படம் | FORUMROMANUM

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறி வருகின்றார். இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து தமிழர்களுக்கு குறிப்பாக சிங்களம் அல்லாத சமூகங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பது அவருடைய கருத்து. 2001ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசராக பதவியேற்ற போது நிகழ்த்திய உரையில் கூட மாகாண சபை முறை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும், சிறுவர்களின் மாபிள் விளையாட்டு போன்றதுதான் இந்த மாகாண சபை முறை என்றும் விக்னேஸ்வரன் அன்று கூறியிருந்தார்.

மாகாண சபை குறித்த விமர்சனம்

இனப்பிரச்சினைக்கு மாகாண சபை முறை தீர்வாக அமையாது என 1987இல் விடுதலைப் புலிகள் உட்பட அப்போதிருந்த தமிழ்த் தலைவர்கள், கல்விமான்கள் கூறிவிட்டனர். ஆனாலும், அதன் பின்னரான காலகட்டத்தில் மேலும் பல கல்விமான்கள் அரசில் உயர் பதவி வகித்த தமிழர்கள் பலரும் மாகாண சபை முறை தொடர்பான தமது எதிர் விமர்சனங்களை நேரடியாகவே கூறிவந்தனர். ஆனாலும், விக்னேஸ்வரன் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவியேற்றபோது அரசின் அரசியல் யாப்பில் இருந்த மாகாண சபை முறையை விமர்சித்தமை முக்கியமானது.

சிங்கள சமூகத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு சட்டப் புலமையாளன், அதுவும் நீதித்துறை தொடர்பான உயர் பதவி ஒன்றை அன்று ஏற்றபோது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்திய முறையினால் அவருடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற சந்தேகம் கூட அன்று எழுந்தது. “விக்னேஸ்வரன் ஒரு சிறந்த நீதியரசர், ஆனால் மாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லை என அவர் கூறியதை ஏற்க முடியாது” என தயான் ஜயதிலக அன்று கூறியிருந்தார்.

நியாயத்தை ஏற்பதில்லை

வேறு பல சிங்கள அரசியல்வாதிகளும் விக்னேஸ்வரன் அவ்வாறு கூறியதை அன்று கடுமையாக விமர்சித்திருந்தனர். ஆனால், மாகாண சபை முறை தொடர்பாக அவர் கூறியதில் நியாயம் இருக்கிறது என்பதை அப்போதிருந்த பல சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள அரசியல் பத்தி எழுத்தாளர்களும் ஏற்கவில்லை. மாறாக விக்னேஸ்வரன் மீது எதிர் விமர்சனங்களையே முன் வைத்தனர். இலங்கை நீதித்துறையில் இணைந்த காலம் முதல் நீதியரசராக ஓய்வுபெறும் வரை அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.

ஆனால், விடுதலைப் புலிகளின் போராட்ட முறைகளையோ அல்லது தமிழ் தேசியம் என்ற கோட்பாட்டையோ அவர் ஏற்கவுமில்லை, நேரடியாக அது பற்றி கூறவுமில்லை. ஆனால், இலங்கை அரசியல் யாப்பில் உள்ள சட்ட ஏற்பாடுகள் தமிழர்களை புறக்கணித்துள்ளது, அரசியல் யாப்பில் உள்ள அடிப்படை உரிமைகளைக் கூட தமிழர்கள் அனுபவிக்க முடியாத நிலை இருக்கின்றது என்ற உண்மைகளை அவர் அவ்வப்போது வெளிப்படுத்தியிருந்தார். இவருடைய இந்தக் கருத்துக்களின் பின்னணியில்தான் 2013ஆம் ஆண்டு வட மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றபோது முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிறுத்தியது.

ஓரக் கண்ணால் பார்த்த மக்கள்

ஆனாலும், விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட பல தமிழ் தலைவர்கள் மற்றும் பெரும்பான்மையான தமிழ் மக்களும் ஓரக்கண்ணால் பார்த்தனர். ஏனெனில், விக்னேஸவரன் யாழ்ப்பாணத்து பரம்பரையைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் கொழும்பில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று கொழும்பில் நீண்டகாலமாகவே வாழ்ந்து வரும் ஒருவர். அத்துடன், அரச சேவையில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய ஒருவர். இவரால் எவ்வாறு மாகாண சபைக்கு தலைமை தாங்க முடியும் என்ற கேள்விகள் எழுந்தன.

ஆனாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டதாலும் மாற்றம் ஒன்று தேவை என்ற உணர்வின் அடிப்படையிலும் மக்கள் வாக்களித்தனர். வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி வகித்த கடந்த ஒரு வருட காலத்தில் கூட அவரின் அரசியல் செயற்பாடுகளில் திருப்பதி ஏற்பட்டிருக்கவில்லை. தமிழர்களின் 60 ஆண்டுகால அரசியல் பிரச்சினைகளை வெறுமனே அரசியல் யாப்பில் உள்ள சட்டங்களினால் தீர்க்க முடியாது. ஆனால், விக்னேஸ்வரன் தமிழர்களின் பிரச்சினைகளை சட்டப்பிரச்சினையாக பார்க்கின்றார் என்று கூட தமிழ் அரசியல் பத்தி எழுத்தாளர்கள் விமர்சித்திருந்தனர். சுமந்திரன் மீதும் அவ்வாறான விமர்சனங்கள் எழுந்தன.

நேர்மையான கருத்துக்கள்

ஆனால், விக்னேஸ்வரன் நீதித்துறையில் இணைந்த காலம் முதல் தமிழர்களின் பிரச்சினைகளை நேர்மையான கண்ணோட்டத்துடன் அணுகியிருக்கிறார் என்பதையே அவருடை சமீபகால செயற்பாடுகள் கோடிட்டு காட்டுகின்றன. தொடர்ச்சியாக இன முரண்பாடுகளின் பட்டறிவில் இருந்து அவர் தனது கருத்துக்களை முன்வைக்கின்றார் என்ற முடிவுக்கு வரலாம். அரசியல் விஞ்ஞான கோட்பாட்டின் அடிப்படையில் இன முரண்பாட்டுகள் தொடர்பான கற்கை மற்றும் அனுபவம் என்பது அதன் பின்னரான காலகட்டத்தில் நேர்மையான கருத்து வெளிப்பாட்டுக்கு வழிவகுக்கும். அந்த அடிப்படையில் விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பாக கூறிய கருத்துக்களை நோக்கலாம். விடுதலைப் புலிகள் இயக்கத்தை நியாயப்படுத்தாத ஒருவர், தமிழ்த் தேசிய கோட்பாட்டை ஏற்காத ஒருவர் தமிழர்களுக்கு 1948இல் இருந்து அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்று கூறியதுதான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரச்சினை.

பொதுவாக சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழர்களின் நியாயமான கருத்துக்களை ஏற்பதில்லை. நாடாளுமன்றத்தில் கூட தமிழ் உறுப்பினர்கள் உரையாற்றும்போது அதன் மொழிபெயர்ப்பை பெறுமையாக இருந்து கேட்பதில்லை. தமிழ் உறுப்பினர்கள் சிங்கள மொழிபெயர்ப்பை கேட்டு அதற்கு பதிலளிக்கின்றனர். ஆனால், சிங்கள உறுப்பினர்கள் அவ்வாறு பதிலளிப்பதாக இருந்தாலும் குறித்த தமிழ் உறுப்பினரின் கருத்தை விடுதலைப் புலிகளின் கருத்தாக அல்லது புலிகளின் குரலாகவே விமர்சிக்கின்றனர். “பிரச்சினைகளை கூறியபோது விடுதலைப் புலிகளின் குரலாக பேசுகின்றீர்கள்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மிரட்டும் தொணியில் பேசியதாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

பக்கா புலி என்றார் சந்திரிக்கா

இராணுவத்தின் அட்டூழியங்களை விபரித்தபோது தன்னை ஒரு பக்கா புலி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூறியதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோஸப் விருது வழங்கும் விழா ஒன்றில் உரையாற்றியபோது தெரிவித்திருந்தார். ஆக தமிழர்களின் நியாயங்களை கூறினால் அவர்களை புலியாக பார்க்கின்ற பண்பு சிங்கள அரசியல் தலைவர்களிடம் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக உள்ளது. எனவே, விக்னேஸ்வரன் மீது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோவிக்கின்றார் என்பதும் இந்த அடிப்படையில்தான். ஆனால், பல ஊடகங்கள் அதனை விக்கி – ரணில் மோதல் என விமர்சிக்கின்றன. ஆனால், அது சாதாரண அரசியல்வாதிகளிடையே ஏற்படும் மோதல் போன்றதல்ல, ரணில் விக்கிரமசிங்கவின் அந்த கோவம் என்பது இன அடிப்படையிலானது.

ஒரு காலத்தில் புலிகளை பயங்கரவாதிகள் எனக் கூறி அவர்களின் கோரிக்கைகளை தட்டிக் கழித்து சர்வதேச உதவியுடன் யுத்தத்தையும் நிறுத்திய சிங்கள தலைவர்கள், இப்போது மிதவாத தமிழ்த் தலைவர்களின் கருத்துக்களையும் தட்டிக்கழிக்கின்றனர். அரசியல்வாதி அல்லாத விக்னேஸ்வரன் போன்ற தலைவர்கள் இணங்கிச் செல்லக் கூடியவர்கள். அவர்களைக் கூட அரவனைத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பாத சிங்கள தலைவர்கள் தமிழர்களிடம் இருந்து எதிர்ப்பார்ப்பது என்ன? நாங்கள் ஆளும் வர்க்கம், நீங்கள் அடங்கி வாழும் சமூகம் என்பதா?

தினக்குரல் பத்திரிகைக்காக அ. நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.