Photo, SELVARAJA RAJASEGAR
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு ஜனாதிபதித் தேர்தல்களில் பிரதான வேட்பாளர்களின் முக்கியமான வாக்குறுதியாக விளங்கிய ஒரு காலகட்டம் இருந்தது. ஆனால், மீண்டும் அத்தகைய சூழ்நிலை தோன்றும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக வாக்குறுதி வழங்கிய எந்த அரசியல்வாதியும் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதிபதியாக பதவிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றத் தவறியது மாத்திரமல்ல தங்களது அதிகாரங்களை மேலும் அதிகரிப்பதிலும் அக்கறை காட்டினார்கள். அதனால் மீண்டும் அத்தகைய வாக்குறுதியை வழங்கும் அரசியல்வாதிகளை மக்கள் நம்பப் போவதில்லை என்பதே யதார்த்தம்.
ஆனால்,தற்போது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில் மீண்டும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றிய பேச்சுக்கள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் தாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து நாடாளுமன்ற ஆட்சிமுறையை மீண்டும் கொண்டுவரப்போவதாக கடந்தவாரம் தேர்தல் பிரசார மேடைகளில் உறுதியளித்திருக்கிறார்கள்.
தாங்கள் அவ்வாறு வாக்குறுதி அளித்த மறுநாள்தான் பிரேமதாச ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக கூறியதாக சுட்டிக்காட்டிய தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிப்பவர்களாக தாங்களே விளங்குவதாக உரிமை வேறு கோரினார்கள்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இளம் சட்டத்துறை நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களில் எவரும் ஜனாதிபதிப் பதவிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களை ஒழிப்பது குறித்து தங்களது நோக்கத்தை அறிவிக்கவில்லை என்று கூறியிருந்தார். நேரகாலத்தோடு தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்திருந்த பிரேமதாசவையும் அநுரகுமாரவையும் நோக்கியதாகவே ஜனாதிபதியின் அந்தக் கருத்து இருந்தது.
தற்போது அவர்கள் இருவரும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றிய தங்களது நிலைப்பாட்டை அறிவித்துவிட்ட நிலையில் இன்னொரு பிரதான வேட்பாளரான விக்கிரமசிங்க என்ன செயயப்போகிறார் என்ற கேள்வி எழுகிறது.
பிரதான வேட்பாளர்கள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தாலும் கூட அதற்காக மக்கள் இம்முறை தடவை அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக இரு ஜனாதிபதித் தேர்தல்களில் வாக்குறுதி அளித்த எதிரணியின் பொது வேட்பாளர்களை ஆதரித்த போதிலும், உண்மையில் அவர் மானசீகமாக அதை விரும்புகிறவர் அல்ல.
இரு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை முதற்தடவையாக சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியபோது ஜனாதிபதி ஆட்சிமுறையின் எதிர்காலம் பற்றிய தனது நிலைப்பாட்டை விக்கிரமசிங்க வெளிப்படுத்தியிருந்தார். அதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டியது இந்தச் சந்தர்ப்பத்தில் அவசியமாகிறது.
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் கருத்தொருமிப்பைக் காண்பதற்கான பொறுப்பை தான் நியமிக்க உத்தேசித்திருக்கும் மக்கள் சபையிடம் ஒப்படைக்கப்போவதாக அவர் அறிவித்தார். ஆனால், அந்த மக்கள் சபை அமைக்கப்படவில்லை என்பது மாத்திரமல்ல, அதற்குப் பிறகு அந்த ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி பேசுவதையும் பெரும்பாலும் அவர் தவிர்த்துக்கொண்டார்.
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்று விக்கிரமசிங்க உண்மையில் நினைத்திருந்தால், ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்குப் பின்னராக உடனடிச் சூழ்நிலைகளில் எதிரணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கமுடியும். ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு மக்கள் மத்தியில் பரந்தளவில் ஆதரவு இருந்த அந்த பொருத்தமான சந்தர்ப்பம் வேண்டுமென்றே நழுவவிடப்பட்டது. அந்த ஆட்சிமுறை ஒழிப்பு என்பது தற்போதைய சூழ்நிலையில் முக்கியமான பிரச்சினை அல்ல என்ற அபிப்பிராயத்தை ஜனாதிபதி இப்போது கொண்டிருக்கிறார் என்பதை அவரது சில உரைகள் மூலம் உணரக்கூடியதாக இருந்தது.
ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டிய தேவை குறித்து பெருவாரியான வாதங்கள் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றை இங்கு திரும்பக் கூறவேண்டியதில்லை. ஆனால், எவருக்காவது இதற்கு மேலும் சந்தேகம் இருந்தால் கோட்டபாய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியும் விக்கிரமசிங்கவின் கடந்த இரு வருடகால ஆட்சியும் அந்த ஆட்சிமுறை இனிமேலும் விட்டுவைக்கப்படக்கூடாது என்பதற்கு மிகவும் தெளிவான பிந்திய சான்றுகள்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மாத்திரமே தனது சாதனையாக மக்கள் முன்னிலையில் கூறி ஜனாதிபதி வாக்கு கேட்கிறார். ஆனால், அவரின் குறுகிய கால ஆட்சியில் ஜனநாயக உரிமைகளுக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டது குறித்தும் அவர் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நீதித்துறையுடன் அவர் பதற்றமான ஒரு உறவுமுறையையே கொண்டிருக்கிறார்.
பொருளாதார வளர்ச்சியுடன் மாத்திரம் மக்கள் திருப்திப்படுவார்கள் என்றால் அண்மையில் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவுக்கு நாட்டைவிட்டு தப்பியோடி இந்தியாவில் தஞ்சமடையவேண்டிய கதி நேர்ந்திருக்காது.
சஜித் பிரேமதாசவையும் அநுரகுமாரவையும் பொறுத்தவரை, ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பதற்கான பொறுப்பு மக்களின் புதிய ஆணையுடன் தெரிவுசெய்யப்படும் அடுத்த நாடாளுமன்றத்திற்கே உரியது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் அரசியலமைப்புக்கு சில திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு விக்கிரமசிங்க நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின்போது அவர்கள் அந்த நிலைப்பாட்டை திரும்பத் திரும்ப வெளிப்படுத்தினார்கள்.
தற்போது அவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக கூறுகிறார்கள். இது ஜனாதிபதிக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஒரு விவகாரம் என்பதும் அவர்களுக்கு தெரியும். அவர்கள் கூறுவதைப் போன்று விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக வாக்குறுதி அளிக்கும் சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனங்களில் வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையை மூன்று மாதங்களுக்கு முன்னர் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்வைத்தார். ஆனால், அதை முக்கிய அரசியல்வாதிகளில் எவரும் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள் அதை நிறைவேற்றுவதற்கான கால எல்லையையும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவேண்டும் என்று ஜெயசூரிய கேட்டிருந்தார்.
ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் மற்றைய அரசியல்வாதிகள் தடுமாறிக்கொண்டிருந்தாலும், அது விடயத்தில் ஜெயசூரிய தொடர்ச்சியாக உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார். அவர் தற்போது அரசியல்வாதி இல்லை. காலஞ்சென்ற வண. மாதுளுவாவே சோபித தேரர் தலைமையில் இயங்கிய சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவராக அவர் இருக்கிறார்.
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்காக கடுமையாக பாடுபட்ட சோபித தேரர் தனது இறுதிநாட்களில் பெரும் கவலைகொண்ட மனிதராகவே உயிரை விட்டார். ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக அவருக்கு வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வந்த பிறகு வாக்குறுதியை காப்பாற்றத் தவறியதே அதற்குக் காரணம்.
இது இவ்வாறிருக்க, கடந்தவாரம் கல்விமான்களும் அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுமாக 83 முக்கியஸ்தர்களும் எட்டு சிவில் சமூக அமைப்புக்களும் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஒரு வருட காலத்திற்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு சகல ஜனாதிபதி வேட்பாளர்களும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டதற்கான நோக்கங்கள் என்று கூறப்பட்டவற்றில் எந்த ஒன்றுமே நிறைவேற்றப்படவில்லை என்பதை அந்த ஆட்சிமுறையுடனான 46 வருடகால அனுபவம் காட்டுகிறது. பொருளாதார அபிவிருத்தியில் ஜனாதிபதி ஆட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இனநெருக்கடி தீவிரமடைந்ததுடன் எமது அரசியல் முறைமையும் அடிக்கடி நெருக்கடிக்குள்ளாகியது.
“பொறுப்புக்கூறல் இல்லாத காரணத்தால் ஜனாதிபதி ஆட்சிமுறை விரும்பத்தகாத விளைவுகளைக் கொண்டுவந்தது. சகல இலங்கையர்களினதும் பொது நன்மைக்கு பாதகமான முறையில் ஏதேச்சாதிகாரத்தையும் ஊழலையும் தகுதியின்மையையும் அந்த ஆட்சிமுறை ஊக்குவித்தது.
“மிகவும் அண்மைக்காலத்தில் தவறான ஆட்சிமுறை மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணிகளுக்கும் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கும் இடையிலான தொடர்பை மக்கள் தெளிவாகக் கண்டுகொண்டார்கள். அதனால்தான் 2022 ‘அறகலய’ கிளர்ச்சியின்போது அவர்கள் முறைமை மாற்றத்தைக் கோரினார்கள். அந்த முறைமை மாற்றத்துக்கான முதற்படி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாகவே இருக்க முடியும்” என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.
ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து வாக்குறுதியை வழங்குவதில் அரசியல்வாதிகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வந்த பிறகு அதை காற்றில் பறக்கவிடாமல் நடைமுறைப்படுத்துவதற்கான நேர்மையை எவரிடம் எதிர்பார்க்க முடியும் என்பதே இலங்கையர்களின் உண்மையான பிரச்சினையாகும்.
ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு என்றைன்றைக்குமே அரசியல் விவாதத்துக்கான ஒரு தொனிப்பொருளாக மாத்திரம் இருக்கப்போகிறது என்றே தோன்றுகிறது. இது கானல்நீரை விரட்டுவதற்கு ஒப்பானதாகும்.
வீரகத்தி தனபாலசிங்கம்