படம் | Associated Press/ Eranga Jayawardena, FOX NEWS
எப்பொழுதும் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மத்தியில்தான் போட்டியும் பொறாமையும் அதிகளவு இருக்கும் என எனது தாயார் அடிக்கடி சொல்லுவார். எங்களது உறவினர்கள் மத்தியில் ஏற்படும் சண்டை சச்சரவுகளைக் காலங்காலமாக அவதானித்து வந்த அறிவு அவருடையது. போட்டிகள் எப்பொழுதும் போட்டி போடக் கூடியவர்கள் என ஒருவர் மதிக்கும் நபர்களுடன்தான் ஏற்படும். உதாரணமாக, ஒரு சாதாரண மனிதன் தனது நாட்டு ஜனாதிபதியுடன் போட்டி போடத் துணியான். ஆனால், தனது நண்பனுடன், தனது சகோதரனுடன் தயங்காமல் போட்டியிடுவான். அருகில் வசிப்பவர்கள், எம்மைப் போல் அதே வலுவாற்றல் கொண்டவர்கள், நாம் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளக்கூடிய நிலையில் இருப்பவர்கள் இவர்களுடன்தான் எங்களுக்கு பொறாமைப் போட்டிகள் உருவாகலாம். கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவி தொடர்பாக ஏற்பட்டிருக்கின்ற துரதிஷ்ட நிலைமைகளுக்கும் இதுதான் காரணம். பின்னே, சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு சிங்களவர்கள்தானே நாட்டின் பிரதம மந்திரியாகவும் ஜனாதிபதியாகவும் இருக்கின்றார்கள். தமிழ் – முஸ்லிம் மக்களும் நாட்டின் தலைமைப் பதவிகளுக்கு வரக்கூடிய வகையில் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்று அவர்களுடன் சண்டைக்குப் போகின்றோமா? இல்லையே. அவர்களுடன் போட்டி போட எங்களால் முடியாது. எனவே, அவர்களோடு சண்டை பிடிக்க மாட்டோம். கிழக்கு மாகாணத்தில் சாதாரண மக்களிடம் போய்க் கேட்டுப் பார்த்தால், சிங்களவர்களோடு வாழலாம். ஆனால், முஸ்லிம்களோடு வாழவே முடியாது என்று தமிழர்களும், சிங்களவர்களோடு வாழலாம், ஆனால் தமிழர்களோடு வாழவே முடியாது என முஸ்லிம்களும் கூறுவது இதனால்தான். சிங்களவர்களோடு போட்டியே இல்லையே. அப்போ பிரச்சினை இருக்காதுதானே.
இரு சாராருக்கிடையில் ஒரு முரண்பாடு ஏற்படும்போது அது அனேகமாக அவரவர்களின் நிலைப்பாடுகளினால்தான் ஏற்படுகின்றது. “தமிழ் முதலமைச்சர் வேண்டும்” அல்லது “முஸ்லிம் முதலமைச்சர் வேண்டும்” என்பது ஒரு நிலைப்பாடாகும் (position). நிலைப்பாடுகள் தீர்க்க முடியாதவை. இந்த விடயத்தில் ஒரு முஸ்லிம் நபரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் அவர் நிச்சயமாக முஸ்லிம் முதலமைச்சர்தான் வேண்டும் என்பார். தமிழர் தமிழ் முதலமைச்சருக்குத்தான் வாக்களிப்பார். இதனை எப்படித் தீர்ப்பது? தவிரவும், நிலைப்பாடுகள் மக்களை சிந்திக்க விடமாட்டா. நிலைப்பாடுகளின் நிலையிலேயே இருந்தால் பேசுவது, அறிக்கை வெளியிடுவது எல்லாமே உணர்ச்சி மயமாகத்தானிருக்கும். கடைசியில் அது கைகலப்பில் போய்த்தான் முடியும். ஒவ்வொரு நிலைப்பாட்டிற்குப் பின்னாலும் சில தேவைகள் இருக்கின்றன. ஏன் இந்த முதலமைச்சர் கோரிக்கையை விடுகின்றனர் என ஆராய நாம் முற்பாட்டால் அந்நிலைப்பாட்டிற்குப் பின்னாலுள்ள தேவைகள் வெளியில் வரும். தேவைகள் தீர்க்கக்கூடியன, அவற்றை வைத்து எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தலாம். எனவே, தற்போதைய நிலைப்பாட்டின் பின்னாலுள்ள தேவைகள் என்னவென்று சிறிது பார்ப்போம்.
தற்போதைய மாகாண சபை முறைமையின்படி ஒரு மாகாணத்தின் முதலமைச்சருக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லையென்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து ஒன்றும் செய்ய முடியவில்லை என மக்களுக்குக் கையை விரித்ததுதான் மிச்சம். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ். மாவட்டத்தின் விதவைகள் அமைப்பான அமரா வலையமைப்பினர் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தமது பிரச்சினைகளும் கோரிக்கைகளும் அடங்கியதொரு மனுவினைக் கையளித்து விட்டுக் காத்துக் கிடந்தார்கள். அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கக்கூட அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கடைசியாக ஆற்றாமையினால் கடந்த டிசம்பர் மாதம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்றனர். அந்தக் கடைசி நேரத்திலும் உடனேயே அவர்களுக்கு ரூ 10 லட்சம் அவர்களுடைய அவசர வாழ்வாதாரத் தேவைகளுக்காக அவர் ஒதுக்கித் தந்தார். இப்படி ரூ 10 லட்சம் கூடக்கொடுக்க முடியாத, அதற்கு ஒன்றும் செய்ய முடியாத முதலமைச்சர் பதவிக்கா அடிபிடிப்படுகின்றது கூட்டமைப்பு? முதலமைச்சர் பதவியினால் என்னதான் இலாபம் பெற முயல்கின்றது?
கூட்டமைப்பின் மாகாண சபை அரசியல்வாதிகளுக்கு தாமும் வரி விலக்கு வாகனங்கள் சகிதம் அதிகாரத்துடன் உலா வரும் அவா முதல் தேவையாகும். முஸ்லிம்கள் இரண்டு வருடங்கள் இருந்தால் போதும் இனி எங்களுக்கு விட்டுத் தரவேண்டும் என்கின்ற கூற்று அத்தேவையிலிருந்துதான் ஆரம்பிக்கின்றது. அத்துடன், முஸ்லிம்கள் அமைச்சுப் பதவிகளை எடுத்திருக்கின்றார்கள். எனவே, மாகாண சபையினை தமிழர்களுக்கு விட்டுத் தரவேண்டும் என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக அவர்களைப் பேச வைக்கின்றது. மத்திய அரசில் அமைச்சுப் பதவிக்கும் மாகாண சபையில் அமைச்சுப் பதவிக்கும் ஒரு தொடர்பும் இல்லையாகும். கூட்டமைப்பு ஏனைய கட்சிகளைக்கொண்டு ஆட்சியமைக்க ஏதுவாக இருந்தால் அதற்கு யாரும் தடை போட முடியாது. ஆனால், அப்படி ஆட்சியமைக்க முடியாது, இதில் நீதி நியாயம் பார்க்க வேண்டுமெனில் இப்படிக் கேட்கலாமே. ஏன், அதற்கு முன்பு பிள்ளையான் ஆட்சி கிழக்கு மாகாணத்தில் நடக்கவில்லையா? அவருடைய ஆட்சியும் கூட ராஜபக்ஷ தயவினால்தானே ஏற்படுத்தப்பட்டது? அக்காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள் பதவியுடனும் பட்டாடோபத்துடனும் இருந்தவர்கள்தானே? ஒரு தமிழர் அப்போது முழுக்காலமும் பதவி வகித்தால் இப்பொழுது முஸ்லிம்கள் இந்த பதவிக்காலம் முழுவதும் பதவி வகித்தால் என்ன என்று தான் எதிர்க்கேள்வி போட வேண்டும். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் போனவுடன் அடுத்த பிரச்சினையைத் தூக்கிப் போடுகின்றனர். இதுவரை மாகாண சபையின் கீழுள்ள பதவி நியமனங்களெல்லாம் முஸ்லிம் சமூகத்தினருக்கே போயிருக்கின்றன, அபிவிருத்தித் திட்டங்களும் அவர்களுக்கே செய்யப்பட்டிருக்கின்றன, இந்நிலையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் அந்தப் பிரச்சினையாகும்.
ஓர் முஸ்லிம் அரசியல் தலைமைக்குக் கீழ் அபிவிருத்தியின் நன்மைகளெல்லாம் முஸ்லிம் சமூகத்தினருக்கே செல்கின்றது என்பது ஒரு பாரதூரமான பிரச்சினையாகும். ஆனால், அதற்காக இப்பொழுது ஒரு தமிழ் அரசியல் தலைமைத்துவம் ஆட்சியிலேறி இனி தமிழ் மக்களுக்கு நன்மைகளைத் தூக்கிக் கொடுக்க வேண்டும் என்பது அப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாகாது. பொது மக்களுக்குச் செல்லவேண்டிய நன்மைகளை, தகுதியானவர்களுக்கு செல்ல வேண்டிய பதவிகளை, அரசியல் தலைவர்கள் தமது இனத்தவர்களுக்கும் வேண்டப்பட்டவர்களுக்கும் கொடுப்பது ஒரு நாகரிகமற்ற காட்டுமிராண்டிச் செயலாகும். இங்கு, அந்த அடிப்படைப் பிரச்சினையை மாற்றுவதே எங்களது அணுகு முறையாக இருக்க முடியும். இப்பிரச்சினையை ஓர் குறுகிய கால அடிப்படையிலும் பின்னர் ஒரு நீண்டகால அடிப்படையிலும் நாம் தீர்த்துக்கொண்டு போகும் தேவையிருக்கின்றது. குறுகிய கால அடிப்படையில் தீர்வு பெறுவதற்காக, இப்போதுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் இந்தப் பிரச்சினையைத் தெளிவாகவும் திறந்த முறையிலும் விவாதிக்க வேண்டும். இதுவரை இரண்டு வருட காலங்களாக கிடைக்கப்பெற்ற பதவிகளும் திட்டங்களும் யாருக்குச் சேர்ந்தன என்பது பற்றிய புள்ளி விபரங்களுடன் இப்பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும். எழுந்தமானமாக பொதுப்படையாகக் குற்றச்சாட்டுக்களை வீசுவது ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகளுக்கு இட்டுச் செல்லாது. அதனால்தான் எந்த சந்தர்ப்பத்திலும் சரியான புள்ளி விபரங்கள் அவசியமாகும். தமிழ் மக்களுக்கும் நாட்டின் அபிவிருத்தியில் பங்கிருக்கின்றது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். அப்படியானால் பாகுபாடுகளின்றி அவர்களும் நன்மைகளைப் பங்கு போட்டுக்கொள்வதற்கு என்னென்ன கொள்கைகளை கிழக்கு மாகாண சபை அனுசரிக்க வேண்டும் என்பது பற்றி பேசலாம். இது எவருமே ஏற்றுக்கொள்ளக்கூடிய, இலகுவில் தீர்க்கக்கூடிய பிரச்சினையாகும்.
அடுத்து நீண்டகால அணுகுமுறையில் வேலைக்கு இறங்க வேண்டும். தற்சமயம் எமக்குள்ள தேர்தல் முறையானது இனரீதியான பிரதிநிதித்துவங்களையே ஆதரிக்கும் முறைமையாகும். வாக்காளர்களை அவரவர் இனங்களுக்குள் சிறைப்பிடித்து வைத்தாகி விட்டது. விரும்பினாலும் அதனை விட்டு அவர் வெளியே வரமுடியாது. இந்த நிலையில், இனவாதம் பேசி, தமது இனத்தவர்களுக்கே சலுகைகளெல்லாம் வழங்குவதில் அரசியல்வாதிகளுக்கு நிரம்ப இலாபம் உண்டு. இப்படித்தான் அவர்கள் தங்களுக்கான வாக்கு வங்கிகளைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இனங்களுக்கான பிரதிநிதித்துவம் வேண்டும்தான். ஆனால், அந்தப் பிரதிநிதித்துவமே ஏனைய இனங்களுக்கெதிரான அராஜகமாக மாறக்கூடாது. இதுதான் எமது நோக்கமாக இருக்க வேண்டும். பல நாடுகளில் இதற்குப் பல்வகையான தீர்வுகளைக்கொண்டு வந்திருக்கின்றனர். ஒரு தீர்வானது, எந்த இன அடிப்படையிலான கட்சியும் தனியே ஆட்சியமைக்க முடியாது என்பதாகும். அது ஏனைய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் சேர்ந்தால்தான் ஆட்சியைக் கைப்பற்றலாம். பெல்ஜியத்தில் இவ்வகை போன்ற கட்டமைப்பு இருக்கின்றது. பல்லினங்கள் வாழ்கின்ற சில ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் தொகுதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் ஏறக்குறைய சம அளவில் வாழும் பிரதேசங்களை இணைத்த தொகுதிகளாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இங்கு போட்டியிடும் அரசியல்வாதிகள் கட்டாயமாகவே பல இனங்களுடைய ஆதரவினைப் பெற்றால்தான் வெல்லலாம். அவ்வாறு ஒரு இனத்தவர் வென்றால், அப்பிரதேசத்தில் வாழும் மற்றைய இனத்தவருக்கான பிரதிநிதித்துவமாக அந்த இனத்தில் அடுத்த வெற்றிவாக்குகளைப் பெற்ற போட்டியாளர் தெரிவு செய்யப்படுவார். இந்த முறையில் இனத்துவ பிரதிநிதித்துவம் வழங்கப்படும் அதே வேளையில் அரசியல்வாதிகள் எல்லோருக்குமாகவும் கடமை புரிய நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இப்படி ஆராயப் போனால் எண்ணிறந்த தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம். அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு நாம் புதிய விழுமியங்களுடன் புதிய சிந்தனைகளுடன் செல்லும் மக்களாக மாற வேண்டும். இப்பொழுது அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கு ஏதுவான காலமாகிறது. தேர்தல் முறைமைகளில் இவ்விதமான சீர்திருத்தங்களையும் கொண்டுவர வேண்டுமென்று நாம் கோரிக்கை விடுகின்றகாலமும் இதுவாகும்.
தாம் எதிர்நோக்கும் ஒவ்வொரு சவாலிலும் உள்ளார்ந்த பிரச்சினைகளை இனம் காண்பதும், அவற்றிற்கான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதும்தான் ஒரு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் பண்பாகும். தாம் எடுக்கும் எந்த நிலைப்பாடும் இனபேதங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் இட்டுச் செல்கின்றதெனில், அது எதுவாக இருந்தாலும் அதனை உடனடியாகத் தவிர்க்க வேண்டுமேயொழிய அதனை வைத்து மென்று அரைப்பது ஒரு நாட்டின் மக்களின் எதிர்காலத்தினையே பாழடிக்கும் நடவடிக்கையாகும். தமது வரலாற்றின் அடிப்படையில், இலங்கைச் சமூகத்தில் தமது நிலைமையின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனை மாற்றுவது மாற்றாதது அவர்களின் முடிவாகும். அதனை மதித்துச் செல்லும் வகையில் தமிழ் மக்களுக்கு ஒரு பண்பான தலைமைத்துவத்தினைக் கொடுப்பது எமது அரசியல் தலைவர்களின் கடமையாகும். தமிழ் முதலமைச்சர் வேண்டும் எனப் பதற்றப்படும் கிழக்கு மாகாண மக்கள் முதலில் தமது கட்சியான கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினைப் பற்றித்தான் கவலை கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.
அக்கட்சி தன்னை ஒரு பண்புத்தரம் வாய்ந்த முதிர்ந்த கட்சியாக உருவாக்குவதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றது? கிரமமாக கட்சி உறுப்பினர்களுடன் சந்தித்து எமது சமூகத்தினதும் அரசியலினதும் அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றிக் கலந்துரையாடுகின்றார்களா? ஒரு பல்லின சமூகத்தில் ஜனநாயகக் கட்டமைப்புக்களை எவ்வாறு வலுப்படுத்தலாம் என வேறு நாடுகளின் அனுபவங்களைத் தமது கட்சித் தொண்டர்களுடன் பகிர்ந்துகொண்டு அவர்களின் கருத்தாடல்களை ஆழப்படுத்துகின்றார்களா? இனங்களின் ஒற்றுமைக்கான என்ன அரசியல் கல்வி நடவடிக்கைகளைத் தமது கட்சிக்குள்ளும் கிழக்கு மாகாண சமூகத்தினர் மத்தியிலும் அவர்கள் மேற்கொள்ளுகின்றனர்? ஒன்றுமேயில்லை. இந்த விடயத்திலும் சிங்கள அரசியல் தலைவர்களிடம் முறையிடச் சென்று எமது மானத்தை இழந்ததுதான் நடந்தது. அந்த ஒரு நடவடிக்கையிலேயே எமது சிங்கள ஆட்சியாளர்களுடனான எமது அதிகார உறவு முறையில் குறையேற்படச் செய்து விட்டோமே. இப்படியே போனால் இனவாதம் பேசித்தான் தமது அரசியலையும் அவர்கள் கொண்டு போக வேண்டி வரும். அப்படியான அரசியலைத் தொடர்ந்து தொடர்ந்து செய்வதற்கு தமிழ் மக்கள் ஒத்துக்கொள்கின்றனரா?
தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.