Photo, HIGH COMMISSION OF INDIA

இயற்கை அனர்த்தத்தின் விளைவான அழிபாடுகளில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் இடர்மிகுந்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கை மக்கள் புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கிறார்கள்.

இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றுமே கண்டிராத படுமோசமான 2022 பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுவந்த ஒப்பீட்டு அளவிலான முன்னேற்றத்தை ‘டித்வா’ சூறாவளி மறுதலையாக்கியிருக்கிறது.

மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் முதல் வருடத்தைக் கடந்து வந்திருக்கும் நிலையில், இயற்கை அனர்த்தத்தின் விளைவாக சமாளிக்க முடியாத கடமைப் பொறுப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், சூறாவளியின் பாதிப்புக்களை முன்கூட்டியே தணிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதையும் அனர்த்தத்துக்குப் பின்னரான நிவாரண உதவிப் பணிகளிலும் புனரமைப்பு நடவடிக்கைகளிலும் காணப்படும் குறைபாடுகளையும் கண்டனம் செய்து கொண்டிருக்கும் எதிரணிக் கட்சிகள், தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு ஆட்சி முறையில் அனுபவமும் தகுதியும் இல்லை என்று ஏற்கனவே முன்வைத்து வந்த விமர்சனத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றன.

பரந்தளவிலான கலந்தாலோசனையின் அடிப்படையிலான தீர்வுகளை வேண்டி நிற்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளாக இருந்தாலென்ன, இயற்கையின் சீற்றம் ஏற்படுத்தும் பேரழிவாக இருந்தாலென்ன தேசிய அனர்த்தங்களின்போது சகல தரப்புகளையும் அரவணைக்கும் அணுகுமுறை மூலமாக நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் அரசியல் சக்திகள் செயற்பட முன்வராத சாபக்கேடான கலாசாரம் ஒன்று இலங்கையில் ஆழமாக வேரூன்றிவிட்டது.

2024 ஆகஸ்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்ட வேளையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை குறித்து எதிரணி அரசியல்வாதிகள் அக்கறை காட்டிய போதிலும், அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு நம்பகத்தன்மை கொண்ட காரணங்களை அவர்களினால் முன்வைக்க முடியவில்லை. அதேபோன்றே சூறாவளியின் விளைவான நெருக்கடியையும் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திருப்புவதற்கு பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பமாக நம்பியதில் அவர்கள் மீண்டும் தவறிழைத்துவிட்டனர்.

அதேவேளை, சகல தரப்புகளையும் ஈடுபடுத்தி அழிபாடுகளில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான பணிகளை முன்னெடுப்பதில் அரசாங்கமும் அக்கறை காட்டவில்லை. நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி, அரசாங்கத்தின் அணுகுமுறையில் உள்ள பாரதூரமான குறைபாட்டை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. அந்த செயலணியில் அரசாங்கத் தரப்பைச் சாராத சகல உறுப்பினர்களுமே அனர்த்த முகாமைத்துவத்தில் அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கையாளுவதில் அனுபவத்தை அல்லது நிபுணத்துவத்தை கொண்டவர்கள் என்று அறியப்படவில்லை என்ற விமர்சனம் சிவில் சமூக அமைப்புகளிடம் இருந்து வந்திருக்கிறது.

ஒரு இடதுசாரிக் கூட்டணியாக இருக்கின்ற போதிலும் கூட, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிவில் சமூக அமைப்புக்களுடன் ஊடாட்டங்களைச் செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடனேயே நடந்துகொள்கிறது. பல்வேறு விமர்சனங்களுக்கு பின்னர்தான் ஜனாதிபதி செயலணியில் குறைந்தபட்சம் சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியையாவது சேர்த்துக்கொள்வதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பதாக தெரியவருகிறது.

கொள்கைகளை வகுக்கும் செயன்முறைகளில் பரந்தளவிலான தரப்புகளின் பங்கேற்பை குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களை திட்டமிட்ட முறையில் புறக்கணித்த கடந்தகால அணுகுமுறைகளின் விளைவாக நாடு அனுபவித்த அவலங்களில் இருந்து தேசிய மக்கள் சக்தி எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ள முயற்சிக்கவில்லை.

ஆனால், சர்வதேச சமூகத்தைக் கையாளுவதில் முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகளின் விளைவாக தோன்றியதைப் போன்ற நெருக்கடிகள் தங்களுக்கு வராமல் இருப்பதை உறுதி செய்வதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகுந்த விவேகத்துடன் செயற்பட்டுவருகிறது. அமெரிக்கா மற்றும் மேற்குலக வல்லாதிக்க நாடுகளுடனும் ஆசியாவின் பெரிய நாடுகளுடனுமான உறவுகளில் ஒரு சமநிலையை அவர்கள் பேணுகிறார்கள். இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் சூறாவளியின் பாதிப்புக்களில் இருந்து மக்களை மீட்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளும் மேற்குலக நாடுகளிடமிருந்து  இருந்து கிடைத்த எதிர்பார்த்திராத வகையிலான பேரளவு உதவிகளும் இதற்கு சான்று.

குறிப்பாக, இந்தியாவுடனும் சீனாவுடனும் உறவுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகவும் சாதுரியமாகக் கையாளுகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு (ஜே.வி.பி.) நீண்டகாலமாக இருந்து வரும் நெருக்கமான அரசியல் தொடர்புகளையும் அதன் கடந்தகால இந்திய விரோத நிலைப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அதன் தலைமையிலான ஆட்சியில் புதுடில்லிக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பெய்ஜிங்குடனான உறவுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சகல எதிர்பார்ப்புக்களையும் பொய்யாக்கி ஜனாதிபதி திசநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணுகிறது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவிய உறவுகளை அன்றைய வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் ‘மாற்றியமைக்க முடியாத அளவுக்கு மகோன்னதமானவை’ என்று வர்ணித்தார். ஆனால், இன்று திசாநாயக்கவின் ஆட்சியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எவ்வாறு வர்ணிப்பது என்றே தெரியவில்லை.

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும் வல்லாதிக்க நாடுகள் முண்டியடித்துக்கொண்டு ஓடிவந்ததை இந்து சமுத்திரத்தில் புவிசார் நலன்களின் மறைமுகமான ‘காட்சிப்படுத்தல்’ என்று கூறமுடியும். அனர்த்த நிவாரண உதவிகளை வழங்குவது ஒரு நல்லெண்ணச் செயற்பாடு மாத்திரமல்ல, இராஜதந்திர நகர்வுமாகும். நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கிடைத்த வாய்ப்பை வல்லாதிக்க நாடுகள் கொழும்புடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டன.

இலங்கையில் அனர்த்தங்கள் நிகழ்கின்ற வேளைகளில் எல்லாம் முதலில் உதவிக்கு விரைகின்ற நாடான இந்தியா இந்தத் தடவை கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள் சகிதம் அதிவிசேடமான அக்கறையை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக கொழும்புக்கு வந்து இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவித்திட்டத்தை அறிவித்தார்.

அவர் ஊடாக மோடி ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு கொடுத்தனுப்பிய கடிதத்தில் ‘இலங்கையின் பக்கத்தில் இந்தியா எப்போதும் நிற்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஜெய்சங்கரின் விஜயத்தின்போது அறிக்கை ஒன்றை வெளியிட்ட திசநாயக்க ‘இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் இது ஒரு புதிய யுகம்’ என்று வர்ணித்திருந்தார்.

ஜெய்சங்கர் புதுடில்லி திரும்பிய உடனடியாக சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவின் உறுப்பினர் வாங் ஜுன்ஷெங் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று இலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது கேந்திர முக்கியத்துவ போட்டிக்குரிய ஒரு பிராந்தியத்தில் தங்களது செல்வாக்கை மீள உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை வல்லாதிக்க நாடுகள் பயன்படுத்திக் கொண்டன.

இலங்கையை போன்று காலநிலை மாற்றத்தின் விளைவான இயற்கை அனர்த்தங்களினால் அடிக்கடி பாதிக்கப்படும் ஆபத்தைக்கொண்ட நாடுகள், சகல நாடுகளுடனும் நல்லுறவைப் பேணவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், வெளிநாட்டு உதவிகளில் தங்கியிருக்கும் போக்கு அதிகரிக்கும்போது வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் போட்டாபோட்டியின் மைதானமாக மாறுகின்ற ஆபத்தும் அதிகரிக்கிறது. உதவிகளைப் பெறுகின்ற அதேவேளை, முக்கியமான நாடுகளுடனான உறவுகளில் சமநிலை ஒன்றைப் பேணுவது என்பது மிகவும் சிக்கலான ஒரு காரியமாகும்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச சமூகத்தை நம்பியிருக்கும் இலங்கை, இயற்கையின் சீற்றத்தின் அழிபாடுகளில் இருந்து மீட்சிபெறுவதற்கும் வெளிநாட்டு உதவிகளிலேயே தங்கியிருக்க வேண்டியிருப்பதால் வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களுக்குள் சிக்கிக் கொள்வதை தவிர்க்க முடியாமல் போகலாம். இதுகாலவரை அந்த நாடுகளுடனான உறவுகளில் பேணிவந்த சமநிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இயலுமாக இருக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இதனிடையே, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவருவதில் அரசாங்கத்தினால் போதியளவுக்கு கவனம் செலுத்துவதற்கு அவகாசம் கிடைக்குமா?

வீரகத்தி தனபாலசிங்கம்