படம் | Stefan Rousseau/ AP, Ctpost
சிறுவயதில் சித்தூர் ராணி பத்மினியைப் பற்றிய வரலாற்றினை வாசித்த ஞாபகம். அமோகமான சிறப்புடன் சித்தூரினை ஆண்டு வந்த ராணி தனது நாட்டினை எதிரிப்படைகள் ஆக்கிரமித்து வென்றபோது தானும் சித்தூரின் பெண்கள் அனைவரும் தீக்குளித்து தம்மைத் தாமே மாய்த்துக் கொள்ளும் தீர்மானத்தினை எடுத்தாள். எதிரிகளின் கையில் பாலியல் ரீதியாக தாம் மானபங்கப்படக்கூடாது என்கின்ற உறுதிப்பாட்டினால் எடுக்கப்பட்ட முடிவு இது. அவர்களினால் இத்தனை பாரதூரமான முடிவு எடுக்கப்படும் அளவுக்கு போர்க்காலங்களில் பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகியிருக்கின்றனர் என்பதை உணரலாம். இப்படி அன்றிலிருந்து இன்றுவரை ஆக்கிரமிக்கும் படைகள் யாவும் தாம் வெற்றி கொள்ளும் சமூகத்தின் பெண்களின் உடல்களைச் சூறையாடும் பணியினைத் தவறாது செய்து வந்திருக்கின்றன.
படையணிகளில் இருக்கும் ஆண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பதைவிடவும் உண்மையில் இது ஒரு யுத்த தந்திரோபாயமாகவே உபயோகிக்கப்பட்டது. போர்கள் ஆளும் வர்க்கத்தினரின் நலன்களுக்காகவே சாதாரண உழைப்பாளி வர்க்கத்தினரைக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால், யார்தான் போருக்குச் சென்று தமது உயிரை மாய்க்க விரும்புவர்? எனவே, போரின் விளைவினால் வரக்கூடிய இலாபங்களைப் படையினர் தாம் பங்குபோட்டுக் கொள்ளலாம் என்கின்ற ஆசைத்தூண்டுதலை அவர்களுக்கு ஏற்படுத்தி அவர்களைப் போரில் ஈடுபடுத்துதல் இம்மூலோபாயத்தின் முதல் அம்சமாகும். அதாவது, வெற்றிகொள்ளப்படுபவர்களின் உடைமைகளை சுதந்திரமாகக் கொள்ளையடிக்கலாம் என்பது இதன் கருத்தாகும். பெண்கள் எப்பொழுதும் ஆண்களின் உடைமைகளாகத்தான் பார்க்கப்பட்டனரென்கின்ற காரணத்தினால் கொள்ளையடிக்கப்பட்டு அனுபவிக்கப்படும் உடைமைகளில் அவர்களும் அடங்கினர். பெண்ணை மண்ணுடன் பொன்னுடனும்தான் எப்பொழுதும் இணைத்துப் பார்த்திருக்கின்றனர், இல்லையா? அவர்களை மனிதாகளாய்க் கருதியதில்லையே.
அடுத்து, ஆணாதிக்கம் மிக்க சமூகங்களில் பெண்களின் பாலியல் ஒழுக்கம் அதன் கௌரவத்தின் சுட்டியாகக் கருதப்பட்டு வந்திருக்கின்றது. எனவே, அதன் பெண்களை மானபங்கப்படுத்துவதன் மூலம் ஒரு சமூகத்தின் ஆன்மாவினையே அழித்துவிடலாம் (Break the spirit of the community) என்பதனால் அதன் போராட்ட குணாம்சத்தை அடக்குவதற்கு இது ஒரு நல்ல யுக்தியாகக் கையாளப்பட்டது. அப்பெண்களின் மூலம் பிள்ளைகளைப் பெறுவதனூடாக அச்சமூகத்தின் அடையாளத்தை ஒழிக்கலாம் என்பதும் இதன் அடிப்படையாகியது. இவ்வகையில் நோக்கினால் இனச்சுத்திகரிப்பின் ஒரு முக்கிய அங்கமாக பாலியல் வல்லுறவு உருவாகின்றது. மூன்றாவதாக, அதிகாரத்தின் வெளிப்பாடாகவே பாலியல் உறவுகள் பார்க்கப்பட்டு வந்திருக்கின்றன என்பதனால், ஆயுதத்தைத் தாங்கியிருப்பவனின் அதிகாரத்தினை பிரயோகிப்பதற்கும் இது தோதான நடவடிக்கையாகக் காணப்பட்டது. இக்காரணங்களெல்லாமே போர்க்காலங்களில் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகின்ற பிரச்சினையைத் தோற்றுவிக்கின்றது. பாலியல் வன்முறையானது அதிகார துஷ்பிரயோக நடவடிக்கை என்பதனால் பல சந்தர்ப்பங்களில் ஆண்களும் இதற்குப் பலியாகும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.
யுத்தக்களங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கு ஐ.நா ஸ்தாபனம் பல வருட காலம் முயன்று வந்திருக்கின்றது. சமீப காலமாக பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் இவ்விடயத்தை முன்னெடுப்பதற்க பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றார். அவரது முயற்சியின் பயனாக இம்மாதம் 10ஆம் திகதி தொடங்கி 13ஆம் திகதி வரை லண்டனில் யுத்தத்தின்போது பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் மாநாடொன்று நடத்தப்பட்டிருக்கின்றது. இவ்விடயம் தொடர்பான இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய மாநாடு இதுவாகும். இம்மாநாட்டுக்குத் தலைமை வகிப்பதற்கு வில்லியம் ஹேக்குடன் ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் விசேட தூதுவராக நியமிக்கப்பட்டிரக்கும் பிரபல நடிகை அஞ்சலீனா ஜோலியும் அழைக்கப்பட்டிருக்கின்றார். கிட்டத்தட்ட 100 நாடுகளிலிருந்து சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், சமூக செயலாளிகள், அரச பிரதிநிதிகள் என 900இற்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றியிருக்கின்றனர். இம்மாநாடு தொடர்பில் கடந்த வாரம் கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதராலயம் விசேட நிகழ்வொன்றினை நடத்தியது. வில்லியம் ஹேக், அஞ்சலீனா ஜோலி ஆகியோருடைய அறிக்கைகளுடன் நம்நாட்டைச் சோந்த அரங்கக் குழுக்களின் அறிக்கைகளோடு கலந்துரையாடல்களுடன் நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யுத்தக்களங்களில் பாலியல் வன்முறைகளை எவ்வாறு தடுக்கலாம்? முதலில் குற்றம் புரிபவர்களுக்கு குற்ற விலக்களிக்கும் வழக்கம் ஒழிக்கப்படவேண்டும். அனேக யுத்தங்களில் அரசுகளே ஈடுபடும் காரணத்தினால் இந்தப் பணி அரசுகளுடன் ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு அரசும் பகிரங்கமாக, மிகப்பகிரங்கமாக பாலியல் வன்முறைகளுக்கெதிரான தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தவேண்டும். தனது படையினர் யுத்த வெற்றியைக்கொண்டு வந்தபோதும் பாலியல் குற்றங்கள் புரிந்தவரெனக் கண்டால் நீதியின் முன் தண்டிக்கப்படுவர் என்பது தெளிவாக சட்டங்கள் இயற்றுவதாலும், அதனை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்துவதாலும் தனது நடவடிக்கைகளின் மூலம் காட்ட வேண்டும். அடுத்து அரச படைகளில் மற்றும் அரசினால் பயன்படுத்தப்படும் ஆயுதக்குழுக்களில் உள்ளவர்களுக்கான விழிப்புணர்வுப் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் வரையறுக்கும் விதிகள் மற்றும் பெண்களை கௌரவமாக நடத்தம் பண்பாடு பற்றி இவற்றில் போதிக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உள ஆற்றுப்படுத்தவும் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்யவும் போதுமான வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும். நான்காவதாக, ஊடகங்களின் உதவி கொண்டும் அரச இயந்திரங்களின் உதவி கொண்டும் யுத்தக் களத்தில் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களைப் பற்றிய சமூகப் பார்வையினை மாற்ற வேண்டும். யுத்தக்களங்களில் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன என்பதைக் கேள்வியுற்றும் வாளாவிருக்கும் தாய் சமூகத்தின் அமைதியை உடைக்க வேண்டும்.
இஸ்ரேலில் “Breaking the Silence” (அமைதியை உடைத்தல்) என்கின்ற நிறுவனமொன்று அங்கு காஸா, வெஸ்ட் பாங்க் போன்ற பலஸ்தீனிய பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலிய படையினர் நடத்தைகளை வெளிக்கொணர்ந்து இஸ்ரேலிய அரசின் யுத்தக்கொள்கைகளைப் பகிரங்கப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. இதற்காக நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களின் வாக்குமூலங்களைப் பெற்றிருக்கின்றார்கள். இந்த வாக்கு மூலங்கள் சொல்லும் பயங்கரமான கதைகள்!!! அவர்கள் மனிதர்கள்தானா என்று எம்மை எண்ண வைக்கும் அளவுக்கு இருக்கின்றன. இவர்கள்தான் இஸ்ரேலில் நாட்டைக்காத்த வீரர்களாக கொண்டாடப்படுகின்றனர். அவர்களின் கதைகளின் மூலம் அரசின் யுத்த கொள்கைகளே இவர்களின் கொடூர நடவடிக்கைகளுக்கு மூலகாரணம் எனக் காணப்பட்டிருக்கின்றது. இவற்றுடன் ஆங்காங்கே வந்து சேரும் மூளை பழுதான தளபதிகளின் கட்டளைகளுக்கும் அடி பணிந்து இராணுவ வீரர்கள் பாலியல் வன்முறை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்களாம். இந்த நடத்தை அவர்கள் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மழுங்கடிப்பதனால், பிறகு அவர்களுக்கு போரடிக்கும் வேளைகளில் பொழுது போக்காகவும் இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனராம். இவர்கள் திரும்ப தங்கள் சமூகத்துக்கு வந்து ஒரு தந்தையாய், கணவனாய், மகனாய் எப்படி சாதாரண வாழ்க்கை வாழ முடியும்? இதனைத்தான் இஸ்ரேலிய சமூகம் பகிரங்கமாகப் பேச வேண்டும் என்பதை இந்நிறுவனம் கோருகின்றது.
பிரித்தானியத் தூதராலய நிகழ்வில் இதனையெல்லாம் பேசுவார்கள் என்று எதிர்பார்த்துச் சென்ற அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆபிரிக்காவிலிருந்தும் பொஸ்னியாவிலிருந்தும் இரண்டு சம்பவங்களை வாசித்ததுடன் சரி. வடக்கிலிருந்து வந்திருந்த ஒரு குழுவின் ஒரு கதாபாத்திரமே நடிக்கும் ஓரங்க நாடகம் ஒன்று அரங்கேறியது. அது, யுத்தத்தால் விதவையான ஒரு பெண் பாலியல் தொழிலாளியாக மாறிய கதையைக் கூறியது. “நாங்கள் ஆய்வு செய்திருக்கின்றோம். எங்களிடம் பல கதைகள் இருக்கின்றன…” என அவர்கள் தங்கள் அறிமுகத்தில் தெரிவித்திருந்தாலும், அநாதரவாக பிள்ளைகளுடன் இருக்கும் பெண்ணை ஊரவர்கள் ஒடுக்கும் கதையைப் பற்றியே பேசினர். இந்நிலை எந்த வறுமை நிலையில் இருக்கும் பெண்ணுக்கும் பொருந்துமல்லவா? இதற்கும் யுத்தத்தின்போது அல்லது யுத்தத்தின் பின்பான காலகட்டங்களில் அதன் விளைவாக எற்படும் பாலியல் வன்முறைகளுக்கும் என்ன தொடர்பு? இதுதான் இப்படியென்றால், அடுத்த நாடகமாக சிங்களப் பகுதியிலிருந்து, கணவன் மனைவியினை பாலியல் வன்புணாச்சிக்கு உள்ளாக்கும் பிரச்சினையைக் காட்டினர். வேலைக்குப் போய் வரும் மனைவி வீட்டுக்கு வந்தும் வீட்டு வேலைகளிலும் ஈடுபட்டதால் களைத்திருந்தும், கணவன் அவளை பாலியல் உறவுக்கு வாவென பலாத்காரம் செய்வதை இது காட்டியது. இதற்கும் யுத்தத்துக்கும் என்னய்யா தொடர்பு? யுத்தத்தின்போது பாலியல் வன்முறைகள் ஏற்படுவதற்கான காரணங்களை அலசவில்லை. எமது நாட்டில் இராணுவ ஆக்கிரமிப்பினால் இது தொடர்ந்து நடப்பதைப் பற்றி மூச்சு விடவில்லை. இது எமது அரசினால் இனச் சுத்திகரிப்பிற்கான யுக்தியாக உபயோகிக்கப்படுவதைப் பற்றிய கருத்தே தெரிவிக்கப்படவில்லை. நாடகங்களின் முடிவில் அவற்றைப் பற்றிய கலந்துரையாடல்கள் என்றார்கள். தொடர்ந்த அமைதியில் (எதைத்தான் பேசுவது?) அங்கிருந்த வெள்ளைக்காரர்களே இட்டு நிரப்ப வேண்டியதாயிற்று. பிரித்தானியத் தூதராலயத்துக்கே இவ்விடயத்தை வெளியில் பேசுவதற்கு இவ்வளவு பயமென்றால் சாதாரண மக்கள் என்ன செய்வது?
அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்
தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.