Photo, PURSUIT

16 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆஸ்திரேலியாவின் உலகின் முதலாவது சமூக ஊடகத் தடையானது ஒரு புள்ளிவிவரத்தை உருவாக்கியுள்ளது. இலங்கைச் சட்டமியற்றுபவர்களும், நமது பிரதமரும் இது போன்றதொரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னர், இப்புள்ளிவிவரத்தை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட, மதிப்பாய்வுக்குட்பட்ட (Peer-reviewed) BMJ ஆய்வு ஒன்று, இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரும் மற்றும் வந்த மூன்று மாதங்களுக்குப் பின்னருமாக 408 இளம் பருவத்தினரைக் கண்காணித்தது. இத்தடையின் கீழ் வரும் சமூக ஊடகத் தளங்களை 16 வயதிற்குட்பட்டவர்களில் 85%-க்கும் அதிகமானோர் இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர்; அவர்களில் பெரும்பாலானோர் தங்களது சொந்தக் கணக்குகளின் மூலமாகவே இதனைச் செய்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கினர், சமூக ஊடகத் தளங்களின் வயது சரிபார்ப்பு முறைகளை தங்களது பிறந்தநாளைக் குறிப்பிடுவதன் மூலமாகவே மிகவும் எளிதாகக் கடந்துவிடுகின்றனர். நம்மை விடப் பன்மடங்கு சிறந்த வளங்களைக் கொண்ட ஒரு நாடே இத்தகையதொரு சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறும் போது, இலங்கை இதனைச் செய்யும் என்ற எந்தவொரு வாதமும் ஒரு தீவிரமான ஒன்றாக இருக்க முடியாது.

இந்த ஆய்வு ஒரு சிறிய அளவிலான மாதிரியைக் (modest sample) கொண்டிருந்ததுடன், ஆரம்பக்கட்ட விளைவுகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. மேலும், இது குறித்து கருத்துத் தெரிவிப்பவர்கள், இச்சட்டம் ஒரு தலைமுறையின் பழக்கவழக்கங்களை மாற்றுகிறதா என்பதை அறிவதற்கு ஆஸ்திரேலியா உட்பட அரசாங்கங்களுக்கு ஒரு தசாப்தம் அல்லது அதற்கு மேல் தேவைப்படலாம் எனக் குறிப்பிடுகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்கக்கூடும் என்ற போதிலும், ஒரு தலைமுறை சார்ந்த கருதுகோளால் (generational hypothesis) இன்றைய கட்டுப்பாடுகள் பலனளிக்கின்றனவா என்பதைக் காட்ட முடியாது; அதேபோல, இதனால் குழந்தைகள் எவற்றை இழக்கிறார்கள், அவர்கள் எங்கு இடம்பெயர்கிறார்கள் (மாற்றுத் தளங்களை நாடுகிறார்கள்) அல்லது அரசு இதற்கான முடிவுக்காகக் காத்திருக்கும் வேளையில் எத்தகைய கண்காணிப்பு உள்கட்டமைப்பை உருவாக்குகிறது என்ற கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாது.

இதற்கான ஒரு பயனுள்ள முரண்பாடான உதாரணம் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து (EU) கிடைக்கிறது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன், தம்மால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், கல்வியாளர்கள், இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்களைக் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட பின்னர், சமூக ஊடகங்களுக்கான “கட்டங்கட்டமான மற்றும் படிப்படியான அணுகுமுறைக்கு” அழைப்பு விடுத்தார். அதாவது, 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு மேற்பார்வையின் கீழ் பயன்படுத்த அனுமதிப்பதும், 18 வயது வரையிலான இளம் பருவத்தினருக்குப் போதுமான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட தளங்களில் “படிப்படியாக வளரும் சுயாதீன பயன்பாட்டை” வழங்குவதுமாகும்.

அந்த நிபுணர் குழு முழுமையான தடையொன்றைப் பரிந்துரைக்கத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது; பிரான்ஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் ஆஸ்திரேலியா பாணியிலான தடையை முழுப் பிராந்தியத்திலும் அமுல்படுத்த அழுத்தம் கொடுத்த போதிலும், வொன் டெர் லேயன் அதற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டார்.

நமது நாட்டு கொள்கை வகுப்பாளர்கள் இந்த வரிசைமுறையை ஆராய வேண்டும்: முதலில் சான்றுகள், தடைக்கு முன்னுரிமை தராமல் தளங்களின் மீதான பொறுப்புக்கூறல், அதன் பின்னர் இந்த ஆண்டு கோடைகாலத்திற்குப் பிந்தைய சட்டமியற்றல். ஆஸ்திரேலியா ஏற்கனவே சட்டத்தை இயற்றியுள்ளது, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இது குறித்து ஆலோசித்து வருகின்றன, மேலும் ஐரோப்பிய ஒன்றியம் இதற்கான வரைவை உருவாக்கி வருகிறது. ஆனால், இலங்கையோ மற்ற இடங்களில் இதற்கு முன்னதாக இடம்பெற்ற நிபுணர் குழுக்கள், சான்றுகளின் மீதான ஆய்வுகள் மற்றும் பொது விவாதங்கள் எவற்றையும் விடுத்து, வெறும் தடையை மட்டும் இறக்குமதி செய்ய ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடை குறித்த தனிநபர் சட்டமூலம் பற்றி BBC Sinhala ஊடகத்துடன் கலந்துரையாடும் போது, நான் ஒரு எளிமையான கேள்வியை முன்வைத்தேன். அதாவது, “இது துல்லியமாக எவ்வாறு செயல்படும்?” பல நாடுகளைப் போலவே இலங்கையிலும் இந்த உரையாடல் இப்பகுதியைத் தவிர்த்துவிட்டது. இதற்கான சங்கடமான உண்மை என்னவென்றால், இதற்கு ஒரே ஒரு வழிமுறைதான் உள்ளது. 16 வயதிற்குட்பட்டவர்களை ஒரு தளத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டுமானால், அதில் உள்ள ஒவ்வொரு நபரின் வயதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் – வெறும் குழந்தைகளை மட்டுமல்ல, வயதுக் கட்டுப்பாட்டு (age-gating) முறைமையின் மூலம் ஒட்டுமொத்தப் பயனர் தளமும் தாங்கள் யார் என்பதை நிரூபிக்க நிர்பந்திக்கப்பட வேண்டும். பொதுவாக, தேசிய அடையாள அட்டை (NIC), ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு (Passport) போன்றவற்றை அந்தத் தளத்திலோ அல்லது ஏதேனும் ஒரு இடைத்தரகரிடமோ சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். இளைஞர்களை மட்டும் சரிபார்க்கும் எந்தவொரு வடிவமும் இதில் இல்லை. ஒரு சிலரை விலக்கி வைப்பதற்கான விலை, பெரும்பான்மையினரைச் சரிபார்ப்பதே ஆகும்.

அங்குதான் சிக்கல் நீடிக்கிறது.

அவசரகால அதிகாரங்கள், கண்காணிப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒடுக்குமுறைகள் ஆகியவற்றால் ஜனநாயக நிறுவனங்கள் பலவீனமடைந்துள்ள ஒரு நாட்டில், சட்டப்பூர்வ அடையாளத்தை இணையத்தள வருகையுடன் பிணைக்கும் ஒரு வழிமுறையானது ஒரு நடுநிலையான தொழில்நுட்பத் தீர்வு அல்ல. ஒரு கணக்குடன் உண்மையான பெயரை அரசால் இணைக்க முடியுமாயின், அது நினைத்தால் – மிகவும் எளிதாக – தான் மௌனிக்க விரும்பும் நபர்களைத் துல்லியமாகக் கட்டுப்படுத்த முடியும். நீடித்த போருக்குப் பிந்தைய இராணுவமயமாக்கல் மற்றும் தசாப்தங்களாக நிலவும் பரவலான கண்காணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கையில் கொண்டுவரப்படும் வயதுச் சரிபார்ப்பு முறைமையானது கருத்து வெளிப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கும், கருத்து வேறுபாடுகளைப் பட்டியலிடுவதற்கும் அல்லது குறிப்பிட்ட சமூகங்களைக் கட்டுப்படுத்துவதற்குமான ஒரு அடையாள அடுக்காக மாறுவதைத் தடுப்பது எது? இந்த அச்சுறுத்தலுக்கும் சவாலுக்கும் பிற நாட்டு அரசாங்கங்களும் நேரடியான எந்தப் பதிலையும் வழங்கவில்லை. கொடூரமான ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் (OSA) அவசரமாக நிறைவேற்றப்பட்ட விதம் போலவே, குழந்தைப் பாதுகாப்பு என்பதும் ஓர் ‘ஆர்விலியன்’ (Orwellian) கட்டுப்பாட்டுக் கட்டமைப்பிற்கான அரசியல் ரீதியாகக் கவரக்கூடிய ஒரு பெயராக இருக்கக்கூடும்.

இந்தத் தடைகளை நியாயப்படுத்துவதற்காகப் பலர் புகையிலையை ஒரு உவமையாகக் கையாள்கின்றனர், இருப்பினும், இந்த உவமை உண்மைகளை விளக்குவதை விட மறைப்பதாகவே உள்ளது. சிகரெட்டுகள் ஒரு கிராமப்புற இளைஞனுக்குக் கற்ற சமூகத்தை வழங்குவதில்லை, வீட்டில் ஆதரவற்ற ஒரு மாற்றுப் பாலினக் (queer) குழந்தையை வெளியில் ஆதரவுத் தரப்புக்களுடன் இணைப்பதில்லை, மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் தனது தனிமையைக் கடக்க உதவுவதில்லை அல்லது வாக்களிக்கும் வயதை நெருங்குபவர்களுக்கும் மற்றும் ஏற்கனவே அரசியல் ரீதியாகக் குரல் கொடுப்பவர்களாகவோ அல்லது தீவிரமாகவோ இருப்பவர்களுக்கும் அரசியல் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதுமில்லை. சமூக ஊடகங்கள் தீமை விளைவிக்கின்றன, ஆனால் அவை இளைஞர்கள் வாழும் சமூக மற்றும் குடிமை உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றன, இன்றைய 16 வயது இளைஞர்கள் இதனுடன்தான் வளர்ந்துள்ளனர். எனவே, இதனை ஒரு நச்சுப் பொருளாக மட்டும் கருதுவது அதற்கேற்ப ஒரு முதிர்ச்சியற்ற கொள்கையையே உருவாக்கும்.

இங்குள்ள தீங்கு உண்மையானது என்பதுடன், இது 2012ஆம் ஆண்டிலிருந்து சமூக ஊடகங்கள் குறித்து நான் மேற்கொண்ட ஆய்வுகளுடன் தொடர்புடையதாகும். செயற்கை நுண்ணறிவின் (AI) வருகையுடன் இது படிப்படியாக மேலும் மோசமடைந்துள்ளது. ஏனைய தீய விளைவுகளுடன் சேர்த்து, சுய-தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை எதிர்கொள்ளுதல், வெளிப்படையான பாலியல் பொருட்கள், வன்முறை, இணையவழி துன்புறுத்தல் (bullying), தூக்கச் சீர்குலைவு, தீவிரமான போதைப்பயன்பாடு (compulsive use) மற்றும் நடத்தை சார்ந்த விவரக்குறிப்பீடு (behavioural profiling) ஆகியவற்றை கல்வியியல் ஆய்வுகள் விவரிக்கின்றன.

தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கப் பகிர்வுகள் (personalised feeds), autoplay, infinite scroll மற்றும் பரிந்துரை முறைமைகள் (recommender systems) ஆகியவற்றுடன் இந்தத் தீங்கு விளைவிக்கும் வெளிப்பாட்டைப் பிற ஆய்வுகள் தொடர்புபடுத்துகின்றன – மேலும், ஐரோப்பிய ஒன்றியம், குழந்தைகளின் மீது அல்ல, அதன் வடிவமைப்புக்கு (design) எதிராகவே நடவடிக்கை எடுத்துள்ளது.

தனது நிபுணர் குழுவின் அறிக்கையைப் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ஐரோப்பிய ஆணையம் (European Commission) மெட்டா (Meta) நிறுவனத்திற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அதாவது, Facebook மற்றும் Instagram ஆகியவற்றின் infinite scroll, autoplay வீடியோக்கள், மூளையை “தானியங்கி நிலைக்கு” (autopilot mode) மாற்றும் பரிந்துரைகள் போன்ற “அடிமையாக்கும்” வடிவமைப்பு உள்கட்டமைப்பானது, இளம் பயனர்களிடையே கட்டாய பயன்பாட்டைத் தூண்டுகிறது என்றும், இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது உலகளாவிய வருடாந்தி வருவாயில் 6% வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. வழக்கம் போல், மெட்டா இதனை மறுக்கிறது.

அதிகப்படியான பயன்பாட்டிற்கும் பதற்றம் (anxiety) அல்லது மனச்சோர்வுக்கும் (depression) இடையிலான தொடர்பை உளநல ஆய்வுகள் பதிவு செய்துள்ள போதிலும், அதற்கான ஒரேயொரு காரணத்தை மட்டும் அவை திட்டவட்டமாக நிறுவவில்லை. “சமூக ஊடகம்” என்பது அல்காரிதம் அடிப்படையிலான பதிவுகள், தனிப்பட்ட செய்தியிடல், நேரடி ஒளிபரப்பு (livestreaming) மற்றும் உளநல ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கியது; இதனால் ஏற்படும் தீங்குகள் வெவ்வேறு வழிகளில் பயணிக்கின்றன. இவை அனைத்தையும் ஒரே பிரச்சினையாகக் கருதி, ஒரேயொரு வயது வரம்பை அதற்கான தீர்வாக முன்வைக்கும் ஒரு சட்டமானது, அதன் அவசியத்தையோ அல்லது விகிதாசாரத்தன்மையையோ (proportionality) நிரூபிக்காது; நிரூபிக்கவும் முடியாது.

மேலும், ‘குழந்தைகளின் உரிமைகள்’ என்ற ஒன்றும் இருக்கிறது, இதைப் பற்றி சமூக ஊடகங்களைக் கண்காணிக்க (policing) முற்படும் எந்தவொரு கொள்கை வகுப்பாளரும் பேசுவதே இல்லை. குழந்தைகளின் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் (Convention on the Rights of the Child) 12ஆவது உறுப்புரை, குழந்தைகளைப் பாதிக்கும் விடயங்களில் அவர்களின் கருத்துக்களுக்கு நாடுகள் செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும், General Comment No. 25 அந்தப் பொறுப்பை டிஜிட்டல் சூழலுக்கும் விரிவுபடுத்துகிறது.

ஆபத்துகள், நன்மைகள் மற்றும் தீர்வுகளை பெரியவர்களும் குழந்தைகளும் பெரும்பாலும் வெவ்வேறு வழிகளிலேயே புரிந்துகொள்கின்றனர்: இளைஞர்கள் பாதுகாப்பை ஆதரிக்கிறார்கள், ஆனால் தங்களின் இணைய வாழ்க்கையை அரசாங்கம் கட்டுப்படுத்துவதை விட, அல்காரிதம்கள் மீதான கட்டுப்பாடு, சிறந்த முறைபாடளிக்கும் முறைகள் மற்றும் பாடசாலைகளின் ஆதரவு ஆகியவற்றையே அவர்கள் விரும்புகின்றனர். இளைஞர்களுடனான கலந்தாலோசனையானது சட்ட உருவாக்கத்தை வடிவமைக்க வேண்டும்; மாறாக, ஒரு மோசமான சட்டம் அவசரமாக இயற்றப்பட்ட பின்னர், வெறும் பெயரளவிலான (performative) ஒரு சடங்காக அது அமைந்துவிடக்கூடாது.

இலங்கைக்கு இதைவிடச் சிறந்த தெரிவுகள் உள்ளன. குறிப்பாக, “சமூக ஊடகத் தளங்கள் தங்களது சேவைகள் எந்தத் தீங்கையும் விளைவிக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்” என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) கொள்கையை இங்கு முன்னிலைப்படுத்தலாம். நாடாளுமன்றம் அல்லது கொள்கை வகுப்பாளர்கள், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை போன்ற நிறுவனங்கள் மற்றும் முன்னணி சிவில் சமூக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து செயல்படுவதன் மூலம், குழந்தைகளுக்குப் பொருத்தமான இயல்புநிலை அமைப்புகள் (defaults), தனிப்பட்ட கணக்குகள் (private accounts), அறிமுகமில்லாத பெரியவர்களுடனான தொடர்புகளைக் கட்டுப்படுத்துதல், விரைவான முறைப்பாடு மற்றும் தீர்வு முறைகள், நடத்தை சார்ந்த விளம்பரங்களுக்கான (behavioural advertising) கட்டுப்பாடுகள் மற்றும் பரிந்துரை முறைமைகள் மீதான சுயாதீன தணிக்கைகள் போன்றவற்றை வலியுறுத்த முடியும்.

ஏனைய பல சுயாதீன ஒழுங்குபடுத்துநர்களுடன் இணைந்து கொண்டு, இலங்கையும் சமூக ஊடகத் தளங்களிடம் autoplay, infinite scroll மற்றும் சுய-தீங்கு அல்லது பாலியல் சார்ந்த உள்ளடக்கங்களின் தொடர்ச்சியான பரிந்துரைகளைக் கட்டுப்படுத்துமாறு கோர முடியும். இத்தகைய நடவடிக்கைகள் தீங்கினை விளைவிக்கும் வழிமுறைகளையே நேரடியாகக் குறிவைக்கின்றன. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஆபத்துக்காக வயதுச் சரிபார்ப்பு நியாயப்படுத்தப்படும் இடங்களில், தனிநபர் அடையாளங்களை மாற்றுவதற்குப் பதிலாக, தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையிலான வயது வரம்புச் சான்றைக் கோரலாம் – அதாவது தரவுகள் குறைக்கப்பட்டு, மறுபயன்பாடு தடைசெய்யப்பட்டு, தரவு நீக்கம் உறுதிசெய்யப்பட வேண்டும் – அத்துடன் இணையக் கணக்குகளை அரச அடையாளத்துடன் இணைக்கும் எந்தவொரு மத்திய தரவுத்தளத்தையும் தடைசெய்ய வேண்டும்.

டிஜிட்டல் அல்லது இணையவழித் தீங்குகளை மட்டுமே மிக எளிமைப்படுத்தி நோக்கும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள், பாடசாலைகள், குடும்பங்கள் மற்றும் பொதுச் சேவைகளால் புறக்கணிக்கப்படும் தேவைகளை வெறும் சட்ட ஒழுங்குமுறைகளால் மட்டும் பூர்த்தி செய்ய முடியாது என்பதைச் சற்றேனும் உணர்ந்துகொள்வதாகத் தெரியவில்லை. அதாவது தனியுரிமை, அல்காரிதம்கள், synthetic media, சம்மதம் மற்றும் துன்புறுத்தல் பற்றிய கல்வி; பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான ஆதரவு; உளநலப் பராமரிப்பு, நல்ல பொது நூலகங்கள், விளையாட்டு மற்றும் பாதுகாப்பான பொது இடங்கள் மீதான முதலீடு போன்ற தேவைகளை வெறும் சட்டங்களால் மட்டும் சரிசெய்ய முடியாது.

இலங்கையிலுள்ள 16 வயதிற்குட்பட்டோரும் பொதுவாக இளைஞர்களும், முந்தைய தலைமுறையினர் ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ளாத பல சவால்களை இன்று எதிர்கொள்கின்றனர்: 2022 இன் பொருளாதார வீழ்ச்சியின் பின்னடைவுகள், செயற்கை நுண்ணறிவின் (AI) அதிவேக வளர்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் உளநலப் பிரச்சினைகளாகவும் மன அழுத்தங்களாகவும் வெளிப்படும் சமூக-பொருளாதார, அரசியல் மற்றும் வாழ்வியல் நெருக்கடிகளின் சிக்கலான முடிச்சுகள் (Gordian knot) ஆகியவற்றை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இதற்காக எந்தவொரு appஐயும் நாம் முழுமையாகக் குற்றம் சாட்டிவிட முடியாது. சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு என்பது தனிமை, நம்பகமான மாற்று வழிகள் இல்லாமை அல்லது பெரியவர்களால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகளுக்கு எதிராக ஒரு தலைமுறையினர் தங்களைத் தாங்களே சுயமாகக் குணப்படுத்திக் கொள்ள முயல்வதையே (self-medicating) குறிக்கலாம். சமூக ஊடகத் தடையானது, அதற்கான பின்னணிக் காரணங்களையும் தூண்டுகோல்களையும் அப்படியே விட்டுவிட்டு, நோயின் அறிகுறியை வேறு இடத்திற்கு நகர்த்துகிறதே ஒழியப் பிரச்சினையைத் தீர்க்காது.

இந்த நோக்கத்திற்காக, கொள்கை உருவாக்கத்தை மேற்கொள்ள வேண்டியது வலுவான ஆதாரங்களேயாகும் என்பதை நான் BBC Sinhala ஊடகத்திற்கு வலியுறுத்தினேன். ஆனால், இலங்கையில் இதில் ஒரு தெளிவான வெற்றிடம் நிலவுகிறது. இத்தகையதொரு தடை அவர்கள் கூறுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் என்பதை நிறுவுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்தபாவோ அல்லது பிரதமரோ உள்நாட்டு ரீதியிலான எந்தவொரு ஆதாரபூர்வமான அடிப்படையையும் எனது அறிவுக்கு எட்டியவரை சமர்ப்பிக்கவில்லை.

சமூக ஊடகத் தளங்களிலிருந்து சிறார்களை அகற்றுவது அவர்கள் மீதான தீமைகளைத் தீர்த்துவிடும் என்பதற்கு எந்தவொரு திட்டவட்டமான பொது உடன்பாடும் இல்லை; இந்த விவாதம் இன்னும் உயிர்ப்புடன் தொடர்கிறது, மேலும் அறிவுஜீவிகள் இதில் உடன்படவில்லை. இத்தகைய சட்டம் கோரும் விடயங்களைச் செய்வதற்கு அத்தளங்களிடமே கூட எந்தவொரு நம்பகமான வழிமுறையும் இல்லை. சட்டங்களை இயற்றிய ஏனைய நாடுகள் முறையான ஆய்வுகளுக்குப் பின்னரே அதனைச் செய்தன. ஆனால், இலங்கை அவ்வாறான எதையும் செய்யவில்லை. கற்பனை செய்யப்பட்ட வடிவத்தில்தான் இப்பிரச்சினை நிலவுகிறது என்பதை முறையான ஆராய்ச்சி உறுதிப்படுத்துவதற்கு முன்னர், வெறும் தனிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் சட்டமியற்ற முற்படுவது என்பது வரிசைமுறையை முற்றிலும் தலைகீழாக மாற்றுவதாகும். முதலில் பிரச்சினையின் துல்லியமான தன்மையைக் கண்டறிவதற்கு ஆய்வு செய்யுங்கள். அதன் பின்னர், தேவைப்படின், சட்டங்களை இயற்றுங்கள்.

அரசாங்கம் இன்னும் ஒரு பொதுவான தடையையே விரும்புகிறது என்றால், அந்தச் சட்டம் பூர்த்தி செய்ய வேண்டிய சான்றுகளின் வரம்பை அது பகிரங்கப்படுத்த வேண்டும், சிறுவர் உரிமைகள் மற்றும் தரவுப் பாதுகாப்பு மீதான தாக்க மதிப்பீடுகளை (impact assessments) மேற்கொள்ள வேண்டும், அத்துடன் காலக்கெடுவுடன் கூடிய (sunset clause) வெளிப்படையான ஒரு முன்னோடித் திட்டத்தை (pilot project) நடத்த வேண்டும், மேலும் கொழும்புக்கு அப்பால் மாகாணங்கள், மொழிகள், வருமானங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகளைக் கடந்து ஒரு தேசிய அளவிலான ஆய்வுக்கு நிதியளிக்க வேண்டும். சட்டமியற்றுபவர்களால் இதனைச் செய்ய முடியாவிட்டால், அவர்களிடம் சிறுவர் பாதுகாப்புக்கான எந்தவொரு கட்டமைப்பும் இல்லை என்றே அர்த்தம். அவர்களிடம் இருப்பது ஒரு தடையும், மில்லியன் கணக்கான குடிமக்கள் இணையத்தில் எதை அணுகலாம் என்பதைக் கண்காணிப்பதற்கான ஓர் அடையாள முறைமையும், அத்துடன் எந்தவொரு ஆதாரமுமின்றி அரசியல் அதிகாரத்தை நம்புமாறு விடுக்கும் பழகிப்போன அழைப்பும் மட்டுமேயாகும்; இது பாதுகாப்பைக் காரணம்காட்டி, தடையை ஒரு நாடகமாக்கி (performance), நடைமுறையில் ஒரு கண்காணிப்புச் சிறையை (panopticon in production) உருவாக்குவதாகும்.

இலங்கை இதற்கு முன்னரும் பலமுறை இத்தகைய முயற்சிகளைச் செய்து பார்த்துள்ளது, இதனால் சமூகத்தில் எவருக்கும் எந்தவொரு நன்மையும் விளையவில்லை.

Social media bans: Protecting children or building a panopticon என்ற தலைப்பில் கலாநிதி சஞ்சன ஹத்தோட்டுவ எழுதி வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.