Photo, IDCPC
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) இலங்கையில் ஒரு கட்சி ஆட்சியை நிறுவும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்ற விமர்சனம் அண்மைக் காலமாக எதிரணி அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் அரசியல்வாதிகளில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் இந்த விமர்சனத்தை முன்வைப்பதில் முன்னணியில் இருக்கிறார்.
கடந்த வருடம் ஜூனில் சீனாவுக்குச் சென்றுவந்த பிறகு ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா சீனாவின் ஒரு கட்சி ஆட்சிமுறையின் ‘அனுகூலம்’ குறித்து தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவையாகவே முதலில் இந்த விமர்சனங்கள் அமைந்தன.
இலங்கையில் நீண்டகால நோக்கிலான பயனுறுதியுடைய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு ஆளும் கட்சி 15 – 20 வருடங்களுக்குத் தொடர்ச்சியாக ஆட்சியதிகாரத்தில் இருப்பது அவசியம் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் தனக்கு ஆலோசனை கூறியதாக தெரிவித்த சில்வா ஐந்து வருடத் தேர்தல் வட்டங்களை விடவும் சீனாவில் உள்ள ஒரு கட்சி முறைமை 30 – 40 வருடங்களுக்கு ஒரே சீரான திட்டமிடலைச் செய்வதற்கான ஆற்றலைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மெய்யான மாற்றத்தை நடைமுறைப்படுத்தவும் உறுதிப்பாட்டைப் பேணவும் அடுத்தடுத்து மூன்று அல்லது நான்கு தேர்தல்களில் வெற்றிபெற வேண்டியது அவசியம் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி யோசனை கூறியதாகவும் ஒவ்வொரு புதிய அரசாங்கம் பதவிக்கு வரும்போது கொள்கைகளிலும் மாற்றம் ஏற்படுகின்ற நிலைவரத்துக்கு மாறாக சீன முறைமை ஒருங்கிணைந்த திட்டமிடலையும் கொள்கையையும் அனுமதிக்கிறது என்றும் சில்வா தெரிவித்தார்.
“சீனாவில் ஒரு வகையான ஜனநாயகம் இருப்பதாக நாம் உணருகிறோம். அந்த நாட்டில் ஒரு கட்சி முறைமை இருப்பது உண்மை. ஆனால், அதற்கு நேர்மறையான ஒரு பக்கமும் இருக்கிறது. ஏனென்றால், ஒரு திசையில், ஒரு திட்டத்தை நோக்கிச் செயற்படுவதற்கு அது உதவுகிறது.
“எமது நாட்டை மாற்ற நாம் ஆரம்பித்திருக்கிறோம். ஆனால், இந்த மாற்றத்தைக் கொண்டுவரும் செயன்முறைகளை நாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போது அடுத்த ஐந்து வருடங்களில் எமது அரசாங்கம் மாறினால் நாம் தொடங்கிய சகலதுமே சீர்குலைந்து போகும். வேறு ஒரு அரசாங்கம் பதவிக்கு வந்து வேறுபட்ட முறையில் செயற்படும். அதன் காரணத்தினால்தான் ஒரு அரசாங்கம் 15, 20 அல்லது 25 வருடங்களுக்கு அதிகாரத்தில் இருந்தால் மாத்திரமே ஒரு நோக்கில், ஒரு கொள்கைக் கட்டமைப்பின் கீழ் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். அதுவே சீனாவுக்கு இருக்கும் அனுகூலம். அதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அவர்களது எழுச்சிக்கான காரணங்களில் அது ஒன்று என்று நான் நம்புகிறேன்” என்று சில்வா கூறினார். இதை சுமந்திரன் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் கடந்த வாரம் பதிவிட்டிருந்தார்.
அதன் ஆறு தசாப்தகால வரலாற்றில் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு ஆயுதக் கிளர்ச்சிகளை நடத்திய ஜே.வி.பி. மார்க்சிய – லெனினிய கோட்பாட்டு வேர்களைக் கொண்ட இயக்கம் என்பதாலும் இன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலத்துடன் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியதிகாரத்தில் இருப்பதாலும் ஒரு கட்சி ஆட்சியை நிறுவுவதற்கு முனைப்புக்காட்டக்கூடும் என்று தற்போது பெருமளவுக்கு பலவீனமடைந்து சிதறுப்பட்டிருக்கும் எதிரணி அரசியல் கட்சிகள் அஞ்சுகின்றன.
ஒரு கட்சி ஆட்சியை நிறுவுவதில் ஜே.வி.பி.யின் தலைவர்களுக்கு நோக்கம் இருப்பதாக தனது அச்சத்தை ஏற்கெனவே உள்நாட்டில் பல தடவைகள் வெளிப்படுத்தியிருந்த சுமந்திரன் அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த வேளையிலும் அது பற்றி குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை விவகாரங்களில் நெருக்கமான பரிச்சயமுடைய பத்திரிகையாளர் எம்.ஆர். நாராயண சுவாமிக்கு புதுடில்லியில் நேர்காணல் ஒன்றை வழங்கிய அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் ‘பிரஜா சக்தி’ திட்டத்தை ஒரு கட்சி முறையை நோக்கிய ஒரு அடியெடுத்துவைப்பாக அடையாளம் காட்டினார்.
“ஒரு கட்சி அரசை நோக்கி ஜே.வி.பி. நகரும் பேராபத்தை தமிழர்கள் மாத்திரமல்ல, முழு நாடுமே எதிர்நோக்குகின்றது. இது ஒரு பாரதூரமான நிலைவரமாகும்.
பிரஜா சக்தி என்ற வறுமை ஒழிப்புத் திட்டத்தை அரசாங்கம் தற்போது நடைமுறையில் உள்ள நிறுவனங்களையும் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையும் தவிர்த்துக் கடந்து சென்று தாங்கள் தெரிந்தெடுக்கும் நபர்கள் குறிப்பாக, கட்சிக்காரர்களையும் ஆதரவாளர்களையும் கொண்ட கட்டமைப்பின் ஊடாக சமூகத்தின் கீழ்மட்டத்திலான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு பயன்படுத்துகிறது.
“தமிழர்கள் அதிகப் பெரும்பான்மையாக வாழ்கின்ற வட மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கு சமாந்தரமான அதிகாரக் கட்டமைப்புக்களை அரசாங்கம் ஏற்கெனவே அமைக்கத் தொடங்கியிருக்கிறது. பல வருடங்களாக தேர்தல்கள் நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபைகளின் எஞ்சிய அதிகாரங்களையும் அபகரிப்பதற்காக வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் நிழல் அமைச்சர்களாக நியமித்திருக்கிறது.
“நீண்டகாலமாக தங்களது கட்சி கொண்டிருந்த நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தயாராயிருக்கிறார். அவர் நியாயபூர்வமாகச் செயற்படக்கூடியவராக இருக்கின்ற அதேவேளை, அவரது கட்சிக்குள் இருக்கும் கடும்போக்காளர்கள் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்ற பிறகு மற்றைய அரசியல் சக்திகளுடன் இணக்கபூர்வமாகச் செயற்படுவதற்கு எதிராக இருக்கிறார்கள்” என்று சுமந்திரன் நேர்காணலில் கூறியிருக்கிறார்.
உள்ளூர் சமூகங்கள் அவற்றின் சொந்த அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு அதிகாரமளிக்கும் வகையில் பிரஜா சக்தியை வறுமை ஒழிப்புக்கான ஒரு தேசிய இயக்கம் என்று அரசாங்கம் கடந்த வருடம் ஜூனில் ஆரம்பித்தது.
வறுமை நிலையில் வாழும் மக்களுக்கு நேரடியாக பணக் கொடுப்பனவுகளைச் செய்வதை விடுத்து அபிவிருத்தித் திட்டங்களை சமூகங்கள் தாங்களாகவே அடையாளங்கண்டு முன்னுரிமையின் அடிப்படையில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளிப்பதன் மூலமாக வறுமையை ஒழிப்பதே நோக்கம் என்று அரசாங்கம் அறிவித்தது.
கிராம அதிகாரி பிரிவு மட்டங்களில் அமைக்கப்படும் சமூக அபிவிருத்தி சபைகளை (பிரஜா சக்தி சபை) அலகாகக் கொண்ட புதிய கட்டமைப்பையே இந்த வறுமை ஒழிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் பயன்படுத்துகிறது.
சகல மாவட்டங்களிலும் உள்ளூர்த் தேவைகளை அடையாளங்கண்டு அபிவிருத்தித் திட்டங்களை வகுப்பதும் அவற்றின் செயற்பாட்டு முன்னேற்றங்களை கண்காணிப்பதுமே சமூக அபிவிருத்தி சபையின் பொறுப்பு என்று கூறப்படுகிறது.
பிரஜா சக்தியை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் அணுகுமுறை மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்குச் சமாந்தரமானதும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்ளைக் கொண்டதுமான ஒரு கட்டமைப்பை சமூகத்தின் அடிமட்டத்தில் அமைப்பதாக இருக்கிறது என்பதே எதிரணி கட்சிகளின் குற்றச்சாட்டாகவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்ளும் அரசாங்கம் எதிரணி கட்சிகளினால் நிருவகிக்கப்படும் உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளுக்குப் பாதகமாக அமையக் கூடியதாக பிரஜா சக்தியை நடைமுறைப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
குறிப்பாக, வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகள் பயனுறுதியுடைய முறையில் செயற்படுவதற்கு பிரஜா சக்தி பெரும் தடையாக இருக்கிறது என்பதே சுமந்திரனின் முறைப்பாடாகும். திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சமூக அபிவிருத்தி சபைகள் பிரதேச செயலகங்களுடனும் மாவட்டச் செயலகங்களுடனும் இணைந்து செயற்படும் போது உள்ளூராட்சி சபைகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகிறது.
ஆளும் கட்சியின் உறுப்பினர்களினால் அல்லது ஆதரவாளர்களினால் நிரப்பப்படும் சமூக அபிவிருத்தி சபைகள் அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் சமூகத்தின் அடிமட்டத்தில் கட்சி அரசியலுக்கான ஒரு கட்டமைப்பாக இயங்கக்கூடிய ஆபத்து இருப்பதாக எதிரணி கட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஆயுதப் போராட்டப் பாதையைக் கைவிட்டு ஜனநாயக மார்க்கத்துக்கு வந்துவிட்ட ஜே.வி.பி. முதலாளித்துவக் கட்டமைப்பை ஒழிக்க முயற்சிப்பதற்கு பதிலாக அந்த முறைமைக்குள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இரு தசாப்தங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் தலைவராக வந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கட்சியை உறுதியான முறையில் நாடாளுமன்ற ஜனநாயக மார்க்கத்தை நோக்கி வழிநடத்தி வந்திருக்கிறார். வன்முறைக் கடந்த காலத்தை மறந்து மக்கள் பரந்தளவில் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் கட்சியாக மாறியிருக்கும் ஜே.வி.பி. பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்துக்கு எதிரானதாக தன்னை காட்டிக்கொண்டாலும், தற்போது நடைமுறையில் உள்ள முதலாளித்துவ ஜனநாயக கட்டமைப்புக்குள்ளேயே செயற்படுகிறது.
அத்துடன், ஜே.வி.பி. பல்வேறு அரசியல் குழுக்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் கூட்டுச் சேர்ந்து 2019ஆம் ஆண்டு அமைத்துக் கொண்ட தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அவதாரத்தின் மூலமாகவே ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்திக்குள் ஜே.வி.பி. ஆதிக்கம் கொண்ட சக்தியாக விளங்குகின்ற போதிலும் கூட, ஒரு கட்சி ஆட்சி போன்ற ஜனநாயக விரோத ஏற்பாட்டைக் கொண்டுவருவதற்கான எந்தவொரு முயற்சியையும் தேசிய மக்கள் சக்திக்குள் இருக்கும் ஒப்பீட்டளவிலான லிபரல் போக்குடைய சக்திகள் ஆதரித்து ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஒரு அரசாங்கத்தினால், தனியொரு கட்சியினால் அல்லது தனியொரு நபரினால் இலங்கையின் ஆழமான நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கக்கூடியதாக இருக்காது என்று ஜனாதிபதி திசாநாயக்க ஏற்கெனவே வெளிப்படையாகக் கூறியதும் பதிவில் இருக்கிறது. ஒரு கட்சி ஆட்சியை நியாயப்படுத்தக்கூடிய அல்லது ஆதரிக்கக்கூடிய ஒருவராக அவரைச் சந்தேகிப்பதற்கு இதுவரையில் எந்தச் சான்றும் கிடையாது.
அதேவேளை, இலங்கை அரசு அடிப்படையில் இனத்துவ மேலாட்சித் தன்மையுடையதாக இருக்கின்ற போதிலும், ஆழமாக வேரூன்றிய பல கட்சி ஜனநாயக முறைமையைக் கொண்டிருப்பதால் ஒரு கட்சி ஆட்சியை நிறுவுவது என்பது சட்ட ரீதியாகவும் நடைமுறையிலும் சவால்மிக்கதாகவே இருக்கும். குறிப்பாக, தென்னிலங்கையின் அரசியல் கலாசாரம் தீவிரமான கட்சி அரசியல் போட்டியைக் கொண்டதாக இருந்து வருவதால் ஒரு கட்சி மேலாதிக்கத்தை அது அனுமதிக்கக்கூடிய சாத்தியத்தை எதிர்பார்க்க முடியாது.
சுதந்திர இலங்கை தெற்கில் இரு ஆயுதக் கிளர்ச்சிகளுக்கும் இன முரண்நிலையின் விளைவான சுமார் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கும் மத்தியிலும் கிரமமாக தேர்தல்களை நடத்தியது. அத்துடன் ஆட்சியதிகார மாற்றம் அமைதியான முறையில் – அரசியலமைப்பு ரீதியாகவே இடம்பெற்று வந்திருக்கிறது.
ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரான நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக ஆட்சிமுறையில் எதேச்சாதிகாரமும் அதிகார துஷ்பிரயோகமும் படிப்படியாக அதிகரித்திருப்பதுடன் நாடாளுமன்றமும் அரசியலமைப்பு ரீதியான நிறுவனங்களும் பலவீனப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகின்ற போதிலும், இதுவரையில் அது சாத்தியமாகவில்லை. இந்த ஆட்சிமுறையின் பொதுவாக ஜனாதிபதிகள் எதிரணிக் கட்சிகளைப் பலவீனப்படுத்துவதில் அக்கறை காட்டி வந்திருக்கிறார்கள் என்பது அண்மைக்கால வரலாறு. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராகவும் அதே குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டிருந்த முன்னைய அரசாங்கங்களைப் போன்று தேசிய மக்கள் சக்தி தனக்கு இருக்கும் பிரமாண்டமான நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி அதிகாரத் திமிருடன் நடந்து கொண்டதற்கான சான்று எதுவும் இதுவரையில் இல்லை.
அதேவேளை, அதிகாரப்பகிர்வுடன் தொடர்புடைய பிரச்சினைகளைக் கையாளுவதில் நாட்டத்தைக் காண்பிக்காமல் இருந்து வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒற்றையாட்சி மற்றும் மத்தியமயப்பட்ட அரசுக் கட்டமைப்பை உறுதியாக ஆதரிக்கிறது. இதனால், சிறுபான்மைச் சமூகங்கள் விசனமடைந்திருக்கின்றன என்பது உண்மை. தென்னிலங்கையில் இனவாத அடிப்படையிலான எதிர்ப்புக் கிளம்பும் என்ற அச்சத்தில் அந்த சமூகங்களின் மனக்குறைகளை போக்குவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தயங்குவது அது இனவாதத்தின் கைதியாக இருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.
ஒரு கட்சி முறைமை என்பது தனியொரு கோட்பாட்டின் ஊடாக அதிகாரத்தைக் குவிப்பதையும் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்காகவே புரட்சிகளுக்குப் பிறகு பெரும்பாலும் நிறுவப்பட்டு வந்திருக்கிறது.
வீரகத்தி தனபாலசிங்கம்