1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் “நீதித்துறையின் சுதந்திரம்” எனும் பிரிவில் உள்ள உறுப்புரை 107(5) இன் படி, உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற வேண்டிய வயது குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு அவர்களின் ஊதியத்தைக் குறைக்க முடியாது என உறுப்புரை 108 தெளிவாகக் கூறுகிறது.
இங்கு இந்த இரண்டு விடயங்களுக்கும் இடையே ஏதேனும் ஒற்றுமை உள்ளதா? ஊதியத்தைக் குறைக்க முடியாது என்பதைப் போலவே, ஓய்வுபெறும் வயதையும் குறைக்க முடியாது என்று முடிவு செய்வது நியாயமானதாகத் தோன்றுகிறது. ஏனெனில், இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் நீதிபதிகளுக்கு உரிய ஒரு உரிமை அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழலில் எழுந்துள்ள முக்கிய கேள்வி என்னவென்றால் நீதிபதிகளுக்குப் புதிதாக ஒரு சலுகையை/நன்மையை வழங்க முடியுமா என்பதாகும்.
மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொறுப்புடைய நபர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்குத் தேவையான பின்னணியை உருவாக்குவதில் எழும் சவால்கள் குறித்து எனக்குப் புரிதல் உள்ளது. இதில் நீதி வழங்கப்படுவது மட்டும் போதுமானதல்ல; நீதி வழங்கப்படுகிறது என்பது சமூகத்திற்குத் தெளிவாகப் புலப்பட வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளில் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதன் மூலமும், அமெரிக்காவில் சுயாதீன ஒழுங்குமுறை (Independent Regulation) தொடர்பான நீண்டகால அனுபவம் மற்றும் அந்தப் பாடத்தைக் கற்பித்ததன் மூலமும் நான் இந்த அனுபவத்தைப் பெற்றுள்ளேன்.
மிரட்டல்களும் சலுகைகளும்
ஒரு கழுதையை விரும்பிய திசையில் ஓட்டிச் செல்வதற்கு மிரட்டலையும் (Sticks – குச்சிகள்) உபயோகப்படுத்தலாம், ஊக்குவிப்புகளையும் (Carrots – கேரட்கள்) பயன்படுத்தலாம்.
1978 அரசியலமைப்பும் சரி, ஒழுங்குமுறை முறைகளும் சரி ஒரு விடயத்தில் மிகத் தெளிவாக உள்ளன. சுயாதீனமாகச் செயல்பட வேண்டிய நபர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு ஜனாதிபதிக்கு அல்லது நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதன் மூலம் அவர்களை அச்சுறுத்தி செல்வாக்கு செலுத்த முடியாது.
ஆனால், சலுகைகளை வழங்குவது (Carrots) தொடர்பான நிலைமை என்ன? அவர்களைத் தூண்டுவதற்கு சில ஊக்குவிப்புகளையோ அல்லது பரிசுகளையோ வழங்க முடியுமா?
1978 அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், நீதிபதிகளின் சம்பளத்தையோ அல்லது ஓய்வுபெறும் வயதையோ உயர்த்துவதை நேரடியாகத் தடை செய்யவில்லை. ஒழுங்குமுறைத் துறையில் முடிவெடுப்பவர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இத்தகைய சலுகைகள் வழங்கப்படுவதைத் தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். வழக்கமாகச் சம்பளம் என்பது வெளிப்புறக் காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, நாடாளுமன்றத்தின் அல்லது ஜனாதிபதியின் விருப்பத்தின் அடிப்படையில் அல்ல.
ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது என்பது, சம்பளத்தை உயர்த்துவதற்கு இணையான ஒரு சலுகையா? பெண்களின் சராசரி ஆயுட்காலம் 80 ஆண்டுகளாகவும், ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 76 ஆண்டுகளாகவும் இருக்கும் நமது நாட்டில், இது உண்மையிலேயே ஒரு பெரிய நன்மையாகும்.
ஒரு வேலை என்பது வெறும் பணம் சம்பாதிப்பது மட்டும் அல்ல; அது ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகிறது, சமூக அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் அளிக்கிறது. குறிப்பாக, ஓய்வுபெற்ற பிறகு வேறு பதவிகளைப் பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் போது, ஒருவர் ஓய்வுபெறுவதை அச்சத்துடன் பார்க்க வாய்ப்புள்ளது.
அப்படியானால், உறுப்புரை 107 இல் குறிப்பிட்டுள்ள ஓய்வுபெறும் வயதை எந்த வகையிலும் மாற்ற முடியாதா?
தீர்வு
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் ஒரு புதிய விதியைச் சேர்க்கலாம்.
இந்த ஓய்வுபெறும் வயது மாற்றம், தற்போது சேவையாற்றும் உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகளுக்குப் பொருந்தாது என்றும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் செய்யப்படும் புதிய நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அதில் தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்.
22ஆவது திருத்தம் சட்டமான பிறகு, தற்போது சேவையாற்றும் வேறு நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்திற்கோ அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கோ நியமிக்கப்படலாம். அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்தோ அல்லது தனியார் சட்டத்தரணிகள் குழுவில் இருந்தோ ஒருவர் நியமிக்கப்படலாம். அவர்களின் ஓய்வுபெறும் வயது, இந்த மாற்றத்திற்கு முன்னர் அந்த நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை விட அதிகமாக இருக்கும்.
காலப்போக்கில் உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் அதிக ஓய்வுபெறும் வயதுச் சலுகையை அனுபவிக்க முடியும். ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட மாட்டாது; தற்போது சேவையாற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றப்படாது.
இதன் மூலம் ஒரு மிக முக்கியமான சிக்கலைத் தவிர்க்க முடியும்: 22ஆவது திருத்தத்தை பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே உள்ளது.
புதிய சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது எனும் போது, அவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக முடிவெடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தவிர்க்கப்படும். தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் இந்தத் தீர்மானத்திலிருந்து அவர்கள் அனைவரும் விலகியிருக்க முடியாது. ஏனெனில் யாராவது ஒருவர் இந்த விஷயத்தில் தீர்மானம் வழங்கித்தான் ஆக வேண்டும்.
அரசாங்கத்தின் தரப்பிலிருந்து ஓய்வுபெறும் வயது குறித்து இத்தகைய ஒரு நடுத்தர உடன்பாட்டிற்கு வருவதன் மூலம் தற்போது நிலவும் சமூக அமைதியின்மை தணியும். மேலும், எந்தவித பட்சபாதமுமின்றி, நாட்டில் பணிபுரியும் அனைத்து மக்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது குறித்து நடத்தப்பட வேண்டிய தேசிய அளவிலான உரையாடலைத் தொடங்குவதற்கும் இது ஒரு பொருத்தமான சூழலை உருவாக்கும்.
ஓய்வுக்குப் பிந்தைய நியமனங்கள்
ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ஓய்வுக்குப் பிறகு என்னென்ன நியமனங்களை வழங்கலாம் என்பது குறித்த சட்ட விதிகளை உள்ளடக்குவதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும். முன்மொழியப்பட்ட 22ஆவது திருத்தத்தை மேலும் திருத்துவதற்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை அரசாங்கம் இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் என நம்புகிறேன்.
தற்போது நடைமுறையில் உள்ளவாறு, சில ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு மட்டும் தூதுவர் பதவிகளை வழங்குவது மிகவும் சிக்கலானது. எனவே, அனைத்து ஓய்வுபெற்ற நீதிபதிகளும் பெறக்கூடிய தகுதியான பதவிகள் எவை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
இணக்கசபைகள் / மத்தியஸ்த வாரியங்களின் (Arbitration Boards) உறுப்பினர் பதவி, பல்கலைக்கழக சபைகள் (University Councils), ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் (Presidential Commissions) ஆகியவை அதற்கு நல்ல உதாரணங்களாகும்.
இதன் மூலம், ஜனாதிபதி தனக்கு வேண்டிய நீதிபதிகளுக்கு மட்டும் பரிசாகப் பதவிகளை வழங்குகிறார் என்ற சமூகத்தின் சந்தேகத்தைத் தவிர்க்கலாம். மேலும், நீதிபதிகள் ஓய்வுபெறுவதற்கு முன் வழங்கும் தீர்ப்புகளுக்காக அரசாங்கத்திடமிருந்து அழுத்தங்கள் வருவதையும் இதன் மூலம் தடுக்க முடியும்.
பேராசிரியர் ரொஹான் சமரஜீவ
‘அனித்தா’ பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.