படம் | Dushiyanthini

“நாம் பிரஜைகள்” (அபி புறவெசியோ) எனும் சிங்கள அமைப்பு பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 04ஆம் திகதி மருதானையில் அமைந்துள்ள CSRஇல் (சமய சமூக நடுநிலையம்) பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து காணாமல்போனவர்களின் பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட கூட்டம் கோட்டபாயவின் காவி சீருடை பயங்கரவாதிகளால் குழப்பியடிக்கப்பட்ட செய்தி அறிந்ததே.

தொடர்ச்சியாக சமீப காலமாக சிறுபான்மை மதங்களுக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக பேரினவாத அரச தலைமையால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சீருடை பயங்கரவாதிகள் பல்வேறு பெயர்களில் இயங்க வைக்கப்பட்டுள்ளார்கள். பொதுபல சேனா, இராவணா பலய, சிங்கள ராவய போன்ற அமைப்புகள் தற்போது களத்தில் மும்முரமாக இறக்கப்படிருந்தது.

சமீப காலமாக ஜனநாயக அமைப்புகள் நடத்திவரும் கூட்டங்கள், ஊடக பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் என்பவற்றை குழப்புவதற்கும் கூட இந்த அமைப்புகள் பாவிக்கப்பட்டுவருகிறது. அப்படியான கூட்டங்களை முழுமையாக தடுத்து நிறுத்தும்வரை ஓயவில்லை. அவற்றை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு களமிறங்கும் போலிஸார் கூட கட்டுபடுத்துமளவுக்கு போதிய பலமில்லை என்றும் – தங்களால் பாதுகாப்பு தரமுடியாது என்றும் – கூறி அந்த நிகழ்வுகளை நிறுத்தச் செய்திருக்கின்றனர். சாதாரண கருத்தரங்குகளுக்கும், கூட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்க வக்கற்ற போலிஸார், குழப்புவதற்காக வந்த காடையர் கூட்டத்திற்கும், காவி சீருடை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பளித்து காடையர்களின் இலக்கை பொலிஸாரே முன்னின்று நிறைவேற்றியதை ஊடகங்களின் வாயில் நாம் அறிந்துவந்திருக்கிறோம்.

இவ்வாறான காடையர் கூட்டம் காவி சீருடை தரித்த பிக்குமார்களை தலைமை தாங்கி வருவதால் அவற்றை சம அளவில் எதிர்க்க முடியாத நிலையில் அப்படியான கூட்டங்களை இடைநடுவில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டிய நிலைக்கு இப்படியான அமைப்புகள் தள்ளப்பட்டன.

கடந்த ஜூன் 4ஆம் திகதி குழப்பட்ட கூட்டமும் முன்னைய கூட்டங்களை வெற்றிகரமாக குழப்பியடித்து ருசிகண்ட உற்சாகத்தில் இதனையும் குழப்பியது. உள்ளேயிருந்த இராஜதந்திரிகள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர். எஞ்சிய சமூக, அரசியல், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நின்று இந்த காடையர் கோஷ்டியை எதிர்கொண்டார்கள். ஒரு சில பிக்குமார் மோசமான தூசன வார்த்தைகளை உதிர்க்கவும் தயங்கவில்லை. அவர்கள் ஆத்திரமும் குரூரமும் நிறைந்த முகங்களுடன், அங்கிருந்த கத்தோலிக்க மதகுருமாரை இழுத்து தாக்க முற்படும் புகைப்படங்களும் ஊடங்கங்களில் வெளியாகின.

இப்படியான காவியுடைக்கு இந்த நாட்டில் அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரமும், சலுகைகளும், மரியாதையுமே அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. சாதாரண பிரஜைகளோ சாந்தமாக அவர்களை எதிர்கொள்வதும், பிக்குமார்களோ குரூரமாக நடந்துகொள்வதும் தற்போது சர்வசாதாரணமாக நிகழ்கிறது.

பலமான அரசியல் பின்னணியில்தான் பிக்குகளில் ஒரு சிறிய பிரிவினர் நடந்துகொள்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், ஏன் பிக்குகளில் உள்ள பெரும்பான்மை ‘நல்லவர்களால்’ அவர்களை எதிர்க்க முடியாதுள்ளது? அதுபோக பல இடதுசாரி அமைப்புகளிலும் முற்போக்கு ஜனநாயக பிக்குகள் இருக்கின்றார்கள். ஜே.வி.பி. போன்ற அமைப்புகளில் பிக்குமார்களுக்கென்றே பலவருடங்களாக தனி முன்னணி இருக்கிறது. அப்படியிருக்கும்போது அவர்களால் ஏன் இந்த காவி பயங்கரவாதிகளை எதிர்கொள்ள விடமுடியாமலிருக்கிறது.

பௌத்த மதத்தை பயன்படுத்தி அராஜகங்களை நிகழ்த்த முடியுமென்றால், அதே மதத்தின் ஊடாக ‘இந்த அராஜகங்கள்” பிழையானது என்று சொல்ல ஏன் இந்த நாட்டில் பௌத்த சக்திகள் இல்லாமல் போனார்கள். மிகச் சில பிக்குமார் அவ்வப்போது இந்த காவி பயங்கரவாதத்தை எதிர்த்து குரல்கொடுத்தாலும் அவை ஒன்றுதிரண்ட சக்தியாக உருப்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த நாட்டின் இத்தகைய போக்கினை விளங்கிக்கொள்ள அதுவே சிறந்த ஒரு அளவுகோல் என்றே கூறவேண்டும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் ‘நாம் பிரஜைகள்’ அமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“இனிவரும் காலங்களில் மக்களால் நடத்தப்படும் நிகழ்வுகளை பலாத்காரமாக குழப்ப முற்படும் பொதுபல சேனா, இராவணா பலய, சிங்கள ராவய போன்ற அமைப்புகளோ அல்லது சண்டித்தனம் புரியவரும் வேறு பிக்குமார்களையும் காவியை கழற்றி, உள்ளாடையையும் கழற்றி அனுப்புவோம்….

“சமீபகாலமாக அரச அனுசரணையுடன், குறிப்பாக பாதுகாப்பு செயலாளர் நந்தசேன கோட்டாபய ராஜபக்‌ஷவின் பலத்துடன், பல சந்தர்ப்பங்களில் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயலை பல்வேறு சாட்டுகளை கூறிக்கொண்டு செய்துவந்திருக்கிறார்கள். இன்று அவை நாறிப்போன புண்ணாக வளர்ச்சிகண்டுள்ளது. குறிப்பாக அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான கூட்டம் கூடும் உரிமை, கருத்து வெளியிடும் உரிமை என்பவற்றை மோசமான அழுத்தங்களால் பறித்துள்ளன.

“எமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு அமைச்சே எமது பாதுகாப்பை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், நாங்களே எமது பாதுகாப்புக்கான வழிகளைத் தேடும்படி பாதுகாப்பு அமைச்சு சொல்லாமல் சொல்லியிருக்கிறது…. இன்று எமது உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளது மட்டுமன்றி, எமது எதிர்கால பரம்பரையையும் இந்த அச்சுறுத்தலுக்கு இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது. இப்படியான மிலேச்சத்தனமான அதிகாரத்தை மக்கள் எப்படியெல்லாம் தூக்கி எரிந்திருக்கிறார்கள் என்பதற்கு உலக வரலாற்றில் நிறையவே பாடங்கள் இருக்கின்றன.

“பாமர மக்கள் தாம் கஷ்டப்பட்டு உழைத்து, கொடுத்ததை உண்டு, கொழுத்து கொழுப்பேறிய இத்தகைய பிக்குமாரின் கொழுப்பை கறைக்கும் வழி என்ன என்பதை நாங்கள் தெளிவாக தெரிந்துவைத்திருக்கிறோம்.

“எனவே, மீண்டும் பிக்குமார்களுக்கு நினைவூட்டுகிறோம், இந்த நாட்டில் சட்டத்தை கையிலெடுக்கும் அதிகாரம் பிக்குமார்களுக்கு வழங்கப்படவில்லை; சட்டவுருவாக்க அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

“மக்கள் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு கொழுப்பேறிய பிக்குமாருக்கும் முறையான மருந்துடன் இனிவரும் சமயங்களில் நாங்கள் எதிர்கொள்வதுடன் அடுத்த தடவைகளில் அவர்களின் சீருடையை கழற்றி அனுப்புவோம். இதனை ஒரு சவாலாக நினைத்து எம்மை எதிர்கொள்ளும் பூரண உரிமை அவர்களுக்கு உண்டு. அதேவேளை, நாட்டின் பிரஜைகளாகிய எங்களுக்கு, தற்போது எதிர்கொண்டிருக்கும் சிக்கலை அவிழ்க்கும் உரிமையும் உண்டு. நமது பாதுகாப்பு நம்மிடமே”

–    என்று அறிவித்திருக்கிறார்கள்.

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக அரசு ஒரு சுற்றுநிரூபனத்தையும் வெளியிட்டு இருந்தது. அதன்படி இனிவரும் காலங்களில் கூட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் நடத்துவதோ அல்லது அறிக்கைகள் வெளியிடுவதோ தமது அனுமதியுடனேயே மேற்கொள்ளவேண்டும் என்று அறிவித்திருந்தது. இந்த சர்ச்சைக்குரிய அறிக்கையை எதிர்த்து பல பொது ஜனநாயக அமைப்புகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதுடன், கூட்டறிக்கையையும் வெளியிட்டிருந்தன.

காவிப் பயங்கரவாதிகள் குழப்பங்களை விளைவிக்கும் போதெல்லாம் தம்மை தேசப்பற்றாளர்களாகவும், ஏனையோரை தேச விரோதிகளாகவும் சித்திரிப்பதுடன், ஜனநாயக செயற்பாட்டாளர்களை நோக்கி புலிப்பயங்கரவாதிகள், சிங்களகொட்டி (சிங்கள புலி), டயஸ்போறா சதி, ஏகாதிபத்திய சதி, நாட்டுக்கெதிரான சதி, இனத்துக்கெதிரான துரோக செயல் என கோஷங்களை எழுப்பி வந்துள்ளது. யுத்தம் நிகழ்ந்த காலத்தில் பாவிக்கப்பட்ட அதே “பயமுறுத்தும் வாசகங்களை” இன்னமும் கலாவதியாகாதபடி தக்கவைப்பதில் அரசு மேற்கொள்ளும் பிரயத்தனம் இப்போது பலவீனமுற்று வருகிறது என்பதை நம்பலாம்.

‘நாம் பிரஜைகள்’ அமைப்பு எந்தளவு தாக்குபிடிக்கும் என்பது நிச்சயமாக கூறமுடியாவிட்டாலும், இது ஒரு நல்ல ஆரம்பம். சிங்கள சமூகத்திலிருந்து வெளியான இப்படியான அமைப்புகளால் மட்டுமே இத்தகைய அமைப்புகளை எதிர்கொள்ள முடியும் என்பது உறுதியாக விளங்கியாக வேண்டியிருக்கிறது. குறைந்தது ஒரு முன்னுதாரணமாகவாவது இருக்கும்.

என். சரவணன்