படம் | OMLANKA

கிழக்கு மாகாண சபை விவகாரம் தொடர்ந்தும் ஒரு சிக்கலான விவகாரமாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இதுதான் நிலைமை. இதில் எவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்படும் அல்லது ஏற்படலாம் என்பதற்கு அப்பால், கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகியிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. இறுதியான தகவல்களின்படி முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த பசீர் சேகுதாவுத் என்பவர், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு ஒரு கடித்தத்தை அனுப்பி வைத்திருக்கின்றார். எஞ்சியுள்ள இரண்டரை வருட காலத்தை இரு தரப்பினரும் ஆட்சி செய்வதற்கு ஏற்றவாறான ஒரு ஆலோசனையை தன் கடிதத்தில் முன்வைத்திருக்கின்றார். அதாவது, முதலில் பொறுப்பேற்பவருக்கு ஒரு வருடம், அடுத்து வரவுள்ள ஒன்றரை வருடம் பிறிதொருவருக்கு என்னும் உடன்பாட்டிற்கு அமைவாக கிழக்கு மாகாண சபையை தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகியோர் ஆட்சி செய்ய முடியுமென்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார். 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமிழர் தரப்பின் தயவை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 2015இல் தமிழர் தலைமை முஸ்லிம்களின் தயவிற்காகக் காத்திருக்கிறது. பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள் என்னும் நிலைக்கு தமிழர் அரசியல் தரமிறங்கிவிட்டது. எனது அபிப்பிராயத்தில் கூட்டமைப்பு அடுத்து வரவுள்ள இரண்டரை வருடங்களை முஸ்லிம் காங்கிரஸிடமே ஒப்படைத்துவிட்டு, அமைதியாக எதிர்க்கட்சியில் இருப்பது சாலவும் சிறந்தது. இங்கு விடயம் எவர் ஆட்சியமைப்பது என்பதை மேவி, பிறிதொரு கேள்வியை முன்னிறுத்தியிருக்கிறது. கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்காலம் என்ன?

கிழக்கு மாகாண சபையை பொறுத்த வரையில் ஒரு தனிக்கட்சி ஆட்சியமைக்கக் கூடிய நிலை தற்போதைக்கு இல்லை. ஆனால், ஜந்து வருடங்களுக்குப் பின்னர் தங்களால் தனித்து ஆட்சியமைக்கக் கூடிய நிலைமை கிழக்கில் ஏற்படலாமென்னும் நம்பிக்கை, கிழக்குவாழ் முஸ்லிம்களிடம் உண்டு. இதற்கு அவர்களது சனத்தொகை பெருக்கமே காரணம். இந்த நிலையில், அண்மைக் காலத்திலும் சரி, பிற்காலத்திலும் சரி, தமிழர்கள் கிழக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பாக வருவதற்கான வாய்ப்பு இல்லை. தமிழர்கள் ஆளும் தரப்பாக வரமுடியாதென்று நான் குறிப்பிடுவதற்கு பிறிதொரு காரணமும் உண்டு. கூட்டமைப்பை பொறுத்தவரையில், அது அரசில் ஒரு அங்கமல்ல. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளியாக இருக்கிறது. எனவே, கிழக்கில் ஆட்சி என்று வரும்போது எப்போதும் முஸ்லிம் காங்கிரஸ் அல்லது பிறிதொரு முஸ்லிம் கட்சி ஆட்சியமைப்பதற்கான புறச்சூழலே இருக்கிறது. வேண்டுமானால் தமிழர் தரப்பு, முஸ்லிம் காங்கிரஸின் தலைமையிலான ஆட்சியில் பங்குபற்றலாம். இது ஒரு மிகவும் சிக்கலான அரசியல் நிலைமையாகும்.

கிழக்கு மாகாண சபை விவகாரம் ஒரு அரசியல் பிரச்சினையாக வெளித்தெரிந்த பின்னர்தான் உண்மையிலேயே கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம் எந்தளவு சிக்கலானதாக இருக்கிறது என்னும் உண்மையும் வெளித்தெரிந்தது. இந்த இடத்தில் ஒன்றுமில்லாத மாகாண சபைக்காக தமிழர் தரப்பு ஏன் இந்தளவு விவாதம் செய்ய வேண்டுமென்றும் சிலர் பேச முற்படுகின்றனர். இன்னும் ஒரு சிலரோ, கிழக்கு மாகாண சபை தொடர்பில் பேசும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வரியில்லாத வாகனங்களை பெறும் நோக்கில்தான் முதலமைச்சர் கதிரைக்கு ஆசைப்படுவதாகக் கூறுகின்றனர். இவ்வாறான அரசியல் மேதாவிகள் தொடர்பில் சில விடங்களை இவ்விடத்தில் தொட்டுச் செல்ல விரும்புகிறேன். மாகாண சபையில் ஒன்றுமில்லை என்னும் வாதத்தை இப்பத்தியாளர் எக்காலத்திலும் ஏற்றுக் கொண்டதில்லை. மாகாண சபையினை மக்களின் நலனை முன்னிறுத்தி வினைத்திறனுடன் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், அது தமிழ் மக்களின் அபிலாசைகளை வெற்றிகொள்வதற்கு போதுமானதல்ல என்பதில் இப்பத்திக்கு முரண்பாடில்லை. எனவே, தற்போதைக்கு இருக்கின்ற ஒரேயொரு வாய்ப்பான கிழக்கு மாகாண சபையில் தாங்கள் ஆட்சியமைக்க வேண்டுமென்று தமிழர் தரப்பு கோருவது முற்றிலும் நியாயமானது. ஆனால், தமிழர் தரப்பிடம் நியாயம் இருக்கின்ற போதும், அந்த நியாயத்தை நிலைநிறுத்துவதற்கான புறச் சூழல் இல்லை. ஏனெனில், ஜனநாயகத்தை மலரச் செய்வார் என்று கூறப்பட்ட மைத்திரிபால, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஆகக் குறைந்தது இந்த விடயத்தில் கூட நல்லெண்ணத்தை காண்பிக்கும் நிலையில் இல்லை.

இப்போது இரண்டாவது வகையான அபிப்பிராயங்களுக்கு வருகிறேன். கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சரை கோருவதானது அவர்களின் வசதிகளை பெருக்கிக் கொள்வதற்காகவா? அதாவது, வரியில்லாத வாகனங்களை பெறுவதற்காகவா? அவ்வாறாயின் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது, முன்னாள் உச்ச நீதிமன்ற நிதியரசர் விக்கேஸ்வரனுக்கு வரியில்லாத வாகனத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவா? ஜங்கரநேசன், குருகுலராஜா மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் தங்களின் வசதிகளை பெருக்கிக் கொள்வதற்காகவா வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டனர்? வடக்கு மாகாண சபையில் எவருமே மக்களுக்காக இயங்கவில்லையா? மாறாக வெறும் வரியில்லாத வாகனங்களை பெறும் நோக்கில்தானா போட்டியிட்டனர்? உண்மையில இப்படியான கருத்துக்களைக் கூறுவோர், அடிப்படையிலேயே தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை தங்களின் சொந்த சுகபோக இலாபங்களுக்காக கொச்சைப்படுத்த முற்படுபவர்களாவர். இப்படியானவர்கள் முன்வைக்கும் பிறிதொரு கருத்து வேடிக்கையானது. அதாவது, ஒட்டுமொத்த மாற்றங்களுக்காக தமிழ் மக்கள் போராட வேண்டும். உதாரணமாக, வேலை வாய்ப்பில் பாரபட்சம் காண்பிக்கப்படுகிறதாயின், அதனை இல்லாதொழிக்கும் வகையிலான பொறிமுறைகளுக்காக தமிழ் மக்கள் போராட வேண்டும். இது ஒரு வகையில் திருத்தவே முடியாத சீன, சோவியத் வகை மாக்சியர்களின் வாதத்திற்கு ஒப்பானது. அதாவது, கம்யூனிசம் மலர்ந்தால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்பதே அவ்வாறானவர்களின் பாலபாடமாகும். ஆனால், கம்யூனிசம் வரும்வரையில் என்ன செய்வது? குறிப்பிட்ட சூழலில் மக்கள் நன்மைகளை பெற்று, வாழும் வழியென்ன? இப்படியான கேள்விகளை எவரேனும் கேட்டால், உடனடியாக அவர்களின் பெயர், திரிபுவாதிகள், அமெரிக்க கைக் கூலிகள் இன்னும் பல. மாக்சின் ஆவி தங்களை வழிநடத்துவது போன்றும், தங்களுக்கு வெளியில் எதுவுமே இல்லையென்பதான கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இவ்வகை மாக்ஸ்வாதிகள் போன்றவர்கள்தான், நான் குறிப்பிட்ட மேற்படி தமிழ் அறிவாளிளும் கூட. இப்படியானவர்கள்தான், தமிழர் தரப்பு கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் ஆசனத்தை கோரக் கூடாது என்கின்றனர். அதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த மாற்றங்களுக்காக தமிழர்கள் போராட வேண்டுமென்கின்றனர். ஆனால், ஒட்டுமொத்த மாற்றங்கள் ஏற்படும் வரையில் கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது? அதற்கான உபாயங்கள் என்ன? இப்படியான கேள்விகளைக் கேட்டால் இவர்களிடம் எந்தப் பதிலும் இருக்காது. இவர்களுக்கும் நான் மேலே குறிப்பிட்ட வகையான கம்யூனிச கனவுவாதிகளுக்கும் என்ன வித்தியாசமுண்டு?

சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே இவற்றை குறிப்பிட நேர்ந்தது. ஏனெனில், கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைளின் பின்னாலுள்ள நியாயத்தை புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் கூட, அவற்றை கொச்சைப்படுத்தாத எழுத்து நாகரீகம் அவசியம். கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை பொறுத்தவரையில், நான் ஏலவே குறிப்பிட்டது போன்று, அது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. ஒரு புறம் முஸ்லிம்கள் தங்களின் தனித்துவத்தை பேணிக்கொள்ளும் வகையிலான அரசியலை முன்னெடுக்கும் போது, இன்னொருபுறும் அரச அதிகாரத்துடன் சிங்கள மக்கள் இருக்கின்ற போது, தமிழ் மக்கள் தங்களின் தனித்துவத்தை பேணிக்கொண்டு வாழ்வதற்கான ஏற்பாடு என்ன? இப்படியொரு தமிழர் இருப்பிற்கான ஏற்பாடு, முஸ்லிம்களுடன் இணைந்து ஆட்சியமைப்பதன் ஊடாக சாத்தியப்படுமா? அல்லது சிங்களவர்களுடன் இணைந்திருப்பதன் மூலம் சாத்தியப்படுமா? இவை இரண்டும் இல்லாவிட்டால் கிழக்கில் தமிழர்களுக்கென தனியானதொரு மாகாண சபையை நோக்கி சிந்திப்பது சிறந்ததா? வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியப்படின் இவ்வாறான கேள்விகளுக்கு தேவையிருக்காது. ஆனால், அதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக இருக்கிறது. அப்படியே அது சாத்தியப்பட்டாலும் கூட, அது அண்மைக்காலத்தில் சாத்தியப்படக் கூடிய ஒன்றாக நிச்சயம் இருக்காது.

வடக்கு – கிழக்கு இணைப்பு குறித்த விவாதங்கள் மேலெழுந்தால், அதனை முதலில் எதிர்ப்பவர்களாக கிழக்கின் முஸ்லிம்களே இருப்பர். ஏனெனில், முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் நீண்ட காலத்தில் கிழக்கு தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுமென்றே உறுதியாக நம்புகின்றனர். அப்படியொரு நம்பிக்கை அவர்களுக்குள் இருக்கின்றபோது, எதற்காக முஸ்லிம்கள் வடக்கு – கிழக்கு இணைப்பை ஆதரிக்க வேண்டும்? எனவே, இவ்வாறானதொரு சிக்கலான சூழலில் கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கிழக்கு தமிழர்களே சிந்திக்க வேண்டும். கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். மேடைகளில் உரத்து பேசுவதில் பொருளில்லை. அரசியல் உபாயங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். முஸ்லிம்கள் தொடர்பில் விமர்சிப்பதோ அல்லது அவர்களை எதிர்ப்பதிலும் பொருளில்லை. மாறாக கிழக்கு தமிழ் மக்களின் நலன்களை எவ்வாறு வெற்றிகொள்வது என்று மட்டுமே தமிழர் தரப்பு சிந்திக்க வேண்டும். அதேபோன்று தமிழர்கள் முஸ்லிம்கள் தொடர்பில் தவறிழைத்திருக்கின்றனர். எனவே, முஸ்லிம்களை அனுசரிக்க வேண்டிய பொறுப்பு கிழக்கு தமிழ் மக்களுக்குண்டு என்றவாறு வாதிடுவதும் அர்த்தமற்றதாகும். ஏனெனில், புலிகளின் சில செயற்பாடுகளை ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் தவறாக எவரும் கற்பனை செய்ய வேண்டியதில்லை. அது புலிகளின் பிரச்சினை – தமிழர்களுடையதல்ல. அவ்வாறு புலிகளின் சில தவறுகளை வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் தவறுகளாக முஸ்லிம்களோ அல்லது முஸ்லிம்களை சகோதரர்கள் என்று விழிக்கும் தமிழ் அறிவாளிகளோ கூற முற்படுவார்களாயின் இப்பத்தி அப்படியான வாதங்களை பெறுமதியழக்கச் செய்யும். புலிகள் செய்த தவறு தமிழ் மக்களுக்குரியதெனின், முஸ்லிம் தலைமைகள் செய்த தவறு முஸ்லிம் மக்களுக்குரியதாகும். வடக்கு கிழக்கில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம்களின் கையிலும் தமிழரின் இரத்தக்கறை உண்டு என்று இப்பத்தி வாதிடும். ஏனெனில், ராஜபக்‌ஷ அரசால் முன்னெடுக்கப்பட்ட கொடூர யுத்தத்தின் போது, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் அனைத்தும் ராஜபக்‌ஷவின் பங்காளிகளாக இருந்தனர். எனவே, முள்ளிவாய்க்காலில் இறந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் இறப்பில் முஸ்லிம்களுக்கு பங்குண்டு என்று வாதிட முடியாதா? வடக்கு கிழக்கில் தொழுகைக்காக குனியும் ஒவ்வொரு முஸ்லிம் தலைகளிலும் முள்ளிவாய்க்கால் இரத்தக் கறையுண்டு என்று வாதிட முடியாதா? வாதங்களை அடுக்கும் திறன் சிலருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல என்பதை சுட்டும் நோக்கிலேயே இப்பத்தி மேற்படி தர்க்கத்தை இங்கு பதிவுசெய்தது. முஸ்லிம்களின் அரசியல் அவர்களது நலனை முன்னிறுத்தியதாகவே அமைந்திருக்கும். அதில் ஆச்சரியப்பட, ஆதங்கப்பட ஒன்றுமில்லை. ஆனால், தமிழர்கள் தங்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி அரசியலை கையாளுகின்றனரா என்பதே கேள்வி? தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் நலன்களை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. அது முஸ்லிம் தலைமைகளின் பணி. அதனை அவர்கள் சிறப்பாகவே செய்து வருகின்றனர். ஆனால், தமிழ் தலைமை? முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது சொந்த மக்களுக்கு விசுவாசமாகவும் பயனுடைய வகையிலும் செயலாற்ற வேண்டும். கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒப்பீட்டடிப்படையில் தமிழர் அரசியல் வரலாற்றுடன் பரிச்சயப்படாதவருமான எம்.ஏ. சுமந்திரன் நாங்கள் முஸ்லிம்களுடன் மட்டும் சேர்ந்துதான் ஆட்சியமைப்போம் என்று தெரிவித்திருந்தார். சுமந்திரனுக்கு ஆகக் குறைந்தது மட்டு. அம்பாறை தமிழ் மக்களின் உணர்வுகள் கூட தெரிந்திருக்கவில்லை. சரி, அதனை விட்டாலும் கூட, சுமந்திரன் எதிர்பார்த்தது நிகழ்ந்ததா? சுமந்திரன் முஸ்லிம்களுடன் இணைந்துதான் நாங்கள் ஆட்சியமைப்போம் என்று குறிப்பிட்டது போன்றதொரு புரிதல் முஸ்லிம்களிடம் இருந்ததா? அவ்வாறிருந்தால், அவர்கள் கூட்டமைப்பை புறக்கணித்துவிட்டு ஆட்சியமைத்திருப்பார்களா? ஒருபுறம் பசீர் சேகுதாவுத் இருக்கின்ற காலத்தை பங்கிட்டுக் கொள்வோம் என்று கூறுகின்றார் – இன்னொரு புறம் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு முதல்வராக சத்தியப்பிரமாணம் எடுத்திருக்கின்றார். இப்போது சுமந்திரன் கிழக்கு தமிழ் மக்களுக்கு என்ன பதிலை சொல்லப்போகின்றார்? இந்தப் பின்னணியில் கூட்டமைப்பு, குறிப்பாக கிழக்கு தலைமை, கிழக்கு தமிழ் மக்களின் நலன்களை வெற்றிகொள்ளும் உபாயங்களை கண்டடைய வேண்டும். இல்லாவிட்டால் ஆகக் குறைந்தது 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை கூட, முழுவதுமாக அனுபவிக்க முடியாத நிலைமை தோன்றும். 13ஆவது திருத்தச்சட்டம் தமிழ் இளைஞர்களின் தியாகங்களால் உருப்பெற்ற ஒன்று. ஆனால், அதனால் கிடைக்கும் நன்மைகளைக் கூட கிழக்கு தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாத ஆபத்தான நிலைமை இன்று ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர்கள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா எத்தகைய கரிசனையை கொண்டிருக்கிறார்? வெறுமனே விளக்கமளிப்பதில் பயனில்லை. உபாயங்களைக் கண்டடைந்து அதனை மக்களுக்கு நன்மைதரத்ததக்க வகையில் பிரயோகிக்க வேண்டும்.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.