படம் | Eranga Jayawardena/Associated Press, WASHINGTON POST

18 மே 2009 நினைவு கூர்வதற்கு ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்வது என்பது அச்சமும், அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பும், நிச்சயமற்ற முடிவும் கொண்ட ஒரு திகில் கதையைப் போன்ற அனுபவத்தைத் தந்தது. இலங்கையில் போர் முடிந்த இந்த ஆறு ஆண்டுகளில் இது போன்று நடக்கும் முதல் நிகழ்வு இது என்பதால் எவரேனும் துணிந்து நிகழ்வுக்கு வருவார்களா என்பது குறித்து கடைசி நொடி வரை எனக்கு எந்த உறுதியும் இல்லை.

நிகழ்வை ஒருங்கிணைக்கும் பொறுப்பை நான் ஏற்றிருந்ததால், நிகழ்வுக்கு 3 நாட்கள் முன்னதாக ஏற்பாடுகளை சரி பார்க்க நான் முள்ளிவாய்க்கால் தேவாலயத்திற்குச் சென்றேன். செல்லும் வழியில், அங்கு சூழல் இறுக்கமடைவதை என்னால் உணர முடிந்தது. 2009இல் இலட்சக்கணக்கான தமிழ் பொது மக்கள் – எங்கள் மன்னார் பிஷப் அவர்களின் கணிப்பின் படி ஏழே மாதங்களில் ஏறத்தாழ 146,679 பேர் – கொல்லப்பட்ட இடமான முள்ளிவாய்க்காலை நோக்கிய சாலை நெடுகிலும் காவல் துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

நினைவு நாள் நெருங்க நெருங்க கண்காணிப்பும், நிறுத்தப்படும் காவல்துறையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று மக்கள் நினைப்பதை நான் உணர்ந்தேன். அதனால், நிகழ்வுக்கு முதல் நாளே நான் தேவாலயத்திற்குச் சென்று விட தீர்மானித்தேன். நான் ஒரு சிங்கள பாதிரியாருடன் அங்கு சென்றேன். எனது சிங்கள மொழியறிவு குறித்து எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. அதனால், பாதுகாப்புப் படையினருடனான சூழல்களை அவரால் சமாளிக்க முடியும் என கருதினேன். நாங்கள் வாழ்வதற்காக சிங்கள மொழியை கற்க வேண்டி இருந்தது. ஆனால், தமிழ் பேசும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றும் சிங்கள அதிகாரிகள் எங்களுடன் தொடர்பாட தமிழ் கற்க வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை.

எங்களுடைய வாகனம் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ளதை அறிந்ததும், காவல் துறையினரும் இராணுவ உளவுத் துறையினரும் உடனடியாக தங்கள் இருப்பை உணர்த்தினர். மாலை இருளும் நேரத்தில் நாங்கள் கிளம்பிய போது குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் இராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் நால்வர் எங்களை நிழற்படம் எடுத்துக் கொண்டனர். நான் ஒரு பாதிரியாக இருந்த போதிலும், அவர்கள் இதனை செய்த போது நான் அச்சமடைந்தேன். ஏனெனில், இலங்கையின் அடையாம் குறிக்கப்படாத வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த வரலாறை நாங்கள் அனைவருமே அறிவோம்.

அதே நாளில் தமிழ் மக்கள் விடுதலை முன்னணி முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்திருந்த நினைவு நாள், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று காரணம் காட்டி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு இருந்தது. மற்றுமொரு பெண்கள் அமைப்பு மே 18 அன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்விற்கும் அதே போன்று நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

ஒரு குடும்பம் என்னைச் சந்திக்க வந்தது. நாங்கள் ஏற்பாடு செய்திருந்த பிரார்த்தனைக் கூட்டத்திற்கு முள்ளிவாய்க்காலில் இருந்து எவரும் வர துணிய மாட்டார்கள் என்று கூறவே அவர்கள் வந்திருந்தனர். குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் உள்ளூரில் சிலரை சந்தித்துப் பிற நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அந்த அறிவுறுத்தல் எங்கள் நிகழ்வுக்கும் பொருந்தும் என அம்மக்கள் கருதி உள்ளனர்.

மே 18 அன்று காலை தேவாலயத்திற்கு அருகில் வாழ்ந்த மக்கள் என்னை வரச் சொல்லி அழைத்தனர். குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றம் இராணுவ உளவுத் துறை அதிகாரிகள் வழக்கத்திற்கு மாறாக அங்கு அதிகமாக நிறுத்தப்பட்டிருந்தது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. சிங்கள பாதிரியாரையும் என்னுடன் வருமாறு நான் அழைக்க நேர்ந்தது. உள்ளூர் பாதிரியார் வந்த உடன், குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி அவரை அணுகி அவர் என்ன ஏற்பாடு செய்கிறார் என கேட்டுள்ளார். முழு நாளும், காலை முதல் மாலையில் பிரார்த்தனைக் கூட்டம் முடியும் வரை, சாதாரண உடையில் இருந்த அதிகாரிகள் இரண்டு பேர் மரத்தடியில் அமர்ந்து முழு நிகழ்வையும் பதிவு செய்து தங்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்பகுதி மக்களின் துணிவை நான் பாராட்டுகிறேன். காவல்துறை மற்றும் இராணுவ கண்காணிப்பு குறித்து அவர்களுக்கு இருந்த உண்மையான அச்சத்தைக் கடந்தும் அவர்கள் இந்த பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய எனக்கு உதவினர். ஒரு பாதிரியாக நானே இவ்வளவு மன உளைச்சல்களுக்கு ஆளாக வேண்டியிருந்தது என்றால் அவர்களின் போராட்டத்தினை என்னால் கற்பனை மட்டுமே செய்து பார்க்க இயலும்.

அன்றைய நாளில் பெரும் நிச்சயமற்றத் தன்மை நிலவியது. உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்தவும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருந்தது. நான் அறிந்த வரையில் முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாயைச் சேர்ந்தவர்கள் நிகழ்வுக்கு வராததற்கு காரணம் நிகழ்வு நடக்கிறதா இல்லையா என்பது குறித்து அவர்களுக்கு குழப்பமான தகவல்கள் சென்றதும், அதனால் அவர்கள் மிகவும் அச்சமடைந்ததும்தான்.

மற்றொரு உள்ளூர் பாதிரியார் என்னை அழைத்து, பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்க வருவதாக இருந்த மக்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்து உரிமையாளர், பிரார்த்தனைக் கூட்டத்திற்கு பேருந்தை அனுப்ப முடியாது என்று தெரிவித்து விட்டதாகக் கூறினார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை தொலைபேசியில் அழைத்து பேருந்தை இயக்கக் கூடாது என்றும், அப்படி இயக்கினால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை அவர் சந்திக்க நேரும் என்றும் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். அதே உள்ளூர் பாதிரியார் அதன் பிறகு 7 பேருந்து உரிமையாளர்களைச் சந்தித்து போக்குவரத்திற்கு உதவும்படி கேட்டுள்ளார். அவர்கள் அனைவருக்கும் இப்படியான அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்புகள் வந்ததனால் அனைவருமே மறுத்து விட்டனர். நான் போக்குவரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும், பேருந்து உரிமையாளர்களுக்கு அடையாளம் தெரியாத தொலைபேசி அழைப்புகள் வந்த செய்தி பரவியிருந்ததால் எவரும் நிகழ்வுக்கு வரவில்லை.

அன்று நடக்கவிருந்த மற்ற நினைவு கூரல் நிகழ்வுகளைப் போல எங்கள் நிகழ்வுக்கும் இடைஞ்சல் வருமோ என்று இறுதி நொடி வரை நாங்கள் பரபரத்து இருந்தோம். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏறத்தாழ 500 பேர் நிகழ்வுக்கு வந்த போது, அவர்களில் பெரும்பாலானோர் இறந்தேபோன தங்கள் உறவுகளுக்காக பிரார்த்திக்க வந்த பெண்களாக இருந்தனர். தங்கள் துக்கத்தை வாய்விட்டு அழ அவர்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு இது என நான் நம்புகிறேன். தாய்மார்களும் குழந்தைகளும் தாங்கள் இழந்த உறவுகளுக்காக கதறி அழுதனர். அக்காட்சி இதயத்தைப் பிளப்பதாக இருந்தது. கூட்டத்தில் இருந்த அனைவருமே அழுதனர். ஆதரவற்ற சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுமிகள் குழு ஒன்று இறந்து போன தங்கள் பெற்றோரை நினைத்து கதறி அழுத போது நான் அழுகையைக் கட்டுப்படுத்த மிகவும் போராட வேண்டியிருந்தது.

பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அழையா விருந்தாளிகள், பங்கேற்ற அனைவரையும் படம் எடுத்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஆகப் பெருந்துயரத்தில் இருந்த பெண்கள். இலங்கை அரசுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் அவர்களால் ஏற்படுத்த இயலாது. முதல் முறையாக கூட்டத்தில் இருந்த மக்கள் வீரம் மிகுந்து செயற்பட்டதை நான் கண்டேன். தங்களை படம் எடுத்த சாதாரண உடை உளவு அதிகாரிகளை அவர்கள் படம் எடுக்கத் தொடங்கினர். பிரார்த்தனைக் கூட்டத்தின் முடிவில் அங்கு இருந்த இரண்டு வெளிநாட்டுக்காரர்கள் அவர்கள் ஏன் அங்கு இருந்தனர் என்று காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டனர்.

தெற்குப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டையும் போல இவ்வாண்டும், “போர் நாயகர்கள் நினைவு நாள்” என்று அவர்கள் அழைக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக இராணுவ அணிவகுப்பு ஒன்றினை அரசு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், வடக்கில் ஆறு நீண்ட ஆண்டுகள் மௌனத் துன்பத்திற்கு பின் போர்ப் பகுதியைச் சேர்ந்த சில தமிழர்கள் தங்கள் மௌனத்தை உடைத்து இறந்தவர்களுக்காக பொது வெளியில் தங்கள் துக்கத்தை வெளிக்காட்டினர். ஆனால், இதனை அவர்கள் பாதுகாப்புப் படையினரின் விருப்பத்திற்கு மாறாகவே செய்தனர்.

அவர்களின் வீரத்திற்காக நான் அவர்களை உண்மையாகவே வணங்குகிறேன். இறந்தவர்களுக்காக அழ அவர்களுக்கு வீரம் தேவைப்படாத ஒரு நாளை காண காத்திருக்கிறேன்.

அருட்தந்தை எழில் இராஜேந்திரம் எழுதி Colombomirror இல் “Tamils brave harassment, threats to mourn their dead” என்ற தலைப்பில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கமே இது. தமிழில் தந்தவர், பூங்குழலி.