரசு தடுத்ததாக மக்கள் கூறுகிறார்கள். வடக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வட மாகாண சபையும் கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே அவர்களது கவலை. ஆகவே, வட மாகாண சபையோ, மத்திய அரசோ இல்லையென்றால் இரு நிர்வாகமும் சேர்ந்தோ பாதிக்கப்பட்ட மக்களுக்கான உளவள சிகிச்சையை வழங்க முன்வரவேண்டும்.