படம் | ஷெஹான் குணசேகரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொழும்பில் உடைக்கப்படும் வீடுகள்.

இனப் பிரச்சினை தீர்வு என்பதை விட இனப் பிரச்சினையை வைத்துக் கொண்டு கட்சி அரசியலையும் ஆட்சி அதிகாரத்தையும் தக்கவைக்கின்ற செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசிடம் மாத்திரமல்ல இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் பதவியில் இருந்த அரசுகளிடம் இந்த பண்பை காணமுடியும். அபிவிருத்தி என்ற பெயர் பலகையுடன் ஆட்சிக்கு வருகின்ற கட்சிகள், குறிப்பாக ஜனாதிபதிகள் மக்களின் வாழ்க்கையில் எற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பாக சிந்தித்ததாக இல்லை. மக்கள் அபிவிருத்தி என்ற பெயரில் உயர்குடிமக்கள், முதலாளிகள், அரசியல் செல்வாக்கு உடையவர்கள், அமைச்சர்களின் ஆதரவாளர்கள், உறவினர்கள் ஆகியோரின் சுகபோக வாழ்கைக்கான ஏற்பாடுகள் மாத்திரமே இடம்பெறுகின்றன.

வெவ்வேறு பிரச்சினைகள்

ஆணைப்பசிக்கு சோளப் பொரிபோல் சாதாரண குடிமக்களின் பசியைத் தீர்க்க அவ்வப்போது ஏதோ வீசப்படுகின்றன. இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு அப்பால் வடக்கு – கிழக்கு உள்ளிட்ட 25 மாவட்டங்களிலும் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் உண்டு. அவற்றில் சுகாதாரம், குடிநீர், வீட்டுவசதி பிரச்சினைகள் முக்கியமானதாகும். மக்களின் அடிப்படை வாழ்வுக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் என்ற மூன்று அம்சங்களும் சரியான முறையில் பூர்த்தி செய்யப்படுகின்றதா என்பது கேள்வியாகும். வரவு – செலவுத்திட்ட அறிக்கையில் அபிவிருத்தி வளர்ச்சிகள் தொடர்பாக காண்பிக்கப்பட்டிருக்கும் வளர்ச்சி வீதங்கள் தொடர்பான சந்தேகங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த வருட அறிக்கைகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது புள்ளிவிவரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் இருப்பதையும் அவதானிக்கலாம்.

உதாரணமாக கடந்த ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கை ஒன்றில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், கடந்த நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வரவு – செலவுத்திட்ட அறிக்கையில் பொருளாதார வளர்சசி வீதம் 7 சதவீதம் என்றும் – இது கடந்த 2012ஆம் ஆண்டை விட இரண்டு சதவீத வளர்ச்சி என்றும் – கூறப்பட்டிருந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார நிபுணர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன், ஒவ்வொரு அமைச்சுகளும் தங்களுடைய அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையும் மத்திய வங்கியின் அறிக்கைக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இவ்வாறான முரணான அறிக்கைகளினால் மொத்தத் தேசிய உற்பத்தி பற்றியும், சாதாரண மக்களின் பங்களிப்புடன் பெறப்பட்ட உள்ளூர் வருமானங்கள் குறித்தும் சரியாக அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தரவுகள் தகவல்கள்

தரவுகள், தகவல்கள் எதற்காக மூடி முறைக்கப்படுகின்றன என்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கு ஆளும்தரப்பு மாத்தரமல்ல எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய தேசிய கட்சியும் பொறுப்புக் கூறியதாக வேண்டும். ஏனெனில், அவர்களும் ஆளும் கட்சியாக இருந்தவர்கள். 1978ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை 17 வருட ஆட்சியின்போது ஐக்கிய தேசிய கட்சி அரசும் முன்வைத்த அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாகவே இருந்தன. ஐக்கிய தேசிய கட்சி அரசில் நிதியமைச்சராக இருந்த அமரர் றொனிடிமெல், சந்திரிக்கா அரசில் கட்சிமாறி அமைச்சுப் பதவியை ஏற்றபோது ஐக்கிய தேசிய கட்சி அரசில் முன்வைக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி பற்றிய சில தகவல்கள் தவறானவை என்று கூறியிருந்தார். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் 11 வருடங்கள் நிதியமைச்சராக இருந்த ஒருவர் அவ்வாறு கூறும்போது அரசு பற்றிய நம்பகத் தன்மைகளில் கேள்விகள் எழுகின்றன.

அதேவேளை, 2014ஆம் ஆண்டுக்கான ஜூலை மாதம் வரையான மத்திய வங்கியின் இடைக்கால அறிக்கையில் 180 மில்லியன் அமெரிக்க டொலர் மிகுதி வருமானமாக கிடைக்கவுள்ளது என்றும் – இதனால் இலங்கையின் வெளிநாட்டு நிதியிருப்பில் பற்றாக்குறை ஏற்படாது என்றும் – கூறப்பட்டுள்ளது. இந்த நிலை காரணமாக ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டில் கடந்த ஆறுமாத காலத்தில் பெறப்பட்ட கடன், அதற்கான வட்டிவீதம் பற்றி அந்த அறிக்கையில் விபரங்கள் இல்லை. ஆகவே, அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றிய தரவுகள், தகவல்கள் சரியானவையாக இல்லை என்பது தெரிந்த நிலையில் சாதாரண மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை எந்த அடிப்படையில் நோக்குவது? மக்களின் சொந்த முயற்சி, வெளிநாட்டில் உள்ள உறவினர்கள் அனுப்பும் பணம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வடக்கு – கிழக்கு மக்கள் தங்கள் வாழ்வில் கணிசமான அளவு முன்னேற்றத்தை காண்கின்றனர். மத்திய கிழக்கில் பணியாற்றும் பெண்களின் வருமானத்தை அடிப்படையாக் கொண்டு தென்பகுதியில் சில குடும்பங்கள் தங்கள் வாழ்வின் தரத்தை குறைந்தளவு மட்டத்தில் உயர்த்தியுள்ளன.

மொத்தத் தேசிய உற்பத்தி வருமானம்

ஆனால், மொத்தத் தேசிய உற்பத்தி வருமானமும் அந்த வருமானத்தை கொண்டு சாதாரண கிராம மக்களின் வாழ்வில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் குறித்த விபரங்கள் சரியானவையாக இல்லை. மொத்தத் தேசிய உற்பத்தி ஒவ்வொரு கிராமங்களிலும் சரியாக கணிப்பிடப்படுவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்கா நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கூறியிருந்தார். ஆகவே, கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் இல்லை என்பது வெளிநாட்டு கடன்கள் மூலமான வருமானத்தை கொண்டே மொத்தத் தேசிய உற்பத்தியும் கணிக்கப்படுகின்றது என்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையில், சீனாவின் உதவியுடன் கொழும்பு துறை முகத்திற்கும் காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடலில் சுமார் 233 ஏக்கர் கடற்பரப்பை நிரப்பி கொழும்பு துறைமுக நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான வேலைத் திட்டங்கள் சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் கடந்த புதன்கிழமை ஆரம்பித்துவைத்தனர்.

இத் திட்டத்திற்கு சுமார் 1,337 அமெரிக்க மில்லியன் டொலர் செலவாகும் என்றும் – சீன அரசின் உதவியுடன் இத் திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் – கூறப்பட்டுள்ளது. இங்கு ஐந்து நட்சத்திர ஹேட்டல்கள், வர்த்தக நிலையங்கள், தொடர்மாடி வீடுகள், விளையாட்டு மைதானங்கள், பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. 1,337 அமெரிக்க மில்லியன் டொலரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி திட்டத்தில் சாதாரண கிராமப்புற மக்கள் அடையப் போகும் நன்மை என்ன? உயர்குடி வர்க்கத்தையும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களையும் மையப்படுத்தியதாகவே அபிவிருத்தித் திட்டங்கள் கூடுதலாக அமைக்கின்றன. கிராமப்புறங்களில் வீதி அபிவிருத்திகள், சுயதொழில் வாய்ப்புகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டுகின்றன. ஆனால், உயர்குடி மக்களையும் அரசியல் செல்வாக்குள்ள வர்த்தகர்களையும் மையப்படுத்தி செய்யப்படும் அபிவிருத்தியின் அளவு கிராமப்புறங்களில் இல்லை.

நாடாளுமன்றத்தில் கூறியது…

சீன உட்பட மேற்குலக நாடுகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகள், உலக வங்கிகள் வழங்கும் உதவிகள் கிராமப்புற மக்களுக்குரியது என்று அமைச்சர் சரத் அமுனுகம கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி சட்டமூலம் தொடர்பான ஒழுங்குவிதிகள் பற்றிய பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றியபோது கூறியிருந்தார். ஆனால், வெளிநாட்டு உதவிகளில் சுமார் 70 சதவீதமானவை உயர்குடி மக்களையும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களையும் மையப்படுத்தியதாக உள்ளது என ஹர்ஷ டி சில்வா அந்த விவாதத்தில் பதில் உரையாற்றியபோது சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினக்குரல் பத்திரிகைக்காக அ.நிக்ஸன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.