Photo, JVP SRI LANKA

தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அடக்குமுறைச் சட்டத்தைத் தனது விமர்சகர்களுக்கு எதிராகப் பயன்படுத்தாது விட்ட ஒரேயொரு இலங்கை அரசாங்கத்தையாவது பெயரிடுமாறு கேட்டால், அதற்கான பதிலை யாராலும் கூறமுடியாது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) 1979ஆம் ஆண்டில் ஒரு ‘தற்காலிக’ நடவடிக்கையாகவே நிறைவேற்றப்பட்டது. அன்றிலிருந்து நாற்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகும், அது ஒவ்வொரு ஆட்சிக்கும், அதாவது ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ராஜபக்சர்கள், நல்லாட்சி அரசாங்கம், ரணில் விக்கிரமசிங்க மற்றும் இப்போது தேசிய மக்கள் சக்தி (NPP) வரை சேவையாற்றியுள்ளது. இது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள், எழுத்தாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், மாணவர் செயல்பாட்டாளர்கள் மற்றும் அன்றைய அரசாங்கத்திற்குப் பிடிக்காத ஒரே காரணத்திற்காக சாதாரண குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் கீழ் துன்புறுத்தப்பட்ட ஒவ்வொரு கட்சியும் அதிகாரத்திற்கு வந்தால் அதை இரத்துச் செய்வதாக உறுதியளித்தன. ஆனால், அதிகாரத்திற்கு வந்ததும் ஒவ்வொரு கட்சியும் அதைத் தக்கவைத்துக்கொள்வதற்குக் காரணங்களைக் கண்டறிந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகைகளை மீண்டும் பெறுவதற்காக ரணில் விக்கிரமசிங்க 2017இல் அதை நீக்குவதாக உறுதியளித்தார். ஆனால், 2022 இல் ஜனாதிபதியானதும், ‘அரகலய’ போராட்ட மாணவர் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக அதே சட்டத்தைப் பயன்படுத்தினார். “இச்சட்டத்தை நீக்கப் போராடிய ஒருவர் இப்போது பழிவாங்குவதற்காக அதைப் பயன்படுத்துவது ஆச்சரியமளிப்பதாக” ஜே.வி.பி பொதுச்செயலாளர் தோழர் டில்வின் சில்வா அன்று கூறினார். அவர் கூறியது சரியே.

வாக்குறுதியும் நடைமுறையும்

எதிர்க்கட்சியில் இருந்தபோது தேசிய மக்கள் சக்தியின் வரலாறு தெளிவாக இருந்தது. 2023 இல் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை (ATA) எதிர்த்த அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தினர். அவர்களின் 2024 கொள்கைப் பிரகடனம் “பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும்” இரத்து செய்வதாக உறுதியளித்தது.

ஆனால், அதிகாரத்திற்கு வந்ததும் கதை மாறியது. 2024 செப்டம்பர் முதல் 2025 மே வரையிலான காலத்தில் குறைந்தபட்சம் 12 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகப் பதிவாகியுள்ளதுடன், அன்றிலிருந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, 2025 இல் பயங்கரவாதத் தடைச் சட்டத்துடன் தொடர்புடைய 46 தடுப்புச் சம்பவங்களையும், 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மேலும் 12 சம்பவங்களையும் பதிவுசெய்துள்ளது. இஸ்ரேலிய எதிர்ப்பு ‘ஸ்டிக்கர்களை’ ஒட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் மற்றும் 2026 ஜூன் மாதத்தில் இசை வீடியோ ஒன்றின் காரணமாக 24 வயதான தமிழ் ஹிப்-ஹாப் கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமையும் இதில் அடங்கும். சாதாரண குற்றவியல் சட்டம் போதுமானதாக இருக்கும் சந்தர்ப்பங்களில் கூட இச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக உறுதியளித்த அரசாங்கம், இரண்டாண்டுகளுக்குள், அசாதாரண அதிகாரங்களைப் பெற்ற ஒவ்வொரு அரசாங்கமும் செய்வதையே – அதாவது அந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதை – தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

“எங்களை நம்புங்கள்” என்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை அல்ல

இப்போது அரசாங்கத்திற்கு இரண்டு புதிய சட்டங்கள் தேவைப்படுகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் ‘ பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ (PSTB) அக்டோபர் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ அன்றைய தினமே வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இவற்றிற்கு எழும் எதிர்ப்புகள் கட்சிச் சார்பானவை அல்ல. இச்சட்டமூலங்களின் பரந்த வரைவிலக்கணங்கள், நிர்வாகத் தடுப்பு அதிகாரங்கள் மற்றும் பிணை மீதான கட்டுப்பாடுகள் என்பன, பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அப்படியே தக்கவைத்துக்கொள்வதுடன், சிலவேளைகளில் அவற்றை மேலும் விரிவாக்கவும் செய்கின்றன.

ஒரு வருடம் வரை தடுப்புக்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு அல்லாமல் நிர்வாகத்திற்கே மாற்றப்படும். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டமூலமானது தலைமுடி வடிவமைப்பு, பச்சை குத்துதல், ஆடைகள், கை சமிக்ஞைகள் அல்லது தளர்வான “தொடர்புகள்” அடிப்படையில் ஒருவரை வன்முறைக் குழு உறுப்பினர் எனக் கருதுவதுடன், ஆஜர்படுத்தப்படும் நபரை விளக்கமறியலில் வைக்க நீதிபதியைக் கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள “கடுமையான குற்றங்கள்” பட்டியல் இருதார மணம், பதிப்புரிமை மீறல் மற்றும் உரிமமற்ற சூதாட்டம் வரை நீள்கிறது.

அதன் 46 மற்றும் 47 பிரிவுகள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களைச் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன: PSTA இனால் நீக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அதே பிரிவான இது, வரலாற்று ரீதியாகப் பலவந்தம் மற்றும் சித்திரவதையை ஊக்குவித்த ஒரு பிரிவாகும்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டமூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடக் கொடூரமானதாக இருக்கலாம் எனக் கூறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அதனைத் திரும்பப் பெறுமாறு கோருகிறது. சந்தேகநபர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்படுவதற்கு முன்னர் ஒரு வருடமும், வழக்கு விசாரணைக்கு முன்னர் மற்றொரு வருடமும் தடுப்புக் காவலில் வைக்கப்படலாம் என சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கிறது. சட்டத்தரணிகள், மதத்தலைவர்கள் மற்றும் உரிமைச் செயல்பாட்டாளர்களும் இதுபோன்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பேச்சாளர்கள், இந்தச் சட்டங்கள் எம்மாலோ அல்லது எமக்குக்குப் பின் வருபவர்களாலோ தவறாகப் பயன்படுத்தப்படும் என ஊகிக்க வேண்டாம் என்று கூறுகின்றனர்.

இது ஒரு தர்க்கம் அல்ல. அதிகாரம் எவ்வாறு தொழிற்படுகிறது என்பது பற்றிய அவர்களின் அனுபவம் சொற்பமானது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளதால், இது ஒரு வீண் பிரார்த்தனையாகும். சட்டம் அதை எழுதிய அமைச்சரால் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை, மாறாக ஒரு பிரிவைத் தனக்குப் புரியும் வழியில் வாசிக்கும் அடிமட்ட அதிகாரியாலேயே நடைமுறைப்படுத்தப்படுகிறது. மிகவும் பாதுகாப்பற்றவர்கள் ஏழைகள், கொழும்புக்கு வெளியே வாழ்பவர்கள் மற்றும் சட்டத்தரணி இல்லாத நபர்களாவர்.

தவிர, சட்டங்களை எழுதும் அரசாங்கங்களை விடச் சட்டங்கள் நீடித்து நிலைக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒன்பது ஜனாதிபதி பதவிக் காலங்களைக் கடந்து நின்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் மையமான ஜனதா விமுத்தி பெரமுன (JVP), இதை மற்ற எவரையும் விட நன்றாக அறிந்திருக்க வேண்டும். ‘கறுப்பு ஜூலை’ தொடர்பில் அதன் மீது பழியைப் போடுவது இலகுவெனக் கருதிய ஒரு அரசாங்கத்தால் 1983 இல் அது தடை செய்யப்பட்டது.

2019 ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற சுமார் 3 சதவீதத்திலிருந்து 2024 இல் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரை, நிலைமைகள் எவ்வளவு வேகமாக மாறக்கூடும் என்பதை தேசிய மக்கள் சக்தியும் (NPP) நன்கறியும். அதை அதிகாரத்திற்குக் கொண்டுவந்த அதே ஊசல், அதை மீண்டும் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியவும் கூடும். அவ்வாறு நிகழும்போது, அடுத்து பாதுகாப்பு அமைச்சின் பதவியை வகிப்பவருக்காக முழுமையாகத் ஆயத்தமாக்கப்பட்ட நிலையில் இந்தச் சட்டங்கள் காத்திருக்கும்.

உன்னதக் கொள்கையல்ல, யதார்த்த அரசியலே தேவை

ஜனநாயக அரசுகள் பாதுகாப்புச் சட்டங்களை அதிகாரத்திற்கு வரக்கூடிய மிகச்சிறந்த நபருக்காக அல்லாமல், அதிகாரத்திற்கு வரக்கூடிய மிக மோசமான நபரை மனதிற்கொண்டே தயார் செய்கின்றன. “மனிதர்கள் தேவதைகளாக இருந்தால், எந்த அரசாங்கமும் தேவையில்லை” என்று ஜேம்ஸ் மேடிசன் எழுதினார். ஜனநாயக அரசுகள், அதிகாரத்தில் இருப்பவர்களின் நற்பண்புகளை நம்பியிருப்பதற்குப் பதிலாக, சுயாதீன நீதித்துறை, குறுகிய வரைவிலக்கணங்கள், கால வரம்புகள் மற்றும் நாடாளுமன்ற மேற்பார்வை ஆகியவற்றையே நம்பியிருக்கின்றன. ஆட்சியாளரை நம்பலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் சட்டங்களை வரைவது சர்வாதிகார அமைப்புகள் மட்டுமே.

எதிர்க்கட்சியின் பெரும்பான்மையினரின் மௌனம் புரிந்துகொள்ளத்தக்கது என்றாலும், வியப்பளிக்கிறது. அங்கு அமர்ந்திருக்கும் பலர், மக்கள் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்ட மற்றும் இப்போது நாடாளுமன்றத்தின் முன் உள்ள சட்டமூலங்களின் முன்னோடிகளான 2018 பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தையும் (ACTA) 2023 பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தையும் (ATA) தயாரித்தவர்களாவர். தங்களால் முதல் வரைவு தயாரிக்கப்பட்ட ஒரு சட்டத்தை நம்பிக்கையுடன் கண்டிப்பது கடினம்.

எனவே, இது தொடர்பாக முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் பொறுப்பு சிவில் சமூகம், சட்டத்தரணிகள், மதத்தலைவர்கள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் மீதே விழுந்துள்ளது.

ஒரு ஆலோசனைக் குறிப்பு

ஜனாதிபதியும் அரசாங்கமும் பயங்கரவாதத்திற்கு அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தைத் பலவீனப்படுத்த வேண்டியதில்லை; இரண்டு அச்சுறுத்தல்களும் உண்மையானவை. அவர்கள் செய்ய வேண்டியது, தமக்கு முன்னிருந்தவர்கள் துஷ்பிரயோகம் செய்த, தமக்கு பின் வருபவர்கள் நிச்சயமாகத் துஷ்பிரயோகம் செய்யக்கூடிய இடைவெளிகளை அடைப்பதாகும். இதனைச் செய்வதற்கு, விதிக்கப்படும் சட்டங்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:

வரைவிலக்கணங்களைக் குறுகியதாக்குங்கள்: மாற்றுக் கருத்து, ஆதரவாகப் பேசுதல், அமைதியான போராட்டங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் ஊடகவியலைத் தெளிவாக விலக்கி வையுங்கள்; தோற்றத்தின் அடிப்படையிலான முன்முடிவுகளை அகற்றுங்கள்; “கடுமையான குற்றங்கள்” என்பதைச் உண்மையாகவே ஒழுங்கமைக்கப்பட்ட கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்துங்கள்.

தடுப்புக் காவல், கண்காணிப்பு மற்றும் பிணை வழங்கும் அதிகாரத்தை மீண்டும் நீதிபதிகளுக்கே வழங்குங்கள்: தடுப்பு உத்தரவுகள் இருக்கக்கூடாது; தொடர்பாடல்களை இடைமறிக்க அல்லது தொலைபேசியைத் திறக்க நீதிமன்ற பிடியாணை அவசியமாக்கப்பட வேண்டும்; ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் பிணையைத் தீர்மானிக்க நீதிபதிகளுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும்.

பொலிஸ் வாக்குமூலங்கள் மற்றும் பரிசீலிக்கப்படாத வதந்திகளை அகற்றுங்கள்: பொலிஸாரைச் சந்திக்கும் முதல் கணத்திலிருந்தே சட்டத்தரணி ஒருவரை இரகசியமாகச் சந்திக்கும் உரிமையை உறுதிப்படுத்துங்கள்.

வரைவு அறிக்கையை வெளியிடுங்கள்: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டமூலம் தொடர்பான நிபுணர் குழுவின் வரைவு அறிக்கை உட்பட வரைவு அறிக்கையை வெளியிட்டு, அதில் செய்யப்பட்ட ஒவ்வொரு மாற்றத்தையும் விளக்குங்கள்.

திருத்தங்களை மேற்கொள்வதற்காக இரண்டு சட்டமூலங்களையும் திரும்பப் பெறுங்கள்: அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டமூலத்தை, சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் ஒப்பந்தக் கடப்பாடுகளுக்கு அவசியமான விடயங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்துங்கள்.

எந்தவொரு அரசாங்கமும் குருட்டு நம்பிக்கைக்கு உரியதல்ல. ஒரு பாதுகாப்புச் சட்டத்தின் உண்மையான பரீட்சை என்பது அதன் தயாரிப்பாளர்கள் அதனைப் பயன்படுத்தும் முறை அல்ல, மாறாக அவர்கள் அதிகம் அஞ்சும் தரப்பினர் அதனை எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பதே ஆகும்.

ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் இந்தச் சட்டமூலங்களை உருவாக்கும் போது, இவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் தமது மிகக் கடுமையான எதிராளியின் கைக்குச் செல்லும் என்பதைச் சிந்தித்தே உருவாக்க வேண்டும். ஏனெனில், ஒரு நாள் அது நிகழக்கூடும்.

லயனல் போபகே