படம் | Dushiyanthini Kanagasabapathipillai, Dbsjeyaraj

ஐந்தாண்டுகளின் பின்னால் – பிரபாகரன் பற்றிய நினைவுகள் 02 | இரண்டாவது பாகம்

###

தேவானந்தாவை வீணைச் சின்னத்தில் தனித்தியங்க விடாமைக்கு காரணம் என்ன?

‘தமிழீழம்’ என்ற கொள்கையில் பிரபாகரன் விடாப்பிடியாகவே நின்றுகொண்டிருந்தார்.

“வாழ்ந்தாலும் அதற்காக, செத்தாலும் அதற்காக” என்று அந்தக் கொள்கை வழி அதே விடாப்பிடியுடன் அவர் ஆயுதப் போராட்டத்தையும் நடாத்திக்கொண்டிருந்தார்.

வாழும் காலத்தில் தனது கொள்கை மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதி தொடர்பாக எவரிடமும் பெரிய கேள்விகள் எதுவும் இல்லை. ஆனால், இறக்கும் பொழுதில் அதே பற்றுறுதியோடு அவர் மரணத்தை அணைத்துக்கொண்டாரா என்பது தொடர்பாகப் பலவடிவக் கதைகள் பலதரப்புக்களில் இலங்கையில் உலவுகின்றன.

உண்மை எது, பொய் எது என்று எனக்குத் தெரியாது. அதைப் பற்றிப் பேசுவதும் இங்கு எனது எண்ணமல்ல.

எந்தக் கதை எவர் வழி கேட்பினும், கொண்டிருந்த கொள்கை வழி நின்றே பிரபாகரன் இறந்தார் என்றுதான், அவர் இறந்துவிட்டதை ஏற்றுக்கொள்ளுகின்ற சாதாரண தமிழ் மக்கள் கொள்கின்றார்கள்; அப்படித்தான் நம்ப விரும்புகின்றார்கள்.

“இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற மகாவம்ச மனோநிலையோடு சிந்திக்கின்ற சிங்கள் ஆளும் வர்க்கம், தமது அடிப்படை உரிமைகளைக் கோருவதற்கான குறைந்தபட்ச மென்முறை அரசியற் செயற்பாடுகளைக் கூட முன்னெடுப்பதற்கான இயங்குவெளியைத் தமிழர்களுக்குத் தராது” என்ற முடிவோடுதான், தமிழீழக் கொள்கையை வரித்துக்கொண்டு ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுத்தார் பிரபாகரன்.

அவரைப் போலவே – இன்னொரு பக்கத்தில், தான் கொண்ட அரசியல் நிலைப்பாட்டிற்காக – “வாழ்ந்தாலும் அதுதான், செத்தாலும் அதுதான்” என்று பல சாவுகளையும் கடந்து வாழும் இன்னொருவர் டக்ளஸ் தேவானந்தா.

‘ஐக்கிய இலங்கை’ என்ற ஆட்சியமைப்புக்குள், அரசியலமைப்பில் ஏற்கெனவே செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்திற்கு அமைவாக உருவான மாகாண சபை முறையே தமிழர் பிரச்சினைக்கு ஏற்ற தீர்வு என்பதே அவரது நிலைப்பாடு.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில், வெளிநாட்டு இராணுவப் பயிற்சிக்குச் சென்ற முதல் மூவரில் ஒருவர் என்ற வரலாற்றை உடைய, தனது பழைய தீவிரவாதப் பாதையைக் கைவிட்டுவிட்டு, புதிய அரை – மிதவாத அரசியலைத் தொடங்கியது முதல் – இந்த மாகாண சபை முறையைத் தனது கொள்கையாக வகுத்துக் கொண்டவர் அவர்.

‘தமிமீழம்’ என்பதற்கு மாற்றாக ‘ஐக்கிய இலங்கை’யை ஏற்றுக்கொள்ளும் ஒரு கொள்கையுடன் உருவெடுத்ததால், பிரபாகரனுக்கு எதிரியாகவும் அவர் ஆகினார்.

நீண்ட போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கைத் தமிழினம் தற்போது கடைசியாக வந்து நிற்கின்ற அரசியல் அடைவிடம், கடந்த 22 வருடங்களாகத் தேவானந்தா கைக்கொண்டிருக்கின்ற மாகாண சபை முறைமைதான். அதையும் தாண்டிச் செல்லவேண்டும் என்று அவரே சொல்லுகின்ற போதும், அதற்கான வாய்ப்புகள் எதுவும் இதுநாள் வரை தெரியவில்லை என்பது வேறு விடயம்.

இலங்கை அரசோடு நீண்ட காலமாகப் பங்காளியாக இருக்கின்றவர் தேவானந்தா. விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு, பிரபாகரனும் கொல்லப்பட்டுவிட்டால் தமிழர்கள் மதிப்போடு வாழும் சூழல் இந்தத் தீவில் ஏற்படும் என்று சொல்லி வந்தவர்; பிரபாகரன் இருக்கின்றவரை தமிழர்களுக்கு விடிவில்லை என்ற வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்; கொலை அச்சுறுத்தல் கழுத்துவரை வந்து நெரித்திருந்த போதும் தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வராமல் – இலங்கை அரசிற்குச் சாதகமான வியாக்கியானங்களைக் கொடுத்துவந்தவர்; அவரது தோழர்கள் அரசப் படைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்தனர்; கொழும்பு அரசின் மூத்த அமைச்சராக, அதன் பிரதிநிதியாகவே தன்னை முன்னிலைப்படுத்துகின்றவர்; அரசின் நிலைப்பாட்டையே தனது கட்சியின் நிலைப்பாடாகவும் கொண்டு 13ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கடந்து செல்ல வேண்டுமெனில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைக்கின்றவர்; இந்த நாட்டின் ஐக்கியத்தையும், இறைமையையும் ஏற்றுக்கொண்டவர்; நாட்டின் மீதும் அரசின் மீதுமான தனது விசுவாசத்தைக் கேள்விக்கிடமற்று நிரூபித்துவிட்டவர்.

இவ்வாறாக அவர் ஒரு தமிழராக இருக்கின்ற போதும், அவரது கட்சி ஒரு தமிழ் கட்சியாக இருக்கின்ற போதும், தென்னிலங்கையின் மாசற்ற நம்பிக்கைக்கு உரியவர்களாகவே அவரும் அவரது கட்சியினரும் எப்போதும் இருந்துவருகின்றார்கள்.

தமிழ் இன அடையாளத்துடன் எவரும் இந்தத் தீவில் மிதவாத அரசியல் செய்வதற்கான தளத்தை சிங்கள மேலாதிக்க வர்க்கம் வளங்காது என்ற பிரபாகரனின் வாதத்தை அரசே சரியென்று ஆக்குவதன் உச்சம் என்னவெனில், இருபது வருடங்களாகக் கூடவே இருந்து இயங்கிய தேவானந்தாவுக்கும் அவரது கட்சிக்கும் கூடத் தன்னிச்சையாகவும் சுயமாகவும் இயங்குவதற்கான ஜனநாயக வாய்ப்பை அரசு தற்போது கொடுக்கவில்லை என்பதாகும்.

தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளுக்குத் தமிழ் மக்களிடத்தில் ஆதரவில்லை; தேவானந்தாவின் கட்சி தனது வாக்குச் செல்வாக்கை இழந்துவருவதன் காரணமே அரச கட்சியின் பங்காளியாக இருப்பதனால்தான். அரசின் அங்கமாக இருந்தவண்ணம் தமிழர்களுக்கு நன்மையாக தேவானந்தா பேசினாலும் தமிழர்கள் அதனை ஏற்க மாட்டார்கள். ஆனால், அரசுக்கு வெளியில் இருந்து அவர் ‘ஐக்கிய இலங்கை’ கோட்பாட்டைப் பேசுவாரெனில், அதில் இருக்கக்கூடிய நியாயத் தன்மைகளைத் தமிழர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டு.

இந்த உண்மையை உணர்ந்து – தேவானந்தாவை வெற்றிலைச் சின்னத்துக்கு வெளியில் அனுப்பி – சொந்த வீணைச் சின்னத்தில் தமிழ் முகத்தோடு மக்களை அணுகவைத்து – ‘ஐக்கிய’ கோட்பாடுகளை அவர் மூலம் படிப்படியாக தமிழர் மனங்களில் பரவச் செய்து – தமிழ் மக்களின் மனங்களையும் புத்திகளையும் வென்றெடுக்க இந்த அரசிற்கு வாய்ப்பிருந்தது. ஆனால், அதைச் செய்வதற்கான மனமும் புத்தியும் இந்த அரசிடம் இருந்திருக்கவில்லை.

சேர்ந்திருந்து சேவகங்கள் செய்து, செய்த பழிகளோடு செய்யாத பழிகளையும் சுமக்கும் ஒரு கட்சிக்கே – அது தமிழ் இன அடையாளத்தைப் பேணுகின்ற கட்சி என்ற ஒரே காரணத்திற்காக – உரிய சுதந்திரத்துடனான அரசியற் பாத்திரம் நிராகரிக்கப்படுகின்றது எனில், ஒட்டுமொத்தமான தமிழினம் தனித்துத் தன்னுடைய விவகாரங்களைத் தானே கவனிக்கும் ஓர் அரசியல் கட்டமைப்பைச் சிங்கள ஆளும் வர்க்கம் உருவாக்காது என்ற பிரபாகரனின் வாதம் சரியானது என்ற எண்ணம் தானே ஒரு தமிழ் குடியானவனிடத்தில் எழும்…?

சர்வதேசத் தலையீட்டை முன்னிறுத்தித் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் செய்யும் முன்னகர்வுகளை முறியடிப்பதற்காகவேனும், கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சியாகச் செயற்படுவதற்கான வாய்ப்பை அதற்கு அளித்து, உள்நாட்டுத் தீர்வு உருவாக்கத்தை முன்னிறுத்தும் தேவானந்தாவின் கட்சியைத் தனித்து இயங்கி மேலெழ வைப்பதற்கான மன இணக்கம் இல்லையெனில், தமிழ் கட்சிகள் எவையுமே தலையெடுத்து அரசியல் செய்யக்கூடாது என்ற சிங்கள ஒற்றையினவாதச் சிந்தனை தானே காரணம்…?

தேவானந்தாவின் அரச சார்புக் கொள்கையைப் பின்பற்றி அவரோடு சேர்ந்திருந்த குற்றத்திற்காக, அவரது பலநூறு தோழர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர். இன்று, ஒரு தமிழ் கட்சி என்பதற்காக, அந்த அரசாலேயே அவரது கட்சியின் அரசியற் தனித்துவம் மதிக்கப்படாத போது, அந்தச் சாவுகள் எல்லாம் அர்த்தமிழந்து போகின்றன என்றுதானே அந்தத் தோழர்களின் உறவுகள் எண்ணுவார்கள்…?

பிரபாகரனின் காலத்தில், இனப் பிரச்சினையை வெறும் பயங்கரவாதப் பிரச்சினையாகச் சுருக்கி, “தமிழ் கட்சிகளும் எங்களோடு இருக்கின்றன” என்று காட்டுவதற்காக இணைத்து வைத்துக்கொள்ளப்பட்டிருந்த தேவானந்தாவின் கட்சிக்கு, பிரபாகரன் உயிரோடு இருந்தபோது கொடுக்கப்பட்ட அரசியற் தனித்துவத்துவம் தற்போது நிராகரிக்கப்படுகின்றது எனின், அரசிற்குச் சார்பான தமிழர்களின் அரசியல் இருப்பையும் முக்கியத்துவத்தையும் கூட, பிரபாகனின் ஆயுதப் போராட்டம்தான் தந்தது என்று தானே தமிழ் புத்திகள் சிந்திக்கும்…?

இனவாதத்தின் அதியுச்ச இயங்குநிலை என்னவெனில், தனது இனத்தைத் தவிர இன்னொரு இனம் தனக்கென அரசியற் தனித்துவங்களையும் அடையாயங்களையும் கொண்டிருப்பதை ஒரு இனம் நிராகரிப்பது ஆகும். இன்று, பிரபாகரனுக்குப் பின்னான காலத்தில், தமது அரசியல் இருப்பும் தனித்துவங்களும், நிராகரிப்புக்கும் நீக்கநிலைக்கும் இட்டுச்செல்லப்படுகின்றது என்ற அச்சம் தானே தமிழ் பேசும் மக்களிடத்தில் இயல்பாகவே எழுகின்றது…?

அரசின் நிலைப்பாட்டையே தமது நிலைப்பாடாகக் கொண்டிருக்கின்ற தமிழர்கள் அரசியற் பணிகளை ஆற்ற விரும்பினால் கூட, ஏதாவது ஒரு சிங்களக் கட்சியில் இணைந்தே அதனைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது எனில், சிங்கள ஒற்றையினவாத மனோநிலை இந்தத் தீவில் எப்போதுமே இளகிவராது என்று பிரபாகரன் சொல்லி வந்ததது தானே சரியென்று ஆகும்…?

தென்னிலங்கைக் கட்சிகளோடு இரண்டறக் கலந்து தமிழர்கள் அரசியல் செய்வது பற்றி எனக்குப் பெரிதாக ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், அவ்வாறு இரண்டறக் கலந்த பின்பு நானும் எனது சமூகமும் எமது தனித்துவத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தைத் தானே நடைமுறை விடயங்கள் கற்றுத்தருகின்றன…? இறந்துபோன எனது நண்பன் ஒருவனுக்காக இரண்டு நிமிடங்கள் தலை தாழ்த்தி நிற்கின்ற எனது அடிப்படை உணர்வு வெளிப்பாட்டு உரிமைக்காகப் போராடாத ஒரு கட்சியை நான் எப்படி எனது கட்சியாகப் பார்க்க முடியும்…?

தனித்து இயங்கிய சித்தார்த்தனும் அவரது கட்சியும் தமிழ் கூட்டமைப்போடு இணையவிருந்த காலத்தில், தமது அரச ஆளும் கட்சியோடு வந்து கலந்துவிடுமாறு அழைப்பு விடுத்தாராம் இலங்கை அரசின் அதிசக்தி மிக்க மனிதர். தன்னால் அவ்வாறு செய்யமுடியாது என்று சித்தார்த்தன் மறுத்த போது, “எமது கட்சியில் சேராவிட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சியோடாவது இணைந்துவிடுங்கள்” என்று அவர் அன்பு வற்புறுத்தல் செய்தாராம்.

இவ்வாறாகத் தொடர்ந்தும் பேணப்படுகின்ற ஒற்றையின மேலாதிக்கவாதப் புறநிலையின் காரணமாகத் தானே? விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் மறுபக்கத்திலேயே எப்போதும் இருந்த சித்தார்த்தன் கூட, “இனி இது சரிவராது” என்ற முடிவுக்கு வந்து, தமிழ் கூட்டமைப்போடு போய் இணைந்து கொண்டார்.

இந்த நாடும் மக்களும் ஒருங்கிணைவோடும் ஒற்றுமையோடும் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நாட்டின் அரசினது நோக்கம் எனில், பிரிவினைவாதம் பேசாத, இந்த நாட்டின் இறைமையைக் கேள்விக்கு உட்படுத்தாத அனைத்து அரசியற் சக்திகளையும், அவை எந்த இனப் பின்னணியைக் கொண்டவையாக இருப்பினும், தன்னிச்சையாகச் செயற்பட அனுமதித்து அதற்கு வழியும் சமைக்க வேண்டும்.

அதை விடுத்து, நல்லிணக்கக் கருத்துக்களைப் பேசுவதும், தேசிய ஒற்றுமை பற்றிய பரப்புரைகள் செய்வதும் கூடச் சிங்களக் கட்சிகளால் மட்டுமே செய்யப்படவேண்டும் என்ற ஒற்றையினவாத மனோ நிலைதான் மேலோங்கி இருக்கப் போகின்றதெனில், இந்த நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்ற விருப்பம் இந்த நாட்டை ஆளுபவர்களுக்கே இல்லை என்று தானே அர்த்தம்…?

ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக திருச்சிற்றம்பலம் பரந்தாமன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.