படம் | AP Photo/Eranga Jayawardena, Dhakatribune

ஐந்தாண்டுகளின் பின்னால் – பிரபாகரன் பற்றிய நினைவுகள் 03 | மூன்றாவது பாகம்

###

ஐ. நா. விசாரணையிலிருந்து தப்பிக்க அரசுக்கு இருக்கும் வழி என்ன?

தமிழ் தேசிய இனப் பிரச்சினையைக் கையாண்ட பிரபாகரனின் அரசியல் அணுகுமுறைகள் தொடர்பான விமர்சனங்களும், அவரது ஆயுதப் போராட்ட வழிமுறைகள் பற்றிய அதிருப்திகளும் ஏராளமான தமிழர்களிடம் உள்ளன.

அவர் செய்திடத் தவறிய காரியங்கள் குறித்த கவலைகளும், செய்வதைத் தவிர்க்கத் தவறிய விடயங்கள் குறித்த கோபங்களும் பலரிடம் உள்ளன.

இத்தகைய விமர்சனங்களும், அதிருப்திகளும், கவலைகளும், கோபங்களும் என்னிடமும் இருந்தன; இருக்கின்றன.

நீண்ட போர், தமிழர்களைக் களைப்புக்கும், வெறுப்புக்கும், சினத்திற்கும் உள்ளாக்கியும் இருந்தது. ஏதோ ஒரு வகையில் அந்தப் போர் முடிவுக்கு வந்த நிம்மதியில்தான் அவர்கள் இருந்தார்கள்; இருக்கின்றார்கள்.

எது எவ்வாறு இருந்தாலும், இறக்கும் போது, தமிழ் மக்களிடத்தில் அவர் ஒரு மாபெரும் வெற்றிடத்தை விட்டுச் சென்றார் என்பதுதான் உண்மையானது.

ஒரு கடந்தகால வரலாறாகப் பிரபாகரனை மறந்துவிட்டு, நிகழ்காலச் சூழலைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற தமிழ் தலைவர்களும், அவரைத் தமிழ் மக்கள் ஒரேயடியாக நிராகரித்துவிட்டாலே எதிர்காலம் சுபீட்சமாய் இருக்கும் என்று சொல்லுகின்ற இலங்கை ஆட்சியாளர்களும், அவரது உத்தரவுகளின் கீழ் நிகழ்த்தப்பட்ட பாதகச் செயல்கள் மட்டுமே தமிழ் மனங்களில் எஞ்சியிருப்பதாக நம்ப முனைகின்றார்கள்.

அவ்வாறு பிரசங்கிப்பவர்கள் மறந்திடாது இருக்கவேண்டியது என்னவெனில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்புகளில், தமிழ் மக்களது சமூக – பண்பாட்டு – பொருளாதார வாழ்வைச் செழுமைப்படுத்திய, முழுமைக்கு நெருக்கமான – ஒரு பல்பரிமாணப் பொது நிர்வாகத்தினை வியக்கத்தகு விதத்தில் பிரபாகரன் கொண்டு நடாத்தினார் என்பதுவும் தமிழர்களின் மனங்களில் நீக்கமற இருக்கின்றது.

அத்தோடு, பிரபாகரனின் போராளிகள் படைத்த மெய்சிலிர்க்க வைக்கும் சாதனைகளும், அவர்கள் புரிந்த மனிதக் கற்பனைக்கு அப்பாற்பட்ட தியாகங்களும் கூட, பிரபாகரனிற்கு எதிர்ப் பக்கத்திலிருந்த தமிழர்களாலாலேயே இன்றும் மதிக்கப்படுபவையாக இருக்கின்றன.

இன்று தமது தலைவர்களாக மேலெழுந்து – பிரபாகரன் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்ப முன்வந்துள்ளோர்களிடம் – அவரது காலத்தைப் போன்றதான பொது நிர்வாக நேர்த்தியையும், அவரது போராளிகளுக்கு ஈடானதாக இல்லாவிட்டாலும், ஒரு குறைந்தபட்சத் தரத்திலான அர்ப்பணிப்பையும் தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

பிரபாகரனின் காலம் என்பது, யார் விரும்பாவிட்டாலும், எவர் நிராகரித்தாலும், அன்று அவர் செய்த காரியங்களை இன்று செய்ய முனைவோரின் செயற்திறனை மதிப்பீடு செய்வதற்கான அளவீட்டு அலகாகவே இப்போது ஆகியிருக்கின்றது.

வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் தனிநாட்டுக்கான ஒரு வாக்கெடுப்பு என்ற தரத்துக்கு ஈடாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் பிரச்சாரப்படுத்தப்பட்டது; எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு ஒபாமாவும் மன்மோகனும் இந்தத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருப்பதாக மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்; அனைத்துக் குறைகளையும் வழித்துத் துடைத்திட வந்திறங்கும் வானத்து தேவன் என்ற தரத்துக்கு விக்கினேஸ்வரன் சித்திரிக்கப்பட்டார்; “மலர்ந்தது தமிழர் அரசு!” என்றே யாழ்ப்பாணத்து உதயன் செய்தியேடு தலைப்பிட்டது.

ஒரு புறத்தில் மூர்க்கத்தனமான போர் ஒன்றை நிகழ்த்தியபடியும், அதனை எதிர்கொண்டபடியும், இல்லாதவற்றுக்காகக் காத்திருக்காமல் இருப்பவற்றைக் கொண்டு செய்யவேண்டியவற்றைச் செய்த பிரபாகரனின் நேர்த்திக்கு நெருக்கமான பொது நிர்வாகத்தையும், செய்ய வேண்டியவற்றைச் செய்ததோடு மட்டும் நின்றுவிடாமல், செய்ய முடியாதவற்றையும் செய்ய முனைந்த அவரது பொது நிர்வாகக் கட்டமைப்புக்களின் மகத்துவங்களையும், இல்லாதவற்றுக்காகக் குறைபடுவதிலேயே பெருமளவு காலத்தைக் கரைக்கும் இன்றைய வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தோடு தமிழ் மக்கள் ஒப்பிடுவார்கள் அல்லவா…?

பிரபாகரனைக் கடந்தும், அவர் முன்னிலைப்படுத்திய வன்முறை அரசியலைக் கடந்தும், தமிழ் மக்களை அழைத்துச் செல்ல விரும்புகின்ற தமிழ் மிதவாதத் தலைவர்கள், அவரை விடவும் திறம்படத் தம்மால் காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதையும், மென்முறை அரசியலின் மூலம் நன்மைகளை அடைய முடியும் என்பதையும் தமிழ் மக்களுக்குச் செயல் மூலம் நிரூபிக்கவில்லையெனில், மிதவாதத் தமிழ் தலைவர்களை நம்பிப் பயனில்லை என்ற பிரபாகரனின் அன்றைய வாதங்களே இன்றைக்கும் சரியென்று ஆகிவிடும் அல்லவா…?

சர்வதேச சமூகத்தை முன்னிறுத்தி மட்டுமே செய்யப்படுகின்ற தமது இன்றைய அரசியற் காய்நகர்த்தல்களின் எந்தச் சதுரத்திலும் விடுதலைப் புலிகளை முன்னிலைப்படுத்துவது பொருந்திவராது என்று கருதுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பிரபாகரனை முழுமையாக மறுதலித்துவிட்டுச் செய்துவருகின்ற அரசியலின் மூலம் பெற்றெடுக்க முடிந்திருக்கின்ற ஆட்சியுரிமைகள் எவை என்று தமிழ் மனங்கள் கேட்கும் அல்லவா…?

பிரபாகரனைத் தமிழ் மக்கள் நிராகரித்துவிட வேண்டும் என்று சொல்லுகின்ற இலங்கை அரசு, அதனை அடைவதற்கான தனது பங்களிப்பையும் இதயசுத்தமாகச் செய்ய வேண்டும். அது, பிரபாகரன் நிராகரித்த மாகாண சபையின் அதிகாரத்தைக் கோரி நிற்கின்ற, அவரது பின்னணியுடனேயே உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பிடம், அதனை முழுமையாகக் கொடுத்துவிடுவதாகும். அதாவது, 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது வடக்கு மாகாண ஆட்சிக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற அரசு ஒத்துழைப்பதாகும். இல்லாதுவிடின், மாகாண சபையை நிராகரித்த அன்றைய பிரபாகரனும், அது உப்புச்சப்பற்றது, அதைச் செயற்படுத்த அரசும் விடாது என்ற நிலைப்பாட்டை உடைய இன்றைய கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தான் நியாயப்படுத்தப்படுவார்கள்.

“நாடு ஒன்று; தேசங்கள் இரண்டு” போன்ற தமிழ் தேசியக் கோட்பாடுகளைக் கொண்டிருக்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற மிதவாத தமிழ் அரசியற் சக்திகளின் வளர்ச்சிக்கும் வெற்றிகளுக்கும் ஒத்துழைப்பதற்கான மனவிருப்பு கூட கொழும்பு ஆட்சிப்பீடத்திடம் இல்லாதவிடத்து, சிங்கள ஒற்றையினவாத மனோநிலை பற்றிப் பிரபாகரன் கூறிவந்தவையே சரியானவை என்ற தீர்மானங்களுக்குத் தமிழ் மனங்கள் வரக்கூடும்.

பிரபாகரனைக் கொன்ற பின்னால் ‘ஐக்கிய’ நாட்டிற்குள் தாங்கள் தலையெடுப்பதற்கு வழிசெய்யவில்லை என்ற கோபம் அரசின் மீது எழுகின்ற அதே வேளையில், பிரபாகரனுக்குப் பின்பு, ‘ஒன்றுபட்ட’ நாட்டிற்குள் தமக்குக் குறைந்தபட்சத் தலைமைத்துவத்தைக் கூடத் தரத் திராணியற்றவர்களாக இருக்கின்றார்கள் என்ற சினம் தமிழ் மிதவாதத் தலைமை மீதும் தமிழர்களுக்கு எழக் கூடும்.

பிரபாகரன் நிராகரித்த மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்ளத் தயாராகி, அதிலிருக்கும் ஆட்சியுரிமைகள் கிடைத்தாலே போதும் என்ற அளவுக்குக் கருத்துக்களை வெளியிட்டு, தேவைக்கும் அதிகமாக இறங்கிச் செல்கின்ற தமிழ் தலைமைகள், அவ்வாறு இறங்கிச் செல்வதன் மூலம் அந்தக் குறைந்தபட்ச ஆட்சியதிகாரத்தையாவது முழுமையாகப் பெற்றுவிடமுடியும் என்பதை நிரூபிக்கத் தவறுகின்றார்கள் என்று தமிழர்கள் சிந்திக்கக்கூடும்.

“நடைமுறைச் சாத்தியமானவை” எனத் தமது கொள்கைகளை முன்வைக்கின்ற தமிழ் கட்சிகளே தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்தச் சிரமப்படுகின்றபோது, “நடைமுறைச் சாத்தியமற்றவை” என முத்திரை குத்தப்படுகின்ற கொள்கைகளை உடைய கட்சிகளைப் பின்பற்றிப் பரீட்சித்துப் பார்க்க மக்கள் முயலக்கூடும்.

விளைவு, தோல்விகளால் சளைத்துவிடாமலும், புறமொதுக்கப்படுவதால் துவண்டு போகாமலும், “நாடு ஒன்று; தேசங்கள் இரண்டு; என்ற கோட்பாட்டை வரித்திருக்கும் கஜேந்திரகுமாரின் கட்சிக்குப் பின்னால் தமிழர்கள் நிதானமாகவும் தன்னியல்போடும் திரண்டுவிடக்கூடும்.

சர்வதேசத் தலையீடுகள் பற்றியும் ஆட்சிமாற்றத்துக்கு முயற்சிக்கும் அந்நியச் சக்திகள் குறித்தும் ஒப்பாரிகள் வைக்கும் கொழும்பு ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவெனில், தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யத்தக்க ஆக்கபூர்வமான உரையாடல்களைத் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு நிகழ்த்துவதன் மூலமும், இலங்கையின் நில ஒருமைப்பாட்டைப் பங்கப்படுத்தாத ஆகக் கூடிய ஆட்சியதிகாரப் பகிர்வுக்குத் தயாராய் இருப்பதன் மூலமும், சர்வதேசத் தலையீடுகளை மட்டுமல்ல, பெரிதாக ஆர்ப்பரிக்கப்படுகின்ற சர்வதேச விசாரணையைக் கூட மழுங்கடிக்கச் செய்துவிட முடியும்.

அதற்கான மன இணக்கப்பாடு அரசிதிற்கு இல்லாதவிடத்து, கஜேந்திரகுமாரின் கட்சி போன்ற, வளைந்து கொடாத தமிழ் தேசியவாதச் சக்திகளின் எழுச்சியும், அதன் விளைவாக நிகழக்கூடிய அகச் சூழல் மாற்றங்களும், அந்நியத் தலையீடுகளுக்கு வழி செய்வது மட்டுமன்றி, கொடுக்க விரும்பாதவற்றையும் தமிழர்களுக்குக் கொடுத்துவிட வேண்டிய புறநிலை ஒன்றுக்குள்தான் கொழும்பு ஆட்சிப்பீட்தை நிர்ப்பந்திக்கும்.

சிங்களச் சமூகம் ஒரு விடயத்தைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்:

இந்தத் தீவின் இன்றைய அமைதி நிலை தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தரப்பட்டதல்ல; இது பல்லாயிரம் சிங்களப் படை வீரர்களின் உயிர்களை விலையாகக் கொடுத்துப் பெறப்பட்டது. அடுத்தடுத்து ஆட்சிக் கதிரையில் அமர்ந்த ஆளும் தரப்பினரின் அரசியல் அணுகுமுறைத் தவறுகளாலும், அவர்கள் ஊட்டி வளர்த்த சிங்கள ஒற்றையினவாதச் சிந்தனையாலும் பல்லாயிரக் கணக்கான சிங்கள இளைஞர்கள் வடக்கு – கிழக்குப் போர் அரங்குகளில் பலியிடப்பட்டார்கள். இத்தனை விலை கொடுத்துப் பெற்ற அமைதி உருக்குலைந்துவிடாது பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசிற்கும் அந்த அரசு அதன் பொறுப்பிலிருந்து விலகிவிடாது கவனித்திருக்கும் பொறுப்பு அதற்கு வாக்களித்த சிங்கள மக்களுக்கும் உண்டு.

அதற்கான ஒரு வழிதான், ஆகக் குறைந்தது 13ஆவது திருத்தச் சட்டத்தையாவது முழுமையாகச் செயற்படுத்துமாறான அழுத்தங்கள் தெற்கிலிருந்து எழ வேண்டும். அது கூட எழவில்லையெனின், சிங்கள மக்களின் மகாவம்ச மனநிலை பற்றியும் ஒற்றையினவாதச் சிந்தனை பற்றியும் பிரபாகரன் சொன்னவை தானே சரியென்று ஆகும்…?

இந்த நாட்டில் வாழும் சமூகங்களிடையே இணக்கத்தையும் கூட்டிருப்பையும் ஏற்படுத்துவதில் அக்கறை காட்டாமல், சிங்கள பெளத்த ஒற்றையினவாதத்தை எரியூட்டி எரியூட்டியே ஆட்சியாளர்கள் அரசியல் நடத்தப் போகின்றார்கள் எனில், அவர்கள் அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு வாக்களித்த சிங்கள மக்களும் அனுமதிக்கப் போகின்றார்கள் எனில், வடக்கு கிழக்கில் தமிழ் தேசியவாதம் மீண்டும் வேர்விட்டு வளர்ந்து, பிரபாகரனின் சிந்தனைகள் தளைத்துச் செளிக்க வேண்டும் என்பதுதான் தென்னிலங்கையின் விரும்பம் என்று தானே தமிழர்கள் கருதிவிடுவார்கள்….?

ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக திருச்சிற்றம்பலம் பரந்தாமன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.