ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருப்பது 3 நாட்கள் மட்டுமே. சகல வேட்பாளர்களுக்கிடையில் மூவர் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அது அநுர, ரணில் மற்றும் சஜித் ஆகிய மூவருமாகும். நடக்கவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் தானே வெற்றி பெறுவேன் என மூவரும் தெரிவிக்கின்றனர். அது எந்தவொரு தேர்தலிலும் காணக்கூடிய பண்பாகும். அதற்கான முயற்சிகளின் பெறுபேறுகள் தீர்மானிக்கப்படுவது மக்களது விருப்பத்தின் மீதாகும். அந்த விருப்பானது இரண்டு வழிகளில் மேற்கொள்ளப்படலாம். உண்மையான தமது மற்றும் சமூக வாழ்க்கை தொடர்பிலான பிரஜைகளின் பார்வை/ அரசியல் கருத்தினைக் கொண்டு தமது வாக்கினைப் பயன்படுத்துவது. இரண்டாவது, விசேடமாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தொடர்பாடல் நடவடிக்கைகளூடாக வாக்காளரின் விருப்பத்தினை செயற்கையாக மாற்றியமைப்பதாகும். இதில் இரண்டாவது மிகவும் பயங்கரமானது. அது சமூகத்திற்கு ஒருபோதும் நன்மைபயக்கும் எதனையும் பெற்றுத் தராது. எவ்வாறெனினும் மேற்படியிலான இரண்டு முறைகளும் இலங்கையின் அரசியல் களத்தில் தற்பொழுது செயற்படுத்தப்படுவது வேட்பாளர்களின் ஒப்பீட்டு ரீதியான நிதி உள்ளிட்ட ஏனைய அதிகார கட்டமைப்புக்களின் அடிப்படையிலாகும்.
எனினும், இந்தக் கட்டுரை எழுதப்படுவது தேர்தல் பெறுபேறுகள் தொடர்பான கணிப்பையோ அல்லது எதிர்வுகூலையோ முன்வைப்பதற்காகவல்ல. மாறாக யார் வெற்றிபெற்றாலும் மக்கள் முகம்கொடுக்க வேண்டிய பாரதூரமான நிலைமை தொடர்பில் கவனம் செலுத்துவதற்காகவே.
அதாவது, உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியாக பாரிய விமர்சனத்திற்கும் எதிர்ப்பிற்கும் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட அடக்குமுறைச் சட்டமாகிய ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை (Online Safety Act) இரகசியமாக விரும்பி அதனைப் பாதுகாத்துப் பேணுவதற்கு ஜனாதிபதி வேட்பாளர்களாகிய அநுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அது பற்றிக் குறிப்பிட்டுள்ள கொள்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காகும். (ரணில் விக்கிரமசிங்க அது பற்றி எதுவும் குறிப்பிடாத போதும் அவரே இந்த அடக்குமுறைச் சட்டத்தின் தந்தையாவார். அது பற்றிய பார்வையும் கீழே தரப்பட்டுள்ளது.)
சஜித் பிரேமதாச மற்றும் Online Safety Act
சஜித் பிரேமதாச தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் Online Safety Act தொடர்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“2024ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான உட்பிரிவுகளை நீக்கி, இணைய சேவை வழங்குநர்கள் தங்கள் வணிகங்களைத் தடையின்றி நடத்த அனுமதிக்கும் சட்டமூலம் அறிமுகப்படுத்துவது புதிய அரசாங்கத்தின் முக்கிய பணியாகும்.” (பக்கம் 35, சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம்)
இங்கு ஐக்கிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் Online Safety Act இரத்துச் செய்யப்படமாட்டாதென மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன் அதில் “கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான உட்பிரிவுகளை நீக்கி” புதிய சட்டம் வரைவு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அநுர குமார திசாநாயக்க தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் Online Safety Act தொடர்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் வாசகங்களை அகற்றி 2024ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை திருத்துதல்” (பக்கம் 60, NPP தேர்தல் விஞ்ஞாபனம்)
இங்கு தேசிய மக்கள் சக்தி “கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் வாசகங்களை அகற்றி” சட்டத்தை திருத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
NPP மற்றும் SJB வேறுபாடு
இதனைப் புரிந்துகொள்வது மிக இலகுவானது.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான உட்பிரிவுகளை நீக்கி “சட்ட மூலமொன்றினை” சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் வாசகங்களை அகற்றி “சட்டத்தை திருத்தம்” செய்வதாக தேசிய மக்கள் சக்தி (NPP) தமது கொள்கைப் பிரகடனத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
புரிந்துகொள்வது மிக இலகுவானதே. NPP மற்றும் SJB ஆகியன “கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்” தொடர்பில் தமது கரிசனையை செலுத்தியுள்ள போதிலும் SJB சட்டமூலம் ஒன்றினை சமர்ப்பிப்பதற்கும், NPP ரணில் விக்கிரசிங்கவின் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட (தற்பொழுது திருத்தம் செய்வதற்காக மீண்டும் சமர்ப்பக்கப்பட்டுள்ள) சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவை குறிப்பிட்டிருப்பதாகும்.
இப்பொழுது ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிவது வித்தியாசமான எதையுமல்ல. அது தற்பொழுதுள்ள அரசாங்கம் ஏற்கனவே செய்துகொண்டுதான் இருக்கிறது. அதாவது உயர் நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களையும் ஆராய்ந்து பார்த்து உரிய சட்டத்தை மீள திருத்துவதாகும் (தற்போதைய அரசாங்கத்தினால் திருத்தம் செய்வதற்கு முயற்சிக்கும் சட்டம் தொடர்பிலும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் மீண்டுமொரு தடவை உயர் நீதிமன்றில் மனுவொன்றினைத் தாக்கல் செய்து, இதனுடாக அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்துள்ளது).
பிரச்சினை இருப்பது அதில் அல்ல. பிரச்சினை இருப்பது அடிப்படைச் சட்டத்துடனாகும். அதாவது, சட்டத்தின் அத்திவாரமே தண்டனையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகும். அதன் சாராம்சமே குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளது. மீண்டும் திருத்த முடியாத அளவிற்கு குறைபாடுகளைக் கொண்டுள்ளது. அது மீள வடிவமைக்க முடியாத அளவிற்கு தவறானதாக உள்ளது (அது தொடர்பாக எழுதிய கடந்த கட்டுரையில் நான் விபரமாக குறிப்பிட்டுள்ளேன்). குறித்த சட்டத்தை நிறைவேற்றிய விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சராகிய (குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த) டிரான் அலஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்தே இதற்கு போதுமானது. இணையவழியில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாப்பதற்காக இச்சட்டம் கொண்டுவரப்படுவதாக அவர் தெரிவித்தார். அத்துடன், சட்டம் நிறைவேற்றப்பட்ட வேளையில் நாடாளுமன்றத்தில் அன்றிருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் ஆற்றிய உரைகளை மீண்டும் கேளுங்கள். அவற்றின் பிரதான குறிக்கோளாக காணப்பட்ட விடயம், மாறுபட்ட கருத்துக்களை அடக்குவதற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது என்பதனைப் புரிந்து கொள்வதற்கு இதனை யாரும் மீளத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை.
எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் Online Safety Act ஐ இரத்துச் செய்வதற்கு அர்ப்பணிக்கவில்லை.
ரணில், சஜித் மற்றும் அநுர உட்பட சகல வேட்பாளர்களும் தமது ஜனநாயக மறுசீரமைப்பு தொடர்பில் தொடர்ச்சியாக பேசிவந்த போதிலும் எந்தவொரு வேட்பாளரும் இந்த அடக்குமுறை சட்டத்தை அகற்றுவதற்கான எந்ததொரு முன்வொழிவையும் சமர்ப்பிக்கவில்லையென நான் இதற்கு முன்னர் சுட்டிக்காட்டியுள்ளேன். இதனுடாக காணக்கூடிய விடயம் யாதெனில், அவர்கள் அனைவரினதும் ஜனநாயக மறுசீரமைப்பு பற்றிய மாறுபட்ட நிலைப்பாடாகும்.
அத்துடன், Online Safety Act தொடர்பிலான NPP மற்றும் SJB கொள்கை நிலைப்பாட்டினை எம்மால் வேறுபடுத்தி அடையாளம் காண முடியாது. எனினும், தேசிய மக்கள் சக்தி தமது கொள்கைப் பிரகடனத்தில் ஏனைய பிரிவுகளை மிக ஆழமாக கலந்துரையாடும் அதேவேளை, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திரம் தொடர்பான அவர்களது Online Safety Act பற்றிய கருத்தானது முற்றிலும் முரண்பட்டதாகவே உள்ளது. அதாவது OSA வின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள செயற்பாடுகளூடாக தனித்துவத்திற்கான உரிமை, அமைதியாக ஒன்றுகூடுதல், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளை அடக்குகின்றமையே அதற்கான பிரதான காரணம்.
ஒன்லைன் சட்டம் மீளப்பெறப்படுதல் வேண்டும். – நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய (தேசிய மக்கள் சக்தி)
கடந்த 2024 ஜூன் 18ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய HARITVகலந்துரையடலில் கலந்துகொண்டு Online Safety Act தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதில் அவர் தெரிவித்த கருத்துக்களுள் Online Safety Act பற்றி தெரிவித்த கருத்துக்களின் பகுதியை மேற்கோள் பகுதியாக கீழே தருகின்றோம்.
“டிஜிட்டல் உலகம் எம்மோடும் தொடர்புபட்டது, அப்படியில்லை என்று யாரும் கூற முடியாது. அதன்போது டிஜிட்டல் எழுத்தறிவு இல்லாமை உண்மையில் ஒரு பிரச்சினைதான்.”
HariTV: NPP அரசாங்கமொன்று அமைக்கப்பட்டால் Online Safety bill ஐ மீளப்பெறுவீர்களா?
கலாநிதி ஹரினி: “தற்பொழுது இருப்பதை. கண்டிப்பாக, ஆம். தற்பொழுது இருப்பது பேணிச்செல்லப்பட வேண்டியதொன்றல்ல என்றுதான் நாங்கள் நினைக்கின்றோம். ஏனெனில், இது பெண்களையோ அல்லது சிறுவர்களையோ பாதுகாப்பதற்காக்க் கொண்டுவரப்பட்ட சட்டமல்ல. அது முற்றுமுழுவதும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தினையும் அரசியல் எதிர்த்தரப்பினரைக் கட்டுப்படுத்துவதற்காகவும் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். எமது சட்டத்தரணிகள் எமது நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டுமென்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர். அதனடிப்படையில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் அகற்ற வேண்டியவை எவை? மாற்ற வேண்டியவை எவை? என்பதைப் பற்றி பிறகு என்னால் கூற முடியும். ஏனெனில், இது ஒரு சட்டம் மட்டுமல்ல. மற்றது நாம் எதிர்பார்ப்பது புதிய அரசியலமைப்பொன்றினை கொண்டுவருவதே. அப்புதிய அரசியலமைப்பில் எவ்வாறு இந்த விடயங்களை உள்ளடக்குவது என்பது பற்றிய திட்டவட்டமான கருத்தினை நாம் பிறகு தெரிவிக்க முடியும். சிலவற்றினை மீளப்பெற வேண்டும். நான் நினைக்கிறேன் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் அப்படியானதொன்று. அடுத்தது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்.”
இதன்போது அவர் நேரடியாகக் கூறுவது, Online Safety Act மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியன அகற்றப்பட வேண்டும் என்பதாகும். அது உண்மையாகவே முற்போக்கான மற்றும் சிறப்பான கருத்தாகும். எனினும், அதிலிருந்து இரண்டு மாதங்களின் பின்னர் அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் Online Safety Act பற்றி அடங்கியிருப்பது கலாநிதி ஹரினி கூறிய கருத்திற்கு முற்றிலும் எதிரான கொள்கையொன்றாகும். அதனை மீண்டும் கூறுவதாயின், கலாநிதி ஹரினி “Online Safety Act அகற்றப்பட வேண்டும்” என்று கூறுகின்ற அதேவேளை அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற NPP கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது “Online Safety Act திருத்தப்படும்” என்றவாறாகும்.
ரணில் மட்டும் நல்லவரா?
Online Safety Act தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளர் விக்கிரமசிங்கவின் நிலைப்பாட்டினை விளக்கப்படுத்துவதற்கு இனியும் இந்தக் கட்டுரையில் காலத்தை வீணடிக்க வேண்டியதில்லை. காரணம், இந்த அடக்குமுறைச் சட்டத்தை கொண்டு வந்ததே இந்த விக்கிரமசிங்க ஆவார். அவரது கொள்கைப் பிரகடனத்தில் டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகளவான விளக்கங்களை குறிப்பிட்டுள்ளார். Online Safety Act தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் குறிப்பிடவில்லை. அந்தச் சட்டத்தினை மாற்றியமைப்பதற்கோ அல்லது இரத்துச் செய்வதற்கான எண்ணம் அவருக்கு இல்லையென்பதே கட்டுரை ஆசிரியரின் நிலைப்பாடாகும். அவர் மீண்டும் ஜனாதிபதியானால் இந்த அடக்குமுறைச் சட்டத்தை தொடர்ச்சியாக பேணிச் செல்வதோடு மாற்றுக் கருத்துக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்கான சூழலை உருவாக்கிக் கொள்வதே அவரது தேவைப்பாடாக காணப்படுகின்றது. எனவே, அவர் குறிப்பிட்டுள்ள டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மற்றும் அவரால் கொண்டுவரப்பட்ட Online Safety Act இற்கிடையிலான ஆளமான முரண்பாட்டினையே பிரதிநிதித்துவம் செய்வார். அத்துடன், அந்த ஆளமான முரண்பாட்டினூடாக எழுகின்ற மறைமுகக் காரணியாவது அரசியல் ரீதியாக பிரஜைகளை ஏமாற்றுவதே தவிர வேறெதுவுமில்லை. அது மிகவும் கடுமையானதாக இருக்கும்.
இப்படி நடப்பது ஏன்?
இன்றளவில் இலங்கையில் மட்டுமல்ல, உலகளவிலும் விசேடமாக தேர்தல்களிலும் ஒரு நாட்டின் தீர்மானமிக்க காலப்பகுதிகளிலும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட Online Platform பாரிய பங்களிப்பிற்கான வசதிகளை நல்குகின்றன. அதன்போது இன்றளவில் துரித வளர்ச்சியடைந்துள்ள Generative AI உடன் மேற்படி நிலைமைகள் மென்மேலும் குழப்பகரமான மற்றும் தீவிர நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளன. எனவே, Online தளங்களின் பங்களிப்பானது தவிர்க்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. உதாரணமாக இலங்கையில் இன்றளவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற விதத்தினைப் பாருங்கள்.
2024 ஜூன் 14 தொடக்கம் 2024 செப்டெம்பர் 11 வரையில் META நிறுவனத்திற்குரிய சமூக ஊடகத் தளங்களில் தமது தேர்தல் பரப்புரை விளம்பரங்களின் பொருட்டு மூன்று வேட்பாளர்கள் செய்துள்ள செலவுகள் பின்வருமாறு,
ரணில் விக்கிரமசிங்க: ரூபா 33,230,360.00
சஜித் பிரேமதாச: ரூபா 32,514,220.00
அநுர குமார திசாநாயக்க: ரூபா 7,142,795.00
(மூலம் – facebook.com/ads/library/report – Rasika Karunarathne | Gayan Hettiarachchi)
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட Online தளங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதனையே மேற்படித் தரவுகள் காட்டுகின்றன. அத்துடன், கருத்துக்கள், சித்தாந்தங்கள் அல்லது மாற்றுக் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைப்பதற்கு சமூக ஊடகங்கள் உள்ளிட்ட Online தளங்களையே பிரஜைகள் மிகமிக அதிகமாக பயன்படுத்துகின்றனர். எனவே, கருத்து வேறுபாடுகளைப் பொறுத்துக்கொள்ளத் தயாரில்லாத ஆட்சியாளர்கள் அல்லது தனிநபர்கள், தனிநபர் குழுக்கள் எப்படியாவது இந்தத் தகவல்தொடர்பு முறையை கட்டுப்படுத்த அல்லது கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குவர். மேலும் மக்களின் கருத்துக்கள் அல்லது மாறுபட்ட கருத்துக்களைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாக இலங்கையின் Online Safety Actஐக் கருதமுடியும்.
வெறுக்கத்தக்க அல்லது நெறிமுறையற்றதாக உள்ளடக்கங்களைச் சேர்க்கும் அல்லது பதிலீட்டினை வழங்கும் உள்ளடக்கங்களை நாம் தவிர்த்துக்கொள்வதோடு, அவற்றை குறிப்பிட்டதொரு வகையில் கட்டுப்படுத்துவதற்கும், அது பற்றி தெளிவுபடுத்துவதற்கும் இன்றளவில் தொடர்புடைய நிறுவனங்களின் Community Standards செயற்படுத்தப்படுகின்றன. இலங்கையிலும் அவ்வாறானதொரு ஒழுக்கநெறிக் கட்டமைப்பு காணப்படுகின்றது, Social Media Declaration வாசிக்கவும். எனவே, 21ஆம் திகதிக்குப் பின்னர் தெரிவு செய்யப்படும் எந்தவொரு ஆட்சிக்கும் எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள், மாறுபட்ட கருத்துக்களை அடக்குவதற்கு Online Safety சட்டத்தை உபயோகிப்பதற்கும் அதனூடாக அரசியல் பலத்தினை மென்மேலும் பேணிச் செல்வதற்கு OSA ஒத்துழைப்பாக இருக்கும் என்று தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் OSA வை அகற்றாதிருப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளரொருவர் எண்ணியிருக்கலாமென எவரேனும் நினைத்தால் அதில் என்ன தவறு இருக்கின்றது?
மேலும் கூறுவதாயின், ஆட்சியில் இருக்கின்ற கட்சியினர் தமது அதிகாரத்தை எப்படியாவது மேலும் தக்கவைத்துக் கொள்வதற்கும், அதிகாரம் இல்லாத கட்சியினர் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் நடைமுறைலுள்ள இந்தச் சட்டத்தினைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எவ்வாறெனினும், அவ்வாறானதொரு நிலைமையின் கீழ் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவது மக்களது ஜனநாயக பெறுமதிகளே என்பதனை இன்றளவில் அதிகமான வேட்பாளர்கள் மறந்துவிட்ட நிலைமையே உள்ளது. அந்தச் சிக்கலைப் புரிந்துகொள்வதற்கு சட்டம் மாத்திரம் போதாது. அதற்கு உலகளவில் வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பம், தொழில்நுட்பக் கருவிகள், அவற்றின் கையாளுகைகள் போன்றவற்றின் எல்லைகள் தொடர்பிலான அறிவு, தெளிவு மற்றும் கலந்துரையாடல் அவசியமாகும்.
எந்தவொரு வேட்பாளருக்கும் தேவைப்பாடு இல்லை
Online Safety Act பற்றிய நிலைப்பாடு தொடர்பில் சகலரும் ஒரே படகில் தான் பயணிக்கின்றனர். எந்தவொரு வேட்பாளருக்கும் அடக்குமுறையான OSA சட்டத்திலிருந்து விலகுவதற்கான எந்தவொரு தேவைப்பாடும் இல்லையென்பது மிகத் தெளிவு. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் எதுவாக இருந்தாலும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் மீது இந்த நிலைமையானது மிகவும் பாரதூரமான வகையில் தாக்கத்தினை ஏற்படுத்தும். எனவே, சிவில் சமூகம் உள்ளிட்ட பிரஜைகளின் முன்னுரிமைப் பணியாக அமைய வேண்டியது, Online Safety Act உட்பட அடக்குமுறை சட்டங்களூடாக இடம்பெறப் போகின்ற பாரதூரமான நிலைமைக்கு எதிராக பிரஜைகளை ஒன்றுதிரட்டுவதாகும். அது வேறெதற்காகவுமல்ல, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என்பது ஏனைய மனித உரிமைகளின் அடித்தளமாக அமைகின்ற காரணத்தினால் ஆகும்.
சம்பத் சமரகோன்
NPP සහ SJB ප්රතිපත්ති ප්රකාශන තුළ Online Safety Act රහසින් ආරක්ෂා කරන්නේ ඇයි? என்ற தலைப்பில் Vikalpa.org தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.