Photo, AFP
“ஒரு துறவி, துறவறப் பயிற்சியையும் வாழ்க்கை முறையையும் ஏற்றுக்கொண்ட பிறகு, தன் பயிற்சியைத் துறக்காமலும், தனது பலவீனத்தை வெளிப்படுத்தாமலும், ஒரு பெண் விலங்குடன் என்றாலும் கூட உடலுறவு கொண்டால், அவர் சங்கத்திலிருந்து (துறவிகள் சமூகத்திலிருந்து) நீக்கப்பட்டு, விலக்கி வைக்கப்படுவார்.”
– புத்தர் (இறுதித் தீர்ப்பு – விநய பிடகம் – சங்கத்திலிருந்து நீக்கத்தக்க குற்றங்கள் பற்றிய அதிகாரம்)
ஒரு மனிதன் தன் கையில் இருக்கும் கோப்புகளின் சுமையால் அழுத்தப்பட்டது போல, கனத்த அடிகளுடன் ஒரு கட்டடத்தின் நுழைவாயிலிலுன் நடந்து செல்கிறான். அவன் கீழே வீழ்ந்து கிடக்கும் ஒரு சுருட்டப்பட்ட காகிதத் துண்டை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுகிறான்; இந்தச் ஒரு சிறிய செயல் அவனுடைய குணத்தைப் பற்றி பலவற்றை வெளிப்படுத்துகிறது. அவனது இலக்கு, நேர்த்தியாக ஆடை அணிந்திருக்கும் ஒரு இளம் பெண்ணான அவனது புதிய அதிகாரியின் அலுவலகம் ஆகும். அவன் அந்தக் கோப்புகளை அவளது மேசை மீது வைக்கிறான்; அந்தச் செய்கை அவனது உத்தியோகபூர்வ மற்றும் மனரீதியான இராஜினாமாவைக் குறிக்கிறது. தான் 20 ஆண்டுகளாக ஒரு புலனாய்வு அதிகாரியாக இருந்து வருவதாகவும், ஆனால் ஒருபோதும் தன் தலையை நிமிர்த்தி தன் பணியைச் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் அவன் தன் புதிய அதிகாரியிடம் தெரிவிக்கிறான். அந்தக் கோப்புகள் பாதியிலேயே கைவிடப்பட்ட விசாரணைகள் பற்றியவை. இப்போது அவனது இலக்குகளும், நிர்வாகத்தின் இலக்குகளும் ஒன்றுதான் என்பதால், அந்தக் கோப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு பணியைத் தொடருமாறு அவனது புதிய அதிகாரி அவனிடம் கூறுகிறார். அந்த அதிகாரி அங்கிருந்து புறப்படும்போது, அவனது நடையில் ஒரு கம்பீரமும், கண்களில் நம்பிக்கையும் தெரிகிறது.
2024 ஜனாதிபதி தேர்தலை நோக்கிய பிரச்சாரத்தின் போது, NPP (தேசிய மக்கள் சக்தி) ஒரு தொடர்ச்சியான கருப்பொருள் விளம்பரங்களை வெளியிட்டது. மேலே உள்ள விளம்பரத்தின் தலைப்பு “சுதந்திரமான பொதுச் சேவை” (An Independent Public Service) என்பதாகும். “அனைவருக்கும் நீதி” என்பது NPP இன் மேடையின் ஒரு முக்கிய தூணாக இருந்தது. வரவிருக்கும் NPP அரசாங்கம் தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நாட்டிற்கு உறுதியளிக்கப்பட்டது; குற்றம்சாட்டப்பட்டவரின் அந்தஸ்து எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு குற்றமும் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
14 வயது சிறுமி ஒருத்தி, அதிகாரபலமிக்க மற்றும் செல்வாக்குமிக்க ஒரு பிக்கு தன்னை அவளுடைய சொந்த தாயிடமிருந்து 1,00,000 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கியதாகவும், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் குற்றம்சாட்டியபோது, அந்த வாக்குறுதிக்கு என்ன நேர்ந்தது?
‘சிறுமி X ‘ (பெயர் குறிப்பிட விரும்பவில்லை மற்றும் அடமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் பிக்கு சம்பந்தப்பட்ட இந்த வழக்கு அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சிக்கும், சாசனத்திற்கும் (மதத்திற்கும்), நாட்டிற்கும் மற்றும் குடிமக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மிக முக்கியமான சோதனைக் களமாகும். இதில் பாதிக்கப்பட்டவர் சமூகத்தின் மிகக் கீழ்மட்டத்தைச் சேர்ந்த, ஏழ்மையான மற்றும் எந்தவொரு அதிகாரமும் இல்லாத நபர் ஆவார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பாரம்பரியமிக்க உயர்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர். அதுமட்டுமின்றி, நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த பிக்குகளில் ஒருவரான இவர், பௌத்த மதத்தின் மிக புனித எட்டு இடங்களான – ஸ்ரீ மகா போதி, ருவன்வெலிசேயா, தூபாராமய, லோவமகாபாய, அபயகிரிய, ஜேதவனாராமய, மிரிசவெட்டிய மற்றும் லங்காராமய ஆகியவற்றின் தலைவரும் ஆவார்.
மிகப்பெரிய அளவிலான அதிகார சமநிலையின்மையைக் கருத்தில் கொண்டால், இந்த வழக்கும் NPP விளம்பரத்தில் அந்த நேர்மையான அதிகாரி குறிப்பிடும் பாதியிலேயே கைவிடப்பட்ட விசாரணைகளின் பட்டியலில்தான் சேரும். முந்தைய அரசாங்கங்கள் புறக்கணித்து, மூடிமறைத்து, மறதி என்ற பட்டியலினுள் சேர்ந்திருக்கக்கூடிய ஒரு வழக்கு இது. ஆனால், இதேபோன்ற வழக்குகளைத்தான் நியாயமான மற்றும் வெளிப்படையான ஒரு முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று NPP வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், யதார்த்தமோ அதற்கு முற்றிலும் நேர்மாறாக அமைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர் முற்றிலும் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவராகவும், குற்றம்சாட்டப்பட்டவர் பெரும் செல்வமும் மத ரீதியான அதிகாரமும் கொண்டவராகவும் இருக்கும் ஒரு குற்றத்தைச் சந்தித்தபோது, NPP அரசாங்கம் தனக்கு முந்தைய அரசாங்கங்களின் அவதூறான பாதையையே பின்பற்றத் தேர்ந்தெடுத்துள்ளது. இது உண்மைகளைத் தவிர்த்தும், தெளிவற்றதாக்கியும், மௌனத்தில் தஞ்சமடையவும் முயன்றுள்ளது. அமைச்சர் சரோஜா போல்ராஜின் ஒரு பலவீனமான அறிக்கையைத் தவிர, NPP/JVP தலைவர்கள் ஒருவர்கூட இந்த வழக்கைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை – அதிபரோ அல்லது பிரதமரோ பேசவில்லை, பொதுப் பாதுகாப்பு அமைச்சரோ அல்லது நீதி அமைச்சரோ பேசவில்லை, தனித்துவமான லால் காந்தாவோ அல்லது NPP இன் பல பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களோ யாருமே பேசவில்லை. அவர்களின் இந்த மௌனம், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சியிலுள்ள ஒவ்வொரு கட்சி, தலைமைப் பீட பிக்குகள் (Chief Prelates), பிற முன்னணி பிக்குகள் மற்றும் முக்கிய ஊடகங்கள் (பாரம்பரிய ஊடகங்கள்) ஆகியவற்றாலும் எதிரொலிக்கப்படுகிறது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் (NCPA) புகார் அளித்த சுயாதீன ஊடகவியலாளர் பிமல் ருஹுனுகே மற்றும் ஒரு சில யூடியூபர்கள் (YouTubers), இணையதளங்கள் மட்டும் இல்லாதிருந்திருந்தால், இந்த வழக்கு எதிர்க்கட்சி மற்றும் பாரம்பரிய ஊடகங்களின் முழு ஆதரவோடு அரசாங்கத்தால் மூச்சுத்திணறடிக்கப்பட்டு, ஒரு அசாதாரண மரணத்தைச் சந்தித்திருக்கும்.
அந்த விளம்பரத்தில், நீதிக்காகப் போராடும் அதிகாரிகளைப் பாதுகாப்பதாக NPP வாக்குறுதி அளிக்கிறது. ஆனால், இங்கே யதார்த்தம் அதற்கு மாறாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் பக்கமிருக்கும் நியாயத்திற்காகக் குரல் கொடுக்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) அதிகாரிகள், இந்த NPP அரசாங்கத்தால் கைவிடப்பட்டு வருகிறார்கள். இணையதள ஆதாரங்களின்படி, NCPA இன் சட்டப் பணிப்பாளர் சஜீவனி அபேகோனுக்கு எதிராக மிகவும் கொடூரமான அவதூறுப் பிரச்சாரம் ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
இதன் முடிவு மனச்சோர்வளிக்கும் வகையில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. NPP ஆட்சியின் கீழும் நீதி என்பது தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே இருக்கிறது; அது பாதிக்கப்பட்டவரின் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் அந்தஸ்தைச் சார்ந்தே உள்ளது. மறுமலர்ச்சி என்ற பதாகைக்குப் பின்னால், பின்னடைவே ஆட்சி செய்கிறது.
நீதி சீர்குலைக்கப்பட்டது
ஊடக அறிக்கைகளின்படி, ‘சிறுமி X ‘ இன் கொடூரமான துயரம் 2023-ஆம் ஆண்டில், அவளுக்கு 11 வயதுக்கும் சற்று அதிகமான வயதாக இருந்தபோதே தொடங்கியது.
துஷ்பிரயோகம் என்ற கொடிய கனவு அவளைத் தன் இரக்கமற்ற தாடைகளுக்குள் சிக்க வைப்பதற்கு முன்பு அவள் எப்படிப்பட்டவளாக இருந்தாள் என்பது நமக்கு ஒருபோதும் தெரியப்போவதில்லை. அவள் படிப்பில் ஆர்வம் உள்ளவளா அல்லது விளையாட்டுத் குணம் கொண்டவளா? அவள் அமைதியானவளா அல்லது நகைச்சுவையானவளா? அவள் புத்தகங்களைப் படித்தாளா, மரங்களில் ஏறினாளா அல்லது குளங்களில் நீந்தினாளா? இன்னும் முழுமையடையாத அவளது இயல்பு எதுவாக இருந்தாலும், அந்த வயதிலுள்ள ஏனைய சிறுமிகளைப் போலவே அவளும் பாடசாலைக்குச் சென்றிருப்பாள், நண்பர்களுடன் விளையாடியிருப்பாள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளைக் கண்டிருப்பாள்.
அந்தத் துஷ்பிரயோகக் கொடுங்கனவை (அந்தப் பிக்கு சிறுமியை மூன்று நாட்களுக்கு ஒருமுறை அழைத்ததாகக் கூறப்படுகிறது) அனுபவித்து வாழ்வது அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் அறிய முடியாது. அந்த முதல் நாளைப் பற்றி சிறிமியின் தாய் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பது மட்டுமே நமக்குத் தெரிந்த விஷயம். தன் மகளுடன் சென்ற அந்தத் தாய், பிக்குவின் குடியிருப்பு வரை அவரைப் பின்தொடர்ந்து சென்று, பிக்கு சிறுமியைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றபோது வெளியே காத்திருந்தாள். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு அந்தச் சிறுமி வெளியே வந்தபோது, அவளது முகம் “மகிழ்ச்சியற்றதாக/கசப்பானதாக” இருந்தது. அதைப் பற்றி அவளிடம் கேட்டபோது, பிக்கு தன் முகத்தில் முத்தமிட்டதாக அவள் பதிலளித்தாள்.
தனக்காகக் காத்திருக்கும் கொடூரத்தின் துல்லியமான தன்மையை ‘சிறுமி X ‘ அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதன் முதல் அனுபவமே அவளது முகத்தை மகிழ்ச்சியற்றதாக/கசப்பானதாக மாற்றப் போதுமானதாக இருந்தது. ஒருவேளை தன் விதி என்னவென்று அவளுக்கு முழுமையாகத் தெரிந்திருந்தாலும் கூட, அவளால் என்ன செய்திருக்க முடியும்? பாதுகாப்புக்காக அவள் யாரிடம் சென்றிருக்க முடியும்? அவளை விலை பேசி விற்ற பெற்றோரிடமா? அல்லது பொலிஸாரிடமா? எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்தப் பிக்குவின் அறைக்குச் செல்லும் வழியில், அவருடைய பொலிஸ் பாதுகாப்புப் பிரிவைக் கடந்துதானே அவள் சென்றிருக்க வேண்டும். தனது குறுகிய கால வாழ்நாள் முழுவதையும் அனுராதபுரத்தில் கழித்திருந்ததால், ‘அடமஸ்தானாதிபதி’ (Atamasthanadhipathi) பிக்குவின் அதிகாரத்தைப் பற்றியும் அவள் அறிந்திருந்திருப்பாள். அவளது பெற்றோர் ருவன்வெலிசேயாவுக்கு அருகில் பூக்களும் தேனும் விற்று வந்ததால், அவர்களின் வாழ்வாதாரமும் அந்தப் பிக்குவின் கைகளில்தான் இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு சிறுமியால் அடிபணிவதையும், எப்படியாவது உயிர் பிழைத்திருப்பதையும் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?
இப்படிப்பட்ட ஒரு சிறுமியைத்தான் திலும் அமுனுகம ஒரு விலைமாது என்று அழைத்தார். அவரது வார்த்தைகள் மிகவும் கொடூரமானவை என்றாலும், அவரது கட்சித் தலைவரான திலித் ஜயவீர, சர்வஜன பலய கட்சியின் பிற சகாக்கள் மற்றும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினர், அதேபோல் அரசாங்கத்தில் இருக்கும் அவரது எதிராளிகள் ஆகியோரின் மௌனம் அதைவிடச் சிறந்ததாக ஒன்றும் இல்லை. அவர்களின் இந்த கூட்டு மௌனம், நமது அரசியல் வர்க்கத்தின் கோழைத்தனம், சுயநல சந்தர்ப்பவாதம் மற்றும் நன்னெறி ரீதியான உடந்தை ஆகியவற்றைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. (தற்செயலாக ஒரு கேள்வி, பாலியல் வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்ட ஒரு பிக்குவின் முன்னால் முதன்முதலில் மண்டியிட்டு ஆசிபெறப் போகும் அந்த அரசியல்வாதி யாராக இருக்கும்?)
குற்றம்சாட்டப்பட்ட அந்தப் பிக்கு ஒரு சந்தேக நபர் மட்டுமே. ஒரு ஜனநாயக நாட்டின் குடிமகன் என்ற முறையில், குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்ற அனுமானம், அவரது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும். விரைவான, வெளிப்படையான மற்றும் நியாயமான ஒரு விசாரணை அவரது நலனுக்கும் உகந்தது. ஏனெனில், அது சட்டத்தின் முன்னால் மட்டுமன்றி, மக்கள் மன்றத்தின் முன்னிலையிலும் அவரது நிரபராதித் தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பை அவருக்கு வழங்கும். துரதிர்ஷ்டவசமாக, அவரே சட்டத்திலிருந்து தப்பிக்கப் பார்ப்பதும், பொலிஸாரின் காலங்கடத்தும் உத்திகளும் நீதி வழங்கும் செயல்முறையின் நேர்மை குறித்து கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக இந்த வழக்கின் காலவரிசையை உற்றுநோக்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்:
ஏப்ரல் 10: ‘சிறுமி X ‘ நிட்டம்புவ பொலிஸாரிடம் தனது வாக்குமூலத்தை அளிக்கிறாள்; அதில், அந்தப் பிக்குதான் தன்னை முதன்முதலில் துஷ்பிரயோகம் செய்தவர் என்று அவரது பெயரைக் குறிப்பிடுகிறாள்.
ஏப்ரல் 22: பொலிஸாரின் 12 நாட்கள் மந்தநிலைக்குப் பிறகு, சுயாதீன ஊடகவியலாளர் பிமல் ருஹுனுகே தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் (NCPA) ஒரு முறைப்பாட்டைப் பதிவு செய்கிறார். விசித்திரமாக, இந்த வழக்கைப் பற்றி NCPAவுக்குத் தெரிவிக்க பொலிஸ் தவறியிருந்தது.
ஏப்ரல் 23: விசாரணை தொடங்கப்பட்டுவிட்டதா என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மேதவத்தவிடம் NCPA விசாரிக்கிறது; அதற்கு, தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவரிடம் இருந்து பதில் கிடைக்கிறது.
ஏப்ரல் 24: NCPA இன் தலைவரும், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியுமான ப்ரீத்தி இனோகா ரணசிங்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேதவத்தவுக்குக் கடிதம் ஒன்றை எழுதுகிறார். அதில், ‘சிறுமி X’ (தான் புதைத்து வைத்திருந்ததாகக் கூறிய) உள்ளாடைகளை DNA பரிசோதனைக்கு அனுப்புவதற்கும், அந்தப் பிக்குவிற்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கும் நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுமாறு அவர் அறிவுறுத்துகிறார். மேலும், NCPA அதிகாரிகளின் முன்னிலையில் ‘சிறுமி X ‘-இன் வாக்குமூலத்தைக் காணொளியாகப் பதிவு செய்யவும், (குற்றம்சாட்டப்பட்ட பிக்கு அவளுக்குக் கொடுத்ததாகக் கூறப்படும்) அவளது தொலைபேசி பதிவுகளைப் பெறவும் கோருகிறார். அத்துடன், நியாயமான சந்தேகம் இருக்கும் பட்சத்தில் பொலிஸ் அந்தப் பிக்குவைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் NCPA பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குத் தெரிவிக்கிறது.
ஏப்ரல் 27: இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கிறது; ஆனால், சந்தேக நபர்கள் எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் தவிர்க்கிறது.
ஏப்ரல் 30: முதற்கட்ட சான்றுகளின்படி குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், அந்தப் பிக்கு ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று வினவி, பொலிஸ் மா அதிபருக்கு (IGP) ஒரு பிரதியுடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேதவத்தவுக்கு NCPA கடிதம் எழுதுகிறது.
மே 4: பொலிஸ் ‘சிறுமி X ‘-இன் தாயை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துகிறது. ஆனால், அந்தப் பிக்கு இன்னும் சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை.
மே 8: NCPA தாக்கல் செய்த மனுவின் விளைவாக, அந்தப் பிக்குவைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அன்றைய தினம் மாலையே அவர் நவலோக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
மே 9: பொலிஸ், அந்தப் பிக்குவை கைது செய்கிறது; ஆனால், மருத்துவ அறிவுறுத்தல்களின்படி அவர் நவலோக மருத்துவமனையிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறார்.
மே 13: கோட்டை நீதிவான் அந்தப் பிக்குவை மே 22 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடுகிறார்.
மே 15: ஒருவழியாக அந்தப் பிக்கு தேசிய மருத்துவமனைக்கு (National Hospital) மாற்றப்படுகிறார்.
மே 22: அந்தப் பிக்கு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவருக்குப் பிணை வழங்கப்படுகிறது.
தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திடம் அந்தப் பிக்குவின் உடல்நிலை குறித்த முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு NCPA கோரியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆறு மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்தார். அந்தப் பிக்கு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவருக்கு இருக்கும் சிறிய அளவிலான உபாதைகள் அவரது வயதிற்கு இயல்பானவைதான் என்றும் அக்குழு முடிவு செய்தது. நீதிமன்ற மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேராவும், அவரது மருத்துவப் பதிவுகளை ஆய்வு செய்த பின்னர் இதேபோன்ற ஒரு முடிவுக்கே வந்தார்.
‘சிறுமி X’ மற்றும் அவளது தாய் ஆகியோரால் தனித்தனியாக அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதாகத் தெரிகிறது. அந்தப் பிக்குவின் குடியிருப்பு குறித்து ‘சிறுமி X’ அளித்த விவரிப்பு, சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது துல்லியமாக இருப்பது நிரூபிக்கப்பட்டது. மேலும், அந்தப் பிக்குவுக்கும் ‘சிறுமி X’க்கும் இடையே 80க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளன.
ஒருவேளை இந்தச் சந்தேக நபர் ஒரு சாதாரண மனிதராகவோ அல்லது குறைந்த சமூக மற்றும் பொருளாதார அதிகாரம் கொண்ட ஒரு சாதாரண பிக்குவாகவோ இருந்திருந்தால், பொலிஸார் ஒட்டுமொத்தமாக இப்படி இவ்வளவு காலம் இழுத்தடித்திருப்பார்களா? பொலிஸ் மற்றும் NCPA ஆகியவற்றின் கோரிக்கைகள் இருந்தபோதிலும், மே 22 அன்று அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஏன் ஒரு பிரதிநிதியைக் கூட அனுப்பவில்லை? ஊடக அறிக்கைகளின்படி, அந்தச் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து, அங்குள்ள ஊழியர்கள் யாரும் இதைப் பற்றிப் பேசக் கூடாது என்று பிக்கு அழுத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அந்தச் சிறுமி இருக்கும் இடம் ஒரு ரகசியம் என்றால், அதை அந்தப் பிக்கு எப்படிக் கண்டுபிடித்தார்? கவலையளிக்கும் இந்த அனைத்து நகர்வுகளையும் கருத்தில் கொண்டால், இந்த வழக்கின் முடிவில் நமக்குக் கிடைக்கப் போவது என்ன? நீதியா அல்லது எதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக NPP வாக்குறுதி அளித்ததோ, அதேபோன்றதொரு மிக மோசமான தப்பிக்கும் கலாச்சாரமா?
புத்தரின் முன்மாதிரியை மறத்தல்
புத்தரால் உருவாக்கப்பட்ட முதலாவது ‘வினய’ (Vinaya – துறவற ஒழுக்க) விதி, சுதின்ன என்ற பெயர் கொண்ட ஒரு பிக்கு தொடர்பானது. செல்வந்தப் பெற்றோரின் ஒரே மகனான சுதின்ன, இல்லற வாழ்க்கையில் சலிப்படைந்து துறவறம் பூண்டார். அவரை மீண்டும் இல்லற வாழ்க்கைக்குத் திரும்புமாறு வற்புறுத்தித் தோற்றுப்போன அவரது பெற்றோர், தங்களது பரந்த சொத்துக்களுக்கு ஒரு வாரிசை உருவாக்குவதற்காக, அவருடைய முன்னாள் மனைவியுடன் உடலுறவு கொள்ளுமாறு அவரிடம் கெஞ்சிப் பிரார்த்தித்தனர். பிக்கு சுதின்னவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
புத்தர் இந்த கதையைக் கேள்விப்பட்டபோது, அவர் (நம்முடைய தலைமைப் பீட பிக்குகளைப் போல) மௌனமாக இருக்கவில்லை அல்லது சாசனத்தின் (மதத்தின்) நலனுக்காக (நம்முடைய அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் பாரம்பரிய ஊடகங்களைப் போல) விஷயங்களை மூடிமறைக்க முயலவில்லை. மாறாக, அவர் பிக்கு சுதின்னவை வரவழைத்து, உண்மையை வெளிக்கொண்டு வந்த பின்னர் இவ்வாறு கூறினார்: “மூட மனிதனே, இது உகந்தது அல்ல, இது முறையானது அல்ல, இது ஒரு துறவிக்குத் தகுதியானது அல்ல, இதற்கு அனுமதி இல்லை, இது செய்யத்தக்கது அல்ல… மூட மனிதனே, நீ உண்மையான போதனைகளுக்கு முரணான ஒன்றைச் செய்திருக்கிறாய்… பல தீய செயல்களுக்கு நீயே முன்னோடியாகவும், முதல் செயல்பாட்டாளராகவும் இருக்கிறாய். இது மக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும், மேலும் சிலர் தங்கள் நம்பிக்கையை இழக்கவும் காரணமாகும்.”
அதன் பின்னர், புத்தர் துறவற பாலியல் செயல்பாடுகளுக்கு எதிரான ‘வினய’ விதியை உருவாக்கினார், “சங்கத்தின் நல்வாழ்வுக்காக, சங்கத்தின் நிம்மதிக்காக, கெட்ட மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்காக, நல்ல துறவிகளின் வசதிக்காக, இந்த தற்போதைய வாழ்க்கை தொடர்பான ஊழல்களைக் கட்டுப்படுத்துவதற்காக… நம்பிக்கை இல்லாதவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக, நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக, மற்றும் உண்மையான போதனைகளின் நீண்ட ஆயுளுக்காக…”
பிக்கு சுதின்ன தன் இல்லற வாழ்க்கையில் மனைவியாக இருந்த பெண்ணுடன், இருவரின் சம்மதத்துடனான ஒரேயொரு முறை மட்டுமே பாலியல் செயல்பாட்டில் ஈடுபட்டார். ஆனால் பல்லேகம ஹேமரதன தேரர் (Pallegama Hemaratana Thero) மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டோ இதைவிட மிகவும் கொடூரமானது, அதாவது ஒரு சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்ததாகும். குற்றம்சாட்டப்பட்ட இந்தச் செயலின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கு முடியும் வரை அந்தச் சந்தேக நபர் தற்போது வகிக்கும் உன்னதமான பதவியிலிருந்து தலைமைப் பீட பிக்குகள் அவரை நீக்கியிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, குற்றம் சாட்டப்பட்ட இந்தச் சம்பவம் ஸ்ரீ மகா போதிக்கு மிக அருகிலேயே நடந்திருந்த போதிலும், இந்த வழக்கு குறித்து தங்களின் சொந்த நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கை ஒன்றை அவர்கள் இதுவரை வெளியிடவில்லை. பிக்குகள் பாலியல் உறவில் ஈடுபடுவது என்பது “உண்மையான போதனைக்கு முரணானது”, “தீதானது” மற்றும் “மக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும், மேலும் சிலர் தங்கள் நம்பிக்கையை இழக்கவும் காரணமாகும்” என்ற புத்தரின் வார்த்தைகளை அவர்கள் தெளிவாக மறந்துவிட்டார்கள். புத்தரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல் இருப்பதன் மூலமும், ஒரு கொடூரமான குற்றத்திற்கு உடந்தையாக இருப்பது போல் தோன்றுவதன் மூலமும், அவர்கள் சாசனத்தைப் பாதுகாப்பதற்கு அல்ல, மாறாக அதன் வீழ்ச்சிக்கே பங்களிக்கிறார்கள்.
தலைமைப் பீடத் துறவிகளின் மௌனம் ஒரு வகையில் பொருத்தமானதுதான்; ஏனெனில், இன்று இலங்கையில் இருப்பது புத்தரின் உண்மையான ‘சாசனம்’ (மதம்) அல்ல. இது, புத்தரின் போதனைகளை முற்றிலும் மீறி, துட்டகைமுனு மன்னனின் மனசாட்சி பற்றிய தனது முற்றிலும் கற்பனையான கதையின் மூலம், பௌத்தத்தைப் பாதுகாப்பதற்காக லட்சக்கணக்கான மக்களைக் கொல்வதை நியாயப்படுத்திய துறவி மகாநாமவின் சாசனத்திற்கு மிகவும் நெருக்கமானது. அத்துடன், புத்தரின் போதனைகளை முற்றிலும் மீறி, துறவறத்திற்குள் சாதியைக் புகுத்திய கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னனின் சாசனமும் இதுவேயாகும். சம்மதமில்லாத பாலியல் மற்றும் சிறுவர் பாலியல் உட்பட்ட துறவற பாலியல் செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் பல்லேகம ஹேமரதனவின் சாசனமாகவும் இது மாறிவிடுமா?
திஸரனி குணசேகர
The Shame of a Nation என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.