Photo, Kumanan
ஒரு சமூகத்தின் அரசியல் வலிமை என்பது அதன் மக்கள் தொகையிலோ, வரலாற்று அனுபவங்களிலோ அல்லது அரசியல் கோரிக்கைகளிலோ மட்டும் தங்கியிருப்பதில்லை. புதிய தலைமைகளை உருவாக்கும் திறன், காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மறுசீரமைத்துக்கொள்ளும் ஆற்றல் மற்றும் எதிர்காலத்தை நோக்கிய அரசியல் கற்பனைத்திறன் என்பனவும் ஒரு சமூகத்தின் அரசியல் வலிமைக்கும் இருப்புக்கும் மிகவும் அவசியமானவை.
இலங்கைத் தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில், கடந்த பல தசாப்தங்களாக உரிமைகள், அதிகாரப் பகிர்வு, பாதுகாப்பு, நீதி மற்றும் அரசியல் தீர்வு போன்ற கேள்விகள் மைய இடத்தைப் பிடித்துள்ளன. எனினும், போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழர் அரசியல் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களில் ஒன்று, சமகால அரசியல் சூழலுக்கு ஏற்ப தன்னைத்தானே மறுவடிவமைக்கத் தவறியமையாகும்.
இந்தப் பின்னணியில், தமிழர் அரசியலில் காணப்படும் தலைமை வெற்றிடம், தலைமுறை மாற்றத் தேக்கம் மற்றும் அரசியல் கற்பனைத்திறன் இன்மை ஆகியவை தொடர்பில் ஆராய்வது அவசியமாகிறது.
தலைமை வெற்றிடம்: கட்டமைக்கப்பட்ட அரசியல் இன்மையின் அறிகுறி
ஒரு சமூகத்தில் தலைமை வெற்றிடம் உருவாகுவது என்பது பொதுவாக ஆழமான கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளின் வெளிப்பாடாகவே அமைகிறது. தனக்கென தலைவர்களை உருவாக்க முடியாத சமூகங்கள், புறத்தில் உருவாகும் அரசியல் ஆளுமைகளிடம் நம்பிக்கை வைக்கத் தொடங்குகின்றன. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இதனையே வெளிப்படுத்துகின்றன. மாற்றுச் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் தமிழர் நலன் சார் கருத்துகளைக் கூறுகின்றபோது, அவர்களின் பின்புலம் என்ன? அவர்களுடைய நிகழ்ச்சிநிரல் என்ன? போன்ற விடயங்களை ஆராயாமல் அவர்களை நாயகர்களாகக் கொண்டாடுகின்ற ஒரு புதிய கலாசாரத்தினை தற்போது அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இத்தகைய உணர்ச்சினால் உந்தப்பட்ட செயற்பாடுகள் மிகப் பாதகமான விளைவுகளை தமிழ் அரசியல் பரப்பில் ஏற்படுத்தும். தமிழர்களை மட்டும் பாதிக்கின்ற கட்டமைப்பு ரீதியான சிக்கல்களுக்கு, சுயநிர்ணய உரிமையுடனான கட்டமைப்பு ரீதியான தீர்வுகள் தேவை என்ற தேவையினையும் கோரிக்கையினையும் நீர்த்துப் போகச் செய்யும். இதனை “மாற்றுச் சமூகத்தினர் எமக்காக குரல் கொடுக்கவே கூடாது” என அர்த்தப்படுத்திவிடக்கூடாது.
இன்றைய தமிழர் அரசியலில் காணப்படும் இந்தப் போக்கு, தனிநபர் பற்றாக்குறையால் உருவானதல்ல. மாறாக, புதிய தலைமைகளை உருவாக்குவதற்கான அரசியல் மற்றும் சமூகச் சூழல் பலவீனமடைந்ததே இதற்குக் காரணமாகும். இந்நிலைக்கு அரசியல் தலைவர்கள் மாத்திரமல்லாது, சமூக, குடியியல் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் தலைவர்கள், தங்களுடைய இருப்பினைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, ஆளுமையானவர்களையும், அரசியல் சித்தாந்தத்தில் பற்றுள்ளவர்களையும் கட்சிகளில் இணைத்துக்கொள்ளாமல், தனிநபர் விசுவாசிகளை இணைத்துக்கொள்கிறார்கள். அதே நேரத்தில், சமூக, குடியியல் தலைவர்கள், அரசியல் ரீதியான கோட்பாடு ரீதியான அரசியல் அழுத்தக் குழுவாகவன்றி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக மாறிவிட்டனர். தமிழ் குடியியல் சமூகம் என்பது, இன்று, அரசியல் கட்சிகளின் முகவர்களாக மாறிவிட்டது. இது, (தேர்தல் அற்ற சந்தர்ப்பங்களில்) அரசியல் கட்சிகளைத் தட்டிக்கேட்பதற்கு யாருமற்ற நிலையினை உருவாக்கியுள்ளது.
பல அரசியல் இயக்கங்கள் உள்ளூராட்சித் தேர்தல் காலங்களில் புதிய முகங்களை அறிமுகப்படுத்தினாலும், தீர்மானங்களை எடுக்கும் அதிகார மையங்கள் பெரும்பாலும் மாற்றமின்றி தொடர்கின்றன. இவ் அறிமுகங்களும் தேர்தல் சட்ட தேவைப்பாடுகளின் விளைவாக இடம்பெறுகின்றதே தவிர, அரசியல் கட்சிகளின் சுய முயற்சியாக இடம்பெறுவதில்லை. இதன் காரணமாக, அரசியல் பங்கேற்பு உருவாகிறது, ஆனால் அரசியல் தலைமைகள் உருவாகுவதில்லை.
போருக்குப் பிந்தைய தமிழர் அரசியல்: தவறவிடப்பட்ட வாய்ப்புகள்
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் அரசியலுக்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கான கட்டாயமும், தேவையும் ஏற்பட்டது, அதற்கான வாய்ப்பும் இருந்தது என்றே கருதத்தோன்றுகிறது. ஆயுத மோதலுக்குப் பின்னர் ஜனநாயக அரசியல், உள்ளூர் நிர்வாகம், பொருளாதார முன்னேற்றம், சமூக மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச ஈடுபாடு ஆகியவற்றை இணைத்து புதிய அரசியல் திட்டங்களை உருவாக்க முயற்சித்திருக்க வேண்டும், அவ்வாறு முயன்றிருந்தால் கணிசமான வெற்றியையும் அடைந்திருக்கலாம்.
ஆனால், நடைமுறையில் அரசியல் உரையாடல்களின் பெரும்பகுதி கடந்தகாலத்தின் அரசியல் மொழியையே தொடர்ந்து பயன்படுத்தியது. ஆயுதப் போராட்டத்திற்குள் தன்னை சுருக்கிக்கொண்டது. வரலாற்றை அனுபவமாகவும், பாடமாகவும் மாற்றிக்கொள்ளாமல் தேர்தல் (பிரசார) கோசங்களாக மாற்றிக்கொண்டது.
வரலாற்று நினைவுகளையும் நீதிக்கான கோரிக்கைகளையும் பாதுகாக்கின்ற அதேவேளை, ஒரு சமூகத்தின் எதிர்காலத்தினை மையமாக வைத்து அரசியல் திட்டமிடலை மேற்கொள்வது அவசியம். கடந்தகாலத்தை மையப்படுத்தியதாக மட்டுமே அரசியல் கலந்துரையாடலும், திட்டமிடலும், நகர்வுகளும் இருப்பது அச் சமூகத்தினை எதிர்காலத்தினை கேள்விக்குரியதாக மாற்றிவிடும், புதிய சந்ததியினரை அச் சமூகத்தின் போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்திவிடும். இதுவே தமிழர் அரசியலின் ஒரு முக்கியமான முரண்பாடாகத் தோற்றம்பெற்றுள்ளதனை அண்மைக்கால அரசியல் நெருக்கடிகள் சுட்டக்காட்டுகின்றன.
வறண்டுபோன அரசியல் கற்பனைத்திறன்
தமிழர் அரசியலின் தற்போதைய சவால்களில் முக்கியமான ஒன்று அதன் அரசியல் கற்பனைத்திறனின் வறட்சியாகும்.
இன்று வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளன. வேலைவாய்ப்பின்மை, கல்வித் தரம், முதலீட்டு பற்றாக்குறை, போதைப்பொருள் பாவனை, இளைஞர் புலம்பெயர்வு, மக்கள் தொகை/ பிரநிநிதித்துவச் சரிவு, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் காலநிலை சார்ந்த சவால்கள் ஆகியவை சமூகத்தின் எதிர்காலத்தை நேரடியாகப் பாதிக்கின்றன.
ஆனால், இந்த விடயங்கள் பல சமயங்களில் தேசிய அரசியல் விவாதப் பரப்புக்குள் உள்வாங்கப்படுவதில்லை.
ஒரு சமூகத்தின் தேசிய அரசியல் இலக்குகளுக்கும் அதன் மக்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களுக்கும் இடையே தொடர்பு உருவாக்கப்படாதபோது, அரசியல் பொதுமக்களிடமிருந்து படிப்படியாக விலகத் தொடங்குகிறது. அவ் இடைவெளியில் புறச்சக்திகள் புகுந்துகொள்ளும். இது அவ் இடைவெளியினை மேலும் பெரிதாக்கும். காலப்போக்கில், எமது இனத்தின் தலைவிதியினைத் தீர்மானிக்கின்ற முற்றுமுழுதான அதிகாரத்தினை புறக்குழுக்களுக்கு வழங்கிவிடும்.
“வவுனியா வரவேற்கிறது” வளைவைத் தாண்டாத அரசியல்
தமிழர் அரசியலின் மற்றொரு சவால் அதன் புவியியல் மற்றும் சமூக புரிதலின் வரட்சியாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் அரசியலின் மையப் பகுதிகளாக இருந்தாலும், தமிழர் சமூகத்தின் முழுமையான யதார்த்தம் அதற்குள் மட்டுப்படுத்தப்பட முடியாது.
கொழும்பு மற்றும் தென்னிலங்கையின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், உலகம் முழுவதும் பரந்து வாழும் புலம்பெயர் சமூகங்களும் தமிழர் அரசியல் எதிர்காலத்தின் ஒரு பகுதியாகவே உள்ளனர்.
ஆனால், பல அரசியல் அணுகுமுறைகள் இன்னும் வடக்கு – கிழக்கு மைய அரசியல் சிந்தனையிலேயே தங்கியுள்ளன. இந்த அணுகுமுறை, தமிழர் சமூகத்தின் பல்வகைப்பட்ட அனுபவங்களையும் தேவைகளையும் பிரதிபலிக்கும் ஒரு விரிவான அரசியல் திட்டத்தை உருவாக்குவதில் தடையாக அமைகிறது.
உதாசீனப்படுத்தப்படும் தலைமுறை மாற்றம்
எந்த அரசியல் இயக்கத்தின் நீண்டகால நிலைத்தன்மையும் அதன் தலைமுறை மாற்றத் திறனுடன் தொடர்புடையது. புதிய தலைமுறையினரை முடிவெடுக்கும் செயல்முறைகளில் இணைத்துக்கொள்வதும், கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிப்பதும், புதிய அரசியல் மொழிகளை உருவாக்க அனுமதிப்பதும் அவசியமானவை.
ஆனால், தமிழர் அரசியலில் பல இடங்களில் காணப்படுவது, அரசியல் அமைப்புகளை விட அரசியல் ஆளுமைகளை மையப்படுத்திய கலாசாரமாகும்.
இதன் விளைவாக, புதிய தலைமுறையினர் அரசியலுக்குள் நுழைவதை விட அரசியலிலிருந்து விலகுவதே அதிகமாகக் காணப்படுகிறது. அனேகமான சந்தர்ப்பங்களில், இவ் விலகல் அரசியலோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக, சமூகக் கட்டமைப்புகளில் இணைந்து பணியாற்றுவதிலிருந்தும் அந்நியப்படுத்திக்கொள்ள இளைஞர்களைத் தூண்டுகிறது.
தென்னிலங்கை அரசியலிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்
அண்மைக் காலங்களில் தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்தாலும், ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளன.
நீண்டகாலமாக நிலவிய அரசியல் கட்டமைப்புகள் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. சந்ததி, சந்ததியாக ஒரே கட்சிக்கு வாக்களித்த சூழ்நிலை மாறிவிட்டது. யாருக்கு அல்லது எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் பெற்றோர்களின் ஆலோசனையினை பிள்ளைகள் கேட்ட காலம் மாறி, பிள்ளைகளின் ஆலோனையினை பெற்றோர்கள் கேட்கின்ற காலம் உருவாகிவிட்டது. இதன் காரணமாக இளைஞர்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்காத அரசியல்வாதியும், அரசியல் கட்சியும் மக்களால் நிராகரிக்கப்படுகின்ற சூழ்நிலை தோற்றம்பெற்றுள்ளது.
தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள், அம் முன்னேற்றத்தினை வாக்குறுதியாக வழங்குகின்ற புதிய முகங்களையோ, கட்சிகளையோ காணும்போது, பழைய அரசியல் அமைப்புகளை சவாலுக்குட்படுத்துவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.
இம்மாற்றங்கள் தமிழ் மக்களின் சிந்தனையிலும் பிரதிபலிப்பதனை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அரசியல் புதுப்பித்தலின் அவசியத்தை இப் பிரதிபலிப்பு நினைவூட்டுகின்றது. இருப்பினும், தமிழ் அரசியல் தலைமைகள் அப் புதுப்பித்தலுக்கான அவசியத்தினை உணர்ந்துகொண்டதாகவோ அல்லது அதற்கான எதிர்வினையினை ஆற்றுவதாகவோ தெரியவில்லை.
தமிழர் அரசியலின் தற்போதைய சவால் வெறுமனே அரசியல் அதிகாரத்தைப் பெறுவதல்ல. அதைவிட முக்கியமாக, எதிர்காலத்தை நோக்கிய ஒரு புதிய அரசியல் கற்பனையை உருவாக்குவதாகும்.
உரிமைகளுக்கான போராட்டம் தொடர வேண்டியது அவசியம். ஆனால், அந்தப் போராட்டம் புதிய தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளுடனும், சமூகத்தின் அன்றாட தேவைகளுடனும், மாறிவரும் உலக அரசியல் யதார்த்தங்களுடனும் இணைக்கப்பட வேண்டியுள்ளது.
இன்று தமிழர் அரசியலுக்குத் தேவையானது மற்றொரு மீட்பர் அல்ல, மாறாக, புதிய அரசியல் சிந்தனை. மற்றொரு முழக்கம் அல்ல, மாறாக புதியதொரு அரசியல் திட்டம். மற்றொரு உணர்ச்சி அலை அல்ல, மாறாக நீண்டகால சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்கான பார்வை.
அந்த மாற்றத்தை உருவாக்கத் தவறினால், தமிழர் அரசியல் என்பது உரிமைக்கான போராட்டமாக அல்லாது, தேர்தல்களை மட்டும் மையப்படுத்தியதாக மாறிவிடும்.
ஐங்கரன் குகதாசன்