படம் | Vikalpa Flickr
இராணுவத் தரப்பினால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் மக்களின் போராட்டத்துக்கு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார் இராணுவப் பேச்சாளர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கால்பதித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய காணிகளை மீளப்பெறவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக அவரின் ஊடக அறிக்கை சொல்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காணிக்கான உறுதி இல்லை என்பதும், அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பதும் இராணுவ பேச்சாளரின் மேலதிகக் குற்றச்சாட்டுக்களாக அமைந்திருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்கத்தக்கவையல்ல. வன்னியில் பிரபாகரனின் அல்லது புலிகளின் காணிகள் என்று எதுவும் இருக்கவில்லை. வருட அடிப்படையில் நிலத்தை காணி உரிமையாளர்களிடமிருந்து புலிகள் வாங்கியிருந்தார்கள். அல்லது மக்கள் தம் நிலத்தை புலிகளுக்கு வழங்கியிருந்தார்கள். கிளிநொச்சியில் அதிகளவு நிலம் புலிகளுக்கு எப்படி கிடைத்ததெனில், ஆனையிறவு படைத்தளம் இருக்கும் வரைக்கும் கிளிநொச்சியை அண்டிய பகுதியில் மக்களால் வாழ முடியவில்லை. தொடர் எறிகணைத் தாக்குதலும், படையினரின் ஊடுறுவல்களும் மக்களை அங்கிருந்து இடம்பெயரச் செய்திருந்ததன, இந்த இடைப்பட்ட காலப்பரப்பில் காணி உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தும் இருந்தார்கள். மேலும், பல குடும்பங்கள் கிளிநொச்சியில் இருந்த தமது காணிகளை விட்டுவிட்டு தம் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவிட்டார்கள்.
இதனால், கைவிடப்பட்டிருந்த காணிகளில் புலிகள் தமது இடங்களை அமைத்துக் கொண்டார்கள். வடக்கில் புலிகளின் நிர்வாகம் கிளிநொச்சியை மையப்படுத்தி ஏற்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறான காணிகளில் அவர்களின் நிரந்தரக் கட்டடங்களை அமைத்துக் கொண்டார்கள். சமாதான காலப் பகுதியில் தம் கைவசம் இருந்த காணிகள் சிலவற்றை உரிமையாளர்களிடம் வழங்கியும் இருந்தார்கள். யாரும் உரிமைகோராமல் தரிசு நிலங்களாகக் கிடந்தவற்றையும், காடுகளுக்குள்ளும் புலிகள் தமக்கான காணிகளை உருவாக்கிக் கொண்டார்கள்.
இப்படியாக புலிகள் வசமான காணிகள் அவர்களுக்குச் சொந்தமாக எழுதிக் கொடுக்கப்பட்டவைகள் அல்ல. புலிகளின் பயன்பாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டவைகள் மாத்திரமே. இவ்வாறாக இருந்த காணிகள் சிலவற்றில் பிரபாகரன் தங்கியிருந்திருக்கக் கூடும். மூத்த தளபதிகள் வாழ்ந்திருக்கக்கூடும். மாவீரர்களுக்கான அஞ்சலியையும் அங்கேயே செய்திருப்பர். இந்தச் சம்பவங்களை வைத்துக்கொண்டு அவை அனைத்தும் புலிகளின் காணியென்றோ, பிரபாகரனின் பாதம் பட்ட நிலமென்றோ குறிப்பிடுவது சரியல்ல. அப்படியாயின் வன்னியில் பெரும்பாலான காடுகளிலும், முக்கிய இடங்களிலும்தான் பிரபாகரன் வாழ்ந்தார். முள்ளிவாய்க்காலிலும்தான் அவரின் பாதம்பட்டது. அவ்வாறு அவரின் பாதம் பட்ட இடம் முழுவதையும், அஞ்சலி செய்த பாடசாலைகள் அனைத்தையும் இராணுவம் அபகரித்துக் கொள்ள முடியுமா?
இறுதிப் போரில் சிக்குண்டு வந்தவர்களிடம் எந்த அரச ஆவணங்களும் மக்களிடம் இருக்கவில்லை என்பது இராணுவத்தினருக்கு நன்றாகவே தெரியும். போர் எப்படி ஆவணங்களை எரித்தது என்று எறிகணை வீசிய இராணுவத்தினருக்கு தெரியாதா என்ன? ஆள் அடையாள அட்டையையே தொலைத்தவர்களிடம் காணி உறுதிப் பத்திரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். அத்துடன், புலிகள் இருந்த காணிகளை உடனடியாக உரிமை கோரி பெற்றுக் கொள்வதற்கான ஜனநாயகக் சூழல் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா? எதுவுமின்றியே தமது காணிகளுக்காக அந்த மக்கள் காத்திருந்தார்கள். வேறு வழியின்றியே போராடிப் பெறுதல் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கின்றார்கள்.
மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என்றும், இதற்கு கிளிநொச்சி மக்கள் ஆதரவு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் இராணுவ பேச்சாளர் முன்வைத்திருந்தார். உண்மையில் கிளிநொச்சியில் பூர்வீகமாக இருக்கின்றவர்களில் ஒரு தொகுதியினர் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றவர்கள்தான். அத்துடன், கிளிநொச்சி என்பது யாழ்ப்பாணத்திலிருந்து பிரிந்த ஒரு மாவட்டம். ஆகவே, காணி உரிமையாளர்கள் இடம்பெயர்ந்து வேறு மாவட்டத்தில் வாழ்ந்தாலும், தம் சொந்தக் காணிக்காகப் போராடுதல் தவறாகுமா? வீட்டுக்கு வெளியே வந்து நாலு வார்த்தைப் பேசினாலே பயங்கரவாதி என்ற முத்திரையும், தடுப்புத் தண்டனையும் உடனடியாகவே கொடுக்கப்படும் சூழலில் மக்கள் சுதந்திரமாக முன்வந்து போராட முடியுமா?
இதில் இன்னொரு விடயமும் கவனிக்கப்படவேண்டியது. நிலம் சிவில் நிர்வாகத்தோடு தொடர்புடையது. ஆவணங்கள், பதிவுகள், உரிமங்கள் என அனைத்தும் சிவில் சார்ந்த அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள்ளேயே இடம்பெறும். ஆனால், வடக்கு நிலங்களின் நிலைமை இதற்கு மாற்று. இராணுவத்தின் தலையீடுதான் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அதிகம் எழுகின்றது. மக்களது போராட்டங்கள் நிலப்பிரபுக்களை நோக்கியதாக அமையவில்லை. இராணுவம் பிடித்து வைத்திருக்கும் நிலத்தைக் கோரியே போராடுகின்றனர். எனவே, சிவில் சமூக கட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் இராணுவத் தலையீடுகள் நீக்கப்பட வேண்டும். இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு மட்டுமேயான இந்த இராணுவ ஆதிக்கம் ஆக்கிரமிப்பு மனநிலையையே தோற்றுவிக்கின்றது. இராணுவ நிகழ்வுகளில் மக்கள் கலந்துகொள்வதையும், வெசாக் பல்புகளை புதினம் பார்க்க வருபவர்களையும் வைத்து மக்கள் இராணுவத்துக்கு முழு ஆதரவு என்று மதிப்பிட முடியாது. கட்டாயத்தின் பேரிலும், புதினம் பார்க்கும் நோக்கிலும் இராணுவ நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நிலையே இப்போது உருவாகியிருக்கிறது என்பதை சிவிலாக மாறி ஆழ்ந்து அவதானித்தால் தெரியவரும்.
எனவே, நில மீட்பு தொடர்பில் மக்கள் நடத்திய போராட்டம் குறித்து இராணுவத்தரப்பினர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. உண்மையை அறிந்து படையினர் சுவீகரித்த காணிகளைப் பொதுமக்களிடம் மீளளிக்க வேண்டும். அதைவிடுத்து, சொந்த நிலத்துக்காகவே போராடுபவர்களை பயங்கரவாதிகளாக்குவது மேலும் மேலும் இன முரண்பாட்டை கெடுக்கும் செயலாகவே அமையும். தமிழீழம் கேட்டுப் போராடத் தொடங்கிய மக்கள், வடக்கிற்குள் குறுகி, இப்போது தனித் தனியாக தத்தம் காணிகளைப் பெற்றுக் கொள்ளவே போராடத் தொடங்கியிருக்கின்றனர். இதைகூட மறுப்பதும், ஒடுக்குவதும் மிலேச்சத்தனமான ஜனநாயக மீறலின் அடையாளமாகவே அமையும்.
ஜெரா