Photo, SRI LANKA UN
வழக்கு எண்: SC/FR/81/2021
தீர்ப்பு நாள்: 08.05.2026
மனுதாரர்: *********
02.07.2018 அன்று பேராதனைப் பல்கலைக்கழக பல் மருத்துவபீடத்தின் அப்போதைய துணைவேந்தராக பணியாற்றியவர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. புகாரளித்த பெண் குறிப்பிட்ட நபர் தன்னை உடல் உள ரீதியாக பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாக குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகம் நியமித்த ஒழுங்காற்று விசாரணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டது. அந்த விசாரணையில் இணையவழி தொந்தரவு (Cyber Stalking) மற்றும் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது பதிவாகியது. மேலதிக விசாரணையில் அவர் குற்றவாளி என்பதும் நிரூபிக்கப்பட்டது. எனினும், பல்கலைக்கழக சபை (University Council) புகாரளித்தலில் தாமதம் காணப்படுவதால் அதனை ஏற்கமுடியாது என காரணங்காட்டி ஒழுங்காற்று விசாரணைக்குழுவின் அறிக்கையினை நிராகரித்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்ணால் அடிப்படை உரிமை மீறல் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி எர்மிசா டீகல் மற்றும் சட்டத்தரணி லினுரி முனசிங்க ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இவ்வழக்கிற்கான தீர்ப்பு மே மாதம் 08ஆம் திகதி 2026 அன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான நீதிபதிகள் குழு இவ்வழக்கிற்கான தீர்ப்பினை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பானது காலங்காலமாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்புகளில் இடம்பெறுகின்ற பாலியல் தொந்தரவுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்த நிலையை கேள்விக்குட்படுத்தி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பாகும்.
“பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் பாலினடிப்படையிலான தொந்தரவுகள், பாலியல் வன்முறைகளுக்கெதிரான கொள்கைகளை அமுல்படுத்தவும், இவை தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இதன் பகுதிச் செயற்பாடாக கல்வியாளர்கள், பணியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு செய்ற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட முன்னாள் உபவேந்தர் எந்தப் பல்கலைக்கழகத்திலும், கல்விசார் நிறுவனம் அல்லது வேறு கல்விசார் நிர்வாகங்களில் சம்பளத்துடனோ அல்லது சம்பளம் இல்லாமலோ, கௌரவ பதவியாக இருப்பினும் எந்தவிதமான பதவியினை ஏற்பதற்கும் தடை விதிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக மானியங்கள் குழு தன் கட்டுப்பாட்டின் கீழுள்ள எந்த பல்கலைக்கழகத்திலும், கல்வி நிறுவனங்களிலும் முதல் பதிலாளிக்கு ஊதியத்துடனோ அல்லது இல்லாமலோ அல்லது கௌரவ பதவியோ வழங்கக்கூடாது” என இத்தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இத்தீர்ப்பானது ஒரு நபரை மட்டும் பற்றியது மட்டுமல்ல. அதிகாரமுள்ளவர்களுக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் எழும்போது குறித்த நபர் சார் நிறுவன கட்டமைப்புக்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன, பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதிப்பொறிமுறையினை நாடும் போது அவர்கள் எவ்வாறு நடாத்தப்படுகின்றார்கள் என்பது குறித்ததுமாகும். பொதுவாகவே பாலியல் சார் தொந்தரவுகள் , வன்முறைகள் குறித்த நடவடிக்கைகளுக்கெதிராக விரல் நீட்டும் போது “தாமதம்” என்கின்ற சாட்டு குற்றங்களையும் குற்றம் புரிந்தவர்களுக்கான நடவடிக்கைகளையும் தளர்த்த எவ்வாறு பயன்படுகின்றது என்பது குறித்தும் கேள்விகளை எழுப்புகின்றது.
இத்தரவு 2022 இல் யுனிசெப் நிறுவனத்தால் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்து வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பல்கலைக்கழகங்களின் நிர்வாக கட்டமைப்பிலுள்ளவர்களை எதிர்ப்பதில் ஏற்படுகின்ற புள்ளி வழங்கல், பதவிநிலைகளை இழத்தல், சமூகத்தின் பார்வையை எதிர்கொள்ள முடியாமை, புகாரளிக்கும் பட்சத்தில் இரகசியத்தன்மை பேணப்படாமை குறித்த காரணங்களால் பெரும்பாலான வன்முறைகள் வெளிகொரணப்படுவதில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.
_______________________________________________________
வழக்கு எண்: RTIC Appeal No.808/2023
தீர்ப்பு நாள்: 08.05.2026
மனுதாரர்: திறந்த பல்கலைக்கழகம் – இலங்கை
2023 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி நுழைவுத்தேர்விற்காக பரீட்சை எழுதிய மாணவியொருவர் தன்னுடைய மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை பார்வையிட தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார். ஆனால், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் இக்கோரிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில் பரீட்சை முறைமையின் இரகசியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை பாதிப்புறும் என மேற்கோள்காட்டி இவ்மாணவியின் கோரிக்கையை நிராகரித்தது. இதனையடுத்து குறிப்பிட்ட மாணவி இவ்விடயத்தினை தகவல் ஆணையத்திடம் கொண்டு சென்றிருந்தார். இதன் விளைவாக 2023 ஆண்டு இறுதியில் தகவல் ஆணையகம் மாணவிக்கு சாதகமான தீர்ப்பினை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பில் பொது நிறுவனங்களிடமுள்ள தகவல்கள் குறிப்பாக மாணவர்களது கல்விசார் தகவல்கள் சட்டப்படி வழங்கப்படலாம் என வலியுறுத்தியது. எனினும், தகவல் ஆணையகத்தின் தீர்ப்பினை ஏற்க மறுத்த இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 2024 இல் இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டினை மேற்கொண்டது. இதன்போது தம்பக்க வாதமாக “மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை வெளியிடுவது பரீட்சையின் இரகசியத்தன்மையை பாதிப்பதுடன் நிர்வாகச்செயல் முறைகளையும் பாதிக்கும்” என்று முன்வைத்தது. எனினும், இவ்வாதங்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் முற்றாக நிராகரித்ததோடு மே மாதம் 08ஆம் திகதி 2026 வழங்கப்பட்ட தீர்ப்பில் தகவல் ஆணையகத்தின் தீர்ப்பினையும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன், “Information” எனும் சொல்லின் சட்டவுரையானது மிகவும் பரந்தது என்றும் இதனுள் விடைத்தாள்கள் போன்ற ஆவணங்களும் அடங்கும் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும்,
- மாணவர்களது கல்வியுரிமையை வலுப்படுத்துவதோடு கல்வித்துறையின் வெளிப்படுத்தன்மைக்கான கதவையும் இலங்கையின் கல்வி வரலாற்றில் இம் மேல் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது எனலாம். இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்று விடைத்தாள் என்பது மாணவரொருவரின் தனிப்பட்ட விடயம் என்பதை கருத்தில் கொண்டுள்ளமை. அதாவது, பரீட்சையின் விடைத்தாள் என்பது பரீட்சாத்தியின் அறிவு, திறன் மற்றும் முயற்சியின் பிரதிபலிப்பு என்பதால் இதனை பல்கலைக்கழகம் இரகசிய ஆவணமாக கருத முடியாது என வலியுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இவ் அணுகுமுறையின் ஊடாக “Confidentiality” என்ற பெயரில் தகவலை மறைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- இத்தீர்ப்பின் மூலம் பொது கல்வி நிறுவனங்களின் பொறுப்புகூறல், வெளிப்படைத்தன்மை குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் பொதுமக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள தமது செயற்பாடுகளை திறந்தவையாகவும், மதிப்பீட்டு செயன்முறைகளில் வெளிப்படையாகவும் இருக்கும் போது மாணவர்களும் தங்களது மதிப்பெண்களின் நியாயத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.
- தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 5 இல் “சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அரசு அல்லது பொது நிறுவனங்கள் தகவல்களை வழங்காதிருக்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையும் நீதிமன்றம் ஆய்வு செய்து தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அதாவது, இவ்வாறு தகவல்களை வழங்காதிருப்பதற்கு வலுவான காரணங்கள், வழங்குவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து நிரூபிக்க வேண்டும் என்றும் இதனை இவ்வழக்கில் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நிரூபிக்கத் தவறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நிர்வாகச் சிரமம் (administrative inconvenience) என்பது தகவலை மறுப்பதற்கான காரணமாக முன்வைக்கப்பட முடியாது என்பதனையும் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் தகவலறியும் உரிமை என்பது அடிப்படை உரிமை என்பதையும் வலியுறுத்தியுள்ளது.
இவ்வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் தாக்கம் மிக விரிவானது. கல்வி முறையில் காணப்படுகின்ற மதிப்பீட்டு முறைமைகளில் நியாயத்தன்மையை உறுதிசெய்வதற்கும் இதன் மூலம் மாணவர்களுக்கு அதிகாரத்தினையும் வழங்கியுள்ள தீர்ப்பென கொள்ள முடியும். அதேவேளை இது ஒரு வகையில் பல்கலைக்கழகங்களுக்கு எச்சரிக்கையையும் மறைமுகமாக விடுக்கின்றது. இந்த எச்சரிக்கை பொறுப்புகூறலில் உள்வாங்கப்படுமிடத்து பரீட்சை மதிப்பீட்டு முறைகளை மேம்படுத்தி, டிஜிட்டல்மயப்படுத்தல்களை மேற்கொண்டு தெளிவான மறுபரிசீலனைகளை மேற்கொள்வதற்கான பொறிமுறைகளை உருவாக்குவதற்கான தளத்தினை குறித்தும் கருத்தில்கொள்ளப்படல் வேண்டும். ஆரம்ப கட்டத்தில் இது சிரமமானதொன்றாக இருப்பினும் நீண்ட காலத்தில் கல்வித்தரத்தினை மேம்படுத்துவதற்கான அடித்தளத்தினை இவ்விடயம் உருவாக்கும்.
அதேவேளை, இத்தீர்ப்பானது அதிகமாக தகவலறியும் உரிமை சட்டம் சார் கோரிக்கைகள், மற்றும் இதனாலான நிர்வாகச்சுமையினையும் அதிகரிப்பதுடன் பரீட்சை மதிப்பீடு சார் விவாதங்களையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, கல்வி நிறுவனங்கள் முன்னெச்சரிக்கையாக செயற்படுவது குறித்தும் திறமையான கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்தும் சிந்திக்கவேண்டியிருப்பதற்கான கட்டாயத்தினையும் இத்தீர்ப்பு உருவாக்கியுள்ளது.
ஒரே நாளில் வழங்கப்பட்ட இவ்விரு தீர்ப்புக்களும் இலங்கை வரலாற்றில் குறிப்பிடத்தக்கதான தீர்ப்புக்களாகும். இவை இரு வேறு விடயம் சார்ந்தது எனினும் இரண்டுமே மாணவர்களது உரிமை குறித்தவையே. இவ்வாறான நீதிவழங்கல்கள் கல்வி நிர்வாகங்களது பொறிமுறைகள் குறித்தும் எதிர்காலத்தில் மாணவர்களது உரிமை, பாதுகாப்பு குறித்தும் தளமமைப்பதற்கான தொடக்கபுள்ளி என்பதும் இனிவரும் காலங்களில் சட்டம் , அதன் பார்வை குறித்த நம்பிக்கையை மாணவர்களிடையே விதைக்கும் எனவும் நம்பலாம்.
கேஷாயினி எட்மண்ட்