Photo, GROUNDVIEWS
“யுத்தத்தில் எனது காலில் ஏற்பட்ட காயத்தினால் என்னால் முன்னர்போன்று நடக்க முடியாது. நானும் மாற்றுதிறனாளி, என் அம்மாவுக்கும் ஏலாது, அப்பாவும் இல்லை. நான்தான் சிறு சுயதொழில் ஒண்ட ஆரம்பிச்சு இப்போ முன்னேறி இருக்கிறன்….” என குடும்பத்தைத் தலைமை தாங்கும் மாற்றுதிறனாளி பெண்ணான சதாசிவம் சகீலா தனது சாதனை பயணம் பற்றி கூறுகிறார்.
“நான் ஒரு முன்னாள் போராளி 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன் ஊடகவியலாளராக இருந்தேன். கடந்த யுத்த காலத்தில் காலில் காயம் ஏற்பட்டு தற்போது சுயமாக நடக்க முடியாத நிலையில் இருக்கின்றேன். எனது தாயாரையும் நானே பார்த்து வருகின்றேன்.
தடுப்பு முகாமில் இருந்து வெளியில் வரும்போது என்ன வேலை செய்து வருமானமீட்டுவது என்று தெரியவில்லை. பின்னர் ஒரு தனியார் நிறுவனத்தினர் பழப்பானம் தயாரிக்கும் இயந்திர உபகரணங்கள், பொலித்தீன், குளிர்சாதனப் பெட்டி என்பவற்றை தந்துதவினார்கள். ஆனால், சிறு முதலீடும் தேவைப்பட்டது. அதனால் எனது வீட்டு காணி ஆவணங்களை வங்கியில் வைத்து சிறுதொகை கடனை பெற்று 2013 இல் ஆரம்பித்த குளிர்பானம் தயாரிக்கும் என் சுயதொழில் இன்று உணவுப்பொருட்கள் பலர் ஓடர்கொடுத்து பெற்றுக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றேன்.
பழப்பானத்துடன் நான் தொழிலை ஆரம்பித்து அரச திணைக்களங்களின் உதவியுடன் முறுக்கு, அரிசிமா, தூள், உழுந்துமா, மூலிகை அப்பளங்கள், பாவற்காய் ஊறுகாய் என சுயதொழிலினை விஸ்தரித்து இன்று எல்லோரும் வியந்து பார்க்குமளவிற்கு சாதித்து காட்டியிருக்கின்றேன். எனது வருமானத்தின் மூலமும், வீட்டில் உள்ள தென்னை மரங்களின் மூலம் வரும் வருமானத்தில் அம்மாவினதும் எனது மருத்துவ செலவுகளையும், அன்றாட வாழ்க்கை செலவுகளையும் பார்த்து வருகின்றேன்” என தனது சுயதொழில் சாதனை பயணம் குறித்து சதாசிவம் சகீலா கூறுகிறார்.
இன்றைய சூழலில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரித்துச் செல்வது முக்கிய பிரச்சினையாக மாறிவருகின்றது. இலங்கை முழுவதும் அதிகளவான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் போரிற்குப் பின்னரான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவிலான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உருவாகியிருக்கின்றது. பெண் தலைமைத்துவம் என்பது ஆணின் துணையின்றி பெண் குடும்பப் பொறுப்பினை ஏற்று நடாத்துவதே பெண் தலைமைத்துவம் ஆகும். பெண் தலைமைத்துவ குடும்பங்களில் கணவனை இழந்தோர், கணவன் வலிந்து காணாமலாக்கப்பட்டமை, கணவன் தடுப்புக்காவலில் இருத்தல், விவாகரத்து, கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவன் மாற்றுத்திறனாளியாக இருத்தல், கணவன் பொறுப்பற்று இருத்தல் (குடி, வேறு பெண்ணுடனான தொடர்பு), முதிர்கன்னிகள் (திருமணம் செய்யாது தனித்து குடும்பத்தினை வழிடாத்துவோர்) என பலவாறான காரணங்களால் பெண்கள் குடும்பத்தினை தலைமைதாங்க வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது. இருந்தாலும முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்தவரை யுத்தம் தந்த விளைவாகவே அதிகளவிலான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உருவாகியுள்ளன. இத்தகைய பெண்கள் தமது வருமானத்தின் மூலமே அன்றாட வாழ்க்கையினையும், பிள்ளைகளின் கல்வி செலவினையும், ஏனைய பிற தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றனர்.
தலைமை தாங்கும் குடும்பப் பெண்களுக்கான சங்கத் தலைவியும் (அமரா), பெண்களது உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளருமான சுந்தரலிங்கம் கலைச்செல்வி, தலைமை தாங்கும் பெண் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கூறுகையில்,
“குடும்பங்களைத் தலைமை தாங்கும் பெண்கள் எனும் வகைக்குள் தனியே கணவன் இறந்த பெண்கள் மட்டுமல்ல கணவன் விவாகரத்து, கணவன் மறுமணம், கணவன் புனர்வாழ்வில் என கணவனின் துணையின்றி தனித்து சம்பாதித்து குடும்பத்தினை வழிநடாத்தி வரும் பெண்கள்தான் தலைமை தாங்கும் குடும்பப் பெண்கள். இவர்கள் வருமானத்தினை ஈட்ட பல வழிகளில் முயற்சி செய்தாலும் சில காரணங்களால் அவர்களால் முன்னுக்கு வர முடிவதில்லை. அதாவது, எங்கு உதவி கேட்டு சென்றாலும் பாலியல் சுரண்டல், பாலியல் லஞ்சம் என பெண்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.
நுண்நிதி நிறுவனங்கள் தற்பொழுதும் குடும்பங்களைத் தலைமைத் தாங்கும் பெண்களை இலக்கு வைத்தே கடன்களை வழங்குகின்றன. அதாவது, குடும்பங்களைத் தலைமை தாங்கும் பெண்கள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை சீர்படுத்த சுய தொழிலை செய்ய பல நுண்நிதி நிறுவனங்களிடம் சிறு சிறு தொகையாகப் பெற்று இறுதியில் கடனை மீள் செலுத்த முடியாமல் பாலியல் துன்புறுத்தல், தற்கொலை, மன அழுத்தம் என பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அதிகமாக தலைமை தாங்கும் குடும்பப் பெண்கள் சேவைகளைப் பெறும் போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியே சேவைகளைப் பெற்றுக்கொள்கின்றனர். இது வெளிவராமலே மறைக்கப்படுகின்றது. வெளிவரும் பட்சத்தில் உத்தியோகத்தர்களால் பெண்கள் பழிவாங்கப்படுகின்றனர். தற்கால பொருளாதார நெருக்கடிக்கேற்ப விலைவாசிகளும் அதிகரித்துள்ளது. குடும்பங்களைத் தலைமை பெண்களின் பிள்ளைகளே அதிகமாக சத்து குறைபாடான பிள்ளைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மூன்றுநேர உணவுக்கே கஸ்டமான நிலைதான் இருக்கின்றது.
சுயதொழில் கடன் வழங்கும் போது ஒரே இடத்தில் கடன் வழங்க வேண்டும், இங்கு அவ்வாறு வழங்கப்படுவதில்லை. அதனாலேயே சுயதொழில் முயற்சி தோல்வியடைகின்றது. அத்தோடு, கடன் வழங்கும் போது கடன் எடுத்த பெண் செலுத்தவில்லை என்றால் பிணையாளியாக இருக்கும் பெண்ணுக்கு கடன் வழங்குவதில்லை. இம்முறையில் ஏதாவது மாற்றம் கொண்டுவர வேண்டும். அத்தோடு, சேவைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வுகள் இப்பெண்களில் அதிகமானோருக்கு தெரியாது. இது தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட வேண்டும். சேவைகளை வழங்கும் போது அலுவலகத்தில் திறந்த வெளியில் வழங்க வேண்டும். ஏனெனில், கறுப்பு கண்ணாடி கூடே அதிக பாலியல் துன்புறுத்தல்களுக்கு அடித்தளமிடுகின்றது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். பெண்கள் தமது முறைப்பாட்டை செய்யக்கூடிய காரியாலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். எமது பெண்கள் அமைப்பினரால் கால்நடை வளர்ப்பு, தையல், கர்பிணி பெண்களுக்கான பிரசவத்திற்கான பொருட்கள், மில் (அரிசிமா, தூள்) என பல உதவிகள் செய்து வருகின்றோம். இவர்களில் சிலர் சுயதொழிலில் உயர்ந்திருக்கின்றார்கள். சிலர் பின்னடைவையும் சந்தித்திருக்கின்றார்கள்.
பின்னடைவைச் சந்திப்பதற்கு சுயதொழிலுக்கான போதிய பணம் இல்லை, சந்தை வாய்ப்பு என்பது இல்லை, பொதியிடல் தொடர்பான பிரச்சினை, தரகர் பணம் அதிகம், தரச்சான்றிதழ், அனுமதி எடுப்பது தொடர்பான பிரச்சினை, தொழில்நுட்ப தொடர்பிலான தேர்ச்சியின்மை, திணைக்கள அதிகாரிகள் தமக்குரிய பணியினை சரிவர செய்வதில்லை. இவ்வாறான காரணங்கள் தான் சுயதொழில் பின்னடைவுக்கு காரணமாக இருக்கின்றது” என்று குடும்பங்களைத் தலைமைத் தாங்கும் பெண்களின் தேவைப்பாடுகள் குறித்து குடும்ப்ப் பொறுப்பினை ஏற்று நடாத்தும் சமூக செயற்பாட்டாளரான சு.கலைச்செல்வி கூறியிருந்தார்.
குடும்பத்தினை தலைமை தாங்கும் பெண்கள் வாழ்வியலை முன்நகர்த்தி செல்வதற்கும், வருமானத்தினை பெற்று கொள்வதற்கும் இச்சமூகத்தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. குடும்பங்களைத் தலைமைத் தாங்கும் பெண்களில் தமிழ் பெண்கள் மட்டுமல்ல , முஸ்லிம், சிங்கள பெண்களும் ஒரே மாதிரியான வாழ்வியல் பிரச்சினைகளையே எதிர் கொள்கின்றனர். அதாவது வாழ்வாதாரம், பொருளாதாரம், பாதுகாப்பு, சமூக ஒடுக்குமுறை என பல இன்னல்களை எதிர்கொண்டே இச்சமூகத்தில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
“நான் ஏ.எஸ்.நசீரா நீராவிப்பிட்டி முள்ளியவளையில் வசித்து வருகின்றேன். கணவர் என்னைவிட்டு வேறுதிருமணம் செய்து 15 வருடமாகிற்று. எனக்கு பிறப்பிலிருந்தே கால் ஏலாது, அப்படி இருந்தும் கையாலே மா இடித்து வறுத்து, வீட்டுவேலைகள் செய்தே என் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்தேன். ஆனால், என் பிள்ளைகளும் என்னை விட்டிற்று போட்டாங்க. எனது வறுமை அறிந்துதான் அரச திணைக்களம், தனியார் நிறுவனம் ஒன்றும் மா அரைக்கும் இயந்திரம் தந்து, சிறுதொகை பண உதவியும் செய்தவங்க. அதனாலே தற்போது மில் ஒன்று நடாத்தி வருகிறேன். அத்தோடு, இறைச்சி கோழி எடுத்து விற்பனை செய்து வருகிறேன். இதனால் கிடைக்கும் வருமானத்தின் மூலமே அன்றாட தேவைகளை நிறைவேற்ற கூடியதாய் இருக்கின்றது. கணவர் விட்டிட்டு போனபோது இருக்க கூட காணி இல்லை. ஆனால், தற்போது நான்கு பேருக்கு சாப்பாடு கொடுக்கக்கூடிய அளவு வளர்ந்திருக்கின்றேன்.
எனது சுயதொழில் முன்னேற்றத்திற்கு சமூகத்தில் இருந்து எதிர்ப்புக்கள், ஒடுக்குமுறை, அவதூறு என பல சவால்கள் வந்தன. அதனை பொருட்படுத்தாது எனது நேர்மை, அயராத உழைப்பு, தன்னம்பிக்கையினாலே இன்று சுயதொழிலால் வளர்ந்து வருகின்றேன்” என சமூகத்தில் பல சவால்களுக்கு முகம் கொடுத்தபோதும் சாதிக்க வேண்டும் என்ற முயற்சியால் சுயதொழில் முன்னேறிய மாற்றுதிறனாளி , குடும்பத்தினை தலைமை தாங்கும் பெண் ஏ.எஸ்.நசீரா கூறியிருந்தார்.
இன்றைய பொருளாதார நெருக்கடி காலத்தில் குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் (தமிழ் ,முஸ்லீம், சிங்களம்) வாழ்வியலை முன்நகர்த்தி செல்ல பொருளாதாரமே முதன்மையானது. ஆகவே, இவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவதால் தற்கொலை, நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறல், பாலியல் சுரண்டல், தவறான பழக்கவழக்கங்கள், அவதூறு, ஓரங்கட்டப்படல், தவறான சித்தரிப்பு என பல சவால்களுக்கு உள்ளாகி சிலர் வாழ்வாதாரத்தில் பின்னடைவை சந்திக்கின்றார்கள். அதேநேரம் சிலர் சுயதொழிலில் சாதனை படைத்தும் இருக்கிறார்கள்.
“நான் ச.மங்கயற்கரசி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் 2009 ஆண்டு யுத்தத்தில் இறந்துவிட்டார். எனக்கு இரண்டு பிள்ளைகள் ஒருவருக்கு திருமணமாகிற்று, மற்றைய மகன் என்னுடனே இருக்கிறார். கணவன் கூலிவேலை செய்துதான் பிள்ளையள படிக்க வைச்சவர். அவர் இறந்ததும் அன்றாட வாழ்க்கைச் செலவினை பார்க்கவே கஸ்டமாகிட்டுது. வயிற்று பிழைப்புக்காக யாரிடமும் கேட்டு வீட்டுவேலைகள் செய்து அதில கிடைக்கிற காசை வைச்சுதான் பிள்ளையின்ர படிப்பு செலவு, அன்றாட செலவுகளை பார்த்து வந்தன். எங்கட நிலமை அறிஞ்சு சில நிறுவனங்கள் வீட்டுதோட்டம் செய்யுறதிற்குரிய பயிர் விதைகளும், வாட்டர்பம்மும் தந்தவ. அதை வைச்சு இரண்டு வருசம் வீட்டுதோட்டம் செய்தனான். ஓரளவு வருமானம் கிடைச்சுது, வாழ்கை செலவை சமாளிக்க முடிஞ்சது. அதன் பின்னர் வீட்டுதோட்டம் தொடர்ச்சியாக செய்யமுடியேல, சந்தைபடுத்தல் வசதி இல்லை, தண்ணி பிரச்சினை, பயிர்களுக்குரிய மருந்து வாங்க பணமில்லை. உடல்நலம் பாதிப்பு என நிறைய பிரச்சினை வந்தது அப்பிடியே வீட்டுதோட்டம் அழிவடைந்துவிட்டது. என சுயதொழிலில் பின்னடைவை சந்தித்த மங்கயற்கரசி கூறியிருந்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரை குடும்பங்களைத் தலைமைத் தாங்கும் பெண்களது வாழ்வியலின் ஒவ்வொரு நகர்வும் சுமையானதாகவே இருக்கின்றது. இம்மாவட்டம் போரினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனாலேயே யுத்தம் தந்த விளைவாக அதிக குடும்பங்களைத் தலைமைத் தாங்கும் பெண்கள் உருவாகி உள்ளார்கள்.
வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுகிறது. அதில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின்கீழ் 2140 குடும்பங்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழ் 2224 குடும்பங்கள், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவின் கீழ் 1565 குடும்பங்கள், துணுக்காய் பிரதேச செயலக பிரிவின்கீழ் 630 குடும்பங்கள், வெலிஓயா பிரதேச செயலக பிரிவின் கீழ் 663குடும்பங்கள், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் 511குடும்பங்கள் என மொத்தம் 7733 தலைமை தாங்கும் பெண் குடும்பங்கள் வசித்து வருவதாக முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் தகவல்கள் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குடும்பத்தினை தலைமைதாங்கும் பெண்கள் பல சவால்களுக்க முகம் கொடுக்க நேரிட்டாலும் அதனை துச்சமாக துடைத்தெறிந்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய வாழ்வாதார உதவிகளை அடித்தளமாக கொண்டு சில பெண்கள் வாழ்வியலில் வெற்றிநடை போட்டு தற்போது சுயதொழிலில் சாதனை படைத்து தொழில் வழங்கும் வல்லுனர்களாகவும் உருவாகி இருக்கின்றார்கள். தலைமை தாங்கும் குடும்ப பெண்களுக்கு அரச திணைக்களம் ஊடாக வழங்கப்படும் உதவிகள் குறித்து முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) இவ்வாறு கூறியிருந்தார்.
“குடும்பங்களைத் தலைமைத் தாங்கும் பெண்களுக்கு ஆடு, மாடு, கோழி போன்றனவும், சிறு கைத்தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள், தோட்ட செய்கைக்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றது. அத்தோடு, சுய தொழில் செய்வதற்கான ஆலோசனைகள், செயலமர்வுகள், விழிப்புணர்வு வழிகாட்டல்களும் அரச திணைக்களங்களினால் வழங்கப்படுகின்றது. இவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களாலும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுகின்றன. தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் சுயமாக முன்னேற்றமடையும் போது சாதனையாளர்களாக கௌரவிக்கின்றோம். களவிஜயம் சென்று வழிகாட்டல்களை வழங்குகின்றோம். இதன்மூலம் ஆர்வமுடைய, முயற்சியுடைய பெண்கள் சுயதொழிலில முன்னேற்றம் அடைகின்றார்கள். முயற்சியற்ற, ஆர்வமில்லாத பெண்கள் சுயதொழில் முயற்சியில் பின்னடைவினையே சந்திக்கின்றார்கள்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
நான் எஸ்.கே.எஸ்.குமாரி வெலிஓயா சம்பத்நுவரவில் வசிக்கின்றேன். கடந்த நான்கு வருடங்களாக ‘பேக்’ தைப்பதே எனது சுய தொழிலாகச் செய்து வருகின்றேன். நான் தொழில் செய்தே அன்றாட செலவுகளைச் சமாளித்து வருகின்றேன். அம்மாவும், நானும்தான் வாழ்ந்து வருகிறோம். அதனால் நானே குடும்பத்தை உழைத்துப் பார்க்க வேண்டிய நிலை. அதனால் ஒரு தனியார் நிறுவனத்தினர் தையலுக்குரிய உபகரணங்களை வாங்குவதற்கு பணம் தந்து உதவினார்கள். வீட்டில் வைத்து தைத்து எனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி செல்கின்றேன். நான் தனியாளாகவே வேலை செய்து வருகின்றேன். ஏனையவர்களுக்கு தொழில் வழங்க முடியும். ஆனால், தற்போது அவர்களுக்கான சம்பளத்தை வழங்குவதில் பிரச்சினை இருக்கின்றது.
சந்தைப்படுத்தல் வசதி இல்லை. இதனால் ஆரம்பத்தில் கடையில் ‘பேக்’ விற்பனை செய்வதனை விட குறைத்து விற்பனை செய்து வருகிறேன். தற்போது எனது வீடு தேடி வந்து பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள். தூர இடங்களில் இருந்தும் எனது ‘பேக்’ தரத்தினை அறிந்து வந்து வாங்கி செல்வார்கள். அத்தோடு, புதிதாத ஓடரினையும் தந்து செல்வார்கள் . முன்பு இருந்த கடனை தற்போது ஓரளவிற்காவது நிவர்த்தி செய்யக்கூடிய நிலையில் தற்போது இருக்கிறேன் என கணவனை இழந்த நிலையில் குடும்பத்தினை தலைமை தாங்கி வரும் பெண் எஸ்.கே.எஸ்.குமாரி தெரிவித்திருந்தார்.
தலைமை தாங்கும் குடும்ப பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றமடைய ஏதுவாக இருக்கும் விடயங்கள் குறித்து முல்லைத்தீவு மாவட்ட தொழில் திணைக்கள உத்தியோகத்தர் தற்பரசுந்தரம் நிரோஷன் கூறுகையில்,
“பெண் தலைமைத்துவ குடும்பமாக இருந்து சுயதொழிலைச் செய்து வருபவர்களுக்கு தொழிலை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சுயதொழிலுக்கான பயிற்சிகள், உபகரணங்கள், சுயதொழிலுக்கான முதலீடுகள் வழங்கப்படுகின்றது. சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தேவைப்பாடுகள் அதிகம் இருப்பதனாலும், சிறந்த தொழில் முயற்சியாளராக முன்னுக்கு வரவேண்டும் என்ற முயற்சியும், அதீத அக்கறையுமே இன்று பல சுய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி தொழில் முனைவோர்களாக்கி இருக்கிறது” என கூறியிருந்தார்.
குடும்பங்களைத் தலைமைத் தாங்கும் பெண்களில் சிலர் சுயதொழில் முன்னேறி இருந்தாலும் பல பெண்கள் சுயதொழிலில் ஆர்வமின்மை, கொடுக்கப்படும் வாழ்வாதார உதவி பொருட்களை விற்பனை செய்தல், அரசாங்கம் தரும் என்ற எதிர்பார்ப்பு , தங்கி வாழும் தன்மை என சில காரணங்களால் பின்னடைவினையும் சந்தித்திருக்கின்றார்கள்.
உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான தரகர் பணம் அதிகம், சந்தை வாய்ப்பின்மை, சுய தொழிலுக்கேற்ற போதிய தொகை கடன் வழங்கப்படாமை, சட்டங்கள், சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு இன்மை. அதாவது எந்த சேவையை எங்கு பெறுவது எவ்வாறு அணுகுவது என்ற விழிப்புணர்வு இல்லாமை சரியான சுயதொழில் வழிகாட்டல்கள் இல்லாமை, பொருத்தமானவாழ்வாதார உதவிகள் வழங்கப்படாமை என பல காரணங்களால் குடும்பங்களைத் தலைமை தாங்கும் பெண்கள் சுயதொழிலில் பின்னடைவைச் சந்திக்க ஏதுவாக இருக்கின்றது.
இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள அதிகாரி தசரதராஜகுமாரன் கூறுகையில்,
சமூக சேவை திணைக்களத்தினால் சுயதொழில் உதவி, மாதாந்த கொடுப்பனவு , சுயதொழிலுக்கான உபகரணங்கள் குடும்பங்களைத் தலைமைத் தாங்கும் பெண்களுக்கு வழங்கப்படுகின்றது. இதனை வைத்தே சிலர் சுயதொழில் துறைகளில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றார்கள். தலைமைத்துவ பெண்களுக்கு கொடுக்கப்படும் வாழ்வாதார உதவிகளில் 30% மட்டுமே வெற்றியடைகின்றனர். ஏனைய 70% பின்னடைவினையே சந்திக்கின்றனர். நாம் சுயதொழில் செய்வதற்கான ஊக்கத்தினை மட்டுமே கொடுக்கமுடியும். மனதளவில் சுயதொழில் செய்பவர்களுக்கு மாற்றம் இல்லாததுதான் தோல்விக்குக் காரணமாக இருக்கின்றது என தெரிவித்தார்.
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் மனநிலை எவ்வாறு உள்ளது, அவர்களுக்கு உளவியல் ரீதியாக வழங்கப்படும் சேவைகள் குறித்து யாழ். பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற உளநல பேராசிரியர் தயா சோமசுந்தரம் பின்வருமாறு கூறியிருந்தார்.
” குடும்பங்களைத் தலைமைத் தாங்கும் பெண்களின் உளவியல் பாதிக்கப்பட்டதாகவே இருக்கின்றது. கணவர்மார்களின் இழப்பு, குடும்பச் சுமை, ஆதரவு குறைவு இது போன்ற காரணங்களினால் அவர்களது மனம் பாதிக்கப்பட்டதாக இருக்கின்றது. எம்மால் உளவியல் சார்ந்த ஆதரவு, உளவளத்துணை, நட்புறவு, வசதி வாய்ப்புக்கள் தேடிகொடுத்தல், பொருளாதார உதவிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் நிலைமையை கேட்டறிதல் தொடர்பான சட்ட ரீதியான செயற்பாடுகள், பிள்ளைகளுக்கான உணவு, கல்வி தேவைகளுக்கான உதவிகள், பெண் தலைமைத்துவ குடும்பப் பெண்களை ஒன்று சேர்த்து ஊக்குவிப்பு வழங்குதல் என பல சேவைகள் எம்மால் தலைமைத்துவ பெண் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உளவள துணையாளர், சமூக மட்டங்களில் செயற்படும் கள உத்தியோகத்தர்கள் கிராமத்திற்குள் சென்று விழிப்புணர்வு வழங்குகின்றார்கள். பெண்களின் உரிமைகள் , தலைமைத்துவ பெண்கள் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கக் கூடியது போல் ஆளுமையை உருவாக்குகின்றோம். தலைமைத்துவ பெண்களுக்கு சரியான தருணத்தில் சரியான ஆதரவு, வழிகாட்டல்கள் கிடைக்காவிட்டால் மனமுடைந்து குடும்பம் பின்னடைவிற்கே செல்லும். இதனாலே அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. அவர்களுக்கு ஒரு அங்கீகாரம், முன்னுரிமை கொடுக்க வேண்டும். இது அவர்களின் மனநிலையை பலப்படுத்தும். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் வளர்ச்சியடையும்” எனக் கூறியிருந்தார்.
தலைமை தாங்கும் பெண் குடும்பங்கள் சுயதொழிலில் முன்னேறி வளர்ச்சியடைந்து வருவதனால் அவர்களின் பங்கும் இந்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுகின்றது. ஆகவே, இது தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், பொருளாதார நிபுணருமான கலாநிதி அகிலன் கதிர்காமர் கூறுகையில்,
“தேசிய உற்பத்தியைக் கணக்கிடும் போது எல்லா ஊதியமும் அதில் கணக்கெடுக்கபடுவதில்லை. பண வருமானத்தை ஈட்டும் உற்பத்திதான் அதில் கணக்கெடுக்கப்படுகின்றது. ஆனால், பெண்களது உற்பத்தி என பார்க்கப்படும் போது வீட்டில் அவர்கள் சமைப்பதும் ஓர் உற்பத்திதான். வீட்டை பராமரிப்பதும் ஓர் உற்பத்திதான். இதனை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டி இருக்கிறது. இதை பற்றி சர்வதேச ரீதியாக பெரிய விவாதங்களும் இடம்பெற்றுவருகிறது. அந்த வகையில் அவை கணக்கிடாவிட்டாலும் இலங்கையில் வட மாகாணத்தில் முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் பெண்களது பொருளாதாரத்தின் பங்களிப்பு முக்கியத்துவமாக உள்ளது.
வீட்டு பராமரிப்பு, சமையல் அதேநேரம் பல பெண்கள் ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பலவிதமான தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். முறையான துறையிலும் ஈடுபடுகிறார்கள், முறையல்லாத துறையிலும் ஈடுபடுகிறார்கள். சிறு தொழிலிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களது உழைப்புதான் கூடுதலாக பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருக்கிறது என என்னால் கூற முடியும்.
பெண்களது முறையான ஊதியத்தில் அவர்களது செயற்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை ஒன்று இருக்கிறது. ஆனால், தேயிலை தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களது பங்களிப்பை அதிகரிப்பதையே அவர்கள் கவனத்தில் எடுக்கிறார்கள்.
நான் கூறுவது அதல்ல, வீட்டிலே எவ்வளவு வேலைகள் உள்ளது. ஆனால், அரசாங்கமோ, சர்வதேச நாணய நிதியமோ அதனைக் கவனத்தில் எடுக்கவில்லை. அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்றால் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு, சமூக நலன்புரி திட்டங்கள், இலங்கையில் இலவச கல்வி, இலவச சுகாதாரத்தை மேம்படுத்தும் போது அதுவும் பெண்களை பலப்படுத்தும். அத்தோடு, உற்பத்தியை மேம்படுத்தவும் உதவும். அதேபோல் உதவியை தன் அரசாங்கம் அதிகம் செய்ய இருக்கிறது. இலங்கையின் அந்நிய செலாவணியைப் பார்க்கும் போது முறையான துறையில் பெண்களது பங்களிப்பு தான் பெருமளவாக இருந்திருக்கிறது.
ஆடைத் தொழிற்சாலைகளில், தேயிலை தோட்டங்களில், உள்நாட்டில் வேலை புரியும் பெண்களால் தான் பல தசாப்தங்களாக ஓடிக்கொண்டு வருகிறது. ஆனால், அவர்கள் தான் பயங்கரமாக சுரண்டப்படுகிறார்கள். உழைப்பிற்கு பின்னர் கைவிடப்படுகிறார்கள். இது தொடர்பாக பெண்களது பங்களிப்பு, உரிமைகள், சமூக பாதுகாப்பு தொடர்பாகவும் ஒரு தேசிய விவாதம் தேவைப்படுகின்றது” என கூறியிருந்தார்.
ஆகவே, தனியார் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் இணைந்து தலைமை தாங்கும் பெண்களுக்குரிய சமூக அந்தஸ்தை வழங்கி ஏனைய பெண்களை போல மதித்து நடக்கவும், தலைமைத்துவ பெண்களின் மறைந்திருக்கக்கூடிய ஆளுமை , தன்னம்பிக்கை, துணிவு என்பவற்றை வெளிக்கொணரும் பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளை நடாத்தி வலுவுள்ளவர்களாக மாற்றி இவர்களின் கல்வி தகமைக்கு ஏற்பவோ, அவர்களின் குடும்ப உறுப்பினரின் கல்வி தகமைக்கு ஏற்ப வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பணம், பொருட்களைத் தொடர்ந்து கொடுக்காமல் வருமானத்தினை தொடர்ச்சியாக பெறக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கல்வி அறிவு உடையவர்களுக்கு வேலை வாய்ப்பினையும் , ஏனையவர்களுக்கு சுயதொழில் வாய்ப்பினையும் ஏற்படுத்தி கொடுக்கும் போது வருமானத்தை அடைவதுடன் வாழ்க்கை தரத்திலும் முன்னேறி பெண்கள் சளைத்தவர்கள் அல்ல, சாதனை படைப்பவர்கள் என்பதனை உலகறிய செய்யமுடியும் என்பதே நிதர்சனம்.
பாலநாதன் சதீசன்