படம் | Eyesrilanka

சமீபத்தில் தென்னிலங்கையின் புத்திஜீவிகள் சிலர் ஒன்றிணைந்து வன்னி யுத்தத்தினைப் பற்றி வெளியிட்ட தமது “மூன்றாவது கதைக்கூற்று” (The Third Narrative) தொடர்பாக எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

“பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என பாரதி சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப வரலாற்றில் நிறுவப்படுவதை நாம் காண்கின்றோம். ஆய்வுகளும் அறிவுருவாக்கமும் நாம் நினைப்பதைப் போன்று நடுநிலையான நடவடிக்கைகளே அல்ல. ஒவ்வொரு ஆய்வும் அதன் மூலம் வெளியிடப்படும் புதிய கோட்பாடுகளும் எல்லாமே ஒரு குறிப்பிட்ட கருத்தியலினை அடிப்படையாக வைத்து புனையப்பட்டவைதான். இந்தக் கண்ணோட்டத்துடன்தான் இப்பொழுது மார்கா நிறுவனமும் மனிதாபிமான அமைப்புக்களின் ஒன்றியமும் இணைந்து வெளியிட்டிருக்கும் ஒரு கோட்பாட்டுப் பத்திரத்தினையும் நாம் நோக்க வேண்டும். மார்கா நிறுவனம் கலாநிதி கொட்ஃப்றி குணதிலகவால் 1970களில் நிறுவப்பட்ட இலங்கையின் முதன்மையானதோர் ஆய்வு நிறுவனமாகும். மனிதாபிமான அமைப்புக்களின் ஒன்றியமானது 1990களில் யுத்தப் பிரதேசங்களில் பணிபுரிந்த தொண்டரமைப்புக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தாபிக்கப்பட்ட வலையமைப்பாகும். இந்த இரு அமைப்புக்களும் தமது ஆரம்ப காலந்தொடங்கி இலங்கையின் மனித உரிமைகள் மீறல் பற்றிய விடயங்களையும் மனிதாபிமானப் பணிகளின் பிரச்சினை பற்றியும் பிரஸ்தாபித்து வந்துள்ளன. மனித உரிமைகள் பற்றிப் பேசி வந்த இவற்றின் நிலைப்பாடு இன்று தலைகீழாக மாறியிருப்பதைக் காண்கின்றோம்.

Issues of Truth and Accountability: Narrative iii on the last stages of the war in Sri Lanka (உண்மையும் கணக்குக் காட்டலும்: இலங்கையின் யுத்தத்தின் கடைசி நாட்களைப் பற்றிய மூன்றாவது கதைக்கூற்று) என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வு ஆவணம், அதன் தலைப்பில் உள்ளது போலவே யுத்தத்தின் கடைசி நாட்களைப் பற்றிய அரசின் கூற்று ஒருபுறமிருக்க, அதனைப் பற்றி தமிழ் தேசிய ஆதரவாளர்களின் கூற்று மறுபுறமிருக்க, மூன்றாவது கதைக்கூற்றினை தான் முன்வைப்பதாக அமைந்துள்ளது. இலங்கை அரசின் மீதான விசாரணையை முன்னிட்டு அதனை மறுதலிப்பதாகவே இந்த ஆவணத்தினை வெளியிட்டு இருக்கின்றனர்.

பல மனித உரிமைகள் அமைப்புக்களின் அறிக்கைகள் கோடுகாட்டியிருந்தபோதும் முக்கியமாக அது ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நிறுவப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையினை எடுத்துக்கொள்கின்றது. இக்குழுவின் அறிக்கையானது அரசு யுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தினைக் கேள்விக்குள்ளாக்கவில்லை. மாறாக, விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கம் மட்டுமல்லாது தமிழ் மக்களையும் அழிக்கும் நோக்கத்துடனும் இந்த யுத்தம் நடத்தப்பட்டது எனக் குற்றம் சாட்டுகின்றது. அதற்கான சாட்சியங்களாக பாதுகாப்பு வலயங்களின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதையும் அவர்களுக்கு உணவு மற்றும் வைத்திய வசதிகள் நிராகரிக்கப்பட்டதையும் அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்ததையும் சுட்டிக் காட்டுகின்றது என இந்த ஆவணம் தெரிவிக்கின்றது. அது முன்வைத்திருக்கும் முக்கியமான கருத்துக்களும் கண்ணோட்டங்களும் இதன் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சர்வதேச சமூகம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தினை ஒருபோதும் எதிர்த்ததில்லை என்பதுதான் இங்கு தெரிவிக்கப்படும் முதல் வாதமாகும். அதற்கான சாட்சியங்கள் அமெரிக்க இராஜாங்க உயரதிகாரிகளின் கூற்றுக்கள் உட்பட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் கூற்றுக்களிலிருந்தும் பெறப்படுகின்றன. அடுத்து ஐ.நா. ஸ்தாபனங்களும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தமது கடமைகளை உறுதியுடன் மேற்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றது. புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்னால் வாகனங்களை நிறுத்தக் கூடாதென்று இந்நிறுவனங்கள் தடை விதித்தும் விடுதலைப் புலிகள் அவ்வாறு செய்தது இதற்கு அத்தாட்சியாகக் காட்டப்பட்டிருக்கின்றது. மூன்றாவதாக, அப்பாவிப் பொதுமக்கள் யாவர் என்பதைப் பற்றிய தெளிவான வரைவிலக்கணம் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களில் காணப்படாததைப் பற்றிப் பிரஸ்தாபிக்கின்றது. விடுதலைப் புலிகளுடன் முள்ளிவாய்க்கால் வரை சென்ற மக்களில் அனேகம் பேர் அவர்களுடைய ஆதரவாளர்கள் மட்டுமன்றி தமக்கும் புலிகளுக்கும் பங்கர் வெட்டும் வேலையில் ஈடுபட்டவர்கள். இத்தகைய யுத்தச் செயல்களில் ஈடுபட்டவர்களை அப்பாவிப் பொது மக்கள் எனக் கூற முடியாது என்கின்றது. அத்துடன், சர்வதேசத்தின் தலையீடு பெறப்படும் என்கின்ற நம்பிக்கையில் இவர்கள் சென்றதாகக் கூறுகின்றது.

அடுத்ததாக, பாதுகாப்பு வலயங்களில் தமது போர்த் தளபாடங்களை விடுதலைப் புலிகள் வைத்துக்கொண்டதும், அவற்றுக்குப் பாதுகாப்பாக பொது மக்களை நிறுத்திக்கொண்டதும், அங்கிருந்து கொண்டே அரச இராணுவத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதும், அவ்வகையான வலயங்களில் தாக்குதல் மேற்கொள்வது தவிர்க்க முடியாத செயலென்றும் நியாயப்படுத்துகின்றது. உணவு மருத்துவ வசதிகளும் 2009 ஜனவரி வரை பூரணமாகக் கிடைத்ததென்றும், அதன் பின்பு பாதுகாப்பு வலயங்களை மக்கள் தேடிப்போன நிலைமையில்தான் மக்களுக்கு இவை கிட்டாமல் போனதென்றும் கூறுகின்றது. மேலும், எத்தனை பொது மக்கள் இறந்தனர் என்பதை வைத்துக்கொண்டு அரசின் நோக்கங்களைக் கணிக்க முடியாதென்று வாதிடுகின்றது இந்த ஆவணம். அரசின் நோக்கம் பிரச்சினையின் அளவைப் (proportionality) பொறுத்தே இருக்க முடியும் என்கின்றது. கிழக்கு மாகாணத்தை மிகச் சிறிய சேதங்களுடன் விடுவித்த அதே இராணுவம் வடக்கில் மட்டும் தமிழ் மக்களை அழிக்கும் எண்ணம் கொண்டதா எனக் கேள்வி எழுப்புகின்றது. விடுதலைப் புலிகளை அறுதியும் இறுதியுமாக அழிக்க வேண்டுமானால் அவர்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய மக்களும் அழியத்தான் செய்வார்கள் எனச் சொல்லாமல் சொல்கின்றது இது. இந்தப் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்களோ இல்லையோ அவர்களின் கணக்குக் காட்டல் பற்றிய விசாரணையை நடத்தியே ஆகவேண்டும் என்கின்றது.

இதனால், முள்ளிவாய்க்காலினை அடைய முன்னமேயே பொது மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரித்தெடுப்பதற்கு அரசும் சர்வதேச சமூகமும் எத்தனித்திருக்கக்கூடாதா என வினவுகின்றது இந்த ஆவணம். இந்தப் பின்னணியில், ஐ.நா. ஸ்தாபனமும் தன் பங்குக்கு கணக்குக் காட்ட வேண்டும் என்கின்றது. பயங்கரமான யுத்த சூழலில் உறுதியான மூலோபாயத்துடன் தீர்மானம் எடுக்கக்கூடியவர்களை பணிக்கு அமர்த்தினார்களாவென கேட்கின்றது. ஒவ்வொரு சமயமும் கவனமாக ஒரு பக்கத்தையும் சாடாமற் தமது வேலையை எடுத்துக்கொண்டு போகின்ற நோக்கிலேயே அந்த அதிகாரிகள் செயற்பட்டார்களே அன்றி இறப்புக்களையும் அழிவுகளையும் தவிர்க்க வேண்டும் என்கின்ற நோக்கில் அவர்கள் செயற்படவில்லை என்கின்றது.

மொத்தத்தில் நோக்கினால் சர்வதேச விசாரணையையும் அதன் பயனாக எழக்கூடிய குற்றவியல் விசாரணையையும் சட்டரீதியான வாதங்கள் மூலம் எவ்வாறு எதிர்க்கலாம் என்பதற்கான அடித்தளங்களை இந்த ஆவணம் போடுகின்றது எனக் கூறலாம். சரணடைந்த பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்ற சனல் 4 காட்சிகள் ஒருபுறமிருக்க, யுத்தத்திற்குப் பின்னரான அரசின் இனவழிப்பு நடவடிக்கைகள் மறுபுறமிருக்க, இது எம்மையெல்லாம் முட்டாள்களாக்கும் செயற்பாடு என்றால் மிகையில்லை. மாறாக, ஓர் அரசு தனது குடிமக்கள் மீதே யுத்தத்தினைக் கட்டவிழ்க்க முடியுமா? தம்மைத் தாமே பாதுகாப்பதற்கு பொதுமக்களுக்கு உரிமையில்லையா போன்ற பல கேள்விகளை இது தொடர்பாக நாம் எழுப்ப முடியும். இந்த ஆவணம் முன்வைக்கும் வாதங்கள் தற்போது அரசு நியமித்திருக்கும் நிபுணர் குழுவினால் கருதப்படுமா, அது ஒரு மாற்று கதைக்கூற்றாக (counter narrative) பிரபலப்படுத்தப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.