Photo, SELVARAJA RAJASEGAR

16 ஆண்டுகால சட்டப் போராட்டங்கள், சாட்சிகள் அச்சுறுத்தல் மற்றும் மீறப்பட்ட வாக்குறுதிகளுக்குப் பிறகு, இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவம் இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது. இது இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை இன்னும் பீடித்துள்ள தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாச்சாரத்தை நினைவூட்டும் ஒரு கசப்பான உண்மையாகும். அவரது மனைவி சந்தியா எக்னலிகொட, தற்போதைய அரசாங்கத்தின் கீழும் துஷ்பிரயோகங்களையும் கொலை அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார். மிக சமீபத்திய அச்சுறுத்தல், ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் என அடையாளம் காணப்பட்ட ஒருவரால் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயங்கரமான செயல் மட்டுமல்ல, ஒரு பெண்ணின் மற்றும் பாதிக்கப்பட்டவரின் சுயமரியாதை மீதான தாக்குதலும் ஆகும்.

2010 ஜனவரி 24 அன்று, இலங்கை ஊடகவியலாளரும் கேலிச்சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னலிகொட எந்தத் தடயமும் இன்றி காணாமலாக்கப்பட்டார். அவர் வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டதன் 2026ஆம் ஆண்டு நினைவேந்தல் கடந்து செல்லும் வேளையில், இந்த வழக்கு இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு வலிமிகுந்த அடையாளமாகத் திகழ்கிறது.

சட்ட எல்லைக்குள் முடங்கியுள்ள நீதி

எக்னலிகொட காணாமல் போன விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை ஆமை வேகத்தில் நகர்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்னவும் ஒருவர். இவர் கிரிதலே இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரியாவார். பிரகீத் கடத்தப்பட்ட பிறகு அங்கு அவர் இருப்பதைக் கண்டதாக சாட்சிகள் தெரிவித்திருந்தனர். இருப்பினும், மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றத்தில் (Trial-at-Bar) பல ஆண்டுகள் விசாரணைகள் நடந்தும், தீர்ப்பு எட்டப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.

விசாரணையின் தற்போதைய கட்டத்தில், தொலைபேசிப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் சாட்சியங்கள் உள்ளிட்ட சூழ்நிலைச் சான்றுகளைப் பகுப்பாய்வு செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம், பிரகீத் பட்டப்பகலில் காணாமலாக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்பதை இறுதியாகத் தெரிந்துகொள்ள முடியும். ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர இந்த வழக்கில் 109ஆவது சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார். இது வழக்குக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொண்டு வரும் என்று சட்டத்தரணிகள் எதிர்பார்க்கும் ஒரு தீர்க்கமான விடயமாகும்.

இருப்பினும், 2025இன் பிற்பகுதியிலும் 2026-க்குள்ளும் தொடர்ச்சியான ஒத்திவைப்புகள் விசாரணையின் அடையாளமாக மாறியுள்ளன. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் தொடர்ந்து வெற்றிடங்கள் காணப்படுகின்றன. விசாரணைகள் மாதக்கணக்கில் தள்ளிவைக்கப்படுகின்றன. நீதிபதிகள் நியமனங்கள் அதிகாரத்துவச் சிக்கலில் முடங்கிக் கிடக்கின்றன. 16 ஆண்டுகளாகப் போராடி வரும் சந்தியா எக்னலிகொடவுக்கு, ஒவ்வொரு தாமதமும் தனது கணவனின் தலைவிதி என்னவென்று தெரியாத வேதனையை மேலும் அதிகரிக்கிறது.

2024 இறுதிக்குள் இருந்த நம்பிக்கை 2025 இறுதிக்குள் சிதைந்துவிட்டது என்ற கூற்று, இந்த வழக்குடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் விரக்தியைப் பிரதிபலிக்கிறது. ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் இல்லாதபோது கூட, காலியாக உள்ள நீதிபதி பதவிகளுக்கு நியமனம் செய்வது ஆறு அல்லது ஏழு மாதங்கள் தாமதமாவது துரதிர்ஷ்டவசமானது.

அச்சுறுத்தலின் நிழல்கள்

சாட்சிகளை திட்டமிட்டு அச்சுறுத்துவதை விட வேறெந்தக் காரணியும் நீதியைத் தேடும் முயற்சியைச் சீர்குலைக்கவில்லை. முக்கிய சாட்சிகள் தங்கள் சாட்சியங்களைத் திரும்பப் பெற்றுள்ளனர் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியுள்ளனர். அவர்களின் மௌனம் இந்த வழக்கைச் சூழ்ந்துள்ள அச்சத்தின் அளவைப் பறைசாற்றுகிறது. அச்சுறுத்தல் முறை எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்றால், பேசத் துணிபவர்களை மௌனிக்கச் செய்யும் முயற்சியில் குற்றம் சாட்டப்பட்டவர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.

2025 ஜூன் மாதம், சாட்சி ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஷம்மி குமாரரத்ன குறுகிய காலத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இது ஒரு ஊடகவியலாளர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எவ்வளவு வெளிப்படையாக நீதியைத் தடுக்கத் துணிகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் ஒரு செயலாகும். கிரிதலே இராணுவ முகாமில் நடந்தவை குறித்து தீர்க்கமான சாட்சியங்களை வழங்கக்கூடிய சாட்சிகளுக்கு இதிலிருந்து வழங்கப்படும் செய்தி தெளிவானது: அதாவது ஒத்துழைப்பு என்பது தனிப்பட்ட ஆபத்துடன் வரும் என்பதாகும்.

இந்த அச்சுறுத்தல் சூழல் தனிப்பட்ட மிரட்டல்களுக்கு அப்பாலும் நீடிக்கிறது. இலங்கை இராணுவம், விவரங்கள் கேட்கப்படும் போதெல்லாம் தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி, இந்த வழக்கு குறித்த தகவல்களைத் தொடர்ந்து வழங்க மறுத்து வருகிறது. இராணுவத்தின் இந்த மௌனம், கிரிதலே இராணுவ முகாமில் பிரகீத்தை கடைசியாகக் கண்ட பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்துவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியுள்ளது.

அளிக்கப்பட்ட மற்றும் மீறப்பட்ட வாக்குறுதிகள்

செப்டம்பர் 2024 இல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றி, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பிரகீத்தின் குடும்பத்தினரிடையே ஆரம்பத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான புதிய நிர்வாகம், நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத அரசியல் கடத்தல்கள் மற்றும் கொலைகள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துவதாக உறுதியளித்தது. நீதி இறுதியாகக் கிடைத்துவிடும் என்று தோன்றியது. இருப்பினும், அந்த நம்பிக்கை குறுகிய காலமே நீடித்தது.

2026 ஜனவரியில், பொறுப்புக்கூறல் பற்றி உறுதியளித்த அதே அரசாங்கம், எக்னலிகொட வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான ரி.ஈ.ஆர். (எரந்த) பீரிஸை கேர்ணல் பதவிக்கு உயர்த்தியது. மனித உரிமைச் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பதவி உயர்வு, சர்வதேச அவதானிகளின் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானது. ஒரு ஊடகவியலாளர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் இராணுவப் பணிகளுக்குப் பதவி உயர்வு வழங்கும் அதேவேளை, அரசாங்கம் எவ்வாறு நீதியை நிலைநாட்டுவதாகக் கூற முடியும்?

இந்த முரண்பாடு முந்தைய அரசாங்கங்களின் நடைமுறைகளையே பிரதிபலிக்கிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் கீழ், அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது அதிகாரிகளையும் விடுவிக்கப் பரிந்துரைக்கும் அளவிற்குச் சென்றது. சர்வதேச பார்வையாளர்கள் அந்த நடவடிக்கையை விசாரணையைச் சீர்குலைக்கும் திட்டமிட்ட முயற்சி என்று கண்டித்தனர். இத்தகைய பரிந்துரைகள் தண்டனையின்றி வழங்கப்படுவது, இராணுவத்தினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பொறுப்புக்கூறலுக்கு இருக்கும் நிறுவன ரீதியான எதிர்ப்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.

சர்வதேசப் பார்வை

இலங்கையின் ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பரந்த போராட்டங்களுக்கு எக்னலிகொட வழக்கு ஒரு அடையாளமாக மாறியுள்ளது. 2025 நிலவரப்படி, உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இலங்கை 150ஆவது இடத்தில் உள்ளது. இது நாட்டில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான சூழலைப் பிரதிபலிக்கும் ஒரு மோசமான நிலையாகும்.

சர்வதேச அமைப்புகள் மௌனமாக இருக்கவில்லை. எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) ஆகியவை நீதியை நிலைநாட்டும் வகையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களைச் செய்யுமாறு கோரித் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக பிரகீத்தின் காணாமலாக்கப்பட்டமை போன்ற கடந்தகாலக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலைக் கண்காணிப்பது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 2025 அக்டோபரில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணைக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்தது.

இந்த சர்வதேசக் கண்காணிப்பு அமைப்புகள் எக்னலிகொட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர மூன்று முக்கியமான தேவைகளை அடையாளம் கண்டுள்ளன: சாட்சிகளுக்கான பாதுகாப்பு, முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறையின் தொடர்ச்சி. இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியமளிப்பவர்களை அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல்களில் இருந்து பாதுகாக்க பயனுள்ள வழிமுறைகள் நிறுவப்பட வேண்டும். இத்தகைய பாதுகாப்புகள் இன்றி, உண்மை அச்சத்தின் அடுக்குகளுக்குள் புதைந்தே இருக்கும்.

கிரிதலே இராணுவ முகாமில் பிரகீத் காணப்பட்ட பிறகு அவர் எங்கிருந்தார் என்பதை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு இராணுவம் பொறுப்பேற்க வேண்டும். மனித உரிமை மீறல்களுக்கு தேசிய பாதுகாப்பு என்பது நிரந்தரக் கேடயமாக இருக்க முடியாது. கூடுதலாக, இந்த வழக்கில் நிலவும் தந்திரோபாய தாமதங்களைத் தடுக்க மேல் நீதிமன்ற அமர்வு முழுமையான நீதிபதிகளுடன் இயங்க வேண்டும். ஏனெனில், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமாகும்.

ஒரு மனைவியின் தளராத உறுதி

இந்த 16 ஆண்டுகால சட்டப் போராட்டங்கள், மீறப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் நிறுவன ரீதியான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சந்தியா எக்னலிகொட உறுதியாக இருக்கிறார். நீதிக்கான அவரது பொதுப் பிரச்சாரம் அவரது கணவரின் வழக்கை தேசிய உணர்வில் நிலைநிறுத்தியுள்ளதுடன், இலங்கையின் துயரமான வரலாற்றில் அது மறைந்துவிடாமல் தடுத்துள்ளது.

“பிரகீத்தின் வழக்கு விரைவில் முடிக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைக்க எனக்கு உரிமை உண்டு என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கண்ணியமான உறுதியுடன் கூறியுள்ளார். அவரது வார்த்தைகள், நீதியை வழங்குவதை விட அதைத் தாமதப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட ஒரு அமைப்பில் பதில்களைத் தேடி அவர் கழித்த இரண்டு தசாப்தகால போராட்டத்தின் கனத்தைச் சுமந்துள்ளன.

சந்தியாவின் போராட்டம் ஒரு தனிநபரின் காணாமல் ஆக்கப்பட்டமை பற்றி மட்டுமல்ல. இலங்கை தனது ‘தண்டனையில் இருந்து தப்பிக்கும் கலாச்சாரத்தில்’ இருந்து விடுபட முடியுமா, சிவிலியன்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளைப் பொறுப்புக்கூற வைக்க முடியுமா மற்றும் ஊடகவியலாளர்கள் எப்போதும் மௌனிக்கப்படலாம் என்ற அச்சமின்றிப் பணியாற்ற முடியுமா என்பது பற்றியதாகும்.

இறுதித் தீர்வுக்கான அவசரத் தேவை

2026 ஜனவரி 24 உடன் பிரகீத் எக்னலிகொட வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. அவரது வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேவை இதற்கு முன்னர் ஒருபோதும் இவ்வளவு அவசரமான காரியமாக இருந்ததில்லை. வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற இறுதித் தீர்ப்பு என்பது ஒரு சட்டப்பூர்வமான சம்பிரதாயம் மட்டுமல்ல. இது தனது எதேச்சதிகார கடந்த காலத்திற்கு அப்பால் செல்ல முயற்சிக்கும் ஒரு சமூகத்தின் தார்மீகத் தேவையாகும்.

சாட்சிகள் அச்சுறுத்தப்படுதல், நிறுவன ரீதியான எதிர்ப்பு, அரசாங்கத்தின் முரண்பாடான நடவடிக்கைகள் மற்றும் தங்களைச் சார்ந்தவர்களைப் பாதுகாப்பதில் தொடர்ந்து ஈடுபடும் இராணுவம் என இருக்கும் தடைகள் மிகவும் வலிமையானவை. ஆனால், இந்தச் சவால்கள் நீதியை காலவரையறையின்றித் தடுக்க அனுமதிக்க முடியாது. இந்த வழக்கு என்றென்றும் தீர்க்கப்படாமல் இருக்கும் எண்ணற்ற ஏனைய காணாமல் போன சம்பவங்களுடன் சேருமா அல்லது அந்தஸ்து அல்லது சீருடையைப் பொருட்படுத்தாமல் எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்பதை நாடு இறுதியில் நிரூபிக்குமா என்பது இலங்கையின் முன்னால் இருக்கும் ஒரு கூர்மையான கேள்வியாகும்.

சந்தியா எக்னலிகொடவுக்கும் ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும், அந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதில் இலங்கையின் கடந்த காலத்தைப் போலவே அதன் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

பதினாறு ஆண்டுகள் என்பது நீதிக்காகக் காத்திருப்பதற்குப் போதுமானதை விடவும் அதிகமான காலமாகும். இப்போது இறுதி முடிவுக்கு வரவேண்டிய தருணம் வந்துவிட்டது.

லயனல் போபகே