வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகளிலிருந்து தனித்தும் தனிமைப்பட்டும் செல்கின்றாரா என்னும் கேள்வி பலர் மத்தியில் எழுந்திருக்கிறது. அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில விடயங்களை அடியொற்றியே இவ்வாறான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கூட்டமைப்புற்கும் கொழும்பின் புதிய ஆளும் பிரிவினருக்கும் இடையில் ஒரு அரை இணக்கம் ஏற்பட்டது. இந்த அரை இணக்கத்தின் பிரதிபலிப்புத்தான் தேசிய நிறைவேற்று சபை என்று சொல்லப்படும் கொள்கைசார் முடிவுகளை தீர்மானிக்கும் அதியுயர் சபையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் அங்கம் வகித்து வருகின்றார். ஒரு இணக்கப்பாடு இல்லையெனின் அவ்வாறானதொரு குழுவில் சம்பந்தன் பங்குபற்ற முடியாது. எனினும், நான்கு கட்சிகளை கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆகக் குறைந்தது மூன்று உறுப்பினர்களையாவது குறித்த நிறைவேற்று சபையில் இடம்பெறச் செய்திருக்க வேண்டும். ஏனெனில், குறித்த நிறைவேற்று சபையில் அங்கம் வகிப்பதற்கான தகுதிநிலையாக நாடாளுமன்ற உறுப்புரிமை குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஏனெனில், மக்கள் பிரதிநிதித்துவ அரசியலுடன் எந்தவகையிலும் தொடர்பற்ற சோபித தேரரும் குறித்த நிறைவேற்ற சபையில் ஒரு அங்கத்தவராக இருக்கின்றார். எங்கெல்லாம் தமிழ் மக்களின் குரலை வலிமையாக ஒலிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கின்றனவோ அங்கெல்லாம் எங்களின் குரலை வலுவாக ஒலிக்கச் செய்ய வேண்டும் என்னும் அடிப்படையில்தான் இநத விடயத்தை, இந்த இடத்தில் சுட்டிக் சாட்டுகின்றேன்.
இந்த பின்னணியில் நோக்கினால் ஆட்சி மாற்றத்தின் பின்னரான சூழலில் கொழும்பின் நடவடிக்கைகள் எதனையும் விமர்சிக்கும் அல்லது எதிர்க்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் கூட்டமைப்பால் எடுக்க முடியாது. மேலும், எடுக்கவும் கூடாது. கொழும்பும், கூட்டமைப்பிடமிருந்து அவ்வாறானதொரு பதிலைத்தான் எதிர்பார்க்கிறது. ஏனெனில், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனது இணக்கத்துடன்தான் பல்வேறு விடயங்களை புதிய அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆனால், கொழும்பின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப விடயங்கள் நிகழ்கின்றனவா? ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் மற்றும் சந்திரிகா ஆகியோர் அனைத்து விடயங்களையும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் மட்டுமே கலந்துரையாடி வந்தனர். அவர்களை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசவேண்டுமாயின் சம்பந்தன் அல்லது சுமந்திரன் ஆகியோரது அபிப்பிராயங்கள் மட்டும் போதுமானது என்னும் நிலைமையே காணப்பட்டது. ஆனால், தேர்தலின் பின்னர் நிகழ்ந்த சில விடயங்களை தொகுத்து நோக்கும் போது சம்பந்தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றதா அல்லது அது அவரது கட்டுப்பாட்டுக்குள் இருந்து மெதுவாக நழுவிச் சென்றுகொண்டிருக்கிறதா என்னும் சந்தேகம் அவர்களுக்குள் எழுமளவிற்கு சில நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனால் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் இதில் முக்கியமானது. அதேவேளை, கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்துக்கள் ஆகியவற்றை உற்று நோக்கும் போது கூட்டமைப்பில் இரண்டு வகையான நிலைப்பாடுகள் வெள்ளிடைமலையாக தெரிந்தன. இவ்வாறானதொரு பின்னணியில்தான் தமிழ் நாட்டின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது, ரணில் விக்கிரமசிங்க வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஒரு பொய்யர் என்று தெரிவித்திருந்தார். இராணுவத்தின் பிடியிலிருக்கும் நிலங்கள் தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போதே, விக்னேஸ்வரன் என்னுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அதேவேளை, நானும் அவருடன் எந்தவொரு விடயம் தொடர்பிலும் பேசவில்லை. எனவே, விக்னேஸ்வரன் என்னுடன் தொடர்பு கொண்டதாகக் கூறுவது அடிப்படையிலேயே பொய்யான கருத்தாகும். அவர் அவ்வாறு கூறுவாராயின் அவர் ஒரு பொய்யர் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்றும் ரணில் அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, இனப்படுகொலை தீர்மானம் தொடர்பில் பேசும் போது, ரணில் அதனை ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை என்றும் விமர்சித்திருக்கின்றார். ஆனால், மேற்படி நேர்காணலில் ரணில் தெரிவித்திருக்கும் ஒரு கருத்தை பலரும் உற்றுநோக்க தவறிவிட்டதாகவே நான் கருதுகின்றேன். உண்மையில் அதுதான் நான் மேலே குறிப்பிட்ட விடயங்களுடன் நேரடியாக தொடர்புபடும் விடயமாகும். அதாவது, நிலம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது ஓரிடத்தில் ரணில் தெளிவாக குறிப்பிடும் விடயம், நூறு நாள் வேலைத்திட்டத்தில் நாங்கள் அப்படியான வாக்குறுதிகள் எதனையும் குறிப்பிட்டிருக்கவில்லை. அதற்குத்தான் மக்களும் வாக்களித்திருக்கின்றனர். ரணில் கூறுவது சரி. உண்மையிலேயே அவர்களது நூறு நாள் வேலைத்திட்டதிலும் சரி, ஜனாதிபதி மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சரி அப்படியான வாக்குறுதிகள் எவையும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், சந்திரிகா அவ்வாறானதொரு எழுத்து மூல உடன்பாட்டை செய்துகொள்ள வேண்டுமென்று கூறியபோதும், அதனை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே மறுத்ததாகவும் சுமந்திரன் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றார். அண்மையில் கூட கனடிய தமிழ் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதும் அவர் அதனை குறிப்பிட்டிருக்கின்றார். இதற்கான ஆதாரங்களை இணையங்களில் நீங்கள் பார்க்கலாம்.
ரணிலை பொறுத்தவரையில் சம்பந்தன் தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்கின்றார். அவருடன் கலந்துரையாடித்தான் நாங்கள் விடயங்கள் ஒவ்வொன்றையும் செய்து வருகின்றோம் பின்னர் எதற்காக நான் விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்னும் ஒரு இளக்காரமான தொனியே தெரிகிறது. இதன் தொடர்ச்சியாகவே அண்மையில் ரணில் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த போது வடக்கு மாகாண சபை ரணிலின் நிகழ்வுகளில் பங்குகொண்டிருக்கவில்லை. ரணிலும் தான் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது விக்னேஸ்வரனை சந்திக்கப் போவதில்லை என்றும் மேற்குறித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். இது உங்களுக்கு சிக்கலான விடயமாக இருக்காதா என்று நேர்கண்டவர் கேட்ட போது, அது எனக்குச் சிக்கலானதாக இருக்காது, ஆனால் அது விக்னேஸ்வரனுக்குத்தான் சிக்கலானதாக இருக்கும் என்றவாறு சற்று ஆணவமாக பதிலளித்திருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் விக்னேஸ்வரன் நிகழ்வுகளை பகிஸ்கரித்திருந்தார். மேலும், விக்னேஸ்வரனுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து முறையான அழைப்புகள் எதுவும் அனுப்பப்பட்டும் இருக்கவில்லை. ஆனால், ரணிலுடன் கூடச் சென்ற ஜக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ரோசி சேனாநாயக்கவின் ஊடாக விக்னேஸ்வரன் அழைக்கப்பட்டதாகவும், அவர் அதனை பொருட்படுத்தவில்லை என்றும் சில தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தென்னிந்தியச் திருச்சபையின் ஆயர் தியாகராஜா ரணில் – விக்கி முரண்பாட்டை தீர்த்துவைப்பதற்கான சில முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அதனையும் விக்னேஸ்வரன் நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் உண்டு. ஆனால், விக்னேஸ்வரனை புறக்கணித்து அல்லது பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்ட ரணிலின் நிகழ்வுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொண்டிருந்தனர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த உலகின் ஜந்தாவது சக்தியுள்ள தலைவர் என்று வர்ணிக்கப்படும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தன்னுடைய யாழ்ப்பாண விஜயத்தின் போது வடக்கு முதலமைச்சர் என்னும் வகையில் விக்னேஸ்வரனையும் சந்தித்திருந்தார் என்பதையும் இந்த இடத்தில் குறித்துக் கொள்வது அவசியம்.
விக்னேஸ்வரன் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொண்டமையானது விக்னேஸ்வரன் – ரணில் முரண்பாட்டில் கூட்டமைப்பு விக்னேஸ்வரனின் பக்கமாக இல்லையா என்னும் கேள்வியையும் எழுப்புகின்றது. வடக்கு தமிழ் மக்களால் தங்களின் முதலமைச்சராக, இன்னொருவகையில் குறிப்பிட்டால் வடக்கிற்கான அரசியல் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான விக்னேஸ்வரனை ஒரு பொய்யர் என்று ரணில் குறிப்பிட்ட போதும், அவரை உரிய வகையில் கௌரவிக்காது வடக்கில் தன்னுடைய நிகழ்வுகளை மேற்கொண்ட போதும், அது பற்றி இன்றுவரை கூட்டமைப்பின் தலைவர்கள் எவரும் ரணிலை கண்டிக்கவோ அல்லது ரணில் – விக்னேஸ்வரனுக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்தவோ முயற்சிக்கவில்லை. மாறாக அந்த முரண்பாட்டை பேணிப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் கூட்டமைப்பின் தலைமை அரை இணக்கத்துடன் இருப்பதும், வடக்கு முதலமைச்சரான விக்னேஸ்வரன் கொழும்புடன் முழு அளவில் முரண்பட்டு நிற்பதுமே ஆகும். இனப்படுகொலை தீர்மானம் அந்த முழு அளவு முரண்பாட்டிற்கான சாட்சியாக இருக்கின்றது.
இவ்வாறானதொரு சூழலில்தான் விக்னேஸ்வரன் திடீரென்று, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் அடிப்படை கோட்பாடுகளாகக் கருதப்படும் திம்பு கோட்பாடுகளின் அடிப்படைகளில் ஒன்றான தமிழ் மக்கள் ஒரு தேசம் என்னும் அடிப்படையில் அண்மையில் பேசியிருக்கின்றார். இதுவும் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் தலைமையுடன் முரண்பட்டு நிற்கும் இன்னொரு விடயமாகும். இவை அனைத்தினதும் எதிரரொலியாகவே அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய இரா.சம்பந்தன், அண்மைக் காலமாக சிலர் பிரிவினைவாத கோசங்களை எழுப்பி வருகின்றனர். அவ்வாறானவர்கள் தமிழ் மக்கள் ஒரு தேசம், சிங்கள மக்கள் ஒரு தேசம் என்னும் அடிப்படையில் பேசி வருகின்றனர் என்றவாறு விக்னேஸ்வரனின் நடவடிக்கைளை விமர்சித்திருக்கின்றார். இது வெளித்தோற்றத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிப்பது போன்று தெரிந்தாலும், அடிப்படையில் விக்னேஸ்வரனின் பேச்சையே மறைமுகமாக விமர்சிக்கின்றது. ஏனெனில், கஜேந்திரகுமார் கடந்த ஜந்து வருடங்களாக இவ்வாறானதொரு நிலைப்பாட்டைத்தான் வலியுறுத்தி வருகின்றார். உண்மையில் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பது கஜேந்திர குமாரின் கண்டுபிடிப்போ அல்லது விக்னேஸ்வரன் புதிதாக கண்டுபிடித்ததோ அல்ல. மாறாக அதற்கென்று ஒரு நீண்ட அர்பணிப்புமிக்க வரலாறுண்டு. இது தொடர்பில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுவேன். ஒரு வரியில் இன்றைய இந்தக் கட்டுரையின் சாரத்தை சொல்வதாயின், சம்பந்தனால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அண்மைக்கால போக்குகள், அவரை கூட்டமைப்பின் அரசியலிலிருந்து தனித்துக் காட்டுகின்ற அதேவேளை, கூட்டமைப்பின் தலைமையின் அணுகுமுறைகளும் அவரை தனிமைப்படுத்தியே காட்டுகின்றது. ஆனால், விக்னேஸ்வரனுக்கு பின்னாலும் ஒரு ஆபத்து அவரை தொடர்ந்தவாறே இருக்கிறது. அது – அவர் இவ்வாறு இனப்படுகொலை, தமிழ் மக்கள் ஒரு தேசம் என்றவாறான உணர்வுபூர்வமான விடயங்களை வெறும் தேர்தல்கால அரசியலுக்காகப் பயன்படுத்த முற்படுவாராயின், விக்னேஸ்வரன் மக்கள் மத்தியில் வெறுக்கப்படுபவராக மாறுவதற்கான தூரமும் அதிக தொலைவில் இல்லை.
தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.