Photos, THEGUARDIAN

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கென பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அந்தப் பரிமாணங்களின் பாதைகள் சமாந்தரமாகப் பயணித்தாலும் அதன் தொடக்கமும், இலக்கும்  ஒன்றாகவே இருக்கின்றன. விராஜினுடைய ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான பங்களிப்பு அரசியல் செயற்பாட்டுத் தளத்திலே காத்திரமானதாக அமைந்திருந்தது. தமிழினப் படுகொலை, அரசியல் வரலாற்று நிகழ்முறைக்கூடான பரிமாணத்தில் கட்டமைக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்டு, தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் விராஜினுடைய பங்களிப்பு முன்னெப்போதும் இல்லாதவாறு அவசியமானதாகவும் சுதந்திரமானதாகவும் அமைந்திருந்தது. விராஜினுடைய பங்களிப்பை ஒரு சில தளங்களில் தொட்டுச் செல்வது ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உதவி செய்யும்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் விடுதலைப் பிரளயத்தையும் (Paradigm) அதன் விடுதலை முகவராண்மைத் தன்மையையும் (Agency) தமிழர் தாயகத்திலிருந்து அகற்றி ஐக்கிய நாடு நோக்கி மையப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஐ.நாவுடன் சேர்ந்து அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றையும் விடுதலைத் தருநர்களாக அறிமுகப்படுத்திய செயற்பாடு நடைபெற்றது. ஏகாதிபத்தியப் பேரரசு கட்டமைத்த மீயுயர் (Meta Narrative) அரசியல் சொல்லாடலை கட்டவிழ்த்த அரசியல் செயற்பாட்டுத் தளத்தை 2009 இன் பின் பொது வெளி அரசியலுக்குத் திறந்த விராஜ், விடுதலைப் புலிகளைத் தடை செய்ததும், 2002 பேச்சு வார்த்தையில் புலிகளை ஓரம் கட்டியதுமே முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான காரணமென்பதை தர்க்க ரீதியாக விளக்கியதோடு, ஐக்கிய இராச்சிய, அமெரிக்க உடந்தைத் தன்மையையும் வெளிக்கொணர்ந்தார்.

ஈழத்தமிழினப் படுகொலையில் அமெரிக்க, ஐக்கிய இராச்சிய அரசுகளுக்கான உடந்தைத் தன்மை வெளிப்படுத்தப்பட்டமை அவர் ஒழுங்கமைத்த மூன்று மக்கள் தீர்ப்பாயங்களுக்கூடாக நடந்தேறியது. இறுதியாக அவர் சார்ந்த இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் காணொளியும் அதனது விவரணமும், எவ்வாறு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க அழுத்தத்தினால், பேச்சு வார்த்தையைக் கைவிட்டதென்றும், அதுவே இறுதியில் சிறிலங்கா அரசிற்கு இராணுவ ரீதியில் ஆயுத விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்குரிய பச்சைக் கொடியைக் காட்டியதென்பதையும் விளக்குகின்றது. இதற்காக இடதுசாரித் தீவிர அரசியலையும், புவிசார் அரசியல் திறனாய்வையும், ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்புக்கெதிரான சொல்லாடலையும் கொள்கைத் திறனாய்வுக் கற்கை நெறியாக அவர் கையிலெடுத்தார். இவையே ஈழத்தமிழர் விடுதலைப் போராட்ட விடுதலைப் பிரளயத்தின் முகவராண்மைத் தன்மையை தக்க வைக்க முடியுமென நம்பினார். அதுவே ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. ஐக்கிய இராச்சியம் ஆசியாவின் புவிசார் அரசியல் நலன் சார்ந்து அதன் பேரரசைத் தக்க வைப்பதற்காக கட்டமைத்த ஒற்றையாட்சி முறைமையே, வரலாற்று நிகழ்முறையாக மாற்றப்பட்டு முள்ளிவாய்க்கால் வரைக்கும் பயணித்தது என்பதில் ஆழமான திட நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த வகையில், ஈழத் தமிழினப் படுகொலையில் பிரித்தானிய காலனித்துவத்தின் பங்கு காத்திரமானது எனப் பேசிவந்தார்.

2009 இற்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான அரசியல் செயற்பாட்டுத் தளம் ஐ.நாவின் மைய குழாமை நோக்கியே திருப்பப்பட்டிருந்தது என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால், விராஜ் அதன் திசையை மாற்றி ஈழத்தமிழர் விடுதலைக்கான அரசியல் செயற்பாட்டுத் தளத்தை இலத்தீன் அமெரிக்க நாடுகளை மையப்படுத்தி, அதற்கான முன்னெடுப்புகளை செய்திருந்தார். தமிழினப் படுகொலை நினைவு நாளான மே 18 பல்வேறு இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இன்றும் நினைவு கூறப்பட்டு வருகின்றது என்பது அதற்கான ஆதாரமாகும். நினைவுகூறலை அரசியல் செயற்பாட்டுத் தளமாக இயங்கு நிலைக்கு உட்படுத்துதலை ஒரு உத்தியாக கையாண்டார். மக்கள் தீர்ப்பாயத்தில், பெரும்பாலான தீர்ப்பாய நடுவர்கள் இலத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நில மீட்பு விடுதலைக்காகப் போராடும் பல்வேறு பூர்விகக் குழுக்களும் அதில் ஒருங்கிணைந்திருந்தமை, இன்னொரு உதாரணமாகும்.

ஜேர்மனியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘நாதன் தம்பி வழக்கு’,  2009 இன் பின்னரான சர்வதேச ஈழத்தமிழர் விடுதலை சார் அரசியல் தளத்தில் மிக முக்கியமானது. இவ் வழக்கில், விராஜினுடைய வாதமாக அமைவது நாதன் தம்பி, ஆனந்தராஜ் இருவருமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டினார்கள். ஏனென்றால், விடுதலைப் புலிகள்தான் தாயகத்தில் தமிழினப் படுகொலையை தடுப்பதற்குரிய படைபலத்தைக் கொண்டிருந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்ததன் மூலம் தமிழ் மக்களுக்குரிய பாதுகாப்புக் கவசம் இல்லாதொழிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்ததன் மூலம் புலத்தில் அவர்களது செயற்பாடு முடக்கப்பட்டது மட்டுமல்லாது விடுதலைப் புலிகள் அமைப்பிற்காகப் பணம் சேர்ப்பது குற்றமாக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட காரணங்கள் முள்ளிவாய்க்காலில் தமிழினப்படுகொலை உச்சந் தொடுவதற்குரிய பாதையை இலகுவாக சிறிலங்கா அரசிற்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இவ்வாறே விராஜ் தமிழினப் படுகொலை உடந்தைத் தன்மைக்குரிய ஆதாரங்களை கட்டமைத்தார். இதனது இறுதித் தீர்ப்பு வெளிவர முதல் விராஜ் மென்டிஸ் இயற்கை எய்தியது அபத்தமானதுதான்.

விராஜ் ஒரு சிங்களவராக இருந்து, சிங்கள மக்கள் மத்தியிலும் ஈழத்தமிழர் போராட்டத்திற்கான ஆதரவுத் தளத்தைக் கட்டியெழுப்பியிருந்தார். அந்த ஆதரவுத்தளம் தொடர்ந்து இயங்குநிலையில் இருப்பதற்கான வேலைத்திட்டங்களையும் அவரே முன்னெடுத்து நடத்தியிருந்தார். அவற்றினுடைய பங்களிப்புப் பற்றி பொது வெளியில் நிறைய ஆதாரங்கள் உள்ளன. அரசியல் தஞ்சம் கோரி ஜேர்மனி நாட்டுக்குள் உள்நுழைபவர்களுக்கு அவருடைய ஆதரவுக்கரம் எப்போதுமே இருந்திருந்தது என்பதை அச்சேவையின் பயனாளிகள் நன்கு அறிவர். அதையே விராஜ் நியாயப் பிரச்சாரத்திற்கான தளமாகப் பயன்படுத்தினார் என்பதை மறுப்பதிற்கில்லை.

விராஜ் 17 வயதில் பிரித்தானிய இராச்சியத்திற்கு பொறியியல் மாணவனாக அனுமதி பெற்று வந்ததன் பின்னரே அவரது அரசியல் செயற்பாட்டுத் தளத்தில் மாற்றம் ஏற்படுகின்றது. இலண்டன் நகரம் விராஜிற்கு இன்னொரு யதார்த்தத்தை திறந்து விடுகிறது. அந்த நிறவெறி அல்லது மற்றமையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற யதார்த்தம்தான் அவரை அரசியல் மயப்படுத்துகின்றது. அவர் இடதுசாரிச் சிந்தனைக் குழுக்களுடன் இணைந்து தனது அரசியல் செயற்பாட்டுப் பயணத்தை ஆரம்பிக்கின்றார்.  நிறவெறிக்கெதிரான, ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்பிற்கெதிரான போராட்டங்களை இலண்டனில் ஒழுங்குபடுத்துவதிலே மிக வினைத்திறனோடு செயற்படுகின்றார். அத்தோடு, பிரித்தானிய இராணுவம் அயர்லாந்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னெடுத்து நியாயப் பிரச்சாரங்களை தான் முன்னெடுத்ததாகவும் அந்தக் காலப் பகுதியிலேதான் ஈழத்தமிழ் விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவுத் தளத்தை பிரித்தானியாவில் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை ஏனையவர்களுடன் சேர்ந்து  ஆரம்பித்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

அவருடைய அரசியல் செயற்பாட்டுத்தளம் அவரது கல்வியை விடவும் முன்னுரிமை பெறுகின்றது. அவரது நுழைவு அனுமதி (வீசா) காலாவதியாகியிருந்தாலும் தொடக்கத்தில் அதைப் பொருட்படுத்தாமல் விட்ட குடிவரவுத்துறை, அவர் சார்ந்த அமைப்பு ஏறக்குறைய ஒரு கட்டத்தில் பதினைந்து நாடு கடத்தல் சம்பவங்களைத் தடுத்ததாகக் குறிப்பிட்டு, இறுதியாக பதினொரு வருடங்கள் கழித்து, 1989 இல், விராஜிற்கு ஐக்கிய இராச்சியத்தில் தங்கி இருப்பதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது. அவர் எந்நேரமும் நாடு கடத்தப்படலாம் எனும் நிலை உருவாகியது.

நாடு கடத்தலை தடுப்பதற்கான சட்ட முயற்சிகள் தோல்வியைத் தழுவிய போது ஆலயத்தில் அரசியல் தஞ்சம் கோருகின்றார். ஆலயத்தின் மிகச்சிறிய திருப்பண்ட அறையில் ஏறத்தாழ இரண்டு வருடங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றார். ஆலய திருப்பண்ட அறை நியாயப் பிரச்சாரத்திற்கும், சமூகத்தை கூட்டாக அணி திரட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டதை புதிய பிரச்சார உத்தியாக ஜனத் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார். அந்த இடத்து மக்களே, அவருக்கான பாதுகாப்பு ஒழுங்குகளையும் பிரச்சார ஒழுங்குகளையும் முன்னெடுத்து பிரித்தானிய குடிவரவுத் துறையிடமிருந்தும், காவல்துறையிடமிருந்தும் காப்பாற்றியிருந்தார்கள்.

பிரித்தானிய காவல்துறை, பாதுகாப்பு வலயங்களை உடைத்தெறிந்து, 1989 தை 18 அதிகாலையில் அவரைக் கைதுசெய்து நாடு கடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றது. விராஜ் கைதுசெய்யப்பட்ட வேளை தன்னை அவர் சூடாக்கியுடன் சங்கிலி மூலம் பிணைத்திருந்தார். அதை உடைத்து பிரித்தானிய காவல்துறை அவரைக் கைது செய்தது. அதே தருணத்தில் அரசியல் தஞ்சம் கோருவதற்கான விண்ணப்பத்தையும் குடிவரவுத் திணைக்களத்திடம் சமர்ப்பித்திருந்தார். 1989 இல் பிரித்தானிய அரசு அவரை சிறிலங்காவிற்கு நாடு கடத்தியிருந்தது.

சிறிலங்காவிலிருந்து மீண்டும் அரசியல் தஞ்சம் கோரி, ஜேர்மனியிலிருந்த தனது ஈழத்தமிழ் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் செயற்பாடுகளையும் ஏனைய செயற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார்.

2010 இல் அவரைப் பாதுகாத்த ஆலயக் குரு இறந்தபோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள பிரித்தானிய குடிவரவுத்துறை அவருக்கு அனுமதியை மறுத்திருந்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக ஜேர்மனியில் தங்கியிருந்து சர்வதேச அரசியல் செயற்பாட்டுத் தளத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் காத்திரமானது. விராஜ் விட்டுச் செல்லும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதே நாம் அவருக்கு செலுத்துகின்ற அஞ்சலியாகும்.

எழில்