Photo, REUTERS
மீண்டும் ஒருமுறை, தூக்குமரத்தின் நிழல் இலங்கையின் கொள்கை விவாதங்களில் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. 2026 ஆகஸ்ட் 10 அன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடிய “ரடம எகட” தேசிய செயல்பாட்டுக் குழுக் கூட்டத்தில், நாட்டின் தீவிரமடைந்து வரும் போதைப்பொருள் நெருக்கடிக்கு தீர்வாக போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து பேசப்பட்டது. எனினும், இது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் தெளிவுபடுத்தியுள்ளார். அத்தகைய முடிவு எதுவுமே எடுக்கப்படுவதற்கு முன், கொள்கை வகுப்பாளர்கள் வரலாறு, சான்றுகள் மற்றும் நாடு உயர்த்திப்பிடிப்பதாகக் கூறும் விழுமியங்கள் குறித்து சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
இங்கு முன்வைக்கப்படும் நிலைப்பாடு மிகத் தெளிவானது: குற்றத்தின் தன்மையோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரோ யாராக இருப்பினும், எந்தச் சூழ்நிலையிலும் மரண தண்டனை எதிர்க்கப்பட வேண்டும்; அதை அமுல்படுத்தக் கூடாது.
ஒருபோதும் பலன் தராத தொடர்ச்சியான தூண்டுதல்
இலங்கையில் 1976ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தவொரு மரண தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை. அரை நூற்றாண்டுகால இந்த நடைமுறைத் தடை என்பது தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்று அல்ல, மாறாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு மனிதநேய விடயமாகும். ஆனால், இந்தக் கடந்த ஐந்து தசாப்தங்களாக, குற்றங்கள் குறித்த பொதுமக்களின் கவலையைப் பயன்படுத்தி, அடுத்தடுத்து வந்த தலைவர்கள் மரண தண்டனையை மீண்டும் கொண்டுவரப் போவதாக அவ்வப்போது மிரட்டி வந்துள்ளனர். 1999 இல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவ்வாறு செய்தார். பிலிப்பைன்ஸின் கொடூரமான ‘போதைப்பொருளுக்கு எதிரான போரை’ வெளிப்படையாகப் பாராட்டி, போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான பிடியாணைகளில் கையெழுத்திட்டதன் மூலம், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு படி மேலே சென்று அதிகபட்ச நடவடிக்கையை மேற்கொண்டார்; உச்ச நீதிமன்றம் அதைத் தடுத்து நிறுத்தும் வரையிலும், வாக்காளர்கள் அவரைப் பதவியிலிருந்து நீக்கும் வரையிலும் அது தொடர்ந்தது.
எந்தவொரு தீவிரமான கொள்கை வகுப்பாளரும் கவனிக்க வேண்டிய உண்மை இதுதான், இந்தக் காலம் முழுவதிலும் இலங்கையின் சட்டப் புத்தகங்களில் மரண தண்டனை அமுலில்தான் இருந்துள்ளது. கொலை மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்கு நீதிமன்றங்கள் தொடர்ந்து மரண தண்டனை விதித்து வருகின்றன; ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் மரண தண்டனைப் பிரிவில் இருக்கின்றனர். மரண தண்டனை என்ற ஒன்று சட்டத்தில் இருப்பது மட்டுமே குற்றங்களைத் தடுக்கும் என்றால், இலங்கை எப்போதோ கொலைகள் மற்றும் போதைப்பொருட்களற்ற நாடாக மாறியிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. தூக்குக்கயிறு தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த தசாப்தங்களில்தான், போதைப்பொருள் வர்த்தகம் மேலும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், சர்வதேச அளவிலும் அதிக இலாபம் ஈட்டுவதாகவும் மாறியுள்ளது. வன்முறைக் குற்றங்களையோ அல்லது போதைப்பொருள் அச்சுறுத்தலையோ கட்டுப்படுத்துவதில் இந்தத் தண்டனை முற்றிலும் தோற்றுவிட்டது என்பது தெளிவாகிறது. வெறும் தண்டனை அறிவிப்போடு நிறுத்தாமல் அதை நடைமுறையில் நிறைவேற்றுவது கூட இந்த சட்டவிரோத வர்த்தகத்தின் பொருளாதாரத்தை மாற்றிவிடாது. ஏனெனில், இதன் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல்கள் போதைப்பொருள் கொண்டு செல்பவர்களைப் பொருட்படுத்துவதில்லை. தங்களின் அசாத்திய இலாப வரம்பிற்குள் இத்தகைய தீவிர ஆபத்துகளையும் ஒரு காரணியாகச் சேர்த்தே கணக்கிடுகிறார்கள்.
மேலும், உண்மையில் மரண தண்டனைப் பிரிவில் யார் போய் முடிகிறார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது. அவர்கள் நிதி வழங்குபவர்களோ, பணத்தைச் சுத்திகரிப்பவர்களோ அல்லது அரசியல் பாதுகாப்புப் பெற்ற முக்கிய புள்ளிகளோ அல்ல. அவர்கள் திறமையான சட்டப் பாதுகாப்பைப் பெற வசதியற்ற ஏழைப் போதைப்பொருள் கடத்துபவர்கள், அடிமையானவர்கள் மற்றும் சிறிய மட்ட ஆட்களே ஆவர். நீண்டகால விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவல், போதிய வளங்களற்ற தடயவியல் சேவைகள் மற்றும் சில சமயங்களில் கட்டாயப்படுத்தப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றால் நிறைந்துள்ள ஒரு நீதி அமைப்பில் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இத்தகைய அமைப்பில், மரண தண்டனையை நிறைவேற்றுவது நிரபராதிகளைக் கொன்றுவிடும் மீளமுடியாத ஆபத்தைக் கொண்டுள்ளது. தவறாக நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனையை எந்த அரசுராலும் சரிசெய்ய முடியாது.
சர்வதேச அனுபவங்கள் கற்பிக்கும் பாடம்
மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் வெளிநாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், சர்வதேசப் பதிவுகள் வேறு திசையையே காட்டுகின்றன. டுதெர்தேவின் தலைமையிலான பிலிப்பைன்ஸ், நமது காலத்தின் மிகவும் கொடூரமான தண்டனைப் பரிசோதனையை மேற்கொண்டது: ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் (பெரும்பாலும் நகர்ப்புற ஏழைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்), சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) விசாரணைக்கு உள்ளானது. ஆனால், போதைப்பொருள் சந்தையோ அதற்குத் தகவமைத்துக் கொண்டு தொடர்ந்து இயங்குகிறது. மற்றொரு உதாரணமான சிங்கப்பூர், ஒரு சிறிய, பணக்கார, கடுமையான பொலிஸ் கண்காணிப்பு மற்றும் குறைந்தபட்ச ஊழல் கொண்ட நகர அரசு ஆகும். இந்த நிலைமைகள் இலங்கையின் நிலைமைகளுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாதவை; இருப்பினும் அங்கேயும் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் நிற்கவில்லை. பரந்த கடல் எல்லைகளையும், அழுத்தத்தில் உள்ள நிறுவனங்களையும் கொண்ட ஒரு தீவு நாட்டிற்கு அந்த மாதிரியை மாற்ற முடியாது.
இதற்கு நேர்மாறாக, போர்த்துக்கல் 2001ஆம் ஆண்டில் ஹெரோயின் நெருக்கடியை முற்றிலும் வேறு திசையில் எதிர்கொண்டது. போதைப்பொருள் அடிமைத்தனத்தை ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாகப் பார்த்தது, தனிநபர் பயன்பாட்டைக் குற்றமற்றதாக்கியது. மேலும் கடத்தல் வலைப்பின்னல்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்த பொலிஸாருக்குச் சுதந்திரம் அளித்தது. இதனால், போதைப்பொருளால் ஏற்படும் மரணங்கள் வியத்தகு முறையில் குறைந்தன, இளைஞர்களின் பயன்பாடும் சரிந்தது. மரண தண்டனைக்கு உலகளாவிய தடை கோரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானங்களை இலங்கை 2016 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் ஆதரித்தது. சர்வதேச சட்டம் மரண தண்டனையைக் கருத்தில் கொள்ளும் “மிகவும் கடுமையான குற்றங்கள்” என்ற வரம்பிற்குள் போதைப்பொருள் குற்றங்கள் வரவில்லை என்பதை ஐ.நா. தெளிவாகக் கூறியுள்ளது. மரண தண்டனையை மீண்டும் அம்ல்படுத்துவது, ICCPR இன் கீழ் இலங்கையின் கடமைகளை மீறுவதாக அமையும். GSP+ வரிச் சலுகைகளை இழக்க நேரிடும் மற்றும் இந்த நடைமுறையை ஒழித்த நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிடமிருந்து இலங்கையை தனிமைப்படுத்தும்.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு பயனுள்ள பதில்கள் ஆடம்பரமற்றவை, ஆனால் நிரூபிக்கப்பட்டவை. போதைப்பொருள் கொண்டு செல்பவர்களின் உடல்களை இலக்கு வைப்பதற்குப் பதிலாக, கடத்தல் கும்பல் தலைவர்களின் செல்வத்தை இலக்கு வைக்கும் நிதி உளவுத்துறை, தீவிர சொத்து பறிமுதல், பிராந்திய பங்காளிகளுடன் இணைந்து நவீனமயமாக்கப்பட்ட கடல்சார் தடுப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க பிரத்யேக நீதிமன்றங்கள் மற்றும் பயனர்களை சிறைகளிலிருந்தும் சில்லறை சந்தையிலிருந்தும் வெளியேற்றும் சமூகம் சார்ந்த, மருத்துவ ரீதியிலான மறுவாழ்வு ஆகியவையாகும். தேசிய ஆற்றலும் வளங்களும் இங்குதான் திருப்பி விடப்பட வேண்டும்.
கொள்கை மற்றும் நினைவுகளோடு தொடர்புபட்ட விடயம்
மக்கள் விடுதலை முன்னணி (JVP) 1970கள் முதலே கொள்கை ரீதியாக மரண தண்டனையை எதிர்த்து வந்துள்ளது. அரசின் தண்டனை சார்ந்த படுகொலைகளை நீதியின் அடையாளமாகப் பார்க்காமல் அடக்குமுறையின் கருவியாகவே அது பார்த்தது. பின்னாளில் அரசாங்கங்கள் மரண தண்டனையை மீண்டும் கொண்டுவர முயன்ற போதெல்லாம், JVP அதை அரசின் ஊழல் மற்றும் போதைப்பொருள் பிரச்சினையின் சமூக மூல காரணங்களை எதிர்கொள்ளத் தவறியதை திசைதிருப்பும் “பிரச்சார நாடகம்” எனக் கூறி தொடர்ச்சியாக எதிர்த்தது. அந்த அரசியல் பாரம்பரியத்தால் வழிநடத்தப்படும் ஒரு அரசாங்கமே, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தூக்குமேடையைத் திறக்கும் அரசாங்கமாக மாறினால், அது ஒரு கசப்பான முரண்நகையாக அமையும்.
அவசரகாலச் சட்டம், கிளர்ச்சிகளை ஒடுக்குதல் மற்றும் படுகொலைப்படைகள் ஆகியவற்றின் மூலம் இலங்கை அரசு எல்லையற்ற படுகொலைகளை நிகழ்த்திய காலகட்டங்களில் வாழ்ந்தவர்களிடமிருந்தும், அக்காலகட்டத்தில் தங்கள் தோழர்களையும் சக குடிமக்களையும் இழந்தவர்களிடமிருந்தும் இந்த எச்சரிக்கை வருவதால், இது ஒரு சிறப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. உயிரைப் பறிக்கும் உரிமையை அரசு கோரும் போது என்ன நடக்கும் என்பதை இலங்கை சமூகம் அறியும். நீதித்துறை வடிவில் அந்த உரிமையை மீட்டெடுப்பது அதைத் தூய்மைப்படுத்தாது; மாறாக அதை இயல்பாக்கும். அரசியலமைப்பின் உறுப்புரை 11 கொடூரமான, மனிதத்தன்மையற்ற மற்றும் அவமதிப்பான தண்டனைகளைத் தடை செய்கிறது. நாட்டின் மதப் பாரம்பரியங்களும் உயிரின் புனிதத்தையும், மனிதன் திருந்துவதற்கான ஆற்றலையும் உறுதிப்படுத்துகின்றன.
போதைப்பொருள் நெருக்கடி உண்மையானது, பொதுமக்களின் கோபமும் நியாயமானது. இருப்பினும், கொள்கை வகுப்பாளர்கள் மற்றவர்களின் உயிரைக் கொண்டு கடுமையானவர்கள் போல நடிக்காமல், ஆதாரங்களுடன் வழிநடத்தவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மரண தண்டனை குற்றத்தைத் தடுப்பதில் தோற்றுவிட்டது, நீதியாகவும் தோற்றுவிட்டது. மேலும் கொள்கை ரீதியாகவும் இலங்கைக்குத் தோல்வியையே தரும். அரசாங்கம் இந்த முன்மொழிவை நிராகரிக்க வேண்டும், அதை முழுமையாக ஒழிப்பதை நோக்கி நகர வேண்டும், எந்தவொரு அரசும் தனது மக்களின் பெயரால் கொலையில் ஈடுபடக் கூடாது என்று முடிவெடுத்துள்ள உலக நாடுகளின் சமூகத்தில் இலங்கையும் இணைய வேண்டும்.
லயனல் போபகே