படம் | Reliefweb
பொதுவாக இராஜதந்திரம் என்பதன் பொருள் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. தேசங்களுக்கு இடையிலான பேச்சுகளை நடத்துவதற்கான ஒரு (பயற்சியுடன் கூடிய) கலையே இராஜதந்திரம் எனப்படும். இதனை மிகவும் எளிமைப்படுத்தி கூறுவதானால், ஒரு அரசு தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலனை முன்னிறுத்தி, அந்நிய அரசுகளுடன் மேற்கொள்ளும் உறவை இராஜதந்திரம் என்று வரையறுக்கலாம். இதனை இன்னும் சுருக்குவதானால் அரசுகளுக்கு இடையிலான நலன்களை கையாளும் கலையே இராஜதந்திரம் எனப்படும். எனவே, பொதுவான நோக்கில் இராஜதந்திரம் என்பது அரசுகளுக்கான ஒன்றேயன்றி அரசியல் கட்சிகளுக்கு உரிவையல்ல. ஆனாலும், அரசுகளுக்கும், அரசுகளுக்கும் இடையிலான உறவானது, எல்லாக் காலத்திலும் சுமூகமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில்தான் இராஜதந்திரம் என்பது அதன் பொதுப் பிரயோகத்திலிருந்து மாறுபடுகிறது. குறிப்பிட்ட நாட்டின் உள் விவகாரங்களை கையாளும் கலையாகவும் அது நீட்சிகொள்கிறது. இத்தகையதொரு பின்னணியில்தான் தமிழர் அரசியலும், இராஜதந்திர வட்டத்தினுள் பிரவேசிக்க நேர்ந்தது. அந்த வகையில் தமிழர் தரப்பிற்கு இதுவரை இரண்டு தடைவைகள் இராஜதந்திரத்தை பிரயோகிப்பதற்கான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
தமிழர்த் தரப்பிற்கு கிடைத்த இராஜதந்திரத்திற்கான காலகட்டத்தை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது, 1980 – 1990 வரையான காலப்பகுதி. இரண்டாவது, 2001 – 2005 வரையான காலப்பகுதி. முதலாவது காலப்பகுதியில் பிராந்திய சக்தியான இந்தியா, தமிழர் விவகாரத்தில் நேரடியாக தலையீடு செய்தது. இந்த இடத்தில் நான் மேலே குறிப்பிட்ட அரசுகளுக்கு இடையிலான உறவு என்பது எல்லா காலத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். இந்திரா காந்தி தலைமையிலான இந்திய மத்திய அரசானது, அன்றைய ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கையுடன் முரண்பாடு கொண்டதன் விளைவாகவே, தமிழர் தரப்பிற்கு இராஜதந்திர அரசியலுடன் ஊடாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதாவது, இந்தியாவின் தலையீட்டினால் தமிழர் அரசியல் இராஜதந்திர அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தியாவை பின்தளமாகக் கொண்டு இராஜதந்திரத்தை கையாளுவதற்கான வாய்ப்பும் அன்றிருந்த தமிழர் தலைமைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பிரேமதாச அரசுடன் இணைந்து இந்தியாவை வெளியேற்றும் பிரபாகரனின் திட்டத்துடன் தமிழர் தரப்பிற்கான இராஜதந்திர வாய்ப்புக்கள் அற்றுப்போயின. இத்துடன் முதலாவது சந்தர்ப்பம் கைநழுவிப்போனது.
இதன் பின்னர் பிரபாகரனின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தமிழர் அரசியலுக்கும், இராஜதந்திரத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இருந்ததில்லை. இந்த பின்னணியில்தான் இராஜதந்திர அரசியலுடன் ஊடாடுவதற்கான சந்தர்ப்பமொன்று மீண்டும் தமிழர்த் தரப்பின் படலையை தட்டியது. முன்னர் இந்தியாவின் இடத்தில் தற்போது மேற்குலகு முகம் காட்டியது. இந்தக் காலகட்டம் ஆயுதரீதியாக பலமாக இருந்த அரசல்லாத (Non States) அமைப்புகளுக்கான கஷ்ட காலமாகும். அதாவது, அமெரிக்காவின் மீதான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவினால் பயங்கரவாதிகளாக பட்டியல்படுத்தப்பட்டிருக்கும் அமைப்புக்களை துவம்சம் செய்வதற்கான ஒரு உலக நிலைமை உருவாகியிருந்தது. இந்தக் காலகட்டத்தை வெற்றிகரமான இராஜதந்திர நகர்வாக மாற்றிக்கொள்வதற்கான போதிய அவகாசம் இருந்தது. ஆனால், 2005இல் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சிக்கு தமிழர்களை வாக்களிக்கச் செய்யாமல் தடுத்ததன் மூலம் ரணில் அதிகார அரசியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேற்குலகின் தயவால் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்த இராஜதந்திரத்திற்கான வாய்ப்பு முற்றுப்பெற்றது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடை மலையாகும். தமிழர் அரசியல் இராஜதந்திர வட்டத்திற்குள் இழுத்துவரப்பட்ட மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களும் தமிழர் தரப்பின் நடவடிக்கைகளாலேயே முற்றுப்பெற்றது. இதில் கவனிக்க வேண்டிய இன்னெரு விடயமும் உண்டு. மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனே தீர்மானிப்பவராக இருந்திருக்கிறார். இந்த இடத்தில் மலையக மக்களின் தலைவரான சௌமிய மூர்த்தி தொண்டமான் கூறிய ஒரு அபிப்பிராயமே நினைவுக்கு வருகிறது. அவர் அன்றிருந்த மிதவாத தலைமைகளை கருத்தில் கொண்டுதான் இதனை கூறியிருக்கிறார். ஆனால், இதனை அனைவருக்கும் பொருத்தி நோக்கலாம். யாழ்ப்பாணத்து ஆட்கள் நல்ல வழக்கீல்கள். ஆனால், விடயங்களை கையாளுவதில் வல்லவர்கள் அல்ல. (Jaffna people are good advocates. But not good negotiators). இது அவர் நாடாளுமன்றத்தில் இருந்த காலத்தில் ஒரு இளம் தமிழ் தலைவரிடம் சொல்லிய வார்த்தைகள். அந்த இளம் தலைவர் இப்போது கூட்டமைப்பின் ஒரு சிரேஷ்ட தலைவராக இருக்கின்றார்.
மூன்றாவது சந்தர்ப்பமொன்று தமிழர்களுக்கு கிடைக்குமா என்பதை தற்போதைக்கு கூறிவிட முடியாது. அவ்வாறானதொரு சந்தர்ப்பம் கனியுமானாலும் கூட, அது நிச்சயமாக பிறிதொரு சக்தியின் தலையீட்டினால்தான் நிகழ முடியும். இங்கு பிறிதொரு விடயத்தையும் குறித்துக்கொள்ள வேண்டும். தமிழர் அரசியல் இராஜதந்திர வட்டத்திற்குள் பிரவேசித்த முதலாவது சந்தர்ப்பம் அரசுகளுக்கு இடையிலான முரண்பாடுகளின் விளைவாக தோன்றிய ஒன்று. ஆனால், இரண்டாவது, விடுதலைப் புலிகளின் இராணுவ கட்டமைப்புசார் வளர்ச்சியால் நிகழ்ந்த ஒன்று. இதனை முன்னைநாள் அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலரான ரிச்சர்ட் ஆமிரேட்ஜின் வார்த்தையில் கூறுவதானால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உலக தீவிரவாத இயக்கங்களின் வகைமாதிரியாக (Role model of terrorism) இருந்தது. இந்த நிலைமையானது அமெரிக்காவைப் பொறுத்தவரையில் மிகவும் சிக்கலானதாகும். விடுதலைப் புலிகள் குறித்து இப்படியானதொரு புரிதலின் கீழ்தான் மேற்குலகு புலிகளை ஜனநாயக நீரோட்டத்துடன் இணைக்கும் முயற்சியாக பேச்சுவார்த்தை ஒன்றிற்கு அனுசரணை வழங்கியிருந்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஆகக் கூடிய வகையில் பெறக் கூடியதொரு தீர்வை பெறுவதற்கான வாய்ப்பு தமிழர் தரப்பிற்கு கிடைத்திருந்தது. அதாவது, இராஜதந்திரத்தின் ஊடாக. ஆனால், அதுவும் கைநழுவ விடப்பட்டது.
இத்தகையதொரு அனுபவத்துடன்தான் அல்லது படிப்பினையுடன்தான் இரா. சம்பந்தன் தமிழர் அரசியலுக்குள் தலைவராக காலடியெடுத்து வைக்கின்றார். நான், “தலைவராக காலடியெடுத்து” என்று குறிப்பிடுவதற்கு ஒரு தெளிவான காரணம் உண்டு. 1990களுக்கு பின்னர் மிதவாதத் தலைவர்கள் எவரும் தமிழர் அரசியலில் தலைவர்களாக பிரவேசிக்கக் கூடிய நிலைமை இருந்திருக்கவில்லை. 90களுக்குப் பின்னரான தமிழர் அரசியல் என்பதே புலிகளின் உச்சரிப்பாகவே இருந்தது. புலிகளின் அழிவிற்கு பின்னர்தான் சம்பந்தன் தலைவராக வருகின்றார். சம்பந்தன் தமிழரசு கட்சி, பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றில் முக்கியமான தலைவராக இருந்த போதிலும் கூட இறுதித் தீர்மானங்களை எடுக்கவல்ல தலைவராக ஒரு போதுமே இருந்திருக்கவில்லை. உண்மையில் 2009இற்கு பின்னர்தான் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இரா. சம்பந்தன் தீர்மானம் எடுக்கும் தலைவராக வெளிவருகின்றார். அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றதும் முதலாவதாக அதுவரை பிரபாகரனால் நிராகரிக்கப்பட்டு வந்த இந்தியாவின் தலையீட்டினால் கிடைக்கப்பெற்ற மாகாண சபை முறைமையில் பங்குபற்றும் முடிவை எடுக்கின்றார். இது சம்பந்தனின் மிகச் சிறந்த முடிவாகும். ஆனால், இராஜதந்திர அரசியலை கையாளுவதற்கான வாய்ப்பு அவருக்கு மிகவும் மட்டுப்பட்டதாகவே இருக்கிறது.
எனவே, கூட்டமைப்பின் இராஜதந்திர அணுகுமுறை தொடர்பில் சம்பந்தனை விமர்சிப்பவர்கள் இந்த நிலைமையை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சம்பந்தன் இராஜதந்திரத்தை கையாளத் தெரியாமல் இருக்கவில்லை. மாறாக அதற்கான வாய்ப்பு மிகவும் சுருங்கிப் போய்க்கிடக்கிறது. இந்த நிலைமைக்கு சம்பந்தன் காரணமல்ல. சுருங்கச் சொன்னால் சம்பந்தர் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் காலமென்பது இராஜதந்திரத்திற்கான வாய்ப்புக்கள் அனைத்தையும் கோட்டைவிட்டதன் விளைவை தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற காலமாகும். ஆனால், இது குறித்து எவரும் வாய்திறப்பதில்லை.
இன்றைய சூழலில் தமிழரின் அரசியல் சர்வதேச அளவில் தோற்றம் காட்டினாலும் கூட, உண்மையில் அது அதிகம் இலங்கைக்குள்தான் கட்டுண்டு கிடக்கிறது. கூட்டமைப்பின் அண்மைய புதுடில்லி விஜயத்தின் போதும் மோடி தலைமையிலான அரசு அத்தகையதொரு செய்தியையே நினைவூட்டியிருக்கிறது. 13ஆவது திருத்தச் சட்டத்தினை அடித்தளமாகக் கொண்டு ஒரு தீர்வினை பெறுவதற்கான உதவியையே தங்களால் வழங்க முடியுமென்னும் பதிலே கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கிறது. இத்தகையதொரு பின்னணியில் தமிழரின் இராஜதந்திர எல்லை எதுவாக இருக்க முடியும்? இன்றைய சூழலில் ஓரளவிற்கு இந்தியாவின் தலையீட்டினால் கிடைக்கப்பெற்ற மாகாண சபை முறைமை ஒன்றுதான் கூட்டமைப்பின் இராஜதந்திர நகர்விற்கு கைகொடுக்கக் கூடிய ஒன்றாக காணப்படுகிறது. ஏனெனில், மாகாணசபை ஒன்றைக் கொண்டுதான் இந்தியாவை தமிழர் விவகாரத்தினுள் இழுத்துவிட முடியும். இந்தியா தமிழர் விவகாரத்தினுள் தலையிட்டால் மட்டுமே அதற்கொரு இராஜதந்திர பெறுமானம் கிடைக்கும். அல்லது வேறு ஏதாவது ஒரு சக்தி தலையீடு செய்ய வேண்டும்.
தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.