Photo, TAMILGUARDIAN

‘தமிழ்த் தேசியக் கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே மக்களிடத்தில் பேராதரவு உண்டு. அதனால்தான் அது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டு வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழரசுக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கிருப்பதால்தான், அதனோடு இணைந்து கொள்வதற்கு ஏனைய கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன’ என்ற கருத்து  அல்லது அவ்வாறான அபிப்பிராயம் சிலரிடத்திலே காணப்படுகிறது. அல்லது அவ்வாறான ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்வதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள். இந்தப் பெருமிதம் தமிழரசுக் கட்சிக்கும் உண்டு. அந்தப் பெருமிதத்திலேயே அது குளிர்காய்கிறது. இதை வளர்த்துத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது.

இப்படிச் சொல்லப்படுவதைப்போல அல்லது இவ்வாறு கருதுவதைப் போல தமிழரசுக் கட்சிக்கு மக்களிடத்திலே உண்மையாகவே செல்வாக்குண்டா?

இல்லை. நிச்சயமாக இல்லை. அப்படிச் செல்வாக்கைப் பெறுவதற்கு அது தன்னுடைய அரசியல் வரலாற்றில் எந்தப் பெறுமானங்களையும் உருவாக்கவில்லை. அதிலும் 1970 க்குப் பிறகு, தமிழரசுக் கட்சிக்கு அரசியலே இருக்கவில்லை. அது தன்னுடைய நிறைவேறாத கனவுடன் 1970 களில் மரித்தது. ஆனால், அது போட்ட விதையை – தமிழரசுக் கனவை – தனிநாட்டுக்கான அபிலாஷையை – மக்களும் இளைய தலைமுறையினரும் தொடர்ந்தனர். அதற்காக அவர்கள் மிகப் பெரிய விலைகளைக் கொடுத்தனர். தமிழரசுக் கட்சி அதில் சிறிய அளவுக்குக் கூடப் பங்களிப்புச் செய்யவில்லை.

2004 இல் விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்காக தமிழரசுக் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகே, அது மீளுயிர்ப்படைந்தது. அதுகூட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் உணர்ச்சி வசப்பட்ட – அவசர அரசியல் முடிவுகளால்தான் வாய்த்தது. புலிகளுக்கும் ஆனந்தசங்கரிக்கும் இடையில் உருவான முரண்பாடுகளால் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இல்லையென்றால், இப்போது தமிழரசுக் கட்சி வரலாற்றில் மறைந்தே போயிருக்கும். ஏனென்றால், தன்னை மீளுயிர்ப்புச் செய்யக்கூடிய அரசியற் திறனோ, சிந்தனைப் பலமோ, அர்ப்பணிப்பு அணியோ, கட்டமைப்பு விருத்தியோ 1970 க்குப் பின், தமிழரசுக் கட்சிக்கு இருக்கவில்லை. அது தமிழர் விடுதலைக் கூட்டணியில் கரைந்து போயிருந்தது.

ஆனால், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் நிலை அப்படியல்ல. அது தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஐக்கியமாகியிருந்தாலும் கூடிய விரைவில் அதிலிருந்து விலகித் தன்னை நிலைநிறுத்த முயற்சித்தது. குமார் பொன்னம்பலம் அதனுடைய அடையாளமாக இருந்தார். அப்படித் தமிழரசுக் கட்சி எந்தச் சுவட்டையும் தனித்துக் காட்டவுமில்லை, கொண்டிருக்கவுமில்லை.

‘அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும். எதிர்பாராத மாற்றங்களும் நிகழ்ச்சிகளும் நடக்கும். அப்படி உருவாகும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதே அரசியல் வெற்றியாகும்’ என்று இதற்கு யாரும் வியாக்கியானம் செய்யக்கூடும். இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். ஆனால், அப்படிக் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு 2004 இல் தன்னை மீளுயிர்ப்புச் செய்த தமிழரசுக் கட்சியின் இரண்டாம் கட்டப் பங்களிப்பு என்னவாக இருந்தது –  இருக்கிறது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். அதிலும் இறுதிப் போர்க்காலத்தில் தமிழரசுக் கட்சியின் அடையாளத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தலைமை தாங்கிய திரு. இராஜவரோதயம் சம்பந்தன், திரு. சேனாதிராஜா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் இதற்குப் பதிலளிக்கும் வரலாற்றுப் பொறுப்புடையோர். குறைந்தபட்சம் அந்தப் போரை, போரில் நடந்த பேரழிவை வன்மையாக எதிர்ப்பதற்கான குறியீட்டளவிலான முயற்சிகளைக் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவில்லை. இந்த வரலாற்றுப் பழி அதற்கு நிரந்தரமாகவே உண்டு.

இறுதிப் போரின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்திக் கொண்டிருந்தது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சம்பந்தன் – மாவை அணிதான். அந்த வழிநடத்தலும் தலைமைத்துவமும் தவறானது, உறுதியற்றது, அரச சார்பானது என்ற எதிர்ப்பை வெளிப்படுத்தியே கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன், ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன் உள்ளிட்ட அணி வெளியேறியது.

2009 க்குப் பின்னர் முற்று முழுதாக தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கத்தின் கீழேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பங்கேற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ மற்றும் புளொட் போன்றவை தமக்கான சமநிலையைக் கோரியபோதும் அதைத் தமிழரசுக் கட்சி வழங்கவில்லை. கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஏனைய கட்சிகளின் கோரிக்கையையும் சம்பந்தனும் தமிழரசுக் கட்சியும் நிராகரித்தது. அதையெல்லாம் பிடிவாதமாகவே மறுத்தார் சம்பந்தன். சம்பந்தன் மட்டும்தான் மறுத்தார் என்றில்லை. ஒட்டுமொத்தத் தமிழரசுக் கட்சியினரும் சம்பந்தனுடைய நிலைப்பாட்டை ஆதரித்தே நின்றனர். மட்டுமல்ல, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மூலம் அரசியல் அரங்கில் நுழைந்த சிவஞானம் சிறிதரன், சி. சிவமோகன், துரைராசா ரவிகரன், ஐங்கரநேசன் போன்றோரை உறிஞ்சித் தன்வசப்படுத்தியது தமிழரசுக் கட்சி.

இது கூட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கை மட்டுமல்ல, அரசியல் நாகரீகமற்ற செயலும் கூட. அப்படியிருந்தும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காகப் பொறுத்திருந்தது. அந்த விட்டுக் கொடுப்பையும் பெருந்தன்மையையும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பலவீனமாக தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டது. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ். கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் வெளியேறிய பின், ரெலோவையும் புளொட்டையும் தன்னுடைய இரண்டு கால்களுக்கிடையிலும் வைத்துக் கொண்டது. இதற்குச் சம்மதமில்லை என்றால் கூட்டமைப்பை விட்டு வெளியேறலாம் என்று சம்பந்தன் வெளிப்படையாகவே – மிரட்டலாகவே – சொன்னார்.

இப்படித்தான் தமிழரசுக் கட்சி தன்னுடைய இரண்டாம் கட்ட வளர்ச்சியை – 2004 க்குப் பிறகான இன்றைய நிலையை – சூதான முறையில் எட்டியது. இதில் எங்கே கண்ணியமும் அறமும் உண்டு?

‘அரசியலில் அறமும் கண்ணியமும் கிடையாது. வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும் தந்திரங்களைக் கைக்கொள்வதும் வென்று முன்செல்வதும் நிலைநிறுத்துவதுமே அடிப்படை’ என்று இதற்கும் யாரும் வியாக்கியானம் சொல்லலாம்.

கட்சியை வளர்த்துக் கொள்வதற்காக தன்னோடு இணைந்து நின்ற தரப்புகளையே உறிஞ்சித் தோற்கடிக்கத் தெரிந்த தமிழரசுக் கட்சிக்கு – கட்சியினருக்கு – எதிர்த்தரப்பாக அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கான தேவைகளையோ உரிமைகளையோ பெற முடியவில்லை. குறைந்தபட்சம் அரசாங்கத்துக்கு சிறிய அளவிலேனும் நெருக்கடியை உருவாக்க முடியவில்லை. பிராந்திய சக்தியாகிய இந்தியாவைத் தமிழருக்குச் சாதகமாக்கவில்லை. சர்வதேச சமூகத்தை வென்றெடுக்க முடியவில்லை.

ஆனால், அதற்கான வாய்ப்புகளிருந்தன. 2009 க்குப் பிறகான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இடத்தை – அதற்கு மக்களும் சர்வதேச சமூகமும் வழங்கிய மதிப்பை – ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். உலகின் அத்தனை தலைவர்களோடும் சம்பந்தன் கைகுலுக்கியிருக்கிறார், படமெடுத்திருக்கிறார். ஒரு தடவை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட இருந்திருக்கிறார். ஒரு காலகட்டம் (2015 – 2020 வரை) அரசாங்கத்தோடு இணக்கமான உறவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்திருக்கிறது.

இப்படியெல்லாம் அருமையான வாய்ப்புகளிருந்தும் தமிழரசுக் கட்சியோ, சம்பந்தன் அணியோ தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த நன்மைகள் என்ன? தமிழரின் அரசியலில் உருவாக்கிய பெறுமதிகள் என்ன?

இவ்வளவுக்கும் 2009 க்குப் பிறகான ஈழத் தமிழரின் அரசியலில் தமிழரசுக் கட்சியே தலைமை தாங்கியிருக்கிறது. தாமே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று பிரகடனம் செய்திருக்கிறது. அப்படி ஏகபிரதிநிதிகளாகப் பிரகடனம் செய்தற்கு ஏற்றவாறு அது செயற்படவில்லை. அதற்கான பொறுப்புடன் இருக்கவில்லை.

ஆகவேதான் தமிழரசுக் கட்சியிடம் நாம் கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. 2009 க்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகால அரசியலில் எந்த நல்விளைவையும் உருவாக்காமல் விட்டதற்கும் நன்மை எதையும் தமிழர்கள் பெற முடியாமற் போனதற்கும், தமிழரசுக் கட்சியே பொறுப்பு. அதை அது நேர்மையாக ஏற்க வேண்டும் அல்லது அதை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

இப்பொழுது இந்தக் கட்டுரையின் தொடக்கப்பகுதிக்கே வரலாம்.

தமிழரசுக் கட்சியின் முதற்கட்டத்திலும் அது தோல்வியையைச் சந்தித்தது. இரண்டாம் கட்டத்திலும் அது தோல்வியே கண்டிருக்கிறது. ஆம், அது  தன்னுடைய அரசியல் வரலாற்றில் எந்தப் பெறுமானங்களையும் உருவாக்கவில்லை என்பது நிரூபிக்கப்படுகிறது.

அப்படி அது ஏதாவது வரலாற்றுப் பெறுமதிகளை உருவாக்கியிருந்தால், தமிழரசுக் கட்சியோ, அதனுடைய வலுவான ஆதரவாளர்களோ, அரசியலைப் பற்றிய சுயாதீன மதிப்பீட்டாளர்களோ ஆதாரங்களை முன்வைத்து வாதிடலாம், மறுத்துரைக்கலாம்.

இப்படியிருந்தும் மக்கள் அதற்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். அதையே ஆதரித்திருக்கிறார்கள். அதுவே வெற்றியடைந்திருக்கிறது என்றால், தமிழரசுக் கட்சியையும் விட ஏனைய தரப்புகள் மோசமாகியுள்ளன என்றே அர்த்தமாகும். என்றபடியால்தான் அர்ச்சுனா இராமநாதன் போன்ற தன்னிலைகள் எழுச்சியடைந்ததும் வெற்றிபெற்றதும். மறுபக்கத்தில் தேசிய மக்கள் சக்தி வெற்றியடைந்ததுமாகும்.

இறுதியாக ஒன்றைச் சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கலாம். தமிழரசுக் கட்சியின் அரசியல் வெற்றி தற்காலிகமானதே. பதிலாக இன்னொரு சக்தி எழுந்தே தீரும்.

வரலாறு ஒருபோதும் நேர்கோட்டில் செல்வதில்லை.

கருணாகரன்