Photo, THE HINDU
மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவுற்ற (மலையகம் 200) வரலாற்று நிகழ்வின் பின்னர், அவர்களின் இருப்பு ஒரு பாரிய சனத்தொகைப் புதிரை (Population Puzzle) எதிர்கொண்டுள்ளது. 2012ஆம் ஆண்டு குடித்தொகைக் கணிப்பீட்டுடன் ஒப்பிடும்போது, 2024ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மலையக மக்களின் குடித்தொகை, தீவிரமாக வீழ்ச்சியடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இக்கட்டுரையானது குடித்தொகை வீழ்ச்சிக்கான காரணங்களையும், அது மலையகத் தமிழ்ச் சமூகத்தின் தேசிய அடையாள கட்டுமானம், அரசியல் பேரம் பேசும் சக்தி மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் மீது ஏற்படுத்தும் ஆழமான தாக்கங்களை ஆராய முற்படுகின்றது. இக்கட்டுரை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் தரவுகள், ஊடக அறிக்கைகள், சமூக ஊடக செய்திகள், மற்றும் கட்டுரையாசிரியர்கள் தனிப்பட்டத் தொடர்புகளைக் கொண்டு மலையகத்தின் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், அரச அதிகாரிகள் மற்றும் வேறும் பலருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகள் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் வாத பிரதிவாதங்களுக்கு உட்படுத்தக்கூடியவையாகும்.
சனத்தொகை கணிப்பீடு என்பது ஒரு நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி குறித்த திட்டங்களை தீட்டுவதற்கு அதற்கு அவசியமான நிதி மற்றும் பௌதீக வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கு பெரிதும் அவசியமாகும். குடிசன மதிப்பீட்டின் மூலமே அரசாங்கம் சமூக (கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, போக்குவரத்து, குடிநீர், பாதைகள், வறுமை ஒழிப்புத்திட்டங்கள்) பொருளாதார நிலை மற்றும் குடித்தொகைக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பவற்றினை அறிந்துக்கொண்டு அதற்கேற்ப கொள்கைத் திட்டங்கள் தீட்டுகிறது. குடிசன மதிப்பீட்டு தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மாவட்ட ரீதியான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் இடம்பெறுகின்றன. குடித்தொகை வளர்ச்சி குறைந்த மாவட்டத்திற்கு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டு அது அதிக குடித்தொகை வளர்ச்சியினைக் கொண்ட மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்றது. இவ்யதார்த்தத்தினை விளங்கிக்கொண்டே மலையக மக்களின் சனத்தொகை வீழ்ச்சியினை நோக்க வேண்டும்.
இலங்கை மலையகத் தமிழ் மக்களின் குடித்தொகை குறித்த வரலாற்று ரீதியான பார்வை
19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் (1820களிலிருந்து) தேயிலைத் தோட்டப் பயிர்ச்செய்கைக்காக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் மலையகத் தமிழர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் அழைத்துவரப்பட்டனர். 1948ஆம் ஆண்டு வரை இவர்கள் பருவகால தொழிலாளர்களாகக் காணப்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து வருவதும் செல்வதுமாக இருந்தனர். ஆகவே, அரசாங்கத்தின் மக்கள் தொகைக் கணிப்பீட்டில் இவர்கள் இலங்கையில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளப்போதும் இச்சமூகத்தின் இன அடையாளம் மற்றும் மக்கள் தொகைப் பதிவு என்பன வரலாற்று ரீதியாக ஒழுங்கான முறையில் இடம்பெறவில்லை.
ஆரம்பகால மக்கள் தொகைக் கணிப்பீடுகளில், இந்திய வம்சாவளித் தமிழர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டனர் என்பதில் தெளிவின்மை இருந்தது. 1881ஆம் ஆண்டு முதல் 1901ஆம் ஆண்டு வரையிலான மூன்று கணிப்பீடுகளில், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் என்ற வகைப்பாட்டின் கீழேயே கணிப்பிடப்பட்டிருந்தனர். 1911ஆம் ஆண்டு முதல் சனத்தொகை கணிப்பீட்டில் இவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றே அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். அண்மைக்காலங்களில் மலையகத் தமிழர் என்ற அடையாள கருத்தாடல் மற்றும் அதனுடன் இணைந்த போராட்டங்கள் தீவிரமாக எழுச்சிப்பெற்றதன் காரணமாக, 2024ஆம் ஆண்டு கணிப்பீட்டில் இந்தியத் தமிழர் மற்றும் மலையகத் தமிழர் (இந்தியத் தமிழர்/ மலையகத் தமிழர்) என்ற இரு சொற்பதங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.
1911ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மக்கள் தொகைக் கணிப்பீடுகளில் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் நிலையினை பின்வரும் அட்டவணையில் காணலாம்.
அட்டவணை 1: இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் சனத்தொகைப் பரம்பல் (1911–2012)

(ஆதாரம்: Dept.of. Census and Statistics, General Report 1981 & Census of Population and Housing Sri Lanka, 2012)
சனத்தொகைக் குறைவின் மிக முக்கியமான புறக்காரணி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களே ஆகும். 1971ஆம் ஆண்டின் பின்னர் 1984ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் (1964) மற்றும் இந்திரா-சிறிமா ஒப்பந்தம் (1974) காரணமாக 446,338 பேர் இந்தியாவிற்குத் திரும்பினர். இந்தக் கட்டாய வெளியேற்றத்தின் விவரம் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
அட்டவணை 2; தாயகம் திரும்பிய இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் (1971–1984)

(ஆதாரம்: Dept.of.Census and Statistics General Report 1981 & Central Bank of Srilanka, Economic and Social statistics -1992)
மலையகத் தமிழரின் மக்கள் தொகை பெருக்கம்: ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின் மந்த வளர்ச்சி
இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களிடையே மக்கள் தொகை பெருக்க வீதம் இலங்கையின் ஏனைய சமூகங்களுடனும், தேசிய சராசரியுடனும் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இதற்கு மலையக மக்களின் சமூக பொருளாதார நிலை தொடர்ந்தும் மோசமான நிலையில் காணப்படுதல், தொடர்ச்சியான நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாடுகள், ஒதுக்கல்கள் போன்ற காரணிகளும் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்.
மலையக மக்களின் குடித்தொகை வளர்ச்சி வீதமானது (வருடாந்த சராசரி) நீண்டகால வரலாற்றில் ஏனைய இனங்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருந்துள்ளது. 1911 முதல் 1981 வரையிலான காலப்பகுதியின் வளர்ச்சி வீகிதம் மற்றும் 1981 முதல் 2012 வரையிலான மொத்த பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த யதார்த்தம் உறுதிப்படுத்தப்படுகிறது. இதனை அட்டவணை மூன்றில் காணலாம்.
அட்டவணை 3: இனங்களிடையேயான வளர்ச்சி வீதம் (வருடாந்த சராசரி)

(ஆதாரம்: Dept.of.Census and Statistics, 1981 ரூ 2012 அறிக்கைகள்)
இச்சமூகத்தின் வளர்ச்சி அளவு 1946 – 1953 காலப்பகுதியில் 3.16 ஆக அதிகரித்துக் காணப்பட்டமைக்கு, அக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து சற்று அதிகரித்த தொழிலாளர் வருகையே காரணமாகும். 1971 – 1981 காலப்பகுதியில் இந்தியத் தமிழர்களின் வளர்ச்சி வீதம் -3.83 என்ற கடுமையான எதிர்மறை நிலையை அடைந்தது. இதற்குக் காரணம், சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் போன்ற அரசியல் உடன்படிக்கைகளினால் பெரும் எண்ணிக்கையிலானோர் தாயகம் திரும்பியமையே பிரதான காரணமாகும்.
1981 தொடக்கம் 2012 வரையான 31 வருட காலப்பகுதியில் தேசிய ரீதியில் மொத்தமாக 37.1 வளர்ச்சி காணப்பட்டபோதிலும், மலையக மக்களின் வளர்ச்சி 9.2 ஆக மட்டுமே காணப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியைவிட மிகவும் குறைவாகும். இதன் இறுதி விளைவாக, இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியின் பின்னர் (1953), சிங்கள பெரும்பான்மையினரை அடுத்து இரண்டாவது நிலையில் இருந்த இச்சமூகம், 1963 முதல் 1971 வரை மூன்றாம் நிலையிலும், தற்போது நான்காவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மலையக மக்களின் குறைந்த சனத்தொகை வளர்ச்சி வீதத்திற்குக் காரணமாக குறைந்த வாழ்க்கைத்தரம், பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்துள்ள நகரங்களை நோக்கிய குடிப்பெயர்வுகளும் காரணமாக உள்ளது. இவை தவிர்ந்த, உள்ளார்ந்த உயிரியல் மற்றும் சமூக – ஆரோக்கியக் காரணிகளும் முக்கியமானவை. இவற்றைவிட, 1990 களில் இருந்து பெருந்தோட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டமிட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் நடவடிக்கைகள் குறைந்த சனத்தொகை வளர்ச்சி வீதத்திற்கு முக்கியமானதோர் காரணமாகும். இது தொடர்பாக தேசிய சர்வதேசிய ரீதியாக ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசாங்கம் பெருந்தோட்டக் கம்பனிகளின் உதவியுடன் கட்டாய குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தினை முன்னெடுத்தது. நாட்டின் ஏனைய பிரிவினர்களுடன் 2012 மற்றும் 2024ஆம் ஆண்டு சனத்தொகை வளர்ச்சியினை ஒப்பிடும் போது, 2024ஆம் ஆண்டு மலையகத்தில் 27 விகித சனத்தொகை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அதிகமாகும். இலங்கைத் தமிழர்களின் குடித்தொகை 18 விகிதத்தினாலும் முஸ்லிம்களின் குடித்தொகை 20 விகிதத்தினாலும் அதிகரித்துள்ளது.
இச்சமூகத்துப் பெண்கள் பின்வரும் கடுமையான சூழலை எதிர்கொள்கின்றனர்.
- வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு.
- சுத்திகரிக்கப்பட்ட நீர் வசதி போதிய அளவில் இல்லாமை.
- சுகாதாரம் தொடர்பான போதிய முற்காப்பு அறிவின்மை.
- போதிய வீட்டு வசதி இல்லாமை.
- கடுமையான தொழில் சூழல்.
- பாலியல் மற்றும் மீள் உற்பத்தி சுகாதாரம் (sexual and reproductive health) தொடர்பான போதிய விழிப்புணர்வின்மை
பெருந்தோட்ட மக்களது ஆரோக்கியம் தொடர்பாகக் கிடைக்கக்கூடிய சிசு மரண வீதம் (Infant Mortality Rate) மற்றும் இரத்தச் சோகை (Anaemia) பற்றிய தகவல்கள், இச்சமூகத்தினரின் குறைவான வாழ்க்கைத்தரத்தின் நிலையை வலுவூட்டுகின்றன. தோட்டப்புறங்களில் சிசு மரண வீதம் தேசிய சராசரியை விட அதிகமாகவும், ஊட்டச்சத்துக் குறைபாடு, எடை குறைந்து பிள்ளைகளின் பிறப்பு என்பன தேசிய சராசரியை விட இரண்டு மடங்கிற்கு மேலாகவும் காணப்படுவதைக் காட்டுகிறது. இவ்வாறான பின்தங்கிய வாழ்க்கைத்தர நிலைமைகள் காரணமாகவே இனப்பெருக்கம் குறைந்து, அம்மக்களின் மக்கள் தொகை பெருக்கத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு என்பன அவசியமாகும். இத்தகைய வேலைத்திட்டங்களை நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தாமல் ஏனைய மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய வேலைத் திட்டங்களை தற்போது ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மாத்திரமே மேற்கொண்டு வருகின்றன.
2024 சனத்தொகை கணக்கெடுப்பு மீதான பார்வை
2024ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீடு இன அடிப்படையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை பின்வரும் அட்டவணை தெளிவாகக் காட்டுகிறது.
அட்டவணை 4 : இனரீதிக்கு ஏற்ப சனத்தொகை மற்றும் வருடாந்த சராசரி அதிகரிப்பு விகிதம் 2012 மற்றும் 2024

ஆதாரம்: Dept.of.Census and Statistics, 2024
2012ஆம் ஆண்டில் 839,504 ஆக இருந்த இந்தியத் தமிழர்/ மலையகத் தமிழர் எண்ணிக்கை, 2024 இல் 600,360 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, சுமார் 239,144 பேர் குறைந்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இவர்களின் வீதம் 4.1 லிருந்து 2.8 ஆகச் சரிந்துள்ளது.
மலையக மக்களின் வருடாந்த சராசரி அதிகரிப்பு வீதம் -2.6 ஆகக் காணப்படுகின்றது. இது இயற்கையான வீழ்ச்சியாகக் கருத முடியாது. மாறாக இதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. மறுபுறமாக, இலங்கைத் தமிழரின் எண்ணிக்கை 11.1 லிருந்து 12.3 ஆக அதிகரித்துள்ளதுடன், அவர்களின் வருட சராசரி அதிகரிப்பு வீதம் 1.3 ஆக உள்ளது. இது, மலையக மக்களின் வீழ்ச்சியும், இலங்கைத் தமிழர்களின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்ற வாதத்தினை வலுப்படுத்துகிறது.
அட்டவணை 5 : மாவட்டம் மற்றும் இனத்தொகுதிக்கு ஏற்ப சனத்தொகையின் பரம்பல் 2012 மற்றும் 2024

ஆதாரம்: Dept.of.Census and Statistics, 2024
மலையக மக்கள் இலங்கைத் தமிழராகப் பதிவு செய்யப்பட்டிருப்பதன் மிகத் தெளிவான ஆதாரத்தை, அவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களின் இன விகித மாற்றங்கள் மூலம் காணலாம். மேலுள்ள அட்டவணையில் பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் மலையக மக்களின் குடித்தொகை சடுதியாக வீழ்ச்சியடைந்திருப்பதனையும் அதனோடு இணைந்த வகையில் இலங்கைத் தமிழர்களின் குடித்தொகை பெரியளவில் வளர்ச்சிக்கண்டிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது. மேலும், கொழும்பு மாட்டத்தில் சுமார் 300,000 இலட்சம் தமிழர்கள் (இலங்கை மற்றும் மலையகத் தமிழர்கள்) வாழுகின்றார்கள். ஆயினும், கணிப்பீட்டுத் தரவுகளைப் பார்க்கும் போது இவ்விரு சமூகத்தின் குடித்தொகையிலும் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்பதனை அடையாளம் காண முடிகின்றது. இது குறித்த தரவுகளையும் தேட வேண்டும். ஏனைய மாவட்டங்களில் இலங்கை மற்றும் மலையகத் தமிழர்களின் குடித்தொகைக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கொழும்பு மாவட்ட நிலைமையுடன் ஒப்பிடும் போது இது ஒரு புதிராகக் காணப்படுகின்றது.
அட்டவணை 6: மலையக மாவட்டங்களில் சனத்தொகைப் பரம்பல் மாற்றம் (2012 – 2024)

ஆதாரம்: Dept.of.Census and Statistics, 2024
இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, மலையக மக்களின் புவியியல் மையமான நுவரெலியாவில், மலையகத் தமிழரின் செறிவு 53.1 லிருந்து 50.0 ஆகக் குறைந்திருக்கும் அதேவேளையில், இலங்கைத் தமிழரின் எண்ணிக்கை 4.6 லிருந்து 8.3 ஆகக் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் 18.5 லிருந்து 11.0 ஆகக் குறைந்துள்ள நிலையில், இலங்கைத் தமிழர் வீதம் 2.7 லிருந்து 9.4 ஆக சுமார் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தப் போக்கு மலையக மாவட்டத்தில் வசிக்கும் மலையக மக்கள், இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்துள்ளமையையே வெளிப்படுத்துகிறது.
இங்கு சிந்திக்க வேண்டிய விடயம் யாதெனில், மலையக மக்கள் தன்னார்வ அடிப்படையில் இலங்கைத் தழிழர்கள் எனப் பதிவு செய்தார்களா அல்லது கணக்கெடுப்பு அதிகாரிகள் தமது சுய விருப்பத்தின் பெயரில் பதிவு செய்தார்களா என்பதாகும். இது குறித்த தகவல்களை தேடுவதன் மூலம் கணக்கெடுப்பு செயன்முறையில் காணப்பட்ட குறைப்பாடுகளை வெளிக்கொண்டுவர முடியும். பின்வரும் அட்டவணை மலையகத் தமிழர்களின் குடித்தொகை வீழ்ச்சியினை ஏனைய சமூகங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றது.
அட்டவணை 7: இலங்கையின் குடித்தொகைக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அமைப்பு – 2012 மற்றும் 2024ஆம் ஆண்டு மதிப்பீடுகள் குறித்த ஒப்பீடு

ஆதாரம்: Dept.of.Census and Statistics, 2024
கணக்கெடுப்பு நடைமுறை மீதான விமர்சனங்கள்
சனத்தொகை வீழ்ச்சியின் அடிப்படை ஒரு புறம் சமூக, பொருளாதார இடம்பெயர்வு, மலையகச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள், குறைந்த வாழ்க்கைத்தரம், இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தின் மீதான விருப்பம் என்றாலும், இத்தீவிர வீழ்ச்சிக்கு கணக்கெடுப்பு நடைமுறையில் ஏற்பட்ட குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம் என்றவாறான விமர்சனங்கள் எழுகின்றன. 1981ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், சுமார் 213,000 மலையகத் தமிழ் மக்கள் குடியுரிமை பெற்றதன் காரணமாக தம்மை இலங்கைத் தமிழர் எனப் பதிவு செய்திருப்பது அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகவே, 2024ஆம் ஆண்டு கணிப்பீட்டில் இன அடையாளம் குறித்த போதிய அறிவுறுத்தல்கள் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. இரண்டு பிரதான தமிழ் சமூகங்கள் இந்த நாட்டில் வாழுகின்றனர். அவர்கள் வரலாறு, பண்பாடு, என்பவற்றில் அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்டவர்கள். இவ் யதார்த்தங்களை எந்தளவுக்கு அதிகாரிகள் புரிந்துக்கொண்டு கணிப்பீட்டினை நடாத்தினார்கள் என்பது இங்குள்ள பிரச்சினையாகும். பொதுவில் அதிகாரிகள் இனம் என்ற விடயத்தினைப் பற்றி எந்த விடயத்தினையும் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. மாறாக அதிகாரிகள் தாமாகவே இன அடையாளத்தினை பதிவு செய்துள்ளனர். சில இடங்களில் மலையக மக்கள் அடையாளத்தினை வலியுறுத்திக் கேட்டு தம்மை மலையகத் தமிழர் என பதிவு செய்யுமாறு கோரியுள்ளனர்.
கணிப்பீட்டு அதிகாரிகள் தோட்டப்புறங்களுக்குச் செல்லும்பொழுது, பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருப்பதில்லை. பொதுவில் தோட்டங்களில் இந்நிலைமையினை அவதானிக்கலாம். தொழில், கல்வி மற்றும் விவசாயம் போன்ற காரணங்களினால் வீட்டில் எவரும் இருப்பதில்லை. ஒரு சில முதியோர்கள் மாத்திரமே இருப்பார்கள். அவர்களுக்கு சனத்தொகை கணிப்பீடு மற்றும் இன அடையாளம் குறித்த புரிதல் இருப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் கணிப்பீடு எந்தளவுக்கு சரியாக இடம்பெற்றிருக்கும் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இன்று தோட்டங்களில் இருந்து ஓய்வுப்பெற்றவர்களும் நாட் சம்பளத்துக்காக வேறு தோட்டங்களுக்குத் தொழிலுக்குச் செல்கின்றார்கள். அத்தகையோரின் தொகை 50,000 க்கு மேற்பட்டதாகும். அவர்கள் கணிப்பீட்டில் உள்வாங்கப்படவில்லை. ஆகவே, தோட்டங்களுக்குள் வாழுகின்ற பெரும் எண்ணிக்கையிலானோர் கணிப்பீட்டில் முறையாக உள்வாங்கப்படவில்லை என்ற வாதத்தினை முன்வைக்கலாம்.
மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற மாட்டங்களில் 50,000க்கு மேற்பட்ட மலையக இளைஞர் யுவதிகள் தற்காலிகமாகத் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தொழிலுக்கு செல்பவர்கள். ஆகவே, இவர்கள் முறையாக கணிப்பீட்டுக்குள் உங்வாங்கப்பட்டார்களா என்பது பிறிதொரு கேள்வியாகும். அத்துடன், மலையகத் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த பெரும் எண்ணிக்கையிலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற நகரங்களில் தொழில் நிமித்தம் தற்காலிக வாடகை வீடுகளில் குடும்பமாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தகவல் இல்லாவிட்டாலும், இவர்கள் எந்தளவுக்கு முழுமையாக கணிப்பீட்டில் உள்வாங்கப்பட்டார்கள் என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தோட்டங்களுக்குள்ளும் அதற்கு வெளியில் பல்வேறு நகரங்களிலும் வாழும் சுமார் 150,000க்கு மேற்பட்ட மலையகத் தமிழர்கள் கணிப்பீட்டில் உள்வாங்கப்படவில்லை என்ற அனுமானத்துக்கு வரலாம். ஆயினும், இது குறித்த முழுமையான ஆய்வுகள் மற்றும் தரவு தேடல்கள் அவசியமாகும். அதனை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் குடித்தொகைக் கணிப்பீட்டில் நடந்துள்ள குறைப்பாடுகளை ஆதாரபூர்வமாக முன்வைக்க முடியும். இத்தகைய நாடுதழுவிய கணிப்பீடுகளில் புள்ளிவிபர ரீதியாக 5 விகிதமான தவறுகள் இடம்பெறலாம். அது புள்ளிவிபர ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயினும், மலையகத்தில் கணிப்பீட்டு செயன்முறையில் அதிகளவிலான தவறுகள் இடம்பெற்றிருப்பதனை அறிய முடிகிறது. இது வேண்டுமென்றே இடம்பெற்றதா அல்லது தற்செயலாக இடம்பெற்றதா என்பதே இங்குள்ள சந்தேகமாகும்.
மேலும், மலையக மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஒருபுறம் இலங்கைத் தமிழ்ச் சமூகத்துடன் அதிக ஒருங்கிணைவை (Integration) அடைந்து வருவதாலும், மறுபுறம் ‘மலையகத் தமிழர்’’ என்ற அடையாளம் தோட்டப்புறப் பாகுபாடு (Estate Stigma) மற்றும் குறைவான வாழ்க்கைத்தரத்தைச் சுட்டுவதாலும், மலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழர் எனப் பதிவு செய்ய விருப்பம் காட்டியிருக்கலாம். தென் மாகாணத்தில் பல இடங்களில் மலையகத் தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்களவர்களாகவே முற்றிலும் மாறியுள்ளனர்.
இவற்றைவிட, தோட்டங்களுக்கு வெளியில் நகர்ப்புறங்களில் வாழும் மலையகத் தமிழர்களை கணிப்பீட்டாளர்கள், ‘இலங்கைத் தமிழர்’ எனப் பதிவு செய்ய ஊக்குவித்திருக்கலாம். இதற்கு நியாயமான காரணமும் உண்டு. போருக்குப் பின்னர் பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் முஸ்லிம் மக்களை இலக்கு வைக்க ஆரம்பித்தன. இது உயிர்த்த தாக்குதலுக்குப் பின்னர் உச்சத்தினை அடைந்தது. அதன் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய பிரசாரங்களை சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டன. முஸ்லிம் சமூகத்தினை தீவிரவாதிகளாக சித்தரிக்க முயன்றனர். இவை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சியினை பொறுக்க முடியாமல் மேற்கொண்ட செயற்பாடுகளாகும். இன்றளவில் சிங்கள மக்களில் பெரும்பாலானோரிடம் முஸ்லிம் எதிர்ப்பு மனப்பாங்கு எல்லா மட்டங்களிலும் காணப்படுகின்றது. அரச அதிகாரிகளிடமும் உண்டு. முஸ்லிம் சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சிப் பற்றிய அச்ச உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் பொதுவாகவே காணப்படுகின்றது. இப்பின்புலத்தில் இலங்கைத் தமிழர்களை சனத்தொகை வரிசையில் இரண்டாவது இடத்தில் தொடர்ந்தும் தக்க வைப்பதற்கான முயற்சியில் மலையகத் தமிழர்களையும் இலங்கை தமிழர் என்ற வகைப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியாகவும் இதனை நோக்கலாம். இது ஒரு அனுமான ரீதியான வாதம் மட்டுமே ஆகும். இது தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் முறையான தேடல்கள் அவசியமாகும்.
மலையக மக்களின் சனத்தொகை வீழ்ச்சி (4.1 லிருந்து 2.8 ஆக) என்பது வெறுமனே புள்ளிவிவர ரீதியான சரிவு அல்ல, அது மலையகத் தேசியம் என்ற கருத்தாக்கத்தின் அரசியல் இருப்பு மீதான பலமான அச்சுறுத்தலாகும். இந்த வீழ்ச்சி, எதிர்கால தேர்தல் எல்லை நிர்ணயத்தின்போது மலையகப் பிரதேசங்களுக்கான நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை ஆசனங்களை இழக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது. இன அடையாள மாற்றம் என்பது கௌரவமான வாழ்வு மற்றும் சமத்துவத்துக்கான மலையக மக்களின் உளவியல் தேடலின் பிரதிபலிப்பாகும். ஆனால், இந்த மாற்றம் மலையக மக்களின் தனித்துவமான அரசியல் அதிகாரத்தைக் கரைத்து, அவர்களைப் பெரிய சமூக நீரோட்டத்தில் இணைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இம்முறை கணக்கெடுப்பை மேற்கொண்ட நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் மீதான பரவலான விமர்சனங்கள், இந்தப் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குள்ளாக்குகின்றன. குறிப்பாக, அடையாளப் பதிவு குறித்த தெளிவின்மை, டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் கணிப்பீட்டாளரின் சுய அனுமானங்கள் ஆகியவை மலையக மக்களின் சனத்தொகை சரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்ற வலுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பல இடங்களில் மலையகத் தமிழர் என்ற இன அடையாளத் தெரிவினை கணக்கெடுப்பு அதிகாரிகள் மலையக மக்களிடம் குறிப்பிடவில்லை. இலங்கைத் தமிழர் மற்றும் இந்தியத் தமிழர் என்ற இரு அடையாளங்கள் மாத்திரமே கணக்கெடுப்பின்போது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, தாம் இனியும் இந்தியத் தமிழர் இல்லை, இலங்கையில்தான் பிறப்பு முதல் வாழுகின்றோம் என்ற எண்ணத்தில் இலங்கைத் தமிழர் என்று குறிப்பிட்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
2024ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் கணிப்பீட்டாளர்கள் வீடுகளுக்கு வருகை தராமல் தரவுகளைச் சேகரித்தனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. பல பிரதேசங்களில், குறிப்பாக தோட்டப் புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு, அரச ஊழியர்கள் முறையாக வருகை தரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படை நோக்கமே, களத்தில் உள்ள உண்மையான எண்ணிக்கையையும், நிலையையும் பதிவு செய்வதுதான். கள விஜயங்கள் இன்றித் தரவுகள் சேகரிக்கப்படும்போது, அந்தப் பதிவின் துல்லியத்தன்மை பாதிக்கப்படுகிறது. இலத்திரனியல் சாதனங்கள் ஊடாகத் தரவுகள் சேகரிக்கப்பட்ட போது, தகவல் வழங்கும் குடியிருப்பாளர்களுக்குத் தாங்கள் வழங்கிய தகவல்கள் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா, குறிப்பாக இன அடையாளம் எப்படிக் குறிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளப் போதுமான வாய்ப்பு வழங்கவில்லை. சில இடங்களில் கணிப்பீட்டு அதிகாரிகள் தமது உதவியாளர்கள் மூலம் தகவல்களை சேகரித்துள்ளனர். அவர்களுக்கு இது தொடர்பான எந்தப் பயிற்சியும் வழங்கப்படவில்லை. இப்படியான இடங்களில் இன அடையாளம் குறித்த சரியான தரவுகள் பதிவு செய்யப்பட்டிருக்க மாட்டாது.
மறுபுறம் மலையக மக்களின் சனத்தொகை வீழ்ச்சியில் மிக முக்கியமான காரணி, மலையக மக்களிடையே காணப்படும் இன அடையாளத் தெளிவின்மையே ஆகும். இந்திய வம்சாவளித் தமிழர்கள் நீண்ட போராட்டத்தின் பின்னர் குடியுரிமை பெற்றாலும், அவர்களின் இன அடையாளம் (மலையகத் தமிழர்) மற்றும் குடியுரிமை நிலை (இலங்கை பிரஜை) ஆகியன தொடர்பாக மக்கள் மத்தியில் இன்னும் தெளிவான புரிதல் இல்லை. ஆகவே, தமது அடையாளத்தை ‘மலையகத் தமிழர்’ எனப் பதிவுசெய்ய வேண்டிய அவசியத்தை உணராமல், வெறுமனே ‘இலங்கைத் தமிழர்’ என்ற பிரிவின் கீழ் தம்மைப் பதிவுசெய்ய இணங்கியிருக்கலாம்.
அடையாள குழப்பம் மற்றும் குடியிருப்பாளர்களின் குறைந்த கல்வித் தகைமையைப் பயன்படுத்திக் கொண்டு, கணிப்பீட்டாளர்கள் தாமாகவே இம்மக்களுக்கான தகவல்களை அனுமானித்து பதிவு செய்திருக்கவும் கூடும் என்ற விமர்சனமும் எழுகிறது. குடியுரிமை பெற்ற அனைவரும் இலங்கைத் தமிழரே என்ற பொதுவான புரிதலின் அடிப்படையில், பல மலையக மக்கள் ‘இலங்கைத் தமிழர்’ எனப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆகவே, மலையகத்தில் ஏற்பட்டுள்ள சனத்தொகை வீழ்ச்சி என்பது வெறும் பிறப்பு விகிதக் குறைவு மட்டுமல்ல மாறாக வறுமை, காணியுரிமை மறுப்பு, மற்றும் சமூகப் பாகுபாடு ஆகியவற்றின் காரணமாகவும், நகர்ப்புறங்களை நோக்கிய தொழில் மற்றும் கல்வி நிமிர்த்தமான இடம்பெயர்வு என்பவற்றினாலும் இடம்பெற்றவை ஆகும். நகர்ப்புறங்களில் குடியேறும் மலையக இளைஞர்கள், சமூக அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவும், தனிப்பட்ட நன்மைகளுக்காகவும் தங்களைத் ‘இலங்கைத் தமிழர்’ என்ற அடையாளத்தினை விரும்பியிருக்கலாம். அதேபோல் இம்முறை சனத்தொகை கணக்கெடுப்பு இடம்பெற்ற விதம், அரச அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, திட்டமிட்ட புறக்கணிப்பு என்பவற்றாலும் மலையக மக்களின் சனத்தொகை, பாரியளவிலான ஒரு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது என்பதனை அனுமானிக்க முடிகின்றது.
மலையக மக்களின் மாவட்ட ரீதியான பரம்பல்
இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் இலங்கையில் 25 மாவட்டங்களிலும் பரவி வாழ்ந்தாலும், அவர்களின் சமூக, அரசியல் மற்றும் கலாசார இருப்பு என்பது வரலாற்று ரீதியாக நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி போன்ற பெருந்தோட்ட மாவட்டங்களையே மையமாகக் கொண்டிருந்தது. இந்த புவியியல் மையமே ‘மலையகத் தேசியம்’ என்ற கருத்தாக்கத்தின் அடித்தளமாகும். ஆனால், 2012 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை கணிப்பீட்டுத் தரவுகள், இந்த மையமானது மிக விரைவாகவும், கூர்மையாகவும் சிதைந்து வருவதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இலங்கையில் சுமார் 1,350,000 மலையகத் தமிழர்கள் வாழுகின்றனர் என்பதனை கடந்த காலங்களில் இடம்பெற்ற சில மதிப்பீடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இது எந்த வகையிலும் 2024ஆம் ஆண்டு கணிப்பீட்டில் வெளிப்படவில்லை.
அட்டவணை 8: பிரதான மலையக மாவட்டங்களில் இனப்பரம்பல் மாற்றம்

(ஆதாரம்: மாவட்டங்கள் மற்றும் இனத்தொகையின் விபரப்பரம்பல், 2012 மற்றும் 2024)
பெருந்தோட்ட மாவட்டங்களை விட்டு வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களுக்குக் குடிபெயர்ந்தவர்களின் அடுத்த பரம்பரையினர், அப்பிரதேசங்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாசார செல்வாக்கிற்கு உட்பட்டு , குடித்தொகை கணிப்பீடு போன்ற உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் பெருமளவுக்குத் தம்மை இலங்கைத் தமிழர்கள் என்றே பதிந்து கொள்கின்றனர். இந்த மனப்போக்கு, மலையகத் தமிழர் என்ற அடையாளத்துடன் இணைந்த சமூகப் பாகுபாடு (Social Stigma) மற்றும் குறைந்த வாழ்க்கைத்தரத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான உளவியல் தேடலின் வெளிப்பாடாகும். இன்னொரு பக்கம் இத்தகைய மாற்றத்திற்கான நாட்டம் மலையக மக்களின் துயர் தோய்ந்த வரலாற்றுடனும் பிணைந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பாரிய வீழ்ச்சியொன்று ஏற்படாமைக்குக் காரணம் இங்கு கணிப்பீட்டுப் பணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையானோர் மலையகச் சமூகத்தினை சேர்ந்தவர்கள் ஆகும். ஆகவே, அவர்களுக்கு இன அடையாளம் குறித்து புரிதல் காணப்பட்டது. அதன் காரணமாக மலையகத் தமிழர்களிள் அடையாளம் சரியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், மலையகத் தமிழர் என்ற அடையாளத்தினை மையப்படுத்திய அதிகளவிலான கலந்துரையாடல்கள் கடந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக நுவரெலியா மாவட்டத்திலேயே இடம்பெற்றது. இவை மலையகத் தமிழர் என்ற அடையாளம் குறித்த பெரியளவிலான புரிதலை ஏற்படுத்தியது. ஆனால், இப்போக்கினை ஏனைய மாவட்டங்களில் காண முடியவில்லை.
மேலும் Gen Z என அழைக்கப்படுகின்ற இளம் தலைமுறையினர் (2010க்குப் பின்னர் பிறந்தவர்கள் – சமூக ஊடகங்களுடன் இவர்கள் வாழ்க்கை பிணைக்கப்பட்டுள்ளது) தம்மை மலையகத் தமிழர் என அடையாளப்படுத்துவதில் பெரிய விருப்பம் காட்டுவதில்லை என்பதனை பல செயலமர்வுகளில் அவதானிக்க முடிந்தது. இதனை நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியில் அதிகம் காண முடியும். இம்மன நிலையும் சனத்தொகை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும்.
எனவே, 2024ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள், மலையக மக்கள் தமது சமூக அநீதிகளுக்கான போராட்டத்தை இழந்திருப்பதையும், அரசியல் அதிகாரத்தை இழக்கும் அபாயத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டும் ஒரு புள்ளிவிவர எச்சரிக்கையாக (statistical warning) அமைந்துள்ளது.
மலையகத் தேசியத்தின் அரசியல் நெருக்கடி
சனத்தொகை வீழ்ச்சியின் நேரடி மற்றும் மிக ஆபத்தான விளைவு, மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழப்பதாகும். இலங்கையின் தேர்தல் சட்டங்களின்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியின் சனத்தொகை மற்றும் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது. மலையக மக்களின் மைய மாவட்டங்களான நுவரெலியா, பதுளை, கண்டி போன்ற பகுதிகளில் அவர்களின் சதவீதச் செறிவு குறைந்துள்ளதால், இது, மலையக மக்களின் சுயாதீனமான அரசியல் பலத்தையும், பேரம் பேசும் சக்தியையும் ஒட்டுமொத்தமாகப் பலவீனப்படுத்தும்.
மலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழர் எனப் பதிவு செய்திருந்தாலும், இலங்கையின் தேர்தல் சட்டங்களில் ‘இன அடிப்படையிலான’ பிரதிநிதித்துவப் பாதுகாப்புகள் பல இடங்களில் இல்லை. இதனால், எண்ணிக்கை அளவில் அவர்கள் அருகிலுள்ள பெரும்பான்மை சமூகங்களுடன் கலக்க நேரிடும்போது, அவர்களின் தனித்துவமான அரசியல் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு குறைந்துவிடும். சனத்தொகை வீழ்ச்சி தொடர்ந்தால், மலையக மக்களின் அரசியல் குரல் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு, தேசிய ரீதியாக முடிவெடுக்கும் தளங்களில் அவர்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் கவனத்தைப் பெறாமல் போகும் நிலை ஏற்படும்.
சனத்தொகை வீழ்ச்சி மற்றும் இன அடையாள மாற்றம் போன்ற நெருக்கடிகளை மலையக அரசியல் தலைமைத்துவம் எவ்வாறு கையாண்டது என்பது விமர்சனத்திற்கு உரியதாகும். சனத்தொகை வீழ்ச்சி ஒரு பாரிய அரசியல் நெருக்கடி என்பதை மலையக அரசியல் கட்சிகள் பலர் அங்கீகரித்திருந்தாலும், அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் நீண்டகால மற்றும் உறுதியான கொள்கைத் திட்டங்களை வகுக்கவில்லை என்ற விமர்சனம் உண்டு. அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச சம்பள அதிகரிப்புக் கோரிக்கைகள் போன்றவை வரவேற்கத்தக்கவை என்றாலும், அவை மலையக மக்களின் இடம்பெயர்வுக்கு அடிப்படையான காரணங்களான சமூகப் பாகுபாடு, காணி உரிமை மறுப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளின் போதாமை ஆகியவற்றைத் தீர்க்கும் முழுமையான தீர்வுகளாக அமையவில்லை. அரசாங்கத்தின் வீட்டு வசதித் திட்டங்கள், மக்களுக்குத் தனி வீடுகளை வழங்கிய போதிலும், தோட்டப்புறங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுக்க போதுமானதாக இல்லை. இது, அரசியல் தலைமைத்துவம் சனத்தொகை நெருக்கடியின் ஆழமான சமூகவியல் காரணிகளைப் புரிந்துகொள்ளத் தவறியதைக் காட்டுகிறது.
அதேபோல் மலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழராகப் பதிவுசெய்து கொண்டமை குறித்து மலையக அரசியல் தலைவர்கள் வெளிப்படையான விவாதங்களை நடத்தவில்லை. இது, அடையாள மாற்றத்தை தவிர்க்க முடியாத ஒன்றாக ஏற்றுக்கொண்டதன் விளைவா அல்லது வாக்கு வங்கி மீதான அச்சமா என்ற கேள்வி எழுகிறது. சனத்தொகை வீழ்ச்சி மற்றும் புவியியல் பரம்பல் சிதைவு ஆகியவை மலையக மக்களின் மிக முக்கிய மூலதனமான நிலம் மற்றும் காணி உரிமை மீதான அச்சுறுத்தல்களை மேலும் அதிகரிக்கின்றன.
தோட்டப்புறங்களில் மலையக மக்களின் சனத்தொகை குறையும்போது, தோட்ட நிலங்களை பெருந்தோட்ட நிர்வாகம் அல்லது ஏனைய இனக்குழுமத்தைச் சார்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு வாய்ப்பு உருவாகிறது. சட்ட ரீதியற்ற காணி ஆக்கிரமிப்புகள் (Land Encroachment) பெருந்தோட்டப் பகுதிகளில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினை ஆகும். காணி உரிமைக்கான போராட்டம், மலையக மக்களின் ஒருமித்த பலத்தின் மூலமே வெற்றிபெற முடியும். ஆனால், சனத்தொகை குறைந்து, மக்கள் சிதறுண்டு போகும்போது, உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகத் திரட்சியும், பலமும் வெகுவாகக் குறைந்துவிடும்.
மலையக மக்களின் தேசியம் என்பது, நிலத்துடன் பிணைந்துள்ளது. மக்கள் தொகை குறைந்து, அந்த நிலப்பரப்புகள் கைவிடப்படும்போது, மலையக தேசியம் அதன் புவியியல் அடித்தளத்தை இழக்கிறது. இது, அவர்களின் வரலாற்றையும், உரிமைக் கோரிக்கைகளையும் எதிர்காலத்தில் பலவீனப்படுத்தக்கூடும்.
அடையாள மாற்றம் என்பது அரசியல் மட்டுமல்ல, கலாசார இழப்பும் கூட. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மலையகத்தின் தனித்துவமான கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை ஆவணப்படுத்துவதன் மூலமும், மீட்டெடுப்பதன் மூலமும், புவியியல் மையத்தை இழந்தாலும் தேசியத்தின் கலாசார ஆழத்தை (Cultural Depth) பாதுகாக்க முடியும். எனினும், இந்தக் கலாசார முயற்சிகள் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டுவரப் போதுமானதல்ல. மேலும் மலையகத் தேசியம் என்பது உணர்வுபூர்வமான அடையாளமாக இருக்கிறதா அல்லது அடித்தள மக்களின் உடனடி பொருளாதார மற்றும் சமூக தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான கருவியாக இருக்கிறதா என்ற கேள்வி முக்கியமானதாகும்.
உண்மையான மலையகத் தேசியம் என்பது, வெறும் உணர்வு அல்ல. அது, மலையக மக்களின் ஒடுக்கப்பட்ட வர்க்க இருப்பை (Oppressed Class Existence) அடையாளம் கண்டு, அவர்களின் பொருளாதாரச் சமத்துவத்தையும், கண்ணியமான வாழ்வையும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், பாகுபாட்டோடு வாழும் மக்கள், தேசிய உணர்வை விட நடைமுறைத் தேவைகளையே முன்னிலைப்படுத்துவார்கள்.
சனத்தொகை வீழ்ச்சி மற்றும் புவியியல் மையம் சிதைவுறும் இந்த நெருக்கடியான சூழலில், மலையக தேசியமானது தனது மையத்தைப் பாதுகாப்பதை விட, புதிய பரிணாமத்தை (New Transition) நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மலையகத் தேசியம் இனி, பொதுவான ஒடுக்கப்பட்ட வர்க்க உணர்வுடைய (Common Oppressed Class Consciousness) அடையாளமாக நிலைநிறுத்தப்பட வேண்டும். தோட்டப்புறங்களில் வாழும் தொழிலாளர்களும், நகர்ப்புறங்களில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களும், வெளிநாடுகளில் வீட்டுப் பணி செய்யும் பெண்களும் ஒரே மாதிரியான வர்க்க ஒடுக்குமுறையையும், சமூகப் பாகுபாட்டையும் எதிர்கொள்கின்றனர். இந்த ஒடுக்குமுறையின் அடிப்படையில் தேசியம் மீளக் கட்டமைக்கப்பட வேண்டும்.
மலையக மக்கள் இலங்கைத் தமிழர்களாக தம்மை பதிவு செய்தமைக்கான காரணங்களை ஆய்வு ரீதியாக கண்டுப்பிடிக்க வேண்டும். அவர்கள் மத்தியில் மலையக அடையாள உணர்வினைக் கட்டியெழுப்ப அவசியமான வேலைத்திட்டங்களை வகுக்க வேண்டும். இது 2034ஆம் ஆண்டு இடம்பெறவிருக்கும் குடித்தொகை கணிப்பீட்டில் மலையக மக்களின் சனத்தொகையினை பாதுகாக்க உதவும். குடித்தொகை வீழ்ச்சி சமூக அபிவிருத்திக்கான அரசாங்க நிதி மற்றும் வள ஒதுக்கீடுகளில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனை நாம் மனங்கொள்ள வேண்டும். மேலும், எதிர்காலத்தில் அரசாங்கத் தொழில் வாய்ப்புகளுக்கு கோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டால், இதில் போதிய வாய்ப்பு மலையக மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை. இந்நிலை அரசியல் பிரதிநிதித்துவத்திலும் ஏற்படலாம்.
இங்குள்ள பிறிதொரு முரண்நிலை யாதெனில், வருடாந்தம் வாக்காளர் விகிதம் மலையகத்தில் அதிகரித்து செல்கின்றது, ஆனால் சனத்தொகையில் எவ்வாறு பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறன்றது. வாக்காளர் பதிவில் மலையகத்தில் பெரியளவிலான விழிப்புணர்வு மற்றும் கரிசனை ஏற்பட்டுள்ளது. அதற்கு வாக்குரிமையுடன் இணைந்த பல நன்மைகளும் காரணமாகும். ஆகவே, வாக்குப்பதிவில் காட்டும் ஆர்வத்தினை ஏன் குடிசன மதிப்பீட்டில் மலையக மக்கள் காட்டவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது. அத்துடன், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் புள்ளிவிபரங்களுடன் அரசாங்கத்தின் குடித்தொகைக் கணிப்பீட்டு முடிவுகள் முரண்படுகின்றது. ஆகவே, குடித்தொகை குறித்த அரசாங்கத்தின் வேறுப்பட்ட தரவுகளை சேகரித்து இந்த முரண்நிலையைத் தீர்க்க வேண்டும்.
இருப்புக்கான நெருக்கடியும் எதிர்கால கொள்கைத் தெரிவுகளும்
மலையக மக்களின் சனத்தொகைப் பெருக்க வீதம் தேசிய சராசரியை விடக் குறைவாக இருப்பதற்கும், இடம்பெயர்வு அதிகரிப்பதற்கும் அடிப்படை காரணம், இலங்கை அரசின் கட்டமைப்பு ரீதியான அநீதியே ஆகும். ஆகவே, மலையக மக்கள் சம உரிமைகளுடன் சம பிரஜைகளாக வாழ்வதற்கான கொள்கைத் திட்டங்களை (காணியுரிமை, வீடு, கல்வி, சுகாதாரம், வேதனம், போக்குவரத்து உட்பட) அரசாங்கம் வகுக்க வேண்டும். இதற்கு நீண்டகாலமாக பரப்புரை செய்து வருகின்ற நியாயமான பாராபட்சக் கொள்கை (policy of positive discrimination) அல்லது குறைதீர் நடவடிக்கை (affirmative action) ஒன்றினை உருவாக்க வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தவறினால், மலையக மக்கள் மீதான அரசு கட்டமைப்பின் புறக்கணிப்பே சனத்தொகை வீழ்ச்சிக்குக் காரணம் என்ற விமர்சனத்தை அரசு தொடர்ந்து எதிர்கொள்ளும்.
மலையகத் தேசியத்தின் எதிர்காலப் பாதை, அதன் புவியியல் மையத்தை இழந்தாலும், அதன் வர்க்க உணர்வு (Class Consciousness) மற்றும் சிவில் சமூகத்தின் போராட்டத் திறன் ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. தேசியம் என்பது இனி நுவரெலியாவை மையப்படுத்தாமல், இலங்கையிலும், வெளிநாட்டிலும் பரவி வாழும் ஒடுக்கப்பட்ட மலையக வர்க்கத்தை இணைக்கும் ஒரு கலாசார – அரசியல் அடையாளமாக மாற வேண்டும். சனத்தொகை வீழ்ச்சிக்கு எதிரான இந்தப் போராட்டம், வெறுமனே எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கானதல்ல. அது கௌரவமான வாழ்வுக்கான உரிமையையும், சமூக நீதியையும் நிலைநாட்டுவதற்கான இறுதிக்கட்டப் போராட்டமும் ஆகும்.
அருள் கார்க்கி
கலாநிதி ரமேஷ் ராமசாமி