Photo, RoarMedia/Thiva Arunagirinathan
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தின் முதற்கட்ட அமுல்ப்படுத்தல் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவினால் அறிவிக்கப்பட்டது வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தக் கல்விச் சீர்திருத்தம் சார்ந்த முழுமையான அறிக்கை ஒன்றை விவாதத்திற்காக சமர்ப்பிக்காமல், மிகவும் வேகமாக முன்னெடுத்துச் செல்லும் குதிரைக்கு முன் வண்டியை வைத்து ஓட்டுவது போன்ற அரசாங்கத்தின் அணுகுமுறை, கல்வியியலாளர்கள் உட்பட பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரசாங்கப் பிரதிநிதிகள் வெளியிட்ட பகுதியளவு மற்றும் முரண்பாடான ஊடக அறிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உரையையும் அடிப்படையாகக் கொண்டு இருளில் தடுமாறுவது போன்று சீர்திருத்தங்களின் விபரங்களை ஊகிக்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் எந்தவொரு குழுவோ அல்லது அமைப்போ சீர்திருத்தங்களை உருவாக்கியவர்களென வெளிப்படையாக அடையாளம் காணப்படாதவிடத்து இந்த முயற்சியின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு சார்ந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இடைநிலைக் கல்வியில் மாற்றங்கள்
சமூக ஊடகங்கள் வழியாக கசிந்து பின்னர் கல்வி அமைச்சின் இணைதளத்தில் பதிவேற்றப்பட்ட, ஜூலை 2025 எனத் திகதியிட்ட ஆங்கில மொழியிலுள்ள ‘பவர்பாயிண்ட்’ விளக்கக்காட்சியொன்றை அடிப்படையாகக் கொண்டே கல்விச் சீர்திருத்தம் சார்ந்த உரையாடல்கள் நடைபெறுகின்றன. அதன் அடிப்படையில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தம் ஐந்து தூண்களைக் கொண்டுள்ளது. அவையாவன:
- பாடத்திட்டம்
- மனிதவளம்
- உட்கட்டமைப்பு வசதிகள்
- கல்வி நிர்வாக சீர்திருத்தங்கள், மதிப்பீடு
- பொது விழிப்புணர்வு.
இருப்பினும், முதல் தூணான பாடத்திட்ட மேம்பாடு சார்ந்த குறிப்பிட்ட விவரங்கள் மட்டுமே விரிவாகக் காட்டப்பட்டுள்ளது என்பதோடு முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கான பகுப்பாய்வோ ஆதாரங்களோ வழங்கப்படவில்லை.
பாடத்திட்டப் பட்டியலில் இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றுத்திட்டங்கள் தனித்து நிற்கின்றன:
- பொதுக் கல்வியுடன் தொழில்முறைக் கல்வியை இணைத்தல் மற்றும்
- மாணவர்களை 9ஆம் வகுப்பு முடிந்தவுடன் தொழில் சார்ந்த படிப்புப் பாதைகளில் வழிநடத்துதல்.
மாணவர்களின் உடல், உள, மன மற்றும் ஆன்மீகம் உட்பட்ட முழுமையான வளர்ச்சியை நோக்கி அவர்களை வழிநடத்தும் பொதுக் கல்வியை 9ஆம் வகுப்புக்குள் அடைய முடியும் என்பதை பரிந்துரைக்கின்றது. 10ஆம் வகுப்புகளிலிருந்து பாடத்திட்டத்தின் நோக்கமாக “தொழில் தயார்நிலைக்கான அடித்தளம்” எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, க.பொ.த சாதாரண தரத் தேர்விற்கான பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைத்து, மாணவர்களை மனோவியல் (Psychometrics) அளவீடுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட துறையில் படிப்பைத் தொடரும் போக்கை மதிப்பிட்டு, தொழில் சார்ந்த மேலதிக (Further learning) பாடத்தொகுதிகளுக்கு வழிநடத்தப்படுவார்கள். அவர்களின் சிறப்புப் பிரிவுகளுக்கு வெளியே ஒரு குறுக்குவெட்டு (Transversal) பாடத்தொகுதியும் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்தோடு, உயர் தரத்தில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், முகாமைத்துவம், தொழில்முனைவு மற்றும் வணிகக் கல்வி, மனிதவியல் மற்றும் சமூக விஞ்ஞானம் ஆகியவற்றுடன் ஐந்தாவது நீரோட்டமாக தொழில்முறைக் கல்விப் பாதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தொழில்நுட்பக் (Technical) கல்வியை நோக்கிய சாய்வைக் கொண்டுள்ளது.
அனுமானங்கள்
முன்மொழியப்பட்ட சீர்திருத்தத்தின் தன்மையை அதன் அனுமானங்களைக் கொண்டு அளவிடலாம். குழந்தைகள் தங்கள் வாழ்க்கைப் பாதையை அடையாளம் கண்டு, அதைத் தொடர தேவையான வழிகாட்டுதலை உறுதிசெய்வதே பாடத்திட்ட மாற்றத்தின் நோக்கமாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ஊடகங்களில் வெளிப்படுத்தினார். பாடசாலைகள் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு போதுமானளவு தயார்ப்படுத்தாததால், பல்கலைக்கழகங்கள் மென் திறன்களை (soft skills) வளர்த்துக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். அத்தகைய இலக்கையடைய STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) சார்புள்ள பாடங்களுக்கு முதன்மையளிக்க வேண்டுமென்பது சீர்திருத்தத்தின் அனுமானமாகும்.
இருந்தாலும், தற்போது நாட்டிலுள்ள அரசப் பள்ளிக்கூடங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவையே உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவுகளை வழங்குகின்றன. மேலும் பல பள்ளிகளில் தற்போதைய பாடத்திட்டத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யப் போதுமான ஆசிரியர்கள், ஆய்வக மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இத்தகைய கடுமையான ஏற்றத்தாழ்வுகளின் மத்தியில், பொதுக் கல்வி நோக்கங்களைக் கட்டுப்படுத்தி, STEM பாடங்களிற்கூடாக தொழில்முறை இலக்குகளை இடைநிலைக் கல்விக்குள் புகுத்தலாம் என்பது சாத்தியமற்றதாகத் தெரிகின்றது.
கடந்த தசாப்தங்களில், உயர்கல்வியை மென்திறன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி உள்ளிட்ட “நவீனமயமாக்கல்” என்ற பதாகையின் கீழ் சந்தையின் தேவைகளுக்கு கீழ்ப்படுத்துவதற்கான அழுத்தத்தை நாம் அவதானித்தோம். முதல் முறையாக தேசிய மக்கள் சக்தியின் தலைமையின் கீழ், பாடசாலைகளையும் வேலைப் பயிற்சி மையங்களாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் சீர்திருத்தங்கள், அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதிரொலித்தது போல, நாடு எதிர்கொள்ளும் ஆழமான பொருளாதார சவால்களை தொழில்முறை மற்றும் தொழில்நுட்பக் கல்வி மூலம் தீர்க்க முடியும் என்பதாகும். இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு விவசாயத் துறையிலிருந்து STEM துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதாரமாக பரிணமிக்குமென கற்பனை செய்துள்ளது. மேலும், தொழிற்பாதைகள் சார்ந்த முடிவுகளை மாணவர்கள் 14 வயதிலேயே எடுக்கக்கூடிய வகையில் எதிர்கால ஊழியர் சந்தை நிலையானதாயும் கணிப்பிடக்கூடியதாயும் இருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலே பாடத்திட்ட மாற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலும், வேறெந்த நாடுகளைப் போலவே, பலதரப்பட்ட மற்றும் முரண்பட்ட கல்வியின் நோக்கங்கள் போட்டிபோடுகின்றன. இவற்றில் ஒரு சில நோக்கங்கள் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஆதிக்கம் செலுத்தி கல்வியின் விளைவுகளை வடிவமைக்கின்றன. தற்போது மாணவர்களை வேலைவாய்ப்புக்குத் தயார்ப்படுத்துவதே பாடசாலைக் கல்வியின் முதன்மை நோக்கம் என்ற நம்பிக்கை அதிகரித்துவருகின்றது. இருப்பினும், கல்விச் சீர்திருத்தத்தின் வெற்றியோ தோல்வியோ அதன் அனுமானங்கள் மிகச்சரியாக இருக்கின்றதா என்பதைச் சார்ந்துள்ளது.
கல்விக் கொள்கைகளின் தொடர்ச்சி
கல்விச் சீர்திருத்தம் குறித்து வெளிவந்துள்ள தகவல்களை ஆராயும் போது, முன்னைய அரசாங்கங்களின் கீழ் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களிலிருந்து பாரிய விலகல் இல்லை என்பது தெளிவாகின்றது.
2019ஆம் ஆண்டு சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கம் தொடங்கிய சீர்திருத்த செயல்முறை, 2020இல் கோட்டபாய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கல்விக்கான பணிக்குழுவின் “இலங்கையில் கல்வியை மறுபரிசீலனை செய்தல்” அறிக்கை மற்றும் 2023இல் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. பின்பு 2024ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் பாடத்திட்ட பரிசோதனைகள் நடாத்தப்பட்டு, “பாடத்திட்ட மாற்றத்தின் முதல் இடைக்கால அறிக்கை,” தேசிய கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டது. 2025இல் தொடங்கவிருந்த நடைமுறைக்கட்டம் அரசாங்க மாற்றத்தால் தாமதமானது.
கல்வியின் நெருக்கடியை கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையிலான பொருந்தா தன்மையாக வியாக்கியானப்படுத்தல், 1981ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டதிலிருந்து கொள்கை உரையாடல்களில் ஆதிக்கம் செலுத்திவருகின்றது. கொள்கை நிலப்பரப்பில் செல்வாக்குச் செலுத்தும் சர்வதேச நிதி நிறுவனங்களின் நுழைவு இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தியது. கல்வித்துறைக்கான நிதி வழங்களில் உலக வங்கி ஆதிக்கம் செலுத்தியது. தற்போது, கல்வி சீர்திருத்தத்திற்கான அதிக நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குகின்றது. 2020இல் தொடங்கிய, “இடைநிலைக் கல்வித்துறை மேம்பாட்டுத் திட்டம்” (SESIP), உலகப் பொருளாதாரத்துடன் இணைத்துக் கொள்ளக்கூடிய இரண்டாம் நிலைக் கல்வியை மாற்றும் நோக்கத்துடன் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் வணிகக் கற்கைநெறிகளை மேம்படுத்துவதற்கான கடன் திட்டமாகும்.
இவ்வகையாக இயற்றப்படும் நிகழ்ச்சி நிரல்கள் கல்வியியலாளர்களால் அல்லாது, பொருளியலாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. உலகளாவிய கல்விக்கொள்கைத் துறையில் ‘மனித மூலதனம்’ என்ற கோட்பாட்டை பற்றிக்கொண்டதையடுத்து பொருளியலாளர்களின் ஆதிக்கம் வலுப்பெற்றது. மனித மூலதனக் கோட்பாடு நிராகரிக்கப்பட்டாலும், உலகளாவிய தெற்கு நாடுகளில் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கூடாக அதன் செல்வாக்கு தொடர்கின்றது.
உலக வங்கியின் 2019ஆம் ஆண்டு வெளியான, “இலங்கையில் மனித மூலதன மேம்பாடு” என்ற அறிக்கை இலங்கைப் பொருளாதாரத்தின் பிரகாசமான வளர்ச்சிக்கான எதிர்வுகூறலோடு மனித மூலதன கட்டமைப்பினுள் கல்விக்கான ஒரு விரிவான திட்டத்தை முன்வைத்தது. விரைவில் நாட்டைத் தாக்கவிருக்கும் மிகமோசமான பொருளாதார நெருக்கடி சார்ந்த ஊகிப்போ பகுப்பாய்வோ அவ்வறிக்கையில் இடம்பெறவில்லை. இத்தகைய குறுகிய பார்வை கொண்ட ‘நிபுணர்களால்’ தான் எமது கல்விக் கொள்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்கள் பொதுவாக 10 – 15 ஆண்டுகளுக்கான திட்டங்களாகும். இதனால், எதிர்க்கட்சியில் இருந்தபோது எதிர்த்துவந்த நிகழ்ச்சிநிரல்களை பதவிக்கு வந்த பின் தொடரவேண்டிய பொறிக்குள் அரசாங்கம் சிக்கியுள்ளது. “குப்பைத் தொட்டிக்கு மட்டுமே பொருத்தமானது” என்று நிராகரித்த கல்விச் சீர்திருத்தங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அங்கீகரித்துள்ளது. மேலும் கல்விச் சீர்திருத்தத்தை நிபுணர்களிடம் விட்டுவிடுமாறு ஜனாதிபதி நாடாளுமன்ற உரையில் கேட்டுக்கொண்டது நிலைமையை மோசமாக்கும் வகையில் நிபுணர்களின் கொடுங்கோன்மையை எளிதில் தழுவுவதை அம்பலப்படுத்தியுள்ளது.
வீணாக்கப்பட்ட வாய்ப்பு
இலவசப் பொதுக் கல்விமுறையின் விரிவான சீர்திருத்தம் அவசியம் என்பதில் பரந்த ஒருமித்த கருத்துள்ளது. இருப்பினும், அனைத்து சீர்திருத்த செயல்முறைகளையும் போலவே, கல்வியிலும் பல்வேறுபட்ட உந்துதல்கள் உள்ளன. ஒரு ஜனநாயக அரசாங்கம் இந்த சவாலைத் தவிர்க்க முடியாது. அதன் சொந்த நிலைப்பாடுகள் சார்ந்து வெளிப்படையாகவும், மேலும் உரையாடல் மூலம் ஒருமித்த கருத்தைப் பெற நெகிழ்வாகவும் இருத்தல் அரசாங்கத்தின் கடமையாகும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையோடு மக்களிடையே பிரபலமான அரசாங்கம் அவ்வாறான ஒரு செயல்முறையை ஆரம்பிக்கக்கூடிய சிறந்த நிலையிலுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சியில் இருந்தபோது தாம் எதிர்த்த சீர்திருத்தங்களை திருட்டுத்தனமாக நடைமுறைப்படுத்த முனைவது குறித்த ஏமாற்றம் தெளிவாகத்தெரிகின்றது. பெரும்பாலான இலங்கையர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும், இலவசக் கல்விமுறையை சமூக நீதி நோக்கி பாதையில் வழிநடத்தக்கூடிய ஒரு விரிவான கல்விச் சீர்திருத்த செயல்முறையைத் தொடங்குவதற்கான வாய்ப்பு வீணடிக்கப்படுகின்றது.
நியாந்தினி கதிர்காமர்
அமெரிக்காவின் அம்ஹெர்ஸ்டில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வியில் முனைவர்பட்ட ஆய்வாளர்.