Photo, AP Photo/Eranga Jayawardena

2004 டிசம்பர் சுனாமியே இலங்கை அதன் அண்மைய வரலாற்றில் முகங்கொடுத்த படுமோசமான இயற்கை அனர்த்தமாகும். அடுத்த பெரிய அனர்த்தம் ‘டித்வா’ சூறாவளியும் அதன் விளைவாக ஏற்பட்ட கடந்த வாரத்தைய வெள்ளப்பெருக்கும் மண்சரிவுகளுமாகும்.

யேமன் நாட்டில் உள்ள வனப்புமிகு ஏரி ஒன்றின் பெயரிடப்பட்ட இந்த சூறாவளியின் விளைவாக நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் சொத்து அழிவுகளையும் பற்றிய முழுமையான விபரங்களை அறிந்து கொள்வதற்கு பல வாரங்கள் செல்லலாம். ஆனால், இதுவரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 600க்கும் அதிகம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய மலைநாட்டில் சில கிராமங்கள் மண்ணுக்குள் முற்றாகவே புதைந்துவிட்டதால் காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கையை  ஒருபோதும் அறிய முடியாமலும் போகலாம்.

2004 சுனாமி 40 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்களை பலியெடுத்த போதிலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கரையோரப் பகுதிகளை மாத்திரமே தாக்கியது. ஆனால், டித்வா சூறாவளி நாடு முழுவதிலும் அழிவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய ஆசிய நாடுகளும் ஏககாலத்தில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட போதிலும், இலங்கையே படுமோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளத்தினால் சூழப்பட்ட வீடுகளினதும் வாகனங்களினதும் கூரைகளின் மேல் ஏறிநின்ற குடும்பங்களின் அவலக் குரலும் சகதிக்குள் புதைந்த வீடுகளும் நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை உணர்த்திநின்றன.

உள்நாட்டு மற்றும் சர்வதேச அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பலவற்றினால் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் டிசம்பர் முதலாம் திகதியளவில் செய்யப்பட்ட மதிப்பீடு ஒன்று குறைந்தபட்சம் 80 வீதிகளும் 15 பாலங்களும் மோசமாகச் சேதமடைந்திருக்கின்றன. சுமார் 3 இலட்சம் கட்டடங்கள் வெள்ளத்தினால் சூழப்பட்டிருந்தன. மின்விநியோக மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. சகல 25 மாவட்டங்களிலும் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

முக்கியமான விவசாயப் பிராந்தியங்களில் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட அழிவு முன்னென்றும் இல்லாத வகையிலான உணவுப் பாதுகாப்பின்மை நெருக்கடியை தோற்றுவிக்கப் போகிறது. மரக்கறி வகைகளின் விலைகள் உடனடியாகவே கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும்.வாழ்வாதாரத்துக்காக விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள் கடுமையான கடன் சுமை மற்றும் வறுமைக்குள் தள்ளப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட விபரங்களின் பிரகாரம் 5 இலட்சத்து  24 ஆயிரம் குடும்பங்களைச்  சேர்ந்த 18  இலட்சத்து 12 ஆயிரத்து 311 பேர்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 5 ஆயிரத்து 336 வீடுகள் முழுமையாகவும் 85 ஆயிரத்து 683 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருக்கின்றன. மீட்புப்பணிகள் தொடருகின்ற நிலையில் அடுத்துவரும் நாட்களில் பாதிப்புக்கள் பற்றிய மேலும் விபரங்கள் வெளியாகும்.

டித்வா சூறாவளியின் விளைவான பொருளாதார இழப்பு சுமார் 600 – 700 கோடி அமெரிக்க டொலர்கள் என்றும் சுனாமியினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை விடவும் இது மூன்று மடங்கு அதிகம் என்றும் அண்ணளவாக மதிப்பிடப்பட்டிருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருக்கிறார். இயற்கை அனர்த்தத்தின் பின்னரான பொருளாதார மீட்புத் திட்டத்தை வகுப்பதற்காக முழுமையான பொருளாதார இழப்பு விரைவில் மதிப்பிடப்படும் என்றும் அவர் கூறினார்.

2022 பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக ஏற்பட்ட ஒப்பீட்டளவிலான பொருளாதார உறுதிப்பாடு ஆட்டங்கண்டிருக்கும் நிலையில், இயற்கை அனர்த்தத்தின் பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கான கடுமையான நெருக்கடி மிகுந்த ஒரு காலப்பகுதியை இலங்கை எதிர்நோக்கப் போகிறது.

சர்வதேச சமூகம் தாராளமாக அவசர உதவிகளை அறிவித்திருக்கின்றது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அரபு நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் அவசரகால உதவிகளை வழங்கிவருகின்றன. இலங்கையில் அனர்த்தங்கள் நேருகின்ற வேளைகளில் எல்லாம் உடனடியாக  உதவிக்கு ஓடிவரும் இந்தியா அயலகத்துக்கு முன்னுரிமை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையின் பிரகாரம் தற்போது ‘கடல் கடந்த நண்பன்’ (சாகர் பந்து) என்ற பெயரில் பரந்தளவிலான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழுவீச்சில் முன்னெடுத்திருக்கிறது.

சூறாவளி இலங்கையை தாக்குவதற்கு முன்னதாகவே இந்தியாவின் விமானந்தாங்கி கப்பல்களான  ஐ.என்.எஸ். விக்ராந்தும் உதயகிரியும் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து தரித்து நின்றதால் மீட்புப் பணிகளுக்கு பெரும் உதவியாக அமைந்தது. பிறகு இந்தியாவின் சுகன்யா என்ற இன்னொரு கப்பலும் இந்த பணிகளில் இணைந்துகொண்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணமாக பெருமளவு இழப்பீடுகளை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க அறிவித்திருக்கிறார். ஆனால், சூறாவளி அபாயம் குறித்து முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பாதிப்புக்களை குறைப்பதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதற்காக அரசாங்கம் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

நவம்பர் 12ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயக்குநர் நாயகம் அத்துல கருணாநாயக்க இலங்கை எதிர்நோக்கப் போகின்ற இயற்கை அனர்த்தம் குறித்து எச்சரிக்கை செய்திருந்தார். பிரத்தியேகமாக காலநிலை குறித்து ஆராயப்பட்ட அந்த ஒன்றரை மணிநேர நிகழ்ச்சியில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இயக்குநர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் இமாயா ஆரியரத்னவும் பங்கேற்றிருந்தனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்ற அதேவேளை, அந்த அமைச்சு அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் நெருக்கமாகப் பணியாற்றிவருகிறது. பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே இருக்கிறார். வளிமண்டலவியல் திணைக்களமும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இயற்கை அனர்த்த ஆபத்து குறித்து உடனடியாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியின் கவனத்துக்கு ஏன்  கொண்டுவரவில்லை என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்க காலநிலை நிறுவனமும் பி.பி.சி.யும் இலங்கையை சூறாவளி தாக்கக்கூடும் என்று நவம்பர் 12ஆம் திகதி எச்சரிக்கை விடுத்த அதேவேளை அல் – ஜசீராவும் நவம்பர் 14ஆம் திகதி அதேபோன்ற எதிர்வுகூறலைச் செய்தது. ஆனால், வளிமண்டலவியல் திணைக்களமும் புவியியல் ஆராய்ச்சி மற்றும் சுரங்கப் பணியகமும் சூறாவளி குறித்த எச்சரிக்கையை அது இலங்கையை தாக்கிய தினத்துக்கு முதல் நாள் (நவம்பர் 26) மாத்திரமே அறிவித்தன.

இயற்கை அனர்த்தத்தை எவராலும் தடுக்க முடியாது. ஆனால், முன்கூட்டியே எடுக்கக்கூடிய நடவடிக்கைகளின் மூலமாக அனர்த்தத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைக்க முடியும். அதற்கான தயார் நிலையில் அரசாங்கம் இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அவசரகால நிலையைக் கூட எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்த பின்னர் மாத்திரமே ஜனாதிபதி பிரகடனம் செய்தார்.

எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், பாதிப்புக்களை குறைக்கக்கூடிய முன்கூட்டிய  அவசர நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கத் தவறியது குறித்து மரணங்களுக்கும் அழிவுகளுக்கும் பிறகு குற்றஞ்சாட்டுகின்ற எதிரணி கட்சிகள் நேரவிருந்த ஆபத்துக் குறித்து ஏன் அரசாங்கத்தை உஷார்ப் படுத்தவில்லை என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.

நாடு வெள்ளத்தில் மூழ்கியிருந்த வேளையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நிலைவரத்தைக் கையாளமுடியாவிட்டால் ஆட்சிப்பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை பார்த்துக் கேட்டார். கடந்த ஒரு மாதகாலமாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2026 பட்ஜெட்டை மீளப்பெற்றுக்கொண்டு புதிய பட்ஜெட் ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய கடனுதவித் திட்டத்தை இனிமேலும் நடைமுறைப்படுத்த முடியாது என்பதால் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேவேளை, சூறாவளிக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கத் தவறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார்.

பட்ஜெட் விவாதத்தின் இறுதி நாளன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னாள்  ஜனாதிபதிகளை அழைத்து ஆலோசனைகளைப் பெற்று இயற்கை அனர்த்தத்தின் பாதிப்புக்களில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டங்களை வகுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறினார்.

முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவர் சுனாமி நிவாரணத்துக்காக வெளிநாடுகள் அனுப்பிய நிதியை தனது சொந்த வங்கி கணக்கில் வைப்பிலிட்டார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர். அவரை அந்த வழக்கில் இருந்து விடுவித்த பிரதம நீதியரசர் ஒருவர் பிறகு ஒரு கட்டத்தில் அதற்காக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். இன்னொரு ஜனாதிபதி முன்கூட்டியே தகவல்கள் கிடைத்த போதிலும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்கு உகந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியத்துக்கு பத்துக் கோடி ரூபா செலுத்தினார்.

இன்னொரு ஜனாதிபதி அவரது தவறான ஆட்சிமுறைக்கு எதிராக மூண்ட மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார். மற்றைய முன்னாள் ஜனாதிபதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அனர்த்தங்களின் பாதிப்புக்களில் இருந்து மக்களை பாதுகாத்ததாக வரலாறு கிடையாது. இந்த இலட்சணத்தில் அவர்களால் அரசாங்கத்துக்கு எத்தகைய ஆலோசனைகளை வழங்க முடியும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நினைக்கிறாரோ தெரியவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை தவறியது அரசியலமைப்பை மீறிய செயல் என்று குற்றஞ்சாட்டி அவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார். உயிர்வாழ்வதற்கான மக்களின் உரிமையை உத்தரவாதம் செய்யும் அரசியலமைப்பை அவர்கள் மீறியதாக அவர் கூறுகிறார். அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது முன்னாள் ஜனாதிபதிகளில் எவரை உயர்நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியாது என்று விளங்கவில்லை.

இடர்பாட்டில் இருந்து நாட்டை மீட்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எதிரணி கட்சிகளின் தலைவர்களிடமிருந்து வருகின்ற அறிவிப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்களுக்கு ஆட்சிமுறையில் அனுபவமில்லை என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட தொனியில் அமைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அரசாங்கத்தை மக்கள் வெள்ளத்திற்குள் தூக்கியெறிந்து விடுவார்கள் என்ற கற்பனையில் மிதப்பதை விடுத்து கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால் நாட்டு மக்களை இடரில் இருந்து மீட்க எதிர்க்கட்சிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

ஆனால், எதிரணி தலைவர்கள் எதிர்பார்ப்பதை விடவும் பெருமளவுக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவும் உதவியும் கிடைத்துவருகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் கடனுதவித் திட்டத்துக்கு அப்பால் மேலதிகமாக ஆதரவை வழங்குவது குறித்து ஆராய்வதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருக்கிறது. பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் உதவிகளை வழங்குவதாக உறுதியளித்திருக்கின்றன. மீண்டும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவது என்பது எளிதான பணியாக இருக்கப் போவதில்லை. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, அரசாங்கத்துக்கு ஏற்கெனவே இருந்த சவால்களை இயற்கையின் சீற்றம் மேலும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

இலங்கையின் சமூக – பொருளாதார முன்னேற்றத்துக்கு காலநிலை மாற்றம் தோற்றுவிக்கும் பாரிய ஆபத்தை டித்வா சூறாவளி மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்தத் தடவை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் மண்சரிவுகளும் எதிர்பார்க்காத காலநிலை நிகழ்வுகளினால் தொடர்ந்தும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இலங்கை இருக்கிறது என்பதை நினைவுபடுத்தியிருக்கின்றன. பெரும்பாலும் முழுநாடுமே பாதிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழப்புகளினதும் சொத்து அழிவுகளினதும் உண்மையான பரிமாணம் இனிமேல்தான் தெரியவரும்.

அண்மைய தசாப்தங்களில் கிரமமான முறையில் மாறிமாறி எம்மைத் தாக்கிய வரட்சியும் வெள்ளப்பெருக்கும் காலநிலை மாற்றத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுவரும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்ற அச்சந்தரும் உண்மையை உணர்த்தி நிற்கின்றன. அனர்த்தங்கள் நிகழ்ந்த பின்னர் ஆலோசனைகள் கூறுவதில் அர்த்தமில்லை. அழிவுகள்தான் மிஞ்சும். சம்பவத்துக்குப் பிறகு புத்திசாலிகளாக எவரும் தங்களைக் காட்டிக் கொள்வது சுலபம். முன்மதியுடனான நடவடிக்கைகளையே இன்றைய நிலைவரம் வேண்டிநிற்கிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்