இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, இலங்கை மின்சார சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒன்றிணைந்து தயாரித்துள்ள காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தினால் மன்னார் தீவின் மக்களும் அதன் உயிரியல் சமூகமும் இன்று பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அனைத்து காற்றாலை திட்டங்களும் மின்வலு உற்பத்தியை இலக்காகக் கொண்ட ஆய்வுகளை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன. மன்னார் தீவில் வாழும் மக்களின் எதிர்கால இருப்பு அல்லது உயிரியல் சமூகத்தின் இருப்பு, போன்று மன்னார் தீவிலுள்ள நிலப்பரப்பின் இயற்கையான தன்மை அல்லது அதன் தற்போதைய தேசிய திட்டங்களின் தன்மை குறித்து எந்தக் கவனமும் செலுத்தப்படவில்லை.
கடன் உதவி வழங்குவதை முன்னுரிமையாகக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மன்னார் தீவை பசுமை எரிசக்தியின் மையமாக மாற்றுவதற்குத் தேவையான ஆராய்ச்சி அறிக்கைகளை தயாரித்தது. மேலும், மன்னார் தீவின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் நிறுவனங்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை திறந்து விடுவதே இதன் முக்கிய நோக்கமாகும். இங்கே நிலையான எரிசக்தியைப் பொறுத்தவரை ஆசிய அபிவிருத்தி வங்கி நீதியான நிலைமாற்றம் என்ற கொள்கையில் (Just transition) எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்பது ஒரு பெரிய குறையாகும். எனவே, மன்னார் தீவானது காற்றாலை மின்சக்தி மூலம் நிலைபெறுதகு வலு மையமாக மாற்றப்படும்போது, அங்கு வசிக்கும் மீனவ சமூகங்களுக்கு, மீன்பிடி வளங்களுக்கு,விவசாய சமூகத்திற்கு, விவசாய நிலங்களுக்கு மற்றும் அதன் இயற்கை தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. அதுமட்டுமன்றி, மன்னார் தீவின் உயிரியல் சமூகம் குறித்த சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எவ்வித கவனமும் செலுத்தாமல், மன்னார் தீவை நிலைபெறுதகு வலு மையமாக மாற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி பல திட்டங்களை தயாரித்துள்ளது.
நிலைபெறுதகு வலுவுடன் தொடர்புடைய நீதியான நிலைமாற்றுக்கொள்கையை மீறுதல்
நிலைபெறுதகு வலு மற்றும் அதோடு இணைந்த நியாயமான மாற்றம் என்பது நிலைபெறுதகு வலுவிற்காக மாற்றம் பெறும்போது, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படும், இடம்பெயர்விற்கு உட்படும் மற்றும் உரிமைகள் மீறப்படும் சமூகங்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், நியாயம் மற்றும் நீதியை உறுதி செய்வதும், வழமைக்கு மாறான மற்றும் பாதகமான தாக்கங்களைத் தவிர்ப்பதுமாகும். மேலும், முடிவெடுக்கும் பொறிமுறையின் மையத்தில் பாதிக்கப்படும் அனைத்து தரப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படல் வேண்டும்.
இது பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு எண்ணக்கருவாகும். 2015 டிசம்பர் 12ஆம் திகதி பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் 21ஆவது மாநாட்டில் 196 உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை 2016 செப்டம்பர் 21ஆம் திகதி அங்கீகரித்த ஒரு நாடு என்ற வகையில், அதில் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த நீதியான நிலைமாற்றத்திற்கான கருத்தியல் கொள்கைக்கு இலங்கை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைக்கப்பட்ட மாநாட்டின் 26ஆவது மாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தத்திற்கு இணங்க, நீதியான நிலைமாற்றத்திற்கான பொதுவான கொள்கைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல தரப்பு அபிவிருத்தி வங்கிகள், காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் நீதியான நிலைமாற்றத்திற்கான கொள்கைகளை நிலைநிறுத்துவதாக உறுதியளித்துள்ளன.
ஆனால், இலங்கை நிலைபெறுதகு வலுவை நோக்கி நகரும் போது, நிலைபெறுதகு வலு அதிகார சபையோ அல்லது மின்சார சபையோ இதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. மேலும், மன்னார் தீவை நிலைபெறுதகு வலு மையமாக மாற்றுவதற்கு கடன் உதவி வழங்கும் போது ஆசிய அபிவிருத்தி வங்கி இதில் கவனம் செலுத்தவில்லை. இதன் விளைவாக, மன்னார் தீவு மக்கள் தற்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
மன்னார் தீவின் வாழ்வியல் மற்றும் இயற்கை வளங்களை அழிக்கும் நிலைபெறுதகு வலு அதிகார சபையின் திட்டம்
நிலைபெறுதகு வலு அதிகார சபை மன்னார் தீவை ஒரு சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவித்தன் பின்னர், இந்த மக்களைப் பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதில் முதலீட்டாளர்களின் கவனம் ஈரக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு 35ஆம் இலக்கத்துடைய இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை சட்டத்தின் துணைப் பிரிவு 12(1) இன் படி வெளியிடப்பட்ட 2014 ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதியிட்ட இலக்கம் 1858/2 வர்த்தமானி அறிவிப்பின் மூலம், மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மன்னார் தீவின் 76.11 சதுர கிலோமீட்டர்கள் சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் தீவின் மொத்த நிலப்பரப்பு சுமார் 143.21 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். அதன்படி, தீவின் மொத்த நிலப்பரப்பில் 53 சதவீதம் சக்தி மேம்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில், மன்னார் தீவை ஒரு சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிப்பதில், நிலைபெறுதகு வலு அதிகார சபை இந்தத் தீவைப் பற்றிய பல உண்மைகளைத் தவிர்த்துவிட்டது. மன்னார் தீவின் மக்கள் தொகை சுமார் 66,087 ஆகும். இங்கு 1,7835 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதுடன், சுமார் 12,840 வீடுகள் உள்ளன. பெரும்பாலான தீவுவாசிகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஏராளமான மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் இரண்டிலும் ஈடுபட்டுள்ளனர். மன்னார் தீவு வட மாகாணத்தில் இரண்டாவது பெரிய மீன்பிடிப் பிரதேசமாகக் கருதப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு சராசரி மீன் அறுவடை சுமார் 17,500 மெட்ரிக் டொன் ஆகும்.
மன்னார் தீவின் மக்களைத் தவிர சதுப்புநில காடுகள், உப்பு சதுப்பு நிலங்கள், முட்கள் நிறைந்த காடுகள், கடலோர தாவர சமூகங்கள் மற்றும் மணல் திட்டுக்கள் போன்ற பல இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகள் இங்கு காணப்படுகின்றன. இந்த இயற்கை சுற்றுச்சூழல் தொகுதிகள் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மன்னார் தீவுடன் தொடர்புடைய ஆழமற்ற கடல் பகுதியில் உள்ள கடல் புற் தரைகள், சேற்றுப் படுகைகள், பவளப்பாறைகள், மணல் கரைகள் மற்றும் பாறை சுற்றுச்சூழல் தொகுதிகள் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மன்னார் தீவின் தென்கிழக்கு விளிம்பில் உள்ள உப்புச் சதுப்பு நிலம் மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழல் தொகுதிகள் வங்காலை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 4839 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த சரணாலயம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் துணைப்பிரிவு 2(2) இன் படி, 2008 செப்டம்பர் 8ஆம், திகதியிட்ட 1566/2008 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஈரநில சரணாலயத்தின் சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் தொகுதிகளின் பெறுமதி காரணமாக,1971 பிப்ரவரி 2ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட, 1990 ஜூன் 15ஆம் திகதி அன்று பங்குதாரரான இலங்கை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகள் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ரம்சார் மாநாட்டின்படி, 2010 ஜூலை 10ஆம் திகதி அன்று 4839 ஹெக்டேயர் கொண்ட வங்காலை சரணாலயம் நாட்டின் 4ஆவது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ரம்சார் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இந்த சரணாலயத்துடன் தொடர்புடைய மன்னார் தீவின் களப்பு மற்றும் பாரிய ஆழமற்ற கடல் பிரதேசம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் துணைப்பிரிவு 2(1) துணைப்பிரிவிற்கமைய 2016 மார்ச் 1ஆம், திகதியிடப்பட்ட 1956/13 என்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 29180 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட விடத்தல்தீவு இயற்கை வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் தீவின் வடமேற்கு முனையில் கண்டல் தாவரம், சதுப்பு நிலங்கள், முட்கள் நிறைந்த புதர்க்காடுகள், மணல் திட்டுகள் மற்றும் ஆழமற்ற கடல் கடற்கரை ஆகியவற்றின் ஒரு பெரிய பிரதேசம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2(2) துணைப்பிரிவுக்கு அமைய 2015 ஜூன் 22ஆம், திகதியிட்ட1920/03 என்ற வர்த்தமானி அறிவிப்பின்படி 18,990 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட ஆதாமின் பாலம், கடல்சார் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்த கடல்சார் தேசிய பூங்கா மற்றும் இயற்கை வனமானது 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் வேலைத்திட்டங்களின் நிதி உதவியுடன் கீழ் வட மாகாணத்திற்காக தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் (Integrated Strategic Environmental Assessment the Northern Province of Sri Lanka) அறிவிக்கப்பட்டுள்ளது.
நில பயன்பாட்டுக் கொள்கை மற்றும் திட்டமிடல் திணைக்களத்தின் 2019 அறிக்கையின்படி, மன்னார் தீவில் 914 ஹெக்டேயர் உப்பு சதுப்பு நிலங்களும், 25 ஹெக்டேயர் சதுப்பு நிலக் காடுகளும் உள்ளன. மேலதிகமாக, சுமார் 1050 ஹெக்டேயர் முற் காடுகள் உள்ளன. இவற்றுடன், உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் சதுப்பு நிலக் காடுகள் ஆழமற்ற கடலில் வாழும் மீன், நண்டுகள் மற்றும் இறால் இனங்களின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகும். மீன்பிடி சமூகம் மற்றும் மீன்பிடித் தொழிலின் வாழ்வாதாரம் இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்துள்ளது.
மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையில் சுமார் 20 கரவலை மீன்பிடித் துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்தத் துறைமுகங்கள் அனைத்தும் மீன்வள மற்றும் நீர்வளச் சட்டத்தின் கீழ் எரிசக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கும்போது இது தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை.
மீன்பிடி தொழிலுடன் மேலதிகமாக, விவசாயமும் இந்தத் தீவில் நடைமுறையில் உள்ளது. காய்கறிகள், வேர்க்கடலை மற்றும் வெங்காயம் உள்ளிட்ட குறுகிய கால பயிர் சாகுபடி இந்தத் தீவில் பரவலாக உள்ளது. அதனைத் தவிர தீவுவாசிகள் பனை தொழில் தொடர்பான பல வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வகையில், மக்களின் வாழ்வியல் கட்டியெழுப்பியுள்ள மன்னார் தீவு மக்களுக்கு, திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை வழங்குவதற்காக பல நீண்டகால திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, 1978ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட நகர்ப்புற அபிவிருத்திச் சட்டத்தின் இலக்கம் 41 இன் படி, 1993 மார்ச் 22ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 759/1 இல், முழு மன்னார் தீவையே நகர்ப்புற மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவு 8(அ)இன் படி, மன்னார் மேம்பாட்டுத் திட்டம் 2021 – 2030 தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 2021 ஜூலை 13ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 2236/24 ஊடாக இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, மன்னார் தீவு வலயப்படுத்தப்பட்டு, தெற்கு கடற்கரை நிலைபேறுதகு வலு திட்டங்களுக்காகவும், வடக்கு கடற்கரை மீன்பிடித் தொழிலின் மேம்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வகையிலான பயன்பாடுகளைக் கொண்ட மக்களின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுடன் கூடிய ஒரு தீவில், பெரிய நிலப்பரப்பை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதன் மூலம், அதன் இயற்கை தொகுதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடைவதுடன், மக்களின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் சரிவதால் வறுமை அதிகரிக்கும் என்பதையும் நிலைபெறுதகு வலு அதிகாரசபை உணரவில்லை என்பது வருந்தத்தக்கது. காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் சரியான முறை என்பதை முழு சமூகமும் அறிந்த உண்மையாக இருப்பினும், அதை நடைமுறைப்படுத்தும் போது ஒட்டுமொத்த தொகுதியும் சேதமடைந்து பாதிக்கப்பட்டால், அந்த நிலைபெறுதகு எரிசக்தியை உருவாக்குவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை நிலைபெறுதகு வலு அதிகார சபை உணரவில்லை. எனவே, அதிகார சபை இந்தத் தீங்கு விளைவிக்கும் நிலையான எரிசக்தி உற்பத்தித் திட்டங்கள் காரணமாக, மன்னார் தீவு மக்களும் அதன் உயிரியல் சமூகமும் பாதகமான விளைவுகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.
சர்வதேச உடன்படிக்கைகளை மீறி மன்னார் தீவின் மக்களின் வாழ்வியலையும், வாழ்வாதாரத்தையும் அழித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பசுமை எரிசக்தி மேம்பாடு மற்றும் எரிசக்தி திறன் முதலீட்டு திட்டத்தின் (Green Power Development and Energy Efficiency Improvement Investment Program)கீழ் 2012ஆம் ஆண்டு தயாரித்து முன்மொழியப்பட்ட மன்னார் தீவு காற்றாலைப் பூங்கா (Proposed Wind Park in Mannar Area) அறிக்கை ஊடாக மன்னார் தீவு முழுவதும் காற்றாலைப் மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு 375 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில், மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் 100 மெகாவாட்டை கொண்ட ‘தம்பபவனி’ காற்றாலை திட்டத்தை நிர்மாணிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 157 மில்லியன் டொலர் பணத்தை கடனாக வழங்குவதற்காக 2017ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, மன்னார் தீவில் 375 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் வலியுறுத்தியது.
இந்த அறிக்கைகளைத் தயாரிப்பதில், ஆசிய அபிவிருத்தி வங்கி பல சர்வதேச உடன்படிக்கைகளை மீறியுள்ளது. 1971 பெப்ரவரி 2ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதற்கான ராம்சார் உடன்படிக்கை, 1979 ஜூன் 23ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட புலம்பெயர்ந்த உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான ‘பொன்’ மாநாடு மற்றும் 2015 டிசம்பர் 12ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம் ஆகியவை அனைத்தும் மீறப்பட்டுள்ளன. மேலும், சர்வதேச சட்டக் கொள்கையான முன்னெச்சரிக்கை கொள்கையை (Precautionary Principle) கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆசிய அபிவிருத்தி வங்கியின் முதற்கட்ட ஆய்வுகள், சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் கடன் உதவி ஆகியவற்றின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட ‘தம்பபவனி’ காற்றாலைப் மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான உயர் மின்னழுத்த மின் பரிமாற்றக் கம்பி அமைப்பு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒப்பந்தங்களின்படி வங்காலை சர்வதேச ரம்சார் ஈரநிலம் ஊடாக அமைக்கப்பட்டுள்ளது.
1983 முதல் இதுவரை இலங்கை பறவைகள் சங்கம் நடத்திய ஆய்வுகளின்படி, மன்னார் தீவின் தென்கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள வங்காலை சரணாலயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடத்தல்தீவு இயற்கை வனம் மற்றும் மன்னார் தீவின் முழு ஈரநில அமைப்பிலும் சுமார் 2 மில்லியன் கடலோர புலம்பெயர்வு ஈரநில பறவைகள் (Shorebirds) உள்ளன.
சர்வதேச ஈரநில அமைப்பு (Wetland iInternational) ஊடாக 2009ஆம் ஆண்டில் வெளியிட்ட “Status of Waterbirds in Asia, Results of the Asian Waterbirds Census, 1987-2007” அறிக்கையின்படி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஈரநிலப் பறவைகளைக் கொண்ட முக்கிய பிரதேசங்களில் ஒன்றாக மன்னார் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு சைபீரியாவிலிருந்து மில்லியன் கணக்கான குளிர்கால புலம்பெயர்வு பறவைகள் மத்திய ஆசிய கண்டத்தை நோக்கி பறக்கும் பாதையான (Central Asian Flyway) வழியாக இலங்கைக்கு வருகின்றன, மேலும் அவற்றில் ஏராளமானவை மன்னார் தீவு வழியாக நாட்டிற்குள் நுழைகின்றன, இது இந்த புலம்பெயர்ந்த பறவைகள் தொடர்ச்சியாக பறக்கும் போது முதல் நிறுத்தமாகும். இத்தகைய தனித்துவமான தீவில் ஒரு காற்றாலை மின் நிலைய அமைப்பின் கட்டுமானம் இந்த புலம்பெயர்ந்த பறவைகளின் பாதைகளை முற்றிலுமாகத் தடுத்து, அவற்றின் உணவுத் தளங்களைச் சீரழித்துள்ளது. குளிர்காலத்தைத் தவிர்க்க மில்லியன் கணக்கான ஆண்டுகளாக ஆர்க்டிக்கிலிருந்து அண்டார்டிக்கிற்கு இடம்பெயர்ந்த இந்தப் பறவைகள், காற்றாலைகள் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் தங்கள் தாயகத்தை இழந்துவிட்டன. இவ்வளவு பாரிய அழிவுகரமான திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதற்கான ரம்சார் உடன்படிக்கைகளை மீறுவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி பொறுப்பிலிருந்து விடுபட முடியாது.


அதனைத்தவிர உலகின் எட்டு வகையான கடல் ஆமைகளில் மூன்று வகைகள், மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலோர பிரதேசத்தில் முட்டையிடும். அதாவது, தோணி ஆமை அல்லது பச்சைக் கடல் ஆமை (Chelonia Mydas), அழுங்கு ஆமை (Eretmochelys Imbricata) மற்றும் ஒலிவநிறச் சிற்றாமை (Lepidochelys Olivacea) ஆகும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்தத் தீவின் தெற்கு கடற்கரையில் 12.5 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ‘தம்பபவனி’ மின் உற்பத்தி நிலையத் திட்டம், இந்த கடற்கரைக்கு முட்டையிட வரும் ஆமைகளின் எண்ணிக்கையில் விரைவான சரிவுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு பல காரணங்கள் பங்களித்துள்ளதாக எங்கள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரவு முழுவதும் காற்றாலைகளின் தொடர்ச்சியான இரைச்சல் மற்றும் இந்தப் பிரதேசத்தின் வெளிச்சம் போன்றவையுடன், காற்றாலைகளை அணுக கடற்கரையோரத்தில் உள்ள 14 கி.மீ நீளமான வீதிகளின் காரணத்தால் ஆமைகள் முட்டையிடும் பிரதேசங்களைக் தடுத்து துண்டு துண்டாகப் பிரிக்கின்றன. இந்த நிலைமைகள் காரணமாக, ஆமைகள் முட்டையிட இந்தக் கடற்கரையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குளிர்காலத்தைத் தவிர்க்க புலம்பெயர்ந்து செல்லும் பறவைகள் மற்றும் முட்டையிட வரும் ஆமைகளின் வாழ்விடத்தை இழக்க காரணமாக அமையும் காற்றாலைப் மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், செயற்படுத்துவதற்குமான கடன் உதவியைத் தயாரித்து வழங்குவதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, புலம்பெயர்ந்த காட்டு விலங்குகளின் பாதுகாப்பு குறித்த ‘பொன்’ உடன்படிக்கையை மீறியுள்ளது.
‘தம்பபவனி’ காற்றாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில், காற்றாலை டர்பைன்கள் மற்றும் அவற்றை இணைக்கும் பாதை அமைப்பை உருவாக்க உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் கழிமுகங்களைக் கொண்ட தடாகங்கள், அத்துடன் அவற்றை கடலுடன் இணைக்கும் 26 கால்வாய்கள் ஆகியவை நிரப்பப்பட்டு, தடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, வட கிழக்கு பருவமழைக் காற்று டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மன்னார் தீவு அதிக மழையைப் பெறும் போது கால்வாய்கள் மற்றும் களப்புகள் வழியாக மழைநீரின் இயற்கையான ஓட்டம் தடைப்படுவதால், சுற்றியுள்ள கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கும். கடந்த சில ஆண்டுகளில், 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தொடர்ச்சியான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீவுவாசிகள் குடிநீர் உள்ளிட்ட அன்றாட நீர் தேவைகளுக்கு கிணறுகளையே நம்பியுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பிறகு இந்தக் கிணறுகளை மீட்டெடுப்பதற்கான செலவுகள் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த அழுத்தங்களுக்கு மேலதிகமாக, காற்றாலைகள் காரணமாக மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து மீனவ சமூகத்தினரை தடுக்கின்றன என்பதையும் எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
அதற்கமைய, ‘தம்பபவனி’ காற்றாலை திட்டம் மன்னார் தீவு மக்கள் தங்கள் விருப்பமான இடத்தில் வாழ்வதற்கும், எந்த பாதிப்பும் இல்லாமல் ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கும் உள்ள சுதந்திரத்தை பறித்துள்ளது. இது பாரிஸ் காலநிலை மாற்றம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி, நிலைமாற்றுக் கொள்கையை மீறுவதாகும். ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இந்தப் பொறுப்பிலிருந்தும் விலக முடியாது.
புலம்பெயர்ந்த பறவைகளின் புலம்பெயர்வுப் பாதைகளில் காற்றாலைகள் ஏற்படுத்தும் சாத்தியமான தாக்கங்கள், கடலோர ஈரநிலப் பறவைகளின் உணவுப் பரப்பில் ஏற்படும் தாக்கம் மற்றும் தீவு மக்களின் வாழ்வியலில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி தயாரித்த சாத்தியக்கூறு ஆய்வுகளில் இருந்து ‘தம்பபவனி’ திட்டம் விடுபட்டுள்ளது. சுற்றுச்சூழலின் தொடர்ச்சியான இருப்பைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு அபிவிருத்தி செயல்முறையின் பாதகமான தாக்கங்களையும் கணிப்பதிலும், அவற்றுக்கான மாற்று அல்லது தணிப்பு முறைகள் அல்லது இழப்பீட்டு முறைகளைத் தயாரிப்பதிலும் முன்னெச்சரிக்கை கொள்கை முக்கியமானது. இந்தக் கொள்கையை 1992ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ரியோ மாநாட்டில் ரியோ பிரகடனத்தின் கொள்கை 15 என ஐக்கிய நாடுகள் சபை விளக்கியுள்ளது.
கடுமையான அல்லது மீளமுடியாத தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதைத் தாமதித்தல், மூலதனப் பற்றாக்குறை, முழு அறிவியல் தீர்ப்பு இல்லாமை அல்லது தகவல் இல்லாமை ஆகியவற்றின் அடிப்படையில் எந்தத் தணிப்பு நடவடிக்கைகளையும் தவிர்க்கக்கூடாது என்று அது கூறுகிறது, ஏனெனில், அவை 1998ஆம் ஆண்டு முன்னெச்சரிக்கை கொள்கை குறித்த விங்ஸ்ப்ரெட் மாநாட்டில் இந்தக் கொள்கைக்கு ஒரு பரந்த விளக்கம் அளிக்கப்பட்டது.
அந்த விளக்கத்தின்படி, ஒரு செயல்பாடு மனித ஆரோக்கியத்திற்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்போது, காரண-விளைவு உறவு அறிவியல் ரீதியாக முழுமையாக நிறுவப்படாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த சூழலில், ஒரு செயல்பாட்டின் ஆதரவாளர் பொதுமக்களை விட ஆதாரத்தின் சுமையைச் சுமக்க வேண்டும். முன்னெச்சரிக்கை கொள்கையை செயல்படுத்தும் செயல்முறையில் திறந்த தகவல் அமைப்புடன் ஜனநாயகமாக இருக்க வேண்டும், மேலும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரின் பங்கேற்பையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு முழு அளவிலான மாற்று வழிகளையும் ஆராய்வதும் இதில் அடங்கும். இதைத் தவிர்ப்பதன் மூலம், ஆசிய அபிவிருத்தி வங்கி இயற்கை அமைப்புகளின் உயிர்வாழ்வையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் ஆபத்தில் ஆழ்த்துவதன் மூலம் ஒரு வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது.
1966 ஆம் ஆண்டு முதல் இந்நாட்டிற்கு கடன்களை வழங்கி வரும் ஆசிய அபிவிருத்தி வங்கி, அதன் தொடக்கத்திலிருந்து 2024ஆம் ஆண்டு இறுதி வரை 522 திட்டங்களுக்கு சுமார் 12.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள கடன்களை வழங்கியுள்ளது, மேலும், எரிசக்தி துறையில் 57 திட்டங்களுக்கு கடன்களை வழங்கிய ஒரு அபிவிருத்தி வங்கியாக, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் எதிர்கால இருப்புக்கு சிறப்புப் பொறுப்பைக் கொண்டுள்ளது. நாட்டின், மக்களின் எதிர்கால இருப்பையும் இயற்கை வளங்களையும் அழிக்க இதுபோன்ற தவறுகளைச் செய்ய அவர்களால் முடியாது. காரணம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிலையான இருப்பு இந்த நாட்டு மக்களின் உழைப்பு, வரிகள் மற்றும் இயற்கை வளங்களின் இருப்பைப் பொறுத்தது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களின்படி மன்னார் தீவு மக்களின் வாழ்வியலை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு பணயம்வைத்தல்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ், மன்னார் தீவில் முதல் காற்றாலை மின் நிலைய திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, 2017ஆம் ஆண்டில் பொதுமக்களின் கருத்துகளுக்காக திறக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் 56 காற்று டர்பைன் நிறுவப்பட உள்ளன. இருப்பினும், இலங்கை பறவைகள் சங்கம், சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் அழுத்த செயன்முறைகளும், தொழில்நுட்ப கருத்துகளின் அடிப்படையில், தோட்டவெளி முதல் பாலாவி வரையிலான 12.5 கி.மீ நீள கடற்கரையில், கடற்கரையிலிருந்து 150 முதல் 160 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, தலா 3.45 மெகாவாட் திறன் கொண்ட 30 காற்றாலை டர்பைன்கள் மூலம் 103.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மன்னார் தீவில் தோட்டவெளி, துள்ளுக்குடியிருப்பு மற்றும் கட்டுகாரன்குடியிருப்பு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான கடன் ஒப்பந்தம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் 2017 நவம்பர் 22ஆம் திகதியன்று கையெழுத்தானது. இந்தத் திட்டத்தின் மொத்த செலவு டொலர் மில்லியன் 256.7 ஆகும். இது ஆரம்ப திட்டத்தை விட அதிகம். எனவே, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனும், மீதமுள்ள 56.7 டொலர் மில்லியன் இலங்கை மின்சார சபையிலிருந்தும் வழங்கப்பட்டு இந்தத் திட்டத்தின் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ‘தம்பபவனி’ என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதியன்று திறக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான காற்றாலை டர்பைன்கள் டென்மார்க் காற்றாலை உற்பத்தி நிறுவனமான வெஸ்டாஸால் வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில், ஒரு காற்றாலை டர்பைனை நிறுவ சுமார் 1.5 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நேரத்தில், ஒரு காற்றாலை டர்பைனை நிறுவ 6 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்தக் காற்றாலை டர்பைன்கள் அணுக 14 கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான வீதியை அமைப்பதற்காக தீவின் தெற்கு கடற்கரையில் ஒரு பெரிய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும், கட்டுமானத்தின் போது களப்பை (சிறு கடல்) கடலுடன் இணைக்கும் 26 கால்வாய்கள் தடுக்கப்பட்டுள்ளன. இது மழைநீர் வடிகால் பொறிமுறையை முழுமையாக அடைத்து வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், ஆழமற்ற கடலில் இருந்து முட்டையிடுவதற்காக களப்புக்கு வரும் மீன் இனங்கள், நண்டுகள் மற்றும் இறால் இனங்களின் இனப்பெருக்க செயல்முறையையும் மோசமாகப் பாதித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் ஆழமற்ற நீரில் மீன் அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளதாக தீவில் உள்ள சிறு மீன்பிடி சமூகத்தினர் குறிப்பிட்டனர்.
காற்றாலை டர்பைன்களை உருவாக்குதல், பாதை அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் தேசிய கட்டமைப்புடன் மின்சாரத்தை இணைக்கும் உயர் மின்னழுத்த மின் இணைப்பு அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றிற்காக மன்னார் தீவின் மக்கள் தெற்கு கடற்கரையின் பெறுமளவு நிலத்தை இழந்துள்ளனர். இதன் காரணமாக, மக்களின் தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்வியல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களின் அடிப்படையில் வேறு பல திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
“மன்னார் காற்றாலை மின் திட்டம் – கட்டம் 1 – தொடர்ச்சி”க்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, பொதுமக்களின் கருத்துகளுக்காக 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி, 21 காற்றாலை டர்பைன்களை நிர்மாணிப்பதற்காக ஒவ்வொரு காற்றாலை டர்பைனுக்கும் 6.63 ஏக்கர் என்ற வகையில் 139 ஏக்கர் நிலமும், காற்றாலை டர்பைன்களை இணைக்க 11.5 கிலோ மீற்றரும், வீதிகளை நிர்மாணிப்பதற்காக 43 ஏக்கர் நிலமுமாக மொத்தம் 182 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தீர்மானானது. இந்தத் திட்டத்திற்காக மன்னார் தீவின் தெற்கு கடற்கரையின் தென்கிழக்கு கடற்கரையையும், கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் உள்நாட்டுப் பகுதியையும் பயன்படுத்த உள்ளது.
அதைனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “முன்மொழியப்பட்ட 250 மெகாவாட் காற்றாலை எரிசக்தி திட்டம் மன்னார் – கட்டம் 111” என்ற பெயரில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பொதுமக்களின் கருத்துகளுக்காக முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி, அதானி பசுமை எரிசக்தி இலங்கை லிமிடெட் எனும் நிறுவனத்தால் 420 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டமாக செயல்படுத்த திட்டமிட்டது.
தலா 5.2 மெகாவாட் திறன் கொண்ட 52 காற்றாலை டர்பைன்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்ததுடன், இந்தத் திட்டத்தின் காற்றாலை டர்பைன்கள் மன்னார் தீவின் மையத்திலும் வடக்கு கடற்கரையிலும் நிறுவப்பட திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, ஒரு டர்பைனை நிறுவ தோராயமாக 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது. அதன்படி, இந்த முழு திட்டத்திற்கும் 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதலீட்டு நிறுவனம் கடந்த காலங்களில் கடுமையான சர்ச்சைக்கு உள்ளானது. ஆனாலும், அந்த வேலைத்திட்டத்தை இன்னும் பட்டியலில் இருக்கிறது.
இதற்கிடையில், மன்னார் தீவில் 4 காற்றாலை டர்பைன்கள் மூலம் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. மன்னார் தீவில் இந்தக் காற்றாலைகள் ஏற்படுத்தும் பாரிய தாக்கம் காரணமாக, சமீபத்திய நாட்களில் இதற்கெதிராக பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது.
இந்தத் திட்டம், ராஜகிரிய, நாவல, கல்பொத்த பாதை, எண் 66 இல் அமைந்துள்ள லீஜ் கேபிடல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் (Liege Capital Holding Pvt Ltd) முதலீட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இது Ceylex Renewables Pvt Ltd என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் தொடர்புகளுடன் Windscape Mannar எனும் துணை நிறுவனத்தால் செயல்படுத்துகிறது. இதற்காக, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கியிடமிருந்தும் 6.5 பில்லியன் ரூபாய் கடனாகப் பெறப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் தொடர்பான அமைச்சரவை ஒப்புதல்கள், சுற்றுச்சூழல் ஒப்புதல்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை, மேலும், அரச நிறுவனங்களால் இது குறித்த தகவல்களையும் பெற முடியவில்லை. எனினும் தொடர்புடைய வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
துரிதப்படுத்தப்படும் ஹேலிஸ் நிறுவனத்தின் சட்டவிரோத காற்றாலை திட்டம்
இதற்கிடையில், ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனம் (Hayleys Fentons Limited) மன்னார் தீவில் 50 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இது 50 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டம் என்றும், மின்சார சபைக்கு ஒரு யூனிட் மின்சாரம் 4.65 சதம் டொலருக்கு வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு மே 28ஆம் திகதியன்று எரிசக்தி அமைச்சகத்தில் கையெழுத்தானது என்றும், 2025ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறி, சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்டத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு தயாராகி வருகிறது. இதற்காக, ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனத்தின் கீழ் நிறுவப்பட்ட புதிய நிறுவனமான ஹேவிண்ட் வன் கம்பெனி லிமிடெட் (HayWind One Limited) திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. இது ஹேலிஸ் (Hayleys PLC) நிறுவனத்திற்கு முழு உரித்துமுள்ள துணை நிறுவனமாகும். இந்தத் திட்டம் 10 காற்றாலை டர்பைன்களைக் கொண்டுள்ளதுடன், கட்டுமானம் தொடங்கிய 18 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான காற்றாலை டர்பைன்களை நிர்மாணிப்பதற்காக மன்னார் தீவில் சுமார் 70 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியேற்படும். மேலும், நுழைவாயில் வீதிகளை தயார் செய்வதற்காக 30 ஏக்கருக்கும் அதிகமான நிலமும் கையகப்படுத்தப்பட நேரிடும்.

ஆனால், இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையோ அல்லது சுற்றுச்சூழல் ஒப்புதலோ வெளியிடப்படவில்லை. அமைச்சரவை முடிவுகள் தொடர்பான அறிக்கைகளை ஆராயும்போது அத்தகைய ஒப்புதல் வழங்கப்பட்டதற்கான எவ்வகையான ஆதாரமும் இல்லை. இவ்வாறு இருக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த அடிப்படையில் மின்சார சபையுடன் மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம், மன்னார் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் காற்றாலை மின் உற்பத்தி நிலையப் பிரச்சினை குறித்து ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை ஒரு மாத காலம் தாமதப்படுத்தியதுடன், பிரச்சினைகளைத் தீர்க்கவும் முயற்சி செய்யப்பட்டது. இந்நடவடிக்கையானது இந்தத் திட்டம் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. அது மட்டுமல்லாது, அவர்கள் சரியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அல்லது ஒப்புதல் இல்லாமல் அதை செயல்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிகிறது. மேலும், இந்தத் திட்டத்திற்கான அமைச்சரவை ஒப்புதலை பொதுமக்களிடமிருந்து மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிகிறது. இந்த உண்மைகள் அனைத்திலும் இந்தத் திட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது என்பதையே குறிக்கிறது.

மன்னார் தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்பான சட்ட கட்டமைப்பு
மன்னார் தீவைச் சுற்றி பெரிய கடலோரப் பிரதேசத்தைக் கொண்டிருப்பதன் காரணத்தால், காற்றாலைப் மின் நிலைய கட்டுமானத்தை மேற்கொள்ளும்போது 2011ஆம் ஆண்டின் 49ஆம் இலக்கச் சட்டத்தின் இறுதி திருத்தமான, 1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டமும் ஒரு முக்கிய காரணியாகும். இந்தச் சட்டத்தின்படி, கடலோர பிரதேசத்தில் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கு கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் துறையின் ஒப்புதல் அவசியம். இந்தச் சட்டத்தின்படி, கடலோரப் பிரதேசம் என்பது நிலத்தை நோக்கிய சராசரி உயர் அலைக் கோட்டிலிருந்து 300 மீட்டர் வரம்பிற்கும், கடல் நோக்கிய சராசரி குறைந்த அலைக் கோட்டிலிருந்து 2 கிலோமீட்டர் வரம்பிற்கும் உள்ள பிரதேசத்தைக் குறிக்கிறது. ஒரு நதி, வாய்க்கால், களப்பு அல்லது கடலுடன் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இணைக்கப்பட்ட வேறு எந்த நீர்நிலையின் விடயத்திலும் நிலத்தை நோக்கிய வரம்பு அவற்றின் இயற்கையான நுழைவுப் புள்ளிக்கும் அத்தகைய நதி வாய்க்கால் மற்றும் குளம் அல்லது கடலுடன் இணைக்கப்பட்ட வேறு எந்த நீர்நிலைக்கும் இடையில் வரையப்பட்ட நேரான அடித்தளத்திற்கு செங்குத்தாக அளவிடப்படும் 2 கிலோமீட்டர் வரம்பிற்கும், மேலும் எல்லை பூஜ்ஜிய சராசரி கடல் மட்டத்திலிருந்து எல்லையில் நிலத்தை நோக்கி நூறு மீட்டர் நீடித்து மேலதிகமான வரம்பு உள்வாங்கப்படும்.
இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவு 14(1)க்கு அமைவாக, இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிக்கு உட்பட்டதை தவிர, கடலோர பிரதேசத்தில் எந்த அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படக்கூடாது. துணைப்பிரிவு 16(1)க்கு அமைவாக துணைப்பிரிவு 14(1)க்கு கீழ் அனுமதிகளை வழங்குவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறையைப் பார்ப்பதற்கு வலியுறுத்தும் அதிகாரம் உள்ளது.
26 அ உறுப்புரைக்கு அமைய, கடலோரப் பிரதேசம் அல்லது அதன் வளங்களுக்கு சேதம் விளைவிக்கும் அல்லது சேதத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் நிறுத்த அதிகாரம் உள்ளது. மேலும், அது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், ஒரு நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் விண்ணப்பத்தின் பேரில் தொடர்புடைய செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரமும் அதற்கு உள்ளது. அந்த உத்தரவை பின்பற்றத் தவறினால், ஒரு நாளைக்கு ரூ. 10,000 அபராதம் மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படலாம்.
மேலும், மன்னார் தீவின் கடலோர பிரதேசத்திற்கு வெளியே உள்ள நிலப்பரப்பில் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிக்கும்போது, 2000ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்படல் வேண்டும். இந்தச் சட்டத்தின் பிரிவு 23ஆவது உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்ட 1993 ஜூன் 24 திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 772/22 இன் படி, ஒரு ஹெக்டேயருக்கு மேல் பரப்பளவிலான வன நிலத்தை வனம் அல்லாத நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கு முன்பு அல்லது 50 மெகாவாட்டுக்கு மேல் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்படல் வேண்டும். மேலும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட வங்காலை சரணாலயம், மன்னார் தீவின் தென்கிழக்கு எல்லையில் அமைந்திருப்பதால், தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் பிரிவு 23ஆவது உறுப்புரையின்படி வெளியிடப்பட்ட 1995ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 859/14 இற்கு அமைவாக, ஒரு சரணாலயத்தின் எல்லைக்குள் அல்லது அதற்குள் உள்ள எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் முதலில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு சுற்றுச்சூழல் ஒப்புதலைப் பெற வேண்டும்.
தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் துணைப்பிரிவு 23அஅ இன் கீழ் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால், முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு, ஒரு நபர், சட்டத்தின் பிரிவு உறுப்புரை 31 இன் கீழ் ஒரு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ரூ. 15000 க்கு குறையாத அபராதம் அல்லது 2 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இரண்டு தேசிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான விடத்தல்தீவு இயற்கை வனம் மற்றும் ஆதாம் பாலம் கடல்சார் தேசிய பூங்கா ஆகியவை மன்னார் தீவின் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு விளிம்புகளில் அமைந்துள்ளதால், காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதில் இந்தச் சட்டத்தின் சட்ட விதிகளும் கவனத்தில் கொள்வது முக்கியமானவை. 2022ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்ட, 1937ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவுகள் 9அ (1) மற்றும் (2) இன் படி, தேசிய வனத்தின் எல்லையிலிருந்து ஒரு மைலுக்குள் எந்தவொரு மேம்பாட்டு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன் வனவிலங்கு பணிப்பாளரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்படல் வேண்டும். அவ் ஒப்புதலானது தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறை மூலம் பெறப்படல் வேண்டும்.

இந்தக் கட்டளைகளுக்கு மேலதிகமாக, திருத்தப்பட்ட 1940ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 43அ மற்றும் 47 இன் உறுப்புரைகளுக்கு அமைய, 2000ஆம் ஆண்டு அக்டோபர் 04ஆம் திகதியிட்ட 1152/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட 2000ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க திட்ட நடைமுறைகளின் ஆணைக்கு இணங்கவும், ஒரு ஹெக்டேயருக்கு மேல் உள்ள பிரதேசங்களின் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் தொல்பொருள் சேத மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டியதுடன் தொல்பொருள் ஒப்புதலும் பெறப்படல் வேண்டும்.
இந்தச் சட்டத்திட்டங்களையும் கட்டளைகளையும் மீறி காற்றாலைகள் அமைப்பது பல சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளது. மேலும், சட்டத்தின் ஆட்சியையும் மன்னார் தீவு மக்களின் அடிப்படை உரிமைகள் பலவற்றையும் மீறியுள்ளது.
காற்றாலைகள் மன்னார் மக்களின் உரிமைகளைப் பறிக்கின்றன
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் VI ஆம் அத்தியாயத்தில் உள்ள கொள்கைகள் மற்றும் அடிப்படைக் கடமைகளை நிர்வகிக்கும் அரசின் கொள்கையின் துணைப் பிரிவின் உறுப்புரை 27(14) இன் படி, “அரசாங்கம் மக்களின் நலனுக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், அதனை மேம்படுத்த வேண்டும்.” அதன்படி, அனைத்து அரசு நிறுவனங்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை செயல்படுத்தவும், சுற்றுச்சூழலின் உயிர்வாழ்வைப் பாதிக்காத முடிவுகளை எடுக்கவும் கடமைப்பட்டுள்ளன. மேலும், இந்த அத்தியாயத்தின் கீழ் துணைப்பிரிவு 28(ஈ) இன் படி, இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது ஒவ்வொரு இலங்கையரினதும் கடமையாகும். அதன்படி, ஒவ்வொரு குடிமகனும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தலையிடவும், அந்த நோக்கத்திற்காக சட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்த அரசு நிறுவனங்களை வழிநடத்தவும், பாதுகாப்பிற்கான சட்டங்களை அமுல்படுத்தவும், சேதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ளது.
இருப்பினும், மன்னார் தீவில் காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்தும்போது நிலையான எரிசக்தி அதிகார சபையோ அல்லது மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையோ அல்லது கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களமோ அரசியலமைப்பில் உள்ள இந்த விடயங்களில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. அப்படி இருந்திருந்தால், இந்தக் காற்றாலை மின் நிலையங்களால் ஈரநில அமைப்புகளும் மன்னார் தீவின் மக்களும் இவ்வளவு துயரமான விதியை சந்தித்திருக்க மாட்டார்கள்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 12ஆவது பிரிவுக்கு அமைய, அத்தியாயம் மூன்றின் கீழ் அடிப்படை உரிமைகளைக் கையாள்கிறது, சட்டத்தின் பிரகடனம் மற்றும் செயல்படுத்தல் மற்றும் சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். 14ஆவது யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கருத்துச் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம், சட்டபூர்வமான வேலை வாய்ப்பில் ஈடுபடும் சுதந்திரம், தொழில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபடும் சுதந்திரம் மற்றும் ஒருவர் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமைகள் காற்றாலைத் திட்டங்களால் மன்னார் தீவின் மீனவ சமூகத்தினரிடமிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் பறிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்றாலைகள் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயாரிப்பதில், பொதுமக்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன, உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன, இந்தத் திட்டங்களுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன, கடற்கரை நுழைவாயில்கள் தடைபட்டதால் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன, காற்றாலைகள் சுழற்சியால் உருவாக்கப்பட்ட சத்தம், அதிர்வு மற்றும் தொடர்ச்சியான நிழல்கள் காரணமாக அவர்கள் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலத்தில் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளால் தீவு வெள்ள அபாயத்தை எதிர்கொள்கிறது, இது அவர்கள் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரத்தையும் இழக்க வழிவகுத்துள்ளது.
1955ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை உள்ள ஒரு நாடாக, நமது நாடு 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பொறுப்புடமை கொண்டுள்ளது. அந்தப் பிரகடனத்தின் 3ஆவது உறுப்புரைக்கு அமைய அனைவருக்கும் உயிர்வாழ்வதற்கான உரிமை உண்டு என்று கூறுகிறது. 7ஆவது உறுப்புரைக்கு அமைய சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், எந்த பாகுபாடும் இல்லாமல் சட்டத்தின் பாதுகாப்பிற்கு உரிமை உண்டு என்றும் கூறுகிறது. 13ஆவது உறுப்புரைக்கு அமைய ஒவ்வொருவருக்கும் தங்கள் நாட்டின் எல்லைக்குள் வசிப்பதற்கான உரிமை உண்டு என்று கூறுகிறது. 17ஆவது உறுப்புரைக்கு அமைய, ஒவ்வொருவருக்கும் தனியாகவும் மற்றவர்களுடன் கூட்டாகவும் சொத்துக்களை வைத்திருக்கவும் உரிமை உண்டு. மேலும், யாருடைய சொத்தையும் வலுக்கட்டாயமாகப் பறிக்க முடியாது. 19ஆவது உறுப்புரைக்கு அமைய, அனைவருக்கும் குறுக்கீடு இல்லாமல் கருத்துக்களை வைத்திருக்கவும் வெளிப்படுத்தவும், தகவல்களைப் பெறவும் வழங்கவும் உரிமை உண்டு. இருப்பினும், காற்றாலை மின் நிலையத் திட்டங்களால் தீவுவாசிகளின் வாழ்வாதாரம், மீன்பிடித் தொழில் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, வெள்ள அச்சுறுத்தல் மற்றும் காற்றாலை மின் நிலையத் தாக்கங்கள் காரணமாக, தீவுவாசிகள் தங்கள் வாழ்வதற்கான உரிமையையும், வசிக்கும் உரிமையையும் இழந்துள்ளனர். இதன் விளைவாக, தீவுவாசிகள் தங்கள் சொத்துரிமைகளையும் இழந்துள்ளர். ஒப்புதல், செயல்படுத்தல், நில பரிமாற்றம், இந்தத் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகள், அமைச்சரவை ஒப்புதல்களைப் பெறுதல் போன்ற எந்தவொரு தகவலையும் பொதுமக்கள் அணுகுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் குறித்து எந்தவொரு அரசு நிறுவனமும் துல்லியமான தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்கவில்லை.மேலும் இந்த நிபந்தனைகளை எதிர்த்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவையெல்லாம் காற்றாலைகள் காரணமாக மக்கள் சந்திக்க வேண்டிய அவலங்கள். இதனால், காற்றாலைகள் காரணமாக மன்னார் தீவு மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் இரண்டையும் இழந்துள்ளனர்.
உலகத்தின் நிலையான எரிசக்தி, உலக வங்கி மற்றும் இலங்கையின் எதிர்கால விதி
எரிசக்தி அமைச்சின் 2024ஆம் ஆண்டின் தேர்ச்சி அறிக்கையின்படி, இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தி திறன் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5841 மெகாவாட்டாகும். இதனூடாக நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி, மர எரிபொருள், உயிரியல் எரிபொருள்கள் மற்றும் நகராட்சி கழிவுகள் போன்ற நிலையான எரிசக்தி மூலங்களால் உருவாக்கப்படும் மின்சார திறன் 3658 மெகாவாட் ஆகும். இது மொத்த மின்சார உற்பத்தியில் 63 சதவீதத்தை எட்டுகிறது. இலங்கை மின்சார சபையின் 2018-2037 வரையான நீண்டகால மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்திற்கமைய (Long Term Generation Expansion Plan 2018-2037) காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய மின் உற்பத்தி ஆகியவை 2037ஆம் ஆண்டு வரை நிலையான எரிசக்தித் துறையில் முக்கிய அபிவிருத்தி இயக்கிகளாக கட்டமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போதுதான், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, எரிசக்தித் துறையில் கார்பனீரொக்சைட் வெளியேற்றத்தை 20 சதவீதம் குறைக்கும் இலக்கை எளிதாக அடைய முடியும்.
1990ஆம் ஆண்டில் 29 சதவீதமாக இருந்த தேசிய மின்சார விநியோகம், 2018ஆம் ஆண்டளவில் 99.58 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மின் உற்பத்திக்காக ஆண்டுதோறும் வெளியேற்றப்படும் கார்பனீரொக்சைட்டின் அளவு சுமார் 7 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும். நாட்டில் எரிபொருள் பாவனையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் 16.7 மில்லியன் மெட்ரிக் டொன் கார்பனீரொக்சைட்டில், 44 சதவீதம் மின்சார உற்பத்தி காரணமாகவே வெளியிடப்படுகிறது. இது உலகின் அனைத்து நாடுகளாலும் வெளியிடும் கார்பனீரொக்சைட்டின் அளவோடு ஒப்பிடும்போது 0.05 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவாகும். சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஒருவருடத்திற்கு கார்பனீரொக்சைடு வெளியேற்றம் முறையே சுமார் 9135, 5176 மற்றும் 1187 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும்.
உலகில் இன்று நிலையான எரிசக்தியானது சூரிய சக்தி, உயிரியல் எரிபொருள்கள், புவிவெப்ப ஆற்றல், கடல் அலைகள், காற்றாலை மின்சாரம் மற்றும் நீர் மின்சாரம் போன்ற ஆறு மூலங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச எரிசக்தி அமைப்பின் 2025 புள்ளிவிவரங்களின்படி, உலகின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 4.45 மில்லியன் மெகாவோட்டாகும். இதில், 1.13 மில்லியன் மெகாவோட் காற்றாலை மின் நிலையங்கள் மூலமும், 1.87 மில்லியன் மெகாவோட் சூரிய மின் நிலையங்கள் மூலமும் உற்பத்தி செய்யப்படுகிறது 2030ஆம் ஆண்டாகும்போது காற்றாலை மின் நிலையங்கள் மூலம் 2.2 மில்லியன் மெகாவோட் மின்சாரத்தையும், சூரிய மின் நிலையங்கள் மூலம் 7 மில்லியன் மெகாவோட் மின்சாரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்த எரிசக்தி மூலங்கள் விரைவான வளர்ச்சியை அடைந்து வருவதாகத் தெரிகிறது. இதனூடாக புதைபடிவ எரிபொருட்களின் எரிப்பிலிருந்து வளிமண்டலத்தில் பசுமையற்ற வாயுக்களை வெளியிடுவதைக் குறைப்பதுடன், இதன் ஊடாக காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்த முடியும்.
இது உண்மையாக இருப்பினும், இந்த நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களானது காடுகள், ஈரநிலங்கள் மற்றும் ஆழமற்ற கடல்களில் உள்ள மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் இழப்பில் இருந்தே நிறுவப்படுகிறது. இதனூடாக எதிர்பார்த்த பலன்களை அடைய முடியுமா என்பதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது காலநிலை மாற்றத்திற்கான களத்தை அமைப்பது மட்டுமல்லாமல், இயற்கை அமைப்புகளின் அழிவு காரணமாக விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல உணவு உற்பத்தித் துறைகளைப் பாதிப்பதன் மூலம் நாட்டின் உணவு இறையாண்மை வீழ்ச்சி நிலைக்கு உட்படுத்துகிறது. அதற்கு ஒரு தீர்வாக, உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், பயிர் நிலத்தை அதிகரிப்பதற்காகவும், உணவு இறக்குமதியை அதிகரிப்பது அல்லது காடுகள் மற்றும் ஈரநிலங்களை அழிப்பது போன்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். இது ஒரு சுழற்சியாகத் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, நாடு கடுமையான பேரழிவைச் சந்திக்க வழிவகுக்கிறது.
உலக வங்கியின் கடல் கடந்த காற்றாலை மின் அபிவிருத்தி திட்டத்தின் (Offshore Wind Development Program – World Bank Group) கீழ் இலங்கைக்கான கடல் கடந்த காற்றாலை மின் நிலையத்தின் பாதை வரைபடம் என்ற (Offshore Wind Roadmap for Sri Lanka) தலைப்பிலான அறிக்கை 2023 ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, இலங்கையின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளின் ஆழமற்ற கடல்களில் சுமார் 14,195 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காற்றாலை மின் நிலையங்களை நிறுவி 56 கிகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இந்த ஆழமற்ற கடற்பரப்பு கடல் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஒரு பிரதேசமாகும். பவளப்பாறைகள், மணல் திட்டுக்கள், கடல்புற் படுகைகள் மற்றும் சேற்றுப் படுகைகள் போன்ற ஏராளமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட பிரதேசங்களாகும். இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் கடல் மீன் இனங்கள், ஆமைகள் மற்றும் இறால் மற்றும் நண்டுகள் போன்ற கடல் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் போன்ற கடல் உயிரினங்களின் இனப்பெருக்கம் மற்றும் உணவளிக்கும் இடங்களாகச் செயல்படுகின்றன. மீன்பிடித் தொழில் மற்றும் அதைச் சார்ந்திருக்கும் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் அத்துடன், நாட்டின் உணவு இறையாண்மை ஆகியவை இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் தொடர்ச்சியான இருப்பைப் பொறுத்தது. இவையனைத்தும் இந்தத் திட்டங்களால் சரிந்துவிடும் அபாயத்தில் உள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கி மட்டுமல்ல, உலக வங்கியும் கூட நமது நாட்டை காற்றாலை மின்சார சந்தையின் பிடிக்குள் வேகமாகக் கொண்டு வருகின்றது. நீர் மின்சார உற்பத்திக்கான தற்போதைய நிலையான எரிசக்தி மூலத்தைப் பாதுகாக்க, தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் வண்டல் படிவதைத் தடுப்பதும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளை மேம்படுத்துவது போன்ற செலவு குறைந்த முறைகளைப் பின்பற்றுவதும் அவசியம். இதன் மூலம் மின்சாரம் மட்டுமல்ல, விவசாயத்திற்கும் மக்களுக்கும் நீர் பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன், அதனூடாக காலநிலை மாற்றத்தைத் தணித்தல், மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் மூலம் உயிரியல் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். ஆனால், ஆசிய அபிவிருத்தி வங்கியும், உலக வங்கியும் நம்மை எரிசக்தி சந்தையில் அடைத்து வைப்பதன் மூலம் இதையெல்லாம் நம்மிடமிருந்து பறிப்பதற்கான வேலையை செய்கின்றன. அதிகாரிகள் மட்டுமல்ல, இந்த அனைத்து தரப்பினரும் தற்போதைய அரசாங்கத்தையும் தன் பிடியில் வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் அதை உணரவில்லை. காரணம் நிலையான எரிசக்தி சந்தையை ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் நிலையான எரிசக்தி நிறுவனங்கள் மிகக் கவனமாக நிர்வகிக்கின்றன. இதனூடாக நாட்டின் எரிசக்தி இறையாண்மையைப் பறித்து, அனைத்து முடிவுகளையும் சந்தை நிறுவனங்களிடம் விட்டுவிடும் ஒரு பொறிமுறையை உருவாக்கும் முயற்சியாகும். ஒரு நாடாக நாம் இதை உடனடியாகக் கடக்க முயற்சிக்க வேண்டும்.
இதற்காக, பழைய மற்றும் காலாவதியான தொழில்நுட்பங்களில் இயங்கும் நாட்டின் தற்போதைய நீர் மின் நிலைய அமைப்பை மிகவும் திறமையாக புதுப்பிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, காற்றாலை மின் நிலையங்கள் குறைந்த தாக்கத்துடன் பொருத்தமான இடங்களில் மட்டுமே நிறுவப்பட வேண்டும், மேலும், மண் மற்றும் பாறை குவாரி பகுதிகளிலும், வீடுகள் மற்றும் கட்டடங்களிலும் சூரிய மின் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும். காடுகளில் உள்ள ஈரநிலங்கள், குளங்கள் அல்லது நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதை நிறுத்த வேண்டும். மேலும், பொருத்தமான இடங்களில் இத்தகைய திட்டங்களை நிறுவுவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகளை, வளர்ந்த அமைப்புகளில் நிலையான எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், அந்தத் திட்டங்களுக்கும் மக்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்குவதன் மூலமும் இழக்கக்கூடாது.
சஜீவ சாமிக்கர
காணி மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம்