இலங்கையின் துணிச்சல்மிக்க பொலிஸ் துறையினால் அதன் சொந்த சமூக ஊடக கணக்குகளைக் கூட பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. ஆனால், அவர்கள் இன்று போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பாக அறிக்கையிடுவதற்கு வசதி செய்து கொடுக்கும் பொருட்டு ‘eTraffic’ என்ற பெயரில் ஒரு புதிய செயலியை ஆரம்பித்திருக்கிறார்கள். மேலோட்டமாக பார்க்கும் பொழுது இதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. அலுவலக சேவைகளை டிஜிட்டல்மயமாக்கும் ஜனாதிபதியின் விருப்பத்துடன் இணைந்து செல்லும் ஒரு செயலாகவும் இது இருக்கிறது.
பொலிஸார் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் அதன் சின்னம் வெளியிடப்பட்டிருக்கின்றபோதிலும், இந்தச் செயலி இதுவரையில் Google Play Store இல் சேர்க்கப்படவில்லை. இதனை எழுதும் சந்தர்ப்பத்தில் நீங்கள் அதனை https://srilanka-etraffic-app.vercel.app இணையதளத்திலிருந்து ஒரு APK யாக தரவிறக்கம் செய்ய முடியும்.
‘eTraffic’ செயலியின் உள்ளடக்கம் என்ன?
APK இன் செயல்பாட்டை புரிந்துகொள்ள https://sisik.eu/apk-tool ஒரு சிறந்த வழியாகும்.
சரியான விதத்தில் முகாமைத்துவம் செய்யப்படாவிட்டால் (இலங்கை பொலிஸாரால் அவ்வாறு செய்ய முடியும் என்பதற்கு சிறிய அளவு சாட்சியங்களே உள்ளன அல்லது அறவே அதற்கு சாட்சியங்கள் இல்லை) அல்லது இந்தச் செயலி மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தனிப்பட்ட தரவுகள், பயனாளரால் உருவாக்கப்பட்ட மற்றும் பயனாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் என்பவற்றுக்கு மேலதிகமாக, அது அந்தரங்கத் தன்மை தொடர்பான கணிசமான அளவு சிக்கல்களை ஏற்படுத்த முடியும். குறிப்பாக, பொலிஸாரினால் பொலிஸாரின் உபயோகத்திற்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் இத்தகைய ஒரு செயலியினூடாக உரிமை மீறல்களும் இடம்பெற முடியும். குறிப்பிட்ட ஒரு ஒழுங்குவரிசையில் இல்லாமல் ஒரு சில முக்கியமான பிரச்சினைகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.
தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சாதனம் (Device) சார்ந்த தகவல்கள் என்பவற்றை சேகரிப்பதனை அல்லது செயற்படுத்துவதனை இயலச் செய்யும் பொருட்டு இந்தச் செயலி பல்வேறு அனுமதிகளுக்கான வேண்டுகோள்களை முன்வைக்கின்றது. இந்த அனுமதிகள் வழங்கப்பட்டால், அது eTraffic செயலி பயனாளர்களின் அல்லது உத்தியோகத்தர்கள் செல்லவிருக்கும் மற்றும் சென்ற அமைவிடங்களைக் கண்டறிந்து கொள்வதற்கு இடமளிக்கின்றது. நான் இதுவரையில் அந்தச் செயலியை பதிவிறக்கம் (என்னால் அவ்வாறு செய்ய முடியாதிருக்கிறது. ஏனென்றால், இச் செயலி Android இற்காக மட்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது. நான் iOS பயன்படுத்துகிறேன்). அதன் காரணமாக, இதனை நிறுவும் சந்தர்ப்பத்திலும், பயன்படுத்தும் சந்தர்ப்பத்திலும் நாம் இருக்கும் அமைவிட அனுமதிகள் திட்டவட்டமாக வழங்கப்படுகின்றனவா என்ற விடயம் தெளிவாகத் தெரியவில்லை. (வாகன நகர்வுகளை) தொடர்ச்சியாக கண்டறியும் அல்லது அவற்றில் பின்னணி அமைவிடங்களை கண்டறியும் செயல்பாடு போதியளவிலான பாதுகாப்புக்கள் இல்லாத விதத்தில் மேற்கொள்ளப்பட்டால் அது நபர்களின் நடமாட்டம் தொடர்பான அமைவிட வரலாறுகளை (Location histories) அல்லது நடமாட்டங்களின் உணர்வுபூர்வமான வரலாற்றுப் போக்குகளை (Sensitive historical patterns) எடுத்துக் காட்ட முடியும். அது ஒரு நபர் குறித்த தகவல் தொகுப்பை உருவாக்கிக் கொள்வதற்கோ, அநாவசியமான கண்காணிப்பை மேற்கொள்வதற்கோ அல்லது அமைவிட தகவல்களை துஷ்பிரயோகம் செய்வதற்கோ வழிகோல முடியும்.
இந்தச் செயலி அடிப்படை இயல்பு காரணமாக, கமராக்களின் பாவனை அவசியமாக இருக்கும் நிலையில், குறிப்பாக பயனாளருக்கு தெரியாத விதத்தில் கமரா இயக்கப்பட்டால், மறைமுகமாக புகைப்படங்கள் அல்லது காணொளிகள் பதிவுசெய்யப்படக் கூடிய சாத்தியப்பாட்டை அது கொண்டிருக்கிறது. சமர்ப்பிக்கப்படும் எவையேனும் புகைப்படங்கள் அல்லது காணொளிப் பதிவுகள் அருகில் நின்றிருப்பவர்களின் முகங்கள், தனியார் சொத்து அல்லது (பாதிக்கப்பட்டவர்கள் ஆடையில்லாத நிலையில் இருந்து வரும் பொழுது கணிசமான அளவிலான உடல் ரீதியான அதிர்ச்சியை ஏற்படுத்தும்) உணர்வுகளைத் தூண்டக் கூடிய பின்னணிக் காட்சிகளையும் கொண்டிருக்க முடியும். எனவே, இது அத்தகைய படங்களை, காணொளிகளை களஞ்சியப்படுத்துதல் மற்றும் பகிர்ந்து கொள்ளல் தொடர்பாக மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையை எடுத்து வருகின்றது. இந்தக் கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் எவை என்பது குறித்தும் தெளிவாகத் தெரிந்துக் கொள்ள முடியவில்லை.
Android தொலைபேசியின் ஸ்டோரேஜ் பகுதியை அணுகுவதற்கான வாய்ப்பு அந்தரங்கத் தன்மை தொடர்பான மேலும் பிரச்சினைகளை உருவாக்குகிறது. External storage அணுக முடிவதன் ஊடாக (SD அட்டை அல்லது தொலைபேசியின் Inbuilt memory போன்ற) இந்த eTraffic செயலி (மிகவும் கண்டிப்பான தரவுக் கையாளல் நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலே ஒழிய) ஏனைய தனிப்பட்ட கோப்புக்களை அல்லது ஆவணங்களை பார்வையிடவும், பதிவு செய்யவும் முடியும். இந்தச் செயலி External storageஇல் பதிவு செய்வதன் மூலம் ஒன்றில் கடவுச்சொல் மூலம் பாதுக்காக்கப்படாத உணர்வுர்வமான பதிவுகள் அல்லது தனிப்பட்ட தரவுகள் என்பவற்றை வழங்க முடியும்.
படங்கள், எழுத்துப் பிரதிகள் மற்றும் அமைவிடத் தகவல்கள் என்பவற்றை பதிவு செய்து, களஞ்சியப்படுத்தி வைப்பதே eTraffic செயலியின் நோக்கமாகும். சம்பந்தப்பட்ட APK தரவிறக்க மென்பொருள் இந்தத் தரவுகள் கையாளப்படும் விதம், தக்கவைத்துக் கொள்ளப்படும் விதம் குறித்தோ அல்லது அவை நீக்கப்படும் விதம் குறித்தோ தகவல்களை வழங்கவில்லை. மேலும், பொலிஸ் துறை ஒட்டுமொத்தமாக நீண்டகாலப் பிரிவின் போது இந்தத் தரவுகளை எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்ற விடயமும் தெரியவில்லை. உதாரணமாக, தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, எதிர்வுக்கூறல் மாதிரிகளை உருவாக்கும் இயந்திரத்திற்குள் (Custom Machine – learning) இந்தத் தகவல்கள் அனுப்பிவைக்கப்பட முடியும். மேலும், தொடக்கத்தில் முற்றிலும் வேறுபட்ட நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் என்பவற்றுக்கென சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இத்தகவல்களை AI platforms மீண்டும் பயன்படுத்த முடியும். பின்வருவனவற்றுக்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன:
- இந்தச் சாதனத்தில் போதியளவிலான கடவுச் சொல் வசதிகள் அல்லது பாதுகாப்பான Storage வதிகள் இல்லாதிருத்தல்.
- பொருத்தமான தரவுக் குறைப்புக் கொள்கை (Data minimisation policies) இல்லாமல் நீண்ட காலத்துக்கு தரவுகளை வைத்திருத்தல்.
- வலுவான கடவுச் சொல் பாதுகாப்பு இல்லாத விதத்தில் இணையத்துக்கு ஊடாக தரவுகளை அனுப்பி வைத்தல்.
இவ்விதம் உருவாக்கப்பட்டு, சேகரிக்கப்படும் தரவுகள் மிகச் சிறந்த நடைமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாக்கப்படாவிட்டால் இந்த ஒவ்வொரு காரணியும் கணிசமான அளவிலான அந்தரங்கத்தன்மை தொடர்பான ஆபத்தினை ஏற்படுத்த முடியும். At-rest and in-transit encryption, வலுவான பயனர் அங்கீகாரம், கடுமையான அணுகல் கட்டுப்பாடுகள் மற்றும் தெளிவான தக்கவைப்பு மற்றும் நீக்குதல் அட்டவணைகள் போன்றவையே இது தொடர்பான மிகச் சிறந்த நடைமுறைகளாகும். ஆனால், இந்த இணையதளத்தில் இவை எதுவும் தெளிவாக கூறப்படவில்லை. அது பின்வரும் விடயத்தை குறிப்பிடுகிறது:
நாங்கள் இவ்விதம் சேகரிக்கும் தகவல்களை நீங்கள் கேட்டுக் கொள்ளும் சேவையை உங்களுக்கு வழங்குவதற்கு தேவையான காலம் வரையில் மட்டுமே தக்க வைத்துக் கொள்வோம். நாங்கள் களஞ்சியப்படுத்தி வைக்கும் தரவுகளை இழப்பு மற்றும் களவு என்பவற்றிலிருந்து தடுத்துக் கொள்ளும் பொருட்டு வர்த்தக ரீதியில் ஏற்றுக்கொள்ளத் தக்க வழிமுறைகளை ஊடாக நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். உரிய அதிகாரத்தைக் கொண்டிராதவர்கள் இவற்றை அணுகுதல், வெளிப்படுத்துதல், பிரதி செய்தல், பயன்படுத்தல் அல்லது மாற்றியமைத்தல் போன்றவற்றுக்கெதிரான பாதுகாப்பும் இதில் அடங்கும்.
சுருக்கமாக, இலங்கையில் தற்பொழுது இருக்கும் கண்காணிப்பு மற்றும் உரிமைகளுக்கு மதிப்பளிக்காத இலங்கை பொலிஸாரின் போக்கு காணப்படுகின்ற சூழ்நிலையில், Android தொகுப்பை மையமாகக் கொண்ட தனியுரிமை சிக்கல்கள் தனியாக ஆய்வு செய்யப்பட்டன – கூருணர்வான தரவுகளை (இடம், படங்கள், தனிப்பட்ட கோப்புகள்) சேகரிப்பதற்காக, சாதனத்தின் external storageஇல் தரவைச் சேமிக்க (potentially unencrypted) மற்றும் Encryptionஇற்கான வெளிப்படையான ஆதரவு இல்லாமல் வெளிப்புற சேவைகள் வழியாக அதை அனுப்பிவைக்கக் கூடிய ஆற்றல் என்பன முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவையாகும்.
தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்புச் சட்டத்துடன் (PPDA) சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்சினைகள்
தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்புச் சட்டம் (Personal Data Protection Act) 2025 மார்ச் 18 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஒரு சில வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகள் (தேசிய பாதுகாப்பு நலன்கள் போன்ற) தவிர, தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்புச் சட்டத்தில் ஒட்டுமொத்த கவனம், தரவுடன் சம்பந்தப்பட்ட நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், தனிப்பட்ட தரவுகள் சட்ட ரீதியான, விகிதாசார அளவிலான மற்றும் தேவையான அளவில் முறைப்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்துவதாகும் (இச் சட்டம் காகிதத்தில் மிக வலுவானதாக, மிகச் சிறந்த ஒரு சட்டமாக இருக்கிறது).
என்னைப் பொறுத்தவரையில், இலங்கை பொலிஸின் eTraffic செயலி, தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்புச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்ட பின்னர் அதன் ஏற்பாடுகளுடன் பொருந்திச் செல்லாததாக இருக்கும் என்பதாகும்.
தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்புச் சட்டத்தின் திட்டவட்டமான நோக்கம் தனிநபரின் அந்தரங்கத்தைப் பாதுகாத்து, தரவு முறைப்படுத்தல் தொடர்பாக சட்டரீதியான, வெளிப்படையான மற்றும் குறைந்தபட்ச தர நியமங்களை உருவாக்குவதாகும். தனிப்பட்ட தரவுகளை – குறிப்பாக உணர்த்திறன்களைக் கொண்ட அமைவிட தரவுகளை – தொடர்ச்சியாக, பாரியளவில் அணுகுவது, இச்சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் விடயங்களுடன் வலுவான விதத்தில் இணைந்து செல்லாவிட்டால், ஓர் உரிமை மீறலாக இருக்க முடியும். இலங்கைக்கு வெளியில் கிளவுட் சேவைகளில் மேலதிக தரவுகளை வைத்திருக்கக் கூடிய நிலை, இணங்கியொழுகாத நிலைமை தோன்றக் கூடிய சந்தர்ப்பங்களை மேலும் எடுத்துக் காட்டுகின்றது.
இந்தச் செயலி தொடர்ச்சியாக (சென்ற அமைவிடங்களையும் உள்ளடக்கிய விதத்தில்) அமைவிடங்களை பதிவு செய்தால் அத்தகைய இடைவிடாத பதிவு செய்தல் செயல்பாடு (குறிப்பாக நீண்ட காலமாக இடம்பெறும் பொழுது) ‘பொலிஸ் பாவனைக்கென” கண்டிப்பாக அவசியமானதென கருதப்பட்ட விடயபரப்பை மீறிச் செல்லும் அபாயம் காணப்படுகிறது.
தனிப்பட்ட தரவுகளைச் சேகரிப்பது சட்ட ரீதியில் அனுமதிக்கக் கூடியதாக இருந்து வந்தாலும் கூட (உதாரணமாக, விசாரணைகளுக்கு) அத்தகைய தரவு சேகரிப்பு குறிப்பிடப்பட்ட பொலிஸ் நோக்கங்களுக்கு விகிதாசாரமாக இருத்தல் அவசியம், இதனை பொலிஸ் துறை எவ்வாறு உறுதிசெய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தச் செயலி ஒரு தெளிவான திட்டவட்டமான விதத்தில் வரையறை செய்யப்பட்ட ஒரு நோக்கம் இல்லாத விதத்தில் தொடர்ச்சியாக தரவுகளை சேகரித்தால் – ஒரு முனைப்பான சம்பவத்திற்கு எதிர்வினையாற்றும் பொழுது அமைவிடத் தரவுகளை சேகரிப்பது மட்டும் – அது தனிப்பட்ட தரவுகள் சேகரிப்பு சட்டத்தின் நோக்கத்தை வரையறை செய்தல் கோட்பாட்டை மீற முடியும்.
தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம், செயலாக்கப்படும் தனிப்பட்ட தரவு “போதுமானதாகவும், பொருத்தமானதாகவும், விகிதாசாரமாகவும்” இருப்பதையும், அவை சேகரிக்கப்படும் அல்லது செயலாக்கப்படும் நோக்கத்துடன் இணக்கமாக இருப்பதையும் உறுதிசெய்ய தரவு குறைப்பை (Data minimization) வலியுறுத்துகிறது. அதேபோல, தனிப்பட்ட தரவுகள் வெளிப்படையான நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான அளவில் மட்டும் வைத்திருக்கப்பட வேண்டுமென சட்டம் விதித்துரைக்கின்றது. அரச கண்காணிப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக, நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உட்பட குடிமக்கள் பற்றிய தரவுகளை பொலிஸ்துறை பல தசாப்தங்களாக தண்டனை விலக்குரிமையுடன் பெற்று வருகிறது. இந்த பரவலான மற்றும் ஆழமாக வேரூன்றிய கலாச்சாரத்திலிருந்து ஒரு புரட்சிகரமான மாற்றமே தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம்.
இந்தச் செயலியின் பின்னணி அமைவிட அனுமதி (Background location permission) நிரந்தரமாக முனைப்பாக செயல்பட்டு வந்தால் – உண்மையான செயல்பாட்டு தேவைகளுக்கு வெளியிலும் கூட – உணர்திறன் கொண்ட அமைவிடத் தரவுகளை சேகரிப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.
வலுவான மற்றும் வெளிப்படையான தக்கவைத்தல் கொள்கைகள் இல்லாத நிலையில் அத்தகைய அமைவிடத் தரவுகளை சேகரித்து வைத்திருப்பது (Storing such location data without robust and explicit retention policies), தரவுகளை வைத்திருக்கும் காலப் பிரிவை வரையறை செய்வது தொடர்பான தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்புச் சட்டத்தின் தேவைகளை மீற முடியும். சாத்தியமான, தொடர்ச்சியான இருப்பிட கண்காணிப்பு பற்றிய செயலில் உள்ள தகவல் தொடர்புகளில் தெளிவு இல்லாததால் பிரிவு 11 மற்றும் அட்டவணை V இல் உள்ள உள்ள கடப்பாடுகளையும் அது மீற முடியும். பொது மக்களுக்கு அல்லது பயனாளிகளுக்கு இது குறித்து போதியளவில் தகவல் தெரிவிக்கப்படாதிருந்தால் மற்றும் ஒரு சட்ட ரீதியான அடிப்படை இருந்தால் (உடன்பாடு, சட்ட ரீதியான கடப்பாடு முதலியவை) தொடர்ச்சியாக அமைவிடத்தை கண்டறிவது வெளிப்படைத் தன்மை தேவையை மீற முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், பொலிஸ் eTraffic செயலி இயல்பிலேயே தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படை ஏற்பாடுகளை மீறக்கூடியதாக இருக்கிறது.
இந்த eTraffic செயலி (உதாரணமாக தொடர்ச்சியான அமைவிடத்தை தரவுகள், அறிக்கையிடப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட நடத்தைகள் போன்றவற்றின் அடிப்படையில் தனி நபர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய ஆபத்து அல்லது அச்சுறுத்தல் மட்டம் குறித்து) எவையேனும், தானியங்கி அவதானிப்புகள் அல்லது தகவல் விவரக்குறிப்பைப் பெறப் பயன்படுத்தப்பட்டால், தரவுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் அத்தகைய தீர்மானங்களுக்கு சவால் விடுவதற்கு அல்லது மீளாய்வு செய்விப்பதற்கு அனுமதி வழங்கப்படாதிருந்தால், அது இச்சட்டத்தின் பிரிவு 18 ஐ மீறுவதாக அமையும். மேலும், பிழையான அமைவிட தரவுகளை விலக்கிக் கொள்வதற்கு அல்லது திருத்துவதற்கு முடியாதிருந்தால் இந்தச் செயலி, சட்டம் எதிர்பார்க்கும் தரவுடன் சம்மந்தப்பட்ட நபர்களின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறும்.
இத்தகைய கடப்பாடுகளுக்கு இணங்கியொழுகத் தவறும் நிலை தரவுப் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தின் பிரிவுகள் 35 மற்றும் 38 என்பவற்றின் கீழ் தரவுக் கட்டுப்பாட்டாளர் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கும், பணிப்புரைகளை வழங்குவதற்கும் அல்லது தண்டனைகளை விதிப்பதற்கும் வழிகோல முடியும் – இந்த விடயத்தில் இலங்கை பொலிஸ் துறையே தரவுக் கட்டுப்பாட்டாளராக இருக்கின்றது. வரலாற்றில் இதற்கு முன் ஒருபோதும் நிகழ்ந்திராத இந்த விடயம் இடம்பெற்றால் அது ஒரு பாரிய வேடிக்கையாக இருந்து வர முடியும்.
முடிவுரை
தமது அந்தரங்கத்தன்மையை பாதுகாத்துக் கொள்ளும் விடயத்தில் முதலீடு செய்திருக்கும் மற்றும் அதில் அக்கறை கொண்டிருக்கும் எவரேனும் புலனாய்வு ஊடகவியலாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அல்லது வேறு எவரேனும் நபர்களுக்கு நான் வழங்கும் ஆலோசனை eTraffic செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டாம் என்பதாகும்.
இந்தச் செயலி வெளியிடப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது அனைத்தையும் தெளிவாகக் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. Google’s Play Store இன் ஒப்புதலுக்கு முன்னரே APK ஐ பெற்றுக்கொள்ள கூடிய நிலை காணப்படுவது, தர நியமம் சார் நடைமுறையைப் பின்பற்றாத விதத்தில் எப்படியாவதும் அதனை பொது மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையே எடுத்துக்காட்டுகின்றது. இது தனிப்பட்ட தொடர்புச் சாதனங்களின் நம்பகத்தன்மையின் மீது பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நடத்தைகளை தூண்ட முடியும்.
இது தொடர்பாக பொலிஸ் துறை தரவுப் பாதுகாப்பு அதிகார சபையுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளதா அல்லது இன்னும் ஒரு சில மாதங்களில் அமுலுக்கு வரவிருக்கும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளை ஓரளவுக்காவது அறிந்துள்ளதா என்பது குறித்த எத்தகைய சான்றுகளையும் காண முடியவில்லை. இது ஒரு பாரிய சிவப்புக் கொடியை காட்டுகிறது.
இலங்கை பொலிஸ் துறை தனது சொந்த சமூக ஊடக கணக்குகளைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான அடிப்படை இணையப் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ளும் விடயத்தில் முழுமையாக தோல்வியடைந்திருந்தமையை அண்மையில் காணக்கூடியதாக இருந்தது. எனவே, இந்த நிலையில் பொது மக்கள் கேட்க வேண்டிய கேள்வி அவர்களை நம்பி உணர்திறன் கொண்ட தனிப்பட்ட தகவல்களை வழங்க முடியுமா என்பதாகும். குறிப்பாக, இந்தச் செயலி தொடர்ச்சியாக அமைவிடங்களைப் பதிவு செய்து வரும் நிலையில் இக்கேள்வி எழுகிறது. இந்தத் தகவல்களும், பயனாளர்களால் சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஓடியோக்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும், குறிப்பாக காலப்போக்கில் அவை எந்தெந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்ற விடயத்தை தெரியாத நிலையில் பொலி ஸாரை மறைமுகமாக நம்பி தரவுகளை வழங்குவது அல்லது தனி நபர்களின் நடமாட்டங்களை கண்டறியக்கூடிய திறன்களை கொண்டிருக்கும் ஒரு செயலி ஊடாக தகவல் தரவுகளை வழங்குவது முட்டாள்தனமான காரியமாகும்.
தரவு சேகரிப்பாளரின் (அதாவது பொலிஸ் துறையின்) இயல்பு மற்றும் பெற்றுக் கொள்ளப்படும் தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இந்த இணையதளத்தின் அந்தரங்கத்தன்மை பலவீனமாக உள்ளது.
இந்தச் செயலியை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் அதிக காலத்தையும், வளங்களையும் மற்றும் அநேகமாக பணத்தையும் செலவு செய்திருக்கும் நல்லெண்ணத்துடன் கூடிய செயற்பாட்டாளர்களை என்னால் பாராட்ட முடியும். எவ்வாறிருப்பினும், இந்தச் செயலியை அபிவிருத்தி செய்தவர்கள் தொடர்பாக எத்தகைய காழ்ப்புணர்ச்சியும் இல்லாத விதத்தில், இன்றுள்ள நிலையில் அதன் இயல்பு காரணமாக அதனை பரிந்துரை செய்ய முடியவில்லை. குறிப்பாக, பொலிஸாரினால் வன்முறையுடன் கூடிய விதத்தில் இலக்கு வைக்கப்பட்டிருந்த தனி நபர்கள், அடையாளங்கள் மற்றும் சமூகங்கள் ஆகிய தரப்புகளுக்கு இதனை பரிந்துரை செய்ய முடியாது. பொலிஸ் சேவை மற்றும் அதன் ஆளணி என்பவற்றைப் பொறுத்தவரையில் இச்சமூகப் பிரிவினருக்கு மத்தியில் ஓர் அவநம்பிக்கை நிலவி வருகிறது. அடுத்த மார்ச் மாதத்தில் இந்தச் செயலி தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் முதன்மையான ஏற்பாடுகளையும் மீற உள்ளது என்ற விடயத்தை பார்க்க முடிகிறது – மேலே குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்படாவிட்டால், இந்தச் செயலி சட்டத்தை மீறும் ஒரு செயலியாக இருந்து வர முடியும்.
பொலிஸ் துறையாக இருந்து வந்தாலும் கூட செயன்முறை, திட்டமிடல் மற்றும் இணுங்கியொழுகுதல் என்பன முக்கியமாகும்.
கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ
Sri Lanka Police’s eTraffic app raises significant data protection, and compliance concerns என்ற கட்டுரையின் தமிழாக்கமே இது.
ஆசிரியர் குறிப்பு: தொழில்நுட்ப சொற்கள் மற்றும் ஏனைய தெளிவில்லாத பகுதிகள் இருப்பின் ஆங்கிலத்தில் உள்ள மூல கட்டுரைக்குப் பிரவேசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.