த.தே.கூ. தன்னுடைய அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம், இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழ இந்தத் தீர்வுத் திட்டம்தான் சிறந்தது, இப்படியானதொரு தீர்வைத்தான் த.தே.கூ. ஏற்றுக்கொள்ளும், இல்லாவிட்டால் இந்தத் தீர்வை அடைவதற்காக சாத்வீக ரீதியாகப் போராடுவோம் என இத்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிக்கவேண்டும். அப்படியில்லாமல் தள்ளம்பல் போக்கோடு தீர்வுத்திட்டத்தை அணுகினால் த.தே.கூ. என்ன எதிர்பார்க்கிறது என்பதே தெளிவில்லாமல் இருக்கும்.
இவ்வாறு தெரிவிக்கிறார் அரசியல் ஆய்வாளரான யதீந்திரா. யுத்தம் நிறைவடைந்து 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வு விடயத்தில் எவ்வாறானதொரு நிலைப்பாட்டிலிருந்து செயற்பட்டு வருகிறது என்பது தொடர்பாக ‘மாற்றம்’ தளம் வினவியபோது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
“யுத்த முடிவடைவதற்கு முன்னர் நிகழ்ந்த அரசியல் செயற்பாடுகளும் அதன் இலக்கும் வேறு. யுத்த நிறைவுக்குப் பின்னரான அரசியல் செயற்பாடுகளும் அதனது இலக்கும் வேறு.
யுத்த நிறைவுக்கு முன்னர் தமிழர்களுடைய அரசியலுக்கு தலைமை தாங்கிய அமைப்பின் வீழ்ச்சிக்குப் பின்னர், அந்த தலைமைப் பொறுப்பினை எடுத்துக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள், அதன் வெற்றி, தோல்வியை அடிப்படையாகக் கொண்டுதான் கடந்த 5 வருடங்களைப் பார்க்க முடியும்.
அந்த வகையில் பார்க்கும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக என்ன மாதிரியான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறது என்று சொன்னால், இதுவரை ஒரு காத்திரமான, ஆக்கபூர்வமான அரசியல் தீர்வு நோக்கிய முன்னெடுப்புக்களையோ அல்லது அதற்கான அடிப்படையான அடித்தளத்தையோ இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வரையறுக்க முடியாமல் இருக்கிறது என்றுதான் சொல்லலாம்.
கடந்த 5 வருடங்களில் நிகழ்ந்த அரசியல் ரீதியான முக்கிய விடயங்கள் என்னவென்று பார்த்தால், முக்கியமாக, யுத்த நிறைவுக்கு முன்னர் எந்த அரசியல் நிலைபாடு நிராகரிக்கப்பட்டதோ, அந்த அரசியல் நிலைபாட்டை முன்னிறுத்திதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. உதாரணமாக, மாகாண சபை முறைமை, ஐக்கிய இலங்கைக்குள் ஒரு இணக்கமான தீர்வு ஆகியவற்றை முன்னிறுத்தியே கடந்த 5 வருடங்களாக த.தே.கூ. தன்னுடைய அரசியல் செயல்திட்டங்களை அல்லது வாதங்களை முன்னிறுத்தி வந்துள்ளது. இதனைத் தவிர்த்து த.தே.கூட்டமைப்பிடம் வேறு விதமான அரசியல் நோக்கங்கள், இலக்குகள் இருப்பதாகத் தெரியவில்லை.
த.தே.கூ. பொறுத்தவரையில் உள்ள அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால், கடந்த 5 வருடங்களிலாவது ஒன்றுபட்ட வேலைத்திட்டமொன்றையாவது அல்லது ஒற்றுமையாக கலந்தாலோசித்தாவது ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க முடியாமல் போனமையாகும்.
தற்போது குறிப்பாக, அண்மையில் பதவியேற்ற மோடி தலைமையிலான இந்திய அரசு மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை எவ்வாறு மோடி அரசிடமிருந்து பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாகவே த.தே.கூ. தனது அரசியல் உரையாடல்களில் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
பிரச்சினை என்னவென்றால், கடந்த 5 வருடங்களில் தமிழ் மக்களுக்கு இதுதான் தேவை, இந்த அடிப்படையைக் கொண்டுதான் எமது அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகிறோம் என்பதைக் கூட தெளிவாகச் சொல்ல முடியாத அளவில் த.தே.கூ. உள்ளது.
காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.கவாக இருந்தாலும் தமிழர்கள் குறித்த அவர்களது கரிசனை என்பது 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உள்ளது. ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தபோதும் கூட மோடி மேற்கண்ட விடயத்தையே கூறியுள்ளார் என நாம் அறிகிறோம். தமிழர்கள் குறித்த இந்தியாவின் எல்லைக்கோடு 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகத்தான் கொண்டுள்ளது. ஆனால், த.தே.கூட்டமைப்பை பொறுத்த வரையில், தேர்தல் மேடைகளிலும் சரி, ஊடக சந்திப்புகளிலும் சரி, 13ஆவது திருத்தத்தை நாங்கள் அன்றும் ஏற்றுக்கொள்ளவில்லை, இன்றும் ஏற்றுக்கொள்வதாக இல்லை என தடுமாற்றப்போக்குடன் தெரிவித்து வருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக கூறவேண்டும். 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அதன் அடிப்படையிலான இந்திய ஒத்துழைப்பை நிராகரிக்கின்றோம் அல்லது அதில் குறைப்பாடு உள்ளது, திருத்துவோம் என சொல்லவேண்டும். இல்லையெனில், த.தே.கூ. ஒரு தீர்வை முன்னெடுப்பதாக இருந்தால், என்ன மாதிரியான தீர்வு, என்னென்ன விடயங்கள் உள்ளடங்குகின்றன போன்றவற்றை வெளிப்படுத்த வேண்டும். இதுவரைக்கும் த.தே.கூ. தீர்வொன்றை முன்வைக்காததால், தமிழர்கள் குறித்து ஏனையோர் தங்களுக்குத் தெரிந்தவாறும் விரும்பியவாறும் தங்களுடைய அபிப்பிராயங்களை தெரிவிக்கும் நிலைமைதான் உள்ளது.
அரசியல் தீர்வுக்காக மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு தலைவர் சம்பந்தன் கடிதமொன்று எழுதியிருந்தார். ஆனால், முதல்வர், பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, இலங்கைக்குள்ளும் வெளியேயும் தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவொரு காலத்திலும் இவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது.
ஆகவே, த.தே.கூ. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காக எதனை எதிர்பார்க்கிறது என்பதனை திட்டவட்டமாக அறிவிக்காததால், ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மக்களை வைத்து ஒவ்வொன்றையும் சொல்பவராக இருக்கிறார்கள். இந்த விடயத்தில் கடந்த 5 வருடங்களாக த.தே.கூ. செய்யத்தவறியதை இனியாவது செய்யுமா என்பதுதான் கேள்வி.
த.தே.கூ. உள்ள இன்னுமொரு பிரச்சினை, கட்சிக்குள் ஒருமித்த நிலைப்பாடு இல்லாமை. த.தே.கூ. அரசியல் ரீதியாகப் பார்த்தால் அதன் தலைவராக உள்ள சம்பந்தன் ஒரு மிதவாத போக்கை கடைப்பிடிப்பவராகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள ஏனைய சிலர் தீவிரப்போக்கை கடைபிடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆகவே, கடந்த 5 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இதுதான் தமிழ் மக்களுக்குத் தேவை என எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
இந்தியாவின் விருப்பத்திற்கேற்பட த.தே.கூ. செயற்பட வேண்டும் என்று நான் கூறவில்லை. த.தே.கூ. தன்னுடைய அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம், இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழ இந்தத் தீர்வுத் திட்டம்தான் சிறந்தது, இப்படியானதொரு தீர்வைத்தான் த.தே.கூ. ஏற்றுக்கொள்ளும், இல்லாவிட்டால் இந்தத் தீர்வை அடைவதற்காக சாத்வீக ரீதியாகப் போராடுவோம் என இத்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிக்கவேண்டும். அப்படியில்லாமல் தள்ளம்பல் போக்கோடு தீர்வுத்திட்டத்தை அணுகினால் த.தே.கூ. என்ன எதிர்பார்க்கிறது என்பதே தெளிவில்லாமல் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
யதீந்திரா ‘மாற்றம்’ தளத்துக்கு அளித்த நேர்க்காணல் கீழே தரப்பட்டுள்ளது.