படம் | AFP, Lakruwan Wanniarachchi, ABC NEWS

அரசியலமைப்பிற்கான 19ஆவது திருத்தத்தை அங்கீகரிப்பது பற்றி ஏற்பட்டுள்ள விவாதங்கள் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தும் நிலைமையை உருவாக்கி உள்ளன. இந்த நெருக்கடியை மிகக் கவனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டி உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளினதும் கருத்துக்களை அறியாமல், சட்டத்தரணிகளோ அல்லது உயர்கல்வி கற்ற தரப்பினரோ அரசியலமைப்பை உருவாக்குதலும், தமது நம்பிக்கைகளை அவ்வாறே நிலைநிறுத்துவதன் காரணமாகவும், பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றி அமைப்பதற்கு முழுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு தரப்பினரும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்தத் தரப்பினரின் கருத்துக்களுடனும், முரண்பாடுகளுடனும் பின்னிப் பிணையும்போது அரசியல் முறுகல் நிலை உருவாவதைத் தவிர்க்க முடியாது.

செய்ய வேண்டியது என்ன?

கூட்டணி அரசியல் பற்றி புதிய அனுபவங்களைப் பெறும் தருணமே இது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான அரசியல் கட்சிகளுக்கு இதுபற்றிய ஆழமான விளக்கம் இல்லையெனத் தோன்றுகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக தமது கட்சியின் அடிமட்டம் முதல் மேல் மட்டம்வரை உரிய அறிவுறுத்தல்களைச் செய்யவில்லை. ஏனைய அரசியல் கட்சிகளைப் போலவே ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளும் உட்கட்சி ஜனநாயகம் நிலவாமையே இதற்குப் பிரதான காரணமாகும். இது விடயமாக தலைமைத்துவத்தின் கருத்துக்களுக்கும் நடைமுறைக்கும் இடையே பாரிய இடைவெளி இருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பாக செயற்படும் முறையைப் பற்றியும் மகிழ்ச்சியடைய முடியாது. கட்சியின் தலைமைப் பதவி தனக்குக் கிடைத்த பின்னர் தனது கட்சியின் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதிகளை அழைத்து கூட்டணி அரசியலைப் பற்றியும், தனது நிகழ்ச்சித்திட்டத்தைப் பற்றியும் பரந்துபட்ட விளக்கத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அது இடம்பெறவில்லை. இன்று சமரச அரசியலே நாட்டிற்குத் தேவைப்படுகிறது. சுதந்திரத்தின் பின்னர் இன்றுவரை தீர்க்கப்படாத தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மேற்கொள்வதற்கும் அரசியல் கட்சிகளின் குறுகிய மனப்பான்மைகளில் இருந்து விடுபட வேண்டும்.

100 நாள் வேலைத்திட்டமும் நடைமுறையும்

100 நாள் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே மைத்திரிபால சிறிசேன பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துகையில் ஏற்படக்கூடிய நடைமுறைப் பிரச்சினை பற்றி அன்று ஆழமாக சிந்தித்து இருக்க முடியாது. 100 நாள் வேலைத்திட்டம் ஒரே இடத்தில் தேங்கியுள்ளமையால் வெடித்துச் சிதறக்கூடிய ஓர் அழுத்தமும் பல சிக்கல்களும் உருவாகி உள்ளன. எனவே, உடன்படிக்கைகள் மூலம் இணக்கப்பாட்டுக்கு வந்த அரசியல் கட்சிகள், உடனடியாக புதிய இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். மக்களுக்கு வழங்க வேண்டிய உறுதிமொழிகள் தொடர்பாக மீண்டும் ஆழமான கலந்துரையாடலை ஏற்படுத்தி நடைமுறைச் சாத்தியமான தீர்மானங்களுக்கு வரவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இணக்கப்பாட்டிற்கு வந்த தரப்பினர் பரஸ்பரம் நம்பிக்கை இழந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் நிலைக்குச் செல்ல இடமுண்டு. அது தற்போது படிப்படியாக இடம்பெற்று வருகிறது.

இணக்கப்பாடுகள் நீடித்து நிலைக்கக் கூடியவையா?

ஓர் உடன்படிக்கை அல்லது இணக்கப்பாடு என்பது கருங்கல்லில் செதுக்கிய சிற்பம்போல மாற்றமடையாத ஒன்றல்ல. மனிதர்களின் நன்மைக்காக, மனிதர்களின் சார்பில் உருவாக்கப்படும் இத்தகைய இணக்கப்பாடுகள் காலத்தின் தேவை கருதி சீர்த்திருத்தம் செய்வதில் தவறேதுமில்லை. ஏனெனில், குறிக்கோள் நல்ல நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளபடியால் இது சாத்தியம். இவைபற்றி மனிதாபிமானத்துடன் மிகக் கவனமாகவும், பகுத்தறிவோடும் பிரச்சினையை அணுகவேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளையும், பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையில் தேசிய சபை உடனடியாக கூட்டப்படுதல் அத்தியாவசியமான காரணியாகும். ஜனாதிபதியை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்கு தீர்மானகரமான நடவடிக்கைகளை மேற்கொண்ட பல்வேறு தரப்பினருடனும் உடனடியாக கலந்துரையாடலை ஆரம்பிப்பது அவரது பொறுப்பாகும். அதற்குப் பதிலாக 19ஆவது திருத்தத்தை அவசரஅவசரமாக அங்கீகரிப்பதற்கு தீர்மானித்தால் 17ஆவது திருத்தத்திற்கு நேர்ந்த கதியே அதற்கும் ஏற்பட இடமுண்டு. தனது கட்சியின் பிரதேச தலைவர்களின் அதிகப்படியானோரை வெற்றிகொள்ளும் ஆற்றல் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருக்கு இருந்து வருகிறது. பிரதேச மட்டத்தில் கணிசமான அளவினர் முன்னைநாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு சார்பாக நடந்துகொள்வதைக் காணமுடிகிறது. முன்னைநாள் ஜனாதிபதியின் ஒத்துழைப்பை இத்தருணத்தில் பெறமுயல்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், சமரச அரசியலில் சகல தரப்பினருடைய இணக்கப்பாட்டையும் பெறவேண்டி உள்ளது. முன்னைநாள் ஜனாதிபதிகளாகிய மஹிந்த ராஜபக்‌ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரின் கூற்றுக்களும் அவர்களுடைய நடவடிக்கைகளின் ஒத்துழைப்பும் அரசியலை பாரதூரமாக பலவீனப்படுத்தி உள்ளது. மூத்த தலைவர்கள் என்ற வகையில் இத்தருணத்தில் அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தனிப்பட்ட கோபதாபங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு இது சந்தர்ப்பம் அல்ல. தற்செயலாக 19ஆவது திருத்தம் தொடர்பாக இணக்கப்பாடு காணமுடியாது. துரிதமாக பொதுத் தேர்தலுக்குச் சென்றால், அதன் பின்னர் அமைக்கப்படும் அரசு எத்தகையது என்பது பற்றி இத்தருணத்தில் கலந்துரையாட வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக அவசரமான ஒரு பொதுத் தேர்தலை எதிர்நோக்க நிர்ப்பந்திக்கப்பட்டால் அதற்கான மாற்றுத் திட்டங்களும் எமக்கு இருத்தல் வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கும், ஜனநாயகத்தை மேலும் சிறப்பாக உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான வழிவகைகளை நாம் தயாரித்துக்கொள்ள வேண்டும்.

தேசிய ஐக்கியம்

ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பியும் திடீர் பொதுத்தேர்தலை நோக்கிச் செல்வது அவர்களுடைய உபாய மார்க்கமாகலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமது சக்தியை மேம்படுத்தி தாமதமாகித் தேர்தலை எதிர்நோக்குவதாகும். இது எப்படி இருப்பினும் புதிதாக தெரிவு செய்யப்படும் அரசின் கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டுமென அரசியல் கட்சிகளிடையே ஒரு கலந்துரையாடல் அவசியமாகும். இரண்டு ஆண்டுகள் நீடிக்கப்போகும் தேசிய அரசின் இயல்பு எத்தகையது. பிரதான அரசியல் கட்சிகளைப் போலவே ஏனைய சகல எண்ணிக்கையில் சிறுபான்மையான அரசியல் கட்சிகளினதும் கருத்துக்களையும் மும்மொழிவுகளையும் உள்ளடக்கப்பட வேண்டும். இந்த அரசின் கட்டமைப்பையும், வேலைத்திட்டத்தையும் பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த இரண்டு ஆண்டு காலத்திற்குள், தேசிய ஐக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே மிக முக்கியமாகும்.

இத்தருணத்தில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளும், அவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் பற்றி ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு விளக்கம் இல்லைபோல் தோன்றுகிறது. வாழ்க்கைச் சுமையைக் குறைப்பது பற்றிய ஜனரஞ்சகமான பேச்சுக்களும், அதுபற்றி பொதுமக்களின் கருத்துக்களும் முரண்பட்டவை. அரசியலமைப்புத் திருத்தம்பற்றி என்னதான் பேசினாலும் சாதாரண மக்களுக்கு பொருளாதார நன்மை கிடைப்பதற்கான வழிவகைகள் கிட்டவில்லை. சிங்கள, இந்து புத்தாண்டுக் காலத்தில் இந்நிலைமை மேலும் மோசமடைந்து எதிர்ப்பலை உருவாக இடமுண்டு. இது இன்றைய அரசின் தேர்தல் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்துள்ளது.

நல்லாட்சியின் சவால்கள்

தற்போதைய அரசின் பிரச்சினைக்குரிய நடவடிக்கைகளும், ஐக்கிய தேசிய கட்சிக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்துகிறது. மத்திய வங்கியின் ஆளுநரை பிரதமர் தான்தோன்றித்தனமாக நியமித்தார். அரச சேவையின் முக்கிய பதவிகளுக்கு நியமனங்கள் வழங்கும்போது பிரதமரோ அல்லது அமைச்சர்களோ தீர்மானிப்பதற்குப் பதிலாக ஒரு குறித்துரைக்கப்பட்ட வழிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும். வெளிநாட்டுச் சேவையின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நியமனங்களை செய்வதற்கான தாமதம் மேற்படி சேவைகளின் வினைத்திறன்மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் வட மாகாண விஜயம் சாதகமான பாதகமான பெறுபேறுகளைக் கொண்டுவந்துள்ளது. சகல பாடசாலை அதிபர்களையும் அரச உத்தியோகத்தர்களையும் விழித்து உரைநிகழ்த்தும் சந்தர்ப்பத்தைப் பிரதமர் பெற்றுக்கொண்டார். மாகாண சபை பிரதிநிதிகளும், உள்ளூராட்சி அதிகாரசபைகளின் பிரதிநிதிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. வட மாகாணத்தின் அதிகப்படியான பாடசாலைகள் மாகாண சபைகளின் கட்டுப்பாட்டின் கீழேயே வருகின்றன. கல்விப் பிரச்சினைகளைக் கலந்துரையாடுவதாயின் அங்குள்ள மாகாண அரசியல் தலைமைத்துவத்தை அல்லது மாகாண கல்வி அமைச்சைச் சார்ந்த செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பணிப்பாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடாமல் பிரதமர் ஏனையோரை அழைத்து கலந்தாலோசித்துள்ளார். அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு உடன்பாட்டைக் காட்டிய ஒரு அரசியல்வாதி என்ற வகையில் நடைமுறையில் அதிகாரத்தைப் பகிர்வதற்குப் பதிலாக கொழும்பை மையப்படுத்தி நிர்வாகத்தை நடத்தும் ஒரு வழிமுறையையே பிரதமர் அணுசரித்துள்ளார். இணக்க அரசியலில், எண்ணிக்கையில் சிறுபான்மையான அரசியல் கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது கட்டாயமான நிபந்தனையாகும். எனவே, புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் சவால் எமக்கு முன்னால் உள்ளது. இந்த சகல நிலைமைகளின் கீழ் அரசியல் கட்சிகள் தமது பயணப்பாதை சரியா என மீளாய்வு செய்து சமரசத்திற்கு வர தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அறிஞர்களையும், ஊடகங்களையும், அனைத்துப் பிரஜைகளையும் இக்கலந்துரையாடலின்போது பங்குகொள்ளச் செய்வதே அரசின் பொறுப்பாகும்.

லயனல் குருகே

சிரேஷ்ட ஆய்வாளர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்