படம் | WORDPRESS

ராஜபக்‌ஷ ஆட்சியின் வீழ்ச்சியானது பல புதிய ஆரம்பங்களுக்கு நம்பிக்கைச் சமிக்ஞை காட்டியுள்ளது. இந்த நம்பிக்கைகளுள் ஒன்றுதான் போர்க் காலகட்டத்தில், குறிப்பாக யுத்தத்தின் இறுதி மாதங்களிலே முன்னெப்போதுமிருந்திராத அளவிலான காட்டுமிராண்டித்தனத்தின்போது மனித உரிமைகள் மற்றும் யுத்தவிதிகளின் மீறுதல்கள் பற்றி இப்போதாவது நாடு நம்பத்தகுந்த அளவுக்கு உள்நாட்டிலே கவனத்திற்கொள்ளும் என்பது. ஜனாதிபதி சிறிசேனாவின் தேர்தல் பரப்புரையின்போது அவரும் அவரது கட்சியினரும் சர்வதேச பொறுப்புக்கூறலுக்கான மாற்றீடாக உள்ளூர் பொறிமுறை பற்றி பேசி வந்திருந்தாலுங்கூட, அத்தகைய பொறிமுறையின் தன்மை, அதன் இலக்கு போன்றவற்றைப் பற்றி வாய் திறக்கவேயில்லை. தமிழர்களுக்குத் தகுந்த ஈடாக எதையுமே வழங்காமல் சர்வதேச அழுத்தத்தை அரசு தவிர்த்துக்கொள்ள முயற்சிப்பதாகப் பல தமிழர்கள் அச்சம் கொண்டிருந்தனர். நல்லிணக்க ஆணைக்குழுவின் மன்னிப்புக்கேட்டல் மற்றும் மன்னித்தல் ஆகியவற்றை நோக்கியதான அணுகுமுறையின் ஏற்புடைத் தன்மைபற்றி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சுருக்கமாகத் தெரிவித்தபோது அவர் தென்னாபிரிக்க மாதிரியை மேற்கோள்காட்டுவது போலத் தென்பட்டார். ஆனால், புதிய நிர்வாகத்திலே செல்வாக்குமிக்க செயற்பாட்டாளர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மங்கள சமரவீர போன்றவர்கள் விடுத்த தொடர் அறிவிப்புக்கள் புதிய அரசில் ஒரு சிலராவது உள்ளூர் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்ய கணிசனமான ஆதரவைச் சுட்டிக்காடுவது போலத் தென்படுகிறது.

எனவே, நீதிபற்றிக் கரிசினை கொண்டுள்ள செயற்பாட்டாளர்களுக்கு உள்ள சவால் எதுவெனில், இந்தத் துறையிலே புதிய அரசுடன் எவ்வகையில் திறம்பட இடைப்படவேணடும் என்பதாகும். புதிய நிர்வாகத்துக்கு இடைவெளியையும் ஆதரவையும் வழங்குவது பற்றி ஒருவித விருப்பம் இருந்தாலுங்கூட, அரசு தான் கூறும் உறுதிமொழிகளின் நிறைவேற்ற முன்னேற்றத்தை மதிப்பாய்வதற்கான நிபந்தனைகளை இனங்காண்பதற்கான தேவை அதைவிட முக்கியமானதாக உள்ளது. உள்ளூர் செயன்முறைகளை நடாத்துவதற்கு இலங்கை அரசுக்குக் காலக்கிரமமும் இடைவெளியும் வழங்கவேண்டுமேயாயின் வலியுறுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் எவை என்பதை இந்தக் கட்டுரையிலே வகுத்திருக்கிறேன்.

சட்டவரம்பு மற்றும் நிறுவனக் கட்டமைப்பு

இலங்கையின் குற்றவியல் சட்டக்கோவையானது மனுக்குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் யுத்தக் குற்றச்செயல்கள் ஆகியவற்றுக்கு வழக்குத்தாக்கல் செய்வதற்குப் பொருத்தமற்றது.

விசாரணைகளூடாகக் கடந்த காலத்தைக் கையாள்வதற்கான நடைமுறையிலே இறங்குவதற்கு இலங்கை மூன்று சர்வதேச சட்டவரைபுகளை இனங்கண்டு அவற்றைச் செயற்படுத்தவேண்டும்: அவையாவன, யுத்தக் குற்றச்செயல்கள், மனுக்குலத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் இன அழிப்பு. தற்போது இத்தகைய சர்வதேச குற்றச்செயல்கள் அடிப்படையான உள்ளூர் குற்றங்களான கொலை, கற்பழிப்பு, காயப்படுத்துதல் போன்றவற்றினால் மாத்திரமே நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தப்பட முடியும். இந்த உள்ளூர் குற்றச்செயல்கள் திட்டமிட்டுச் செயற்படுத்தப்படும் சர்வதேசக் குற்றச்செயல்களின் மட்டத்தையும் பாரதூரத் தன்மையையும் பிரதிபலிக்கமாட்டாது. உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளிலே தேசிய நாடாளுமன்றங்கள் சர்வதேச குற்றவியற் சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. தனது உள்ளூர் நடைமுறைகள் நீதியை அடைந்தெய்திடப் போதுமானதெனக் கோரமுன்பதாக இலங்கையும் அதேபோலவே சர்வதேசக் குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

நீதியைப் பரிபாலிப்பதற்கான இலங்கையின் நிறுவனக் கட்டமைப்பும் சர்வதேசக் குற்றச்செயல்களைக் கையாள்வதற்கான பொருத்தப்பாட்டிலே குன்றிய நிலைமையே காணப்படுகிறது. இந்தக் குற்றச்செயல்களை வழக்குத்தொடுப்பதற்கு சர்வதேச சட்டத்தைக் கைக்கொள்வதிலே பயிற்சிபெற்ற சட்டத்தரணிகள், அவ்வாறே பயிற்றப்பட்ட நீதிமன்றப் பணியாளர்கள், ஆயிரக்கணக்கான ஆவணங்களை முறைப்படுத்துவதற்கு இயலுமாயுள்ள நிர்வாகத்தொகுதி ஆகியவை தேவை. இந்த முன்தேவைகள் ஒருபுறம் இருக்க, இலங்கையின் நீதிமன்றத் தொகுதியிலே நீடித்துநிலைநிற்கும் குன்றிப்போன வினைத்திறனின் பின்புலத்திலே, சிக்கலான குற்றச்செயல்களுக்கான வழக்குகள் இந்தக் குற்றச்செயல்களை விசாரிக்கவென நிறுவப்படும் விசேட மன்றத்தாலேயே கூடும். மேலும், ஒரு விசேட அல்லது சுயாதீன குற்றத்தாக்கல் அலகு அல்லது அலுவலகம் நிறுவப்படவேண்டும் – ஆரம்ப கட்டத்திலே சர்வதேச குற்றச்செயல்கள் வழக்குத் தாக்கல்களிலே முன் அனுபவம் கொண்ட சட்டமா அதிகாரியின் திணைக்களத்துச் சட்டத்தரணிகள் பணிக்கமர்த்தப்படலாம். ஆயினும், ஈற்றிலே வெளிப்படையான பணிக்கமர்த்தல் நடைமுறைகள் இருக்கவேண்டும். அதேபோல, தனித்த ஒரு திணைக்களமாகவோ அல்லது பொலிஸ் திணைக்களத்தினுள் ஒரு அலகாகவோ விசேட விசாரணை அலகொன்றும் நிலைநாட்டப்படவேண்டும்.

வழக்குத்தொடுத்தல் கொள்கை

கடந்த காலத்திலே இடம்பெற்ற கொடூரக் குற்றச்செயல்களை வழக்குத்தொடுப்பதிலே இலங்கையின் வரையறுக்கப்பட்ட முயற்சிகள் பெரும்பாலும் திடனுள்ளதாக இல்லை. ஏனெனில், வழக்குத் தொடுப்புக்கள் அந்தக் குற்றச்செயல்களுக்குப் பெரும் பொறுப்பை ஏற்கும் சிரேஷ்ட தலைவர்களை விட்டுவிட்டு கீழ்மட்டத்து அலுவலர்களுக்கு எதிராகத் தொடுப்பதிலேயே நோக்கக்குவியம் கொண்டிருந்துள்ளது. சிரேஷ்ட மட்டத்துப் படை அதிகாரிகள் பல நூற்றுக்கணக்கான கொலைகள், கற்பழிப்புக்கள் மற்றும் காணாமற்போதல்கள் ஆகிவற்றுக்குப் பொறுப்பானவர்களாக இருந்திருக்க, கிரிஷாந்தி குமாரசாமியின் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு விசாரிப்பிலே அடிமட்டத்து அலுவலரான கோப்ரல் ராஜபக்‌ஷவுக்கு எதிராக மட்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை இப்படியான போக்குக்கு ஒரு உதாரணமாகும். உயர்மட்டத்து அலுவலர்களின் தண்டனையின்மையை வலியுறுத்திக்காட்டுவதாய் இருக்கும் இந்த நிஜநிலைமை கவனத்திற் கொள்ளப்படவேண்டும். எனவே சட்டமா அதிபர், சர்வதேச நிபுணர்கள், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராயல அலுவலகம், குடிசார் சமூகக் குழுக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு வழக்குத் தொடுப்புக் கொள்கை ஒன்றை அரசு வகுத்திடவேண்டியது அத்தியாவசியமானதாகும். அத்தகைய வழக்குத் தொடுப்புக் கொள்கையானது குற்றச் செயல்களுக்கு மிகவும் பொறுப்பாக உள்ள சிரேஷ்ட தலைவர்களை வழக்குத் தொடுக்கும் அர்ப்பணத்தை உள்ளடக்கியதாய் இருக்க வேண்டும்; ஆயுத மோதலின் இருதரப்பாரையும் வழக்குத் தொடுக்கும் அர்ப்பணம்; அத்துடன் கண்காணிப்பின்கீழ் குற்றச் செயல்களை ஈடுபடுத்தும் பிரதிநிதிகளின் குற்றச்செயல்களை வழக்குத் தொடுக்கும் அர்ப்பணம் ஆகியவையும் உள்ளடங்க வேண்டும். வழக்குத் தொடுக்கும் உபாயத்திட்டத்தை வரையறுக்கும் ஒரு இணக்கப்பாட்டு ஆவணமானது எழுந்தமானமான மற்றும் அரசியல் நோக்கங்களால் உந்தப்பெற்ற வழக்குத் தொடுப்புத் தெரிவுகளை மேற்கொள்வதைத் தவிர்ப்பதிலே அர்ப்பணத்தை அடையாளப்படுத்தி, அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாத வழக்குத் தொடுப்பினைக் காப்பாற்ற உதவிசெய்து, சர்வதேச ஆதரவையும், உதவியையும், இயல்பூட்டத்தையும் ஊக்குவித்திடும்.

இலங்கை அரசு சர்வதேச விசாரணையை ஆதரிக்காவிட்டாலுங்கூட, அவர்களின் தொழில்நுட்ப ஆதரவைப் பெறுவதற்கும், அதன் உள்ளூர் விசாரணையிலே பங்கேற்கும்படிக்கு வெளிநாட்டு நீதியரசர்களை உள்ளடக்குவதற்கும் திறந்தமனம் கொண்டுள்ளது என்பதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர ஏற்கெனவே தெரிவித்துள்ளார். அவரது கருத்துகள் அரசின் கொள்கையைப் பிரதிபலிப்பதாக இருக்குமேயாயின், அது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில், உலகெங்கிலும் அண்மைக் காலங்களிலே இடம்பெற்ற உள்ளூர் விசாரணைகளிலே சர்வதேசத்தினரின் ஈடுபாடானது அதன் நம்பகத் தன்மை, வினைத்திறன் மற்றும் தராதரம் ஆகியவற்றை உயர்த்திட உதவியுள்ளது. இத்தகைய சர்வதேச உதவிகள் காணாமற்போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச ஆலோசகர்களின் வகிபங்குடன் ஒப்பிடுகையில் அடிப்படையான வேறுபாட்டைக் கொண்டிருக்கும். சர்வதேச அலகைகொண்ட நீதிமன்றங்கள் அண்மைய காலங்களிலே கம்போடியா, சியேறா லியோன், கிழக்கு தீமோர் மற்றும் பொஸ்னியா ஆகிய நாடுகளிலே அமைக்கப்பட்டிருப்பதானது பல்வேறு வகைப்பட்ட மாதிரிகளை வழங்குவதால், அதிலிருந்து இலங்கை தனக்கான தெரிவை மேற்கொள்ள இடமுண்டு. இறுதியாக, சர்வதேச அவதானிப்புக்கள் – அரசுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் அவதானிப்புகள் செயன்முறையின் நேர்மைத்தன்மையைப் பரிசீலித்திட உதவும்.

பாதிப்புற்றோர் மற்றும் சிவில் சமூகத்தின் ஈடுபாடு

விசாரணை மற்றும் தீர்ப்புச் செயன்முறைகளிலே பாதிப்புற்றோரின் ஈடுபாடானது நெருக்கத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதிலே மிக முக்கிய பங்கை வகிக்கும் என்பது திண்ணம். இலங்கையிலே ஏலவே உள்ள சட்டத்தொகுதியானது இவ்வகையிலே மிகவும் குறைபாடுள்ளது. சீர்திருத்தத்தைப் பொறுத்தவரைக்கும் நல்லதொரு ஆரம்பம் எதுவெனில், பாதிப்புற்றோர் மற்றும் சாட்சிகள் சட்டமொன்றை வரைந்து அதை அமுல்படுத்துதல் ஆகும். ஆயினும், பாதிப்புற்றோரை செயன்முறைகளிலே ஈடுபடும் பயணப் பங்காளிகளாக உண்மையிலேயே இணைத்துக்கொள்வதற்கு வெறும் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை விடவும் அதிகமானதை அவர்களுக்கு வழங்கவேண்டும். குறிப்பாக இரண்டு தெரிவுகள் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்: முதலாவது – பாதிப்புற்றோருக்காக ஆஜராகும் சட்டத்தரணிகள் சாட்சிகளை முற்படுத்திட, சாட்சிகளைக் குறுக்குவிசாரணை செய்ய மற்றும் சட்டம் மற்றும் நடைமுறை ஆகிய விடயங்களிலே மன்றத்திலே பேச உரிமை வழங்குவதன்மூலம் அவர்கள் விசாரணைகளிலே நேரடியாகப் பங்குபற்றச் செய்யவேண்டும், இரண்டாவதாக – பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்செயல் விசாரணை முறைமையூடாக குற்றவாளிகளுக்கு எதிராக இழப்பீடு கோருவதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும்.

விசாரணை முறையமையன்று நம்பகத்தன்மை கொண்டதாய் இருப்பதற்கு, விசாரணைகளிலே சிவில் சமூகம் பிரதானமான வகிபங்கை வகிக்கவேண்டும். குடிசார் சமூகக் குழுக்களும் வலையமைப்பும் எண்பிக்கும் சான்றுகளை சேகரித்துத் திரட்ட வேண்டும்; சட்டங்கள் மற்றும் நிறுவனக் கட்டமைப்புக்களின் அமுலாக்கம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றிலே அவர்கள் உள்ளீடுகளை வழங்கவேண்டும்; விசாரிப்பு மற்றும் வழக்குத் தொடுப்பு அதிகாரிகளுடன் இடைப்படும்படியாக பாதிப்புற்றோர்களையும் சாட்சிகளையும் அணிதிரட்டவேண்டும்; பாதிப்புற்றோர் சமூகங்களுக்குச் சட்டத்தொகுதியின் எண்ணப்போக்குகளை விளக்க வேண்டும்; அத்துடன், விசாரணை நடைமுறை மற்றும் நீதிமன்றத்தீர்ப்பு ஆகியவற்றின் முன்னேற்றங்களைக் கண்காணிக்க வேண்டும். பல்தரப்பட்டதும் சவாலுள்ளதுமான வகிபங்குகளை வகிப்பதற்கு உள்ளூர் சிவில் சமூகத்தை ஆயத்தப்படுத்தும் முன்னேற்பாடாக அதுபற்றிய பயிற்சிகளும் இயல்பூட்ட நிகழ்ச்சிகளும் இன்றியமையாததாகும். இந்தப் பயிற்சியானது பிரதானமாக சர்வதேச குற்றவியல் சட்டம் மற்றும் நிலைமாற்றக்கட்டத்து நீதி ஆகியவற்றிலே, குறிப்பாக சான்று சேகரித்தல், கண்காணித்தல் மற்றும் விசாரணைத் தீர்ப்புக்காகப் பரிந்துபேசும் திறமைகள் போன்றவற்றிலே நோக்கக்குவியம் கொண்டதாயும் இருக்கவேண்டும்.

முடிவாக,

இலங்கையின் புதிய அரசானது உள்ளூர் விசாரணை முறை பற்றிய ஒரு தரிசனத்தை விதைந்துரைத்தமையானது தேர்தல் பரப்புரைகளிலே கூறியவைகளிலே விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக உள்ளது. ஆயினுங்கூட, பொறுப்புக்கூறல் பற்றிய விடயத்தை நம்பகத்தன்மையான முறையிலே கவனத்திற் கொள்வதிலே இலங்கை தொடர்ந்து காட்டிவந்த விரும்பமின்மையும் அதன் இயல்பீனமும் சரிப்படுத்த பாதிக்கப்பட்டோர் தமக்கான நீதிக்கெனக் கோரும் கோரிக்கைகளைக் கவனத்திற் கொள்வதிலே புலப்படத்தக்க அர்ப்பணங்களையும் முன்னேற்றத்தையும் இலங்கை அரசு காண்பிக்கவேண்டும். இலங்கை அரசானது சர்வதேச நீதியை தூரப்படுத்திடும் உரிமையைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டுமேயானால் பாதிப்புற்றோருக்கான நீதியை உள்வீட்டிலேயே வழங்கிட விருப்பமும் இயல்பும் தனக்கு இருப்பதை அது நிரூபிக்க வேண்டும்.

நிறான் அங்கிற்றல்